உலக ஆளும் வர்க்கம், முடிவில்லாத போர், மக்களின் கொத்துக் கொத்தான மரணம்! – பாகம் 1

உலக ஆளும் வர்க்கம், முடிவில்லாத போர், மக்களின் கொத்துக் கொத்தான மரணம்! – பாகம் 2

முதாயம் சிதைந்து கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள அமெரிக்கா, இராணுவ ஆயுத தளவாட உற்பத்தி மூலம் மட்டுமே தனது உலக மேலாதிக்கத்திற்கான போட்டியாளர்களை, குறிப்பாக ரசியா மற்றும் சீனாவை ஒழித்துவிடலாம் எனப் பார்க்கிறது. அமெரிக்கா நேட்டோவை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா வரை விரிவுபடுத்துகிறது. தெற்கு சீனக் கடலில் குவாட் கூட்டணி மூலம் இராணுவ ஒத்திகை நடத்தி, இது தனது நாட்டின் நலனுக்கானது எனக் கூறும் அமெரிக்கா சீனாவையும் அச்சுறுத்துகிறது! இதனால் சீனா, ரசியா இரண்டும் அமெரிக்காவிற்கு எதிராக கூட்டு சேர்கின்றன!

சீனா ஆசியாவிலும் பசிபிக்கிலும் உள்ள கடல் வழிகள் தனது செல்வாக்குப் பகுதி எனப் பார்க்கிறது! ரசியாவும் தன்னிடமிருந்து பிரிந்து சென்ற உக்ரைன் மற்றும் அருகாமை நாடுகளை தனது செல்வாக்குப் பிரதேசம் எனப் பார்க்கிறது! இந்த சீன, ரசிய எல்லைப் பகுதியில் அமெரிக்கா இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது தேவையற்ற ஒரு கெடுபிடிப் போரை உருவாக்குகிறது! வாசிங்டன் கொள்கை வகுப்பாளர்கள் எதிர்ப்பின்றி எடுத்துள்ள இந்த முடிவானது இந்த புவிப்பரப்பையே முற்றாக அழித்தொழிக்கும் அணு ஆயுதப் போருக்கு இட்டுச் செல்லக் கூடும்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் மேற்கு பசிபிக்கின் ஆசியக் கடலோர நெடுகிலும் ஜப்பானிலிருந்து ஆஸ்திரேலியா வரை சீனா விமான தளங்களை கட்டியெழுப்பியதன் மூலம், அந்தப் பகுதியில் விமானம் தாங்கி கப்பல்கள் உட்பட போர்க்கப்பல்களைத் தாக்கும் திறனை அது கொடுத்துள்ள நிலையில், இப்பகுதிகளில் தங்களின் கட்டுப்பாட்டிற்கான அதி தீவிர நாய்ச் சண்டை நிலவுகிறது. பலதுருவ உலகினை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள மறுத்தது மட்டுமல்ல ஒரு முடிசூடா மன்னனைப் போல தானே உலகை ஒற்றைத் துருவமாக மேலாதிக்கம் செய்ய முனைவதும் ரஷ்யாவும் சீனாவும் கூட்டணி கட்டுவதை உறுதிப்படுத்தியுள்ளது, இப்படியான ஒரு கெடுபிடிப் போரைத் தடுக்கத் தான் இதை எதிர்ப்பவர்கள் கடினமாக உழைத்தனர். இந்தப் பகைத்தன்மையானது, அமெரிக்கப் போர் வெறியர்களின் போர் வெறிக்கு தீனி போடுவதாக அமைந்துள்ளது. இது, ஒரு முடிவற்ற போரை நடத்த விரும்பும் வாசிங்டன் ஆட்சியாளர்களை களிவெறி கொள்ள வைத்துள்ளது!


படிக்க : இரஷ்ய-உக்ரைன் போர்: இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! – பாகம் 2


ரசியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள உக்ரேனை அழைத்து, மாஸ்கோவுடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தும்படி பதட்டம் தோன்றியதுமே ஹென்றி ஹிஸ்ஸிங்கர் அறிவுறுத்தினார். “இன்னும் இரு மாதங்களில் செய்து முடிக்கவில்லை என்றால் அது எளிதில் தீர்க்க இயலாத பெரும் பதட்டத்தையும் நெருக்கடியையும் தோற்றுவிக்கும்” என கிஸ்ஸிங்கர் கூறியது செவிடன் காதில் ஊதிய சங்கானது.

சர்வாதிகார அரசாங்கங்களுக்கு மாற்றுக் கருத்துக் கொண்டோர் மீது அடக்குமுறையை ஏவி விடவும், சமூக நலத் திட்டங்களை வெட்டிக் குறுக்கவும், ஒழிக்கவும், செய்தி ஊடகங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும் ஒரு எதிரி தேவைப்படுகிறது! யுத்தம் நியாயப்படுத்த முடியாதவற்றை நியாயப்படுத்தும்! ஆள்கடத்தல்கள், சித்திரவதைக் கொடூரங்கள், திட்டமிட்ட தனிமனிதப் படுகொலைகள், செய்தித் தணிக்கைகள், வரைமுறையற்ற தடுப்புக் காவல்கள், ஒடுக்குமுறைப் பகுதிகள் என போர்க் கிரிமினல் குற்றங்கள் கட்டவிழ்த்து விடப்படும்! போரானது மக்களை நிரந்தர சித்தப்பிரமையிலும், பயத்திலும் வைத்திருக்கும்! அது பொது மக்களை கேள்விக்கிடமற்ற முறையில் அடிமைத்தனத்தில் இருத்தும்!

”இந்தப் போரானது வெற்றி பெறுவதற்காக அல்ல, தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே” என 1984-ல் ஜியார்ஜ் ஆர்வெல் எழுதினார். ”வறுமையினாலும் அறியாமையினாலும் தான் தந்தைவழி ஒடுக்குமுறை சமூகம் சாத்தியம். இந்தப் புதிய பதிப்பு கடந்த காலத்தியதே தான். கடந்த காலத்தில் இதைத் தவிர வேறு எதுவும் இருந்திருக்கவில்லை! போர் நடவடிக்கைகளின் மூலம் சமூகத்தை வறுமைக் கொடுமையில் வைத்திருக்க வேண்டும் என்பதே கொள்கை! இந்தப் போர் ஆளும் வர்க்க கும்பல்களால் தமது சொந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படுவதே அன்றி யுரேசியா அல்லது கிழக்காசியா மீது வெற்றி பெறுவதற்காக அல்ல! மாறாக நிலவும் சமூக கட்டமைப்பை அப்படியே பாதுகாப்பதற்காகத் தான்!

முடிவற்ற இந்தப் போரின் செய்தி இதுதான்: ஆளும் வர்க்கத்திற்கு, இராணுவத்திற்கு, அரசாங்கத்திற்கு கட்டுப்பட மறுத்தால் நீங்கள் தேசத் துரோகி!

பெருந்தொற்றின் விளைவாகவும் சுற்றுச் சூழல் நாசம் மற்றும் உக்ரைன் போரினால் உலகம் முழுதும் சுமார் 14 கோடிப் பேர் பட்டினிக் கொடுமையில் அவதிப்படுகின்றனர். இவர்களும் தமது எதிர்காலம் பற்றித் தெரிந்துள்ளனர். பெருந்தொற்றினால் ஒன்றரைக் கோடி மக்கள் செத்து மடிந்துள்ளனர். இவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் உரிய பாதுகாப்பும் மருத்துவ உதவியும் கிடைத்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்கள். உலகின் தெற்குப் பகுதியில் சுற்றுச் சூழல் பேரழிவாலும் தோற்றுப் போன அரசுகளின் நடவடிக்கையாலும் மக்கள் அகதிகளாக விரட்டப்படுகிறார்கள். 2050-ல் இந்த அகதிகளின் எண்ணிக்கை 120 கோடியாக அதிகரித்திருக்கும்.

ஏழை எளியவர்களுக்கும் நோயுற்றவர்கள், பலவீனமானவர்களுக்கும் இவை சொல்லுகின்ற செய்தி இதுதான்: உங்களின் மற்றும் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை ஒரு பொருட்டே அல்ல!

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக் கோமான்களுக்கு அவர்கள் அரசியல் நெருக்கடியில் இருப்பது தெரியும். இது ரசியாவின் குளறுபடியாலா? ட்ரம்ப் மற்றும் அவரது பாசிச கும்பலாலா? பத்திரிகையாளர்கள் மற்றும் அசாஞ்சே போன்ற இணையப் பதிப்பாளர்கள் இவர்களை அம்பலப்படுத்தி கெட்ட பெயர் ஏற்படுத்தியதாலா? தீவிர வலதுசாரி, இடதுசாரி விமர்சகர்களை கடும் தணிக்கைக்கு உட்படுத்தாததாலா?

தற்போது ஜனநாயகக் கட்சி குடியரசுக் கட்சியோடு நெருங்கியிருப்பினும் சிக்கலுக்குத் தீர்வுகாண இயலாமல் தோற்றுக் கொண்டுள்ளது. ட்ரம்ப்பும் அவரது பாசிச கும்பலும் கேபிடால் மீது நடத்திய தாக்குதலை, அந்த வழக்கை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டி வரும் ஜோ பிடன் நிர்வாகம் அனைத்துத் துறைகளிலும் தோல்விகளையே தழுவி வருகிறது. மக்கள் நலத்திட்டங்களை வெட்டி நாசமாக்கி, மத்திய ஆசியப் பகுதியில் வெட்டி இராணுவச் செலவு செய்து வேடிக்கை காட்டிவரும் பிடன் தான், உலகிலேயே மிக பூதாகரமான சிறைத் துறை அமைப்பைக் கட்டி வருவதோடு, போலீசை ராணுவமயமாக்கி வருகிறார்.

நல்ல நிர்வாகத்தைக் கட்டியமைப்போம் என வாக்குறுதி தந்த பிடன் நிர்வாகம், மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி வருகிறது. குறைந்த பட்ச கூலியைக் கூட்டுவதற்குக் கூட மறுக்கிறது. இது கானல் நீரைக் காட்டி, கண்கட்டி வித்தை செய்து, வெற்றுச் சொல்லாடல், கவர்ச்சி மற்றும் அச்சத்தின் மூலம் வாக்காளர்களை அச்சுறுத்திப் பணிய வைக்க முயல்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால், கிழக்கு ஐரோப்பிய தொங்கு சதை நாடுகளின் ஆட்சியாளர்கள், உயிர் பயத்தில் வெற்றுச் சொல்லாடல்களைப் பயன்படுத்தினார்களே அதுபோல உள்ளது என கட்டுரையாளர் ஒப்பீடு செய்கிறார்.

கோடீசுவர வர்க்கம், அவர்களில் பலரும் இந்தப் பழைய உளுத்துப் போன அரசியலை மெருகூட்டிக் காட்டியும் வெற்றுச் சொல்லாடல் மூலமும் பகாசுரக் கொள்ளைச் சுரண்டலைத் தொடரவே விரும்புகின்றனர். அவர்கள் ஒரு இழிந்த ஜனநாயகத்திற்கு மரியாதை செலுத்தும் புனைகதைகளை நம்புகிறார்கள். அது அவர்களுக்கு மரியாதையை அளிக்கிறது.


படிக்க : இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் !


ஆனால், இது நீடிக்கக் கூடாது! மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களாட்சி என படாடோபமாக பீற்றிக் கொண்டு, மக்களை அடக்கி, ஒடுக்கிச் சுரண்டி, அவர்களின் அற்ப உடமைகளையும் உழைப்பையும் சூறையாடிக் கொண்டுள்ள கேடுகெட்ட கழிசடை அரசியல் கும்பல்களிடமிருந்து என்ன வரும்? கார்ப்பரேட்டுகளும் கோடீஸ்வர வர்க்கங்களும் தமது பகாசுர சுரண்டல்களையும் சூறையாடல்களையும் முரட்டுத்தனமான மற்றும் கொடூரமான எதேச்சதிகாரத்தின் கீழ், சுதந்திரமாக எந்தத் தங்கு தடையுமின்றித் தொடர்வார்கள்.

சமூக, அரசியல், பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் முதலியன சர்வநாசமாக்கப்படுவது வேகமாக முடுக்கிவிடப்படும். அதிர்ச்சியூட்டுகின்ற, அதனாலேயே ஏற்றுக் கொள்ள இயலாத புறநிலை உண்மைகளைப் பற்றி பொது வெளியில் விவாதிப்பது முற்றாக நின்றுவிடும். கிறித்துவ பாசிசம், கேளிக்கூத்தான சதிக் கோட்பாடுகள் போன்றவற்றை மாற்றாக முன்வைப்பார்கள். எல்லா கெட்ட செயல்களுக்கும் காராணம் என தனி நபரையோ அல்லது குழுவையோ பொறுபாக்கி அவர்கள் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டு விட்டார்கள் என்கிற குழந்தைப் பிள்ளை மாயாஜாலக் கதைகளில் மக்களை மூழ்கடித்து பின்னுக்கு இழுப்பார்கள்.

உண்மையையும் பொய்யையும் பிரித்தறிய இயலாது. பலவீனமான பிரிவினரைப் புறக்கணித்து, அவர்களது சிக்கல்களுக்கும் அவர்களே காரணம் என்பது மட்டுமின்றி, நமது எல்லா சிக்கல்களுக்கும் காரணம் அவர்களே என பழி தூற்றுவார்கள். யார் இவற்றை எதிர்க்கிறார்களோ அவர்கள் கிரிமினல் குற்றவாளியாக்கப்படுவார்கள். மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிவது உலகம் முழுதும் நடக்கும். இன்றைக்கு நம்மை ஒடுக்குபவர்களிடம் உள்ள அதிகாரம் பறிக்கப்பட்டு, துரத்தப்படவில்லை என்றால் இந்த அழுகி, சிதைந்து கொண்டுள்ள உலகத்தை தான் நாம் நமது குழந்தைகளுக்குக் கையளிப்போம்!

(முற்றும்)

(குறிப்பு: கிரிஸ் ஹெட்ஜெஸ் என்ற புலிட்சர் பரிசு பெற்ற அமெரிக்கப் பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையினைத் தழுவியது. இவர் தி நியூயார்க் டைம்ஸ் இதழில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர். Scheer Post-ல் 2020ல் வெளியான கட்டுரை. முதலாளித்துவ எழுத்தாளர்களே முதலாளித்துவத்தின் தோல்வியை எழுதுகின்றனர். அது நீடிக்கக் கூடாது என்கின்றனர்.)


நாகராசு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க