சூரரைப் போற்ற முடியாது – பாகம் 3

நல்ல முதலாளிகள் இல்லையா?

விப்ரோ முதலாளி அசீம் பிரேம்ஜி பல பில்லியன் கணக்கிலான தனது சொத்தை கல்விக்கு பொதுமக்களுக்கு என நன்கொடை செய்து வருகிறார். ஆண்டுதோறும் தனது சொத்தில் பெரும் பகுதியை ஏழைகளுக்கு கல்வி மருத்துவம் போன்ற பொது விடயங்களுக்கும் செலவு செய்கிறார்கள். இவர்களைப் போல நல்ல முதலாளி இருக்கவே முடியாதா என சந்தேகம் கொள்பவர்களுக்கு, ஆங்கிலத்தில் கதாசிரியரும் நடிகருமான டின் கவானாக் “தொண்டின் மூலம் தன்னை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிக்கும் கார்ப்பரேட்டிசமானது தனது குற்றங்களுக்கு அபதாரம் செலுத்துவதாக சொல்லும் தொடர் கொலையாளியை ஒத்துள்ளது” என பதிலளித்தார்.

முதலாளிகள் செய்யும் எந்த காரியமும் லாபத்தை, தன்னலத்தை நோக்கியதாகவே இருக்கும். காரண காரியங்கள் இல்லாமல் முதலாளிகள் விலை குறைப்பு அல்லது நன்கொடை என பண விரயம் செய்வதில்லை. தன்னை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் மக்களை அமைதிப்படுத்த ஆயுதங்களை விட மருந்தே சாதகமானது என்ற புத்தி ராக்பெல்லர் முதல் கோபிநாத் வரை செயல்படுகிறது. இப்படிப்பட்ட முதலாளிகளைத்தான் நல்லெண்ணத் தூதர்களாக, ரோல்மாடலாக, இளைய தலைமுறையின் முன்னோடிகளாக நம் முன்னே காண்பிக்கின்றனர்.

திரைப்படத்தில் ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல் டிஸ்கோ சாமி விஜய் மல்லையா போன்ற முதலாளிகளை தீயவர்களாக வில்லன்களாக சித்தரித்து, புரட்சியாளராக, சமத்துவத்தை விரும்பும் நாயகனாக ஏழைப்பங்காளனாக காண்பிக்கப்பட்ட கோபிநாத் நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா?


படிக்க : தி கிரேட் இந்தியன் கிச்சன் || ஆணாதிக்கமும் மதமும் இங்கு தோலுரிக்கப்படும்


திரைக்குள் யார் கோபிநாத்தை விமான நிறுவனம் தொடங்க விடாமல் சூழ்ச்சி செய்தார்களோ அவருடன் இணைந்து அதாவது 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிங்ஃபிஷர் விஜய் மல்லையா, ஜெட் ஏர்வேஸ் நரேஷ் கோயல், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ போன்றவர்களுடன் இணைந்து ” ஏர் டெக்கான்” அடையாள வேலை நிறுத்தம் செய்தது.
ஏழை மக்களை இலவசமாக தங்கள் விமானத்தில் ஏற்ற வேண்டும் என்பதற்காகவா வேலை நிறுத்தம் செய்தார்கள்? விமானத்தில் பறக்கும் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காகவா? இல்லை. மாறாக விமான எரிபொருள் விலையை குறைக்க வேண்டும்.

விமான நிலையங்களில் விதிக்கப்படும் கட்டணங்களை குறைக்க வேண்டும். நட்டத்தில் நடக்கும் தங்கள் நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி செய்திட வேண்டும். இதுதான் இவர்கள் கோரிக்கை இல்லையென்றால் வேலை நிறுத்தம் செய்வோம். தனியார் விமானங்கள் பறக்க விட்டால் என்ன கதி நேரும் என்பதை அரசுக்கும் மக்களுக்கும் நாங்கள் புரிய வைப்போம் என்றார் மல்லையா. அதற்கு துணை நின்றார் கோபிநாத்.

முதலாளி வர்க்கக் கனவு

எல்லாவிடயங்களிலும் திரைக்கதையும் உண்மை கதையும் வெவ்வாறாக இருந்தாலும் ஒரு விடயத்தில் சூரரைப் போற்று திரைக்கதைக்கும் நிஜத்திற்கும் ஒற்றுமை இருக்கிறது.
படத்தில், சூர்யாவின் கிராம மக்கள் தங்களது நகையை, நிலத்தை விற்று. சேமிப்பை வைத்து, கடன் வாங்கி, திருமணத்திற்கு வைத்திருந்த பணத்தை தந்து, விமானம் வாங்க போவதாக அறிவித்த சூர்யாவுக்கு உதவுவார்கள்.

இது உண்மையில் ஏழை மக்களின் ஆசை இல்லை. மாறாக முதலாளிகளின் ஆசை. கனவும் கூட.

கோபிநாத் ஏர் டெக்கானை வாங்கிய விஜய் மல்லையா நட்டத்தில் ஓடிய தனது கிங்பிஷர் விமான நிறுவனத்தை நடத்த முடியாமல், ஏழை, எளிய மக்களின் வரிப்பணத்தில் இயங்கிய அரசு வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்காமல், நாட்டைவிட்டு அரசியல்வாதிகளின் துணையோடு தப்பி ஓடினார். அந்த விஜய் மல்லையாவின் நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்று திருவாய் மலர்ந்தார் கோபிநாத்.

அரசு நிறுவனமான ஏர் இந்தியாவிற்கு பல ஆயிரம் கோடிகளை செலவழிக்கும் அரசு, கிங் பிஷரை காப்பாற்ற சில ஆயிரம் கோடிகளை செலவழிக்க வேண்டும் என சக முதலாளிக்கு மக்களின் வரி பணத்தை கொடுக்கச் சொன்னார் கோபிநாத். லாபத்தை தங்கள் கணக்கில் சேர்த்துக் கொண்டு, நட்டத்தை மக்கள் வரிப்பணத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோபிநாத்தின் கோரிக்கை ஒன்றும் புதிதல்ல. லாபம் தனியுடமை, நட்டம் பொதுவுடமை என்பது தான் முதலாளித்துவ கோட்பாடு. இந்த விதியின் கீழ் தான் 2008 ஆம் ஆண்டில் உலக பெருமந்தத்தில் வீழ்ந்த பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து அமெரிக்க அரசு உதவி செய்தது.

சினிமா முதலாளிகள் சளைத்தவர்களா?

கோபிநாத்தாக நடிக்கும் சூர்யாவும் திரைத்துறையினரும் முதலாளிகளுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல. சினிமாவுக்கு வரிச்சலுகை வேண்டும், மானியம் வேண்டும் என கோரிக்கை வைத்து வைத்திருப்பவர்கள் தான் இந்த ஆகாய சூரர்கள். பெருந்தொற்றினால் உலகமே முடங்கிய சில மாதங்களுக்குள்ளாகவே படப்பிடிப்புகளை நடத்த அனுமதி தாருங்கள் என தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிகர்களும் கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? படப்பிடிப்பு நடத்தப்படாமல், எண்ணற்ற சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து, வீடுகளுக்குள் முடங்கி வறுமையில் வாடுகின்றனர் என்று நீலிக் கண்ணீர் வடித்தனர்.

தங்கள் சேமிப்புகளை கரைத்து, தொழிலாளியின் துயரைப் போக்க இவர்கள் முன்வராதது ஏன்?

தங்களைக் காத்துக்கொள்ள தொழிலாளர்களைக் கால் கொடுப்பதை வழக்கமான விதியாக வைத்திருக்கிறது முதலாளிவர்க்கம்

“பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பை தடுத்து நிறுத்த சில ஆயிரம் கோடிகளை அரசு செலவு செய்தால் என்ன?” என கிங்பிஷர் நிறுவனத்தின் நட்டத்தை மக்கள் தலையில் எழுதச் சொன்னார் கோபிநாத்.

தங்கள் தொழில் போட்டியால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அரசு நிதி உதவி கேட்கும் முதலாளிகள் தங்களது லாபத்தை அரசுக்கு தருவார்களா? அரசை விடுங்கள், தங்களது லாபத்திற்கு காரணமாக இருந்த தொழிலாளர்களோடு பங்கீடு செய்வார்களா?

அப்படி ஒரு சூழ்நிலை இருக்குமானால் தொழில் செய்வதை கைவிடுவார்கள் இந்த நியாயவான்கள். லாபமே குறி, அதற்காக எதையும் செய்ய தயாராக இருப்பவர்கள் முதலாளிகள்.

கொரோனா பெருந்தொற்றின் போது கைகளை கழுவு, வீட்டுக்குள்ளேயே இரு, சமூக இடைவெளியை கடைப்பிடி என நொடிக்கு ஒரு முறை நமக்கு அறிவுரை வழங்கிய திரைத்துறை மகான்கள். தொற்று அபாயம் நீங்கும் முன்னே திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று அறிவற்ற முறையில் எடப்பாடி அரசு நடந்து கொண்டபோது, கனவுலக கோமான்கள், பசியறிந்து, படியளந்த எடப்பாடியாரை சத்தமின்றி மனமுருகி வேண்டி இருப்பார்கள். வெளியே சத்தம் கேட்டால் தங்களை ரசிக்கும் ரசிகர்கள் காறித்துப்புவான் அல்லவா.

வெறும் முதலாளி மட்டுமல்ல கோபிநாத் ஆளும்வர்க்கத்தின் செல்லப்பிள்ளை

1994 ஆண்டு கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார். 2009 மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட கோபிநாத்தை இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, மோகன்தாஸ் பய் போன்றவர்கள் ஆதரித்தனர். மோகன் தாஸ் பய் அதிதீவிரமாக மோடியையும் பாஜகவையும் ஆதரிப்பவர். நாராயணமூர்த்தியும் அவ்வப்போது மோடி ஆதரிப்பவர் தான். 2014 ஆம் ஆத்மி டிக்கெட்டில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார் கோபிநாத். சமீபத்தில் கர்நாடக மாநில ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பாக கோபிநாத் போட்டியிடப்போவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள், முதலாளிகள் என அனைவரும் ஒருசேர கோபிநாத்தை ஆதரிப்பதன் மர்மம் என்ன? தனியார்மயத்தை, உலகமயத்தை, தாராளமயத்தை, மக்களிடம் பரவலாக விளம்பரப் படுத்தும் நோக்கத்தில் அவ்வப்போது கோபிநாத் போன்றவர்கள் தோன்றுவார்கள். கோபிநாத் வழியில் நீங்களும் உழைத்தால் பூலோக சொர்க்கம் காத்திருக்கிறது என்று தன்னை விளம்பரம் செய்கிறது முதலாளித்துவம்.

மாட்டாதவரை சாமியார் மாட்டிக்கொண்டால் போலிச்சாமியார்

வாயிலிருந்து லிங்கம் எடுத்த சாமியார், வெறும் கையில் விபூதி எடுத்த சாமியார், காட்டை அழித்த சாமியார், பாலியல் வழக்கில் கைதான சாமியார், கொலைகார லோககுரு, கருவறைக்குள் பாலியல் வன்புணர்வு செய்த குருக்கள் என ஆன்மீகம் நமக்கு தந்திருக்கும் மாடல் மாட்டும் வரை சாமியார் மாட்டியபின் போலிச்சாமியார். ஆன்மீக வியாபாரிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல முதலாளிகள்

அம்பலமாகும் வரை ரோல்மாடல் தொழிலதிபர், பிடிபட்ட பின் கிரிமினல், இதுதான் தனியார்மயம் நமக்கு அளித்திருக்கும் மாடல். விஜய் மல்லையா கேத்தன் தேசாய், ஹர்ஷத் மேத்தா, சத்யம் ராஜூ என வெற்றிகரமான தொழிலதிபர்களாக திகழ்ந்தவர்கள் பலர். எப்போது வரை? அவர்கள் செய்த குற்றங்கள் அம்பலமாகும் வரை. இப்படிப்பட்டவர்களை தனியார்மயம் நமக்கான ரோல்மாடலாக நம் மீது திணிப்பதை விளம்பரம் செய்யும் பணி கலைத்துறையின் பெரும்பணி. அதற்கு சம்பளம் தான் அவர்களுக்கான வெகுமதி.

இப்படிப்பட்ட சூழலில்தான் இயக்குனர்கள் முதலாளிகளை, கதாநாயக பிம்பம் போட்டு நம் மீது திணிக்கின்றனர். இந்த வெற்று பிம்பங்களின் முகமூடியைக் கிழித்து உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது அவசியமான செயலாக மாறி விட்டது. ஒரு வணிக சினிமாவில் வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்தை விமர்சிப்பதன் அவசியமும் தேவையும் என்ன என்ற கேள்வி எழலாம். சினிமாக்கள் வரும் பொழுது போக்கோடு நின்றுவிடவில்லை. மக்களிடம் ரசனை ஊட்டுவதில் வளர்ப்பதில், கற்றுக் கொடுப்பதில் சினிமா, கலை – இலக்கியத்துக்குப் பங்குண்டு.

எனவே தான் கலை இலக்கியத்தைப் பற்றி மாவோ சொல்கிறார்: ”எம்முடைய இலக்கியமும் கலையும் அடிப்படையாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர்களுக்கானவை. பரவலாக்குதல் என்பதன் பொருள் அவர்களிடம் பரவலாக்குதல்; தராதரங்களை உயர்த்துதல் என்பதன் பொருள் அவர்களுடைய தற்போதைய நிலையிலிருந்து, அந்த மட்டத்திலிருந்து முன்னேற்றுவது என்பதாகும். அவர்களுக்குச் சாதகமானதும், அவர்களால் உடனே ஏற்றுக் கொள்ளக் கூடியதும் எதுவோ அதையே நாம் பரவலாக்க வேண்டும். எனவே, அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பணி இருக்கிறது. தராதரங்களை உயர்த்துவதற்கு இது இன்னும் அதிகமாகப் பொருந்தும்.

உயர்த்தத் தொடங்குவதற்கே அடித்தளம் தேவை. ஒரு வாளித் தண்ணீரை எடுத்துக் கொள்வோம். அதைத் தரையிலிருந்து தானே மேலே இழுக்கிறோம்? அந்தரத்திலிருந்தா இழுக்கிறோம்? அப்படியானால், இலக்கியமும் கலையும் எந்த அடித்தளத்திலிருந்து உயர்த்தப்படுவது? நிலப் புரபுத்துவ வர்க்கங்களின் அடித்தளத்திலிருந்தா? முதலாளி வர்க்கங்களின் அடித்தளத்திலிருந்தா? சிறுமுதலாளி வர்க்க அறிவுஜீவிகளின் அடித்தளத்திலிருந்தா? இல்லை, இவை எதிலிருந்தும் அல்ல, பரந்துபட்ட தொழிலாளர், விவசாயிகள், படை வீரர்களின் அடித்தளத்திலிருந்தே”


படிக்க : NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !


அப்படியானால், பரவலாக்குதலுக்கும் தரத்திற்குமான உறவு என்ன? பிரச்சனையை மக்களின் தேவையிலிருந்து பார்க்கலாம். மக்களுக்கு எளிய, தெளிவான படைப்புகள் வேண்டும். எதிரியுடன் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, எதிரிகளால் எழுத்தறிவற்ற கல்வியற்ற மூடர்களாக, அடிமைகளாக நசுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு போராட உற்சாகம் வேண்டும்; வெற்றி மீது நம்பிக்கை வளர வேண்டும்; எதிரிக்கு எதிராக ஒரே மனத்தோடு, ஒரே சிந்தனையோடு போராடுவதற்காக பரந்த பொது அறிவு அவர்களுக்கு வேண்டும்; பரந்த கலாச்சார அறிவு வேண்டும்; நிறையக் கலை இலக்கியப் படைப்புகள் வேண்டும்.
ஆனால் எதார்த்தத்தில், இந்திய, தமிழ்ச் சூழல் இன்று மேல் வர்க்க, மேல்சாதி மனோபாவத்தை பிரதிபலிக்கக் கூடியதாகவே சினிமா உள்ளது.

அரிதான சில படைப்புகளைத் தவிர்த்து பெரும்பான்மையான வணிக சினிமாக்கள் சந்தைக் கலாச்சாரத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது. அத்தோடு மட்டுமின்றி, சினிமாவுக்குள் தனக்கான அடையாளத்தை உருவாக்கி, வெகுமக்கள் மத்தியில் பரவலாக்கம் செய்துவருகிறது அதிகாரவர்க்கம். நேர்மையின் மறு உருவமாக வடிவமைக்கப்பட்ட கதாநாயகர்கள், திரைக்கு வெளியே இந்த உலகை உய்விக்க வந்த நாயகர்களாக தங்களை விளம்பரப்படுத்தி, அதன்மூலம் அரசியலை தனதாக்கி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முனைகிறார்கள். ”சூரரைப்போற்று” சூர்யா என்ற நடிகரை போற்றுவதற்காக உருவாக்கப்பட்ட படமும் அல்ல, நெடுமாறன் ஆக தோன்றிய கோபிநாத் சமத்துவத்தைப் படைக்க விரும்பும் புரட்சியாளனும் இல்லை.
எனவே சினிமா புகட்ட விரும்பும் மேட்டுக்குடி, மேல்சாதி மனோபாவத்தை வெட்டி வீழ்த்துவது நமது முதன்மைக் கடமையாகும்.

நிஜத்தில் லாபவெறியை மையமாக கொண்டு செயல்படும் முதலாளிகளும், அதே நோக்கத்தை திரையில் காட்சியாக்கும் சினிமாக்காரர்களும் சேர்ந்து செய்த போலிப் பிம்பம் தான் “சூரரைப் போற்று”. நம்மால் இந்த சூரரைப் போற்ற முடியாது.

(முற்றும்)

சு.விஜயபாஸ்கர்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க