உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார தாக்குதல்களை மூடிமறைக்க முடியாது!

நாடுமுழுவதும் மரண ஓலங்கள் கேட்கும் தருணத்திலும் அம்பானி, அதானிகளின் சொத்துமதிப்பு பன்மடங்கு உயர்ந்துகொண்டே சென்றது. ஒருவேளை நிர்மலா இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியைதான் கூறுகிறார் போலும்!

0

பிரதமர் நரேந்திர மோடியால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றம் பலனைத் தந்தது மட்டுமின்றி, அவரை இந்திய அரசியல் வரலாற்றில் உயரிய தலைவராகவும் மாற்றியுள்ளது என்று மோடி@20: ட்ரீம்ஸ் டு டெலிவரி’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

“பிரதமர் மோடி இந்தியாவில் ஆட்சி கலாச்சாரத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தை கொண்டு வந்தார். இது ஜன்தன் யோஜனா மற்றும் ஸ்வச் பாரத் போன்ற பல திட்டங்களின் மூலம் பலன்களைப் பெற உதவியது, இது நாட்டின் கிராமப்புறங்களில் பெண்களுக்கு கணிசமாக அதிகாரம் அளித்துள்ளது. மேலும், கடந்த 20 ஆண்டுகளாக, குஜராத்தின் முதல்வராகவும், இந்தியப் பிரதமராகவும், ஊழலை சகித்துக்கொள்ளாதது, அவர் பலமுறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு பெரிய காரணியாக இருந்துள்ளது” என்று நிர்மலா கூறினார்.

ஜன்தன் யோஜனா, உஜ்வாலா யோஜனா மற்றும் ஸ்வச் பாரத் போன்ற திட்டங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. ஏழைகளுக்கான ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பினர் மற்றும் ஏழைகள் அத்தகைய கணக்குகளைப் பயன்படுத்துவது குறித்து சந்தேகம் கொண்டிருந்தனர். ஆனால், முடிவுகள் ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, மோடி அரசாங்கத்தால் சுமார் ஏழரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜன்தன் திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகை 1.6 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. மேலும், கிராமப்புற பெண்களின் நல்வாழ்வு மற்றும் கண்ணியத்திற்காக கிராமப்புறங்களில் பல லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.


படிக்க : இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தம்: அதானியின் பகற்கொள்ளைக்கு மோடியின் கரசேவை!


பொருளாதார மேலாண்மை குறித்த விமர்சனங்களை ஒதுக்கி வைத்துள்ள சீதாராமன், UPA அரசை விட மோடியின் தலைமையிலான NDA அரசாங்கம் தொடர்ச்சியான சவால்களுக்கு மத்தியில் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகித்து வருகிறது என்றார். கொரோனா காலங்களில் பல நாடுகள் மந்தநிலையில் நழுவிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. வளர்ச்சி விகிதம் கணிக்கப்பட்டதை விட சற்று குறைவாக இருந்தாலும், உலகில் இன்னும் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது என்று அவர் கூறினார்.

கொரோனா பெரும்தொற்றுகாலத்தில் உழைக்கும் மக்கள் வேலையின்றி கடுமையாக அவதிபட்டார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் திடிரென நாடுமுழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நடந்தே கால்நடைகளாக சென்று பலர் வெளியிலின் கொடுமையால் இறந்துபோனார்கள். பல குடும்பங்கள் பசி, பட்டினியில் வாடின. கொரோனாவினால் ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் மருத்துவம் கிடைக்காமல், கொத்துக்கொத்தாக செய்து மடிந்தனர். 24 மணிநேரமும் பிணங்கள் எரியூட்டப்பட்டுக்கொண்டிருந்த உத்தரப்பிரதேசத்தின் சுடுகாடுகளின் மரண ஓலங்கள் நம்மை உறங்க விடவில்லை. நாடுமுழுவதும் கொரோனாவினால் மரணமடைந்தவர்களுக்கு நிகராக, அரசின் அலட்சியத்தால், ஆக்சிஜன் பற்றாகுறையால் மரணமடைந்தவர்கள், தடுப்பூசி கிடைக்காமல் மரணமடைந்தவர்கள் என இந்த அரசு மருத்துவ கட்டமைப்பின் தோல்வியால் நிகழ்ந்த மரணங்கள் தான் அதிகம்.

நாடுமுழுவதும் மரண ஓலங்கள் கேட்கும் தருணத்திலும் அம்பானி, அதானிகளின் சொத்துமதிப்பு பன்மடங்கு உயர்ந்துகொண்டே சென்றது. ஒருவேளை நிர்மலா இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சியைதான் கூறுகிறார் போலும்!

இதை தவிர பொருளாதார ரீதியான மோடி அரசின் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்கள் சொல்லிமாலாது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையில் தொடங்கி, ஜி.எஸ்.டி வரி, பெட்ரோல் டீசல் வரி உயர்வு, மானிய வெட்டு, பொத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை என பல்வேறு பொருளாதார கொத்துக்குண்டுகளை மக்கள் தலையில் பொட்டது மோடி அரசு. ஆனால் கொஞ்சமும் கூச்சம் இல்லாத இந்த பாசிஸ்டுகள், அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு வழிவகை செய்துவிட்டு, அதையே பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் இந்த காவி பாசிஸ்டுகள்.

உழைக்கும் மக்கள் மீதான இந்த பொருளாதார தாக்குதல்களை, மோடியின் பெருமைபேசுவதால் மூடிமறைந்துவிட முடியாது. மக்கள் நலனைப்பற்றி கிஞ்சித்தும் அக்கறைகொள்ளாத இந்த காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசை மோதி வீழ்த்தாமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்வில்லை!


காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க