சூரரைப் போற்ற முடியாது – பாகம் 2

அதற்காக கோபிநாத்தின் தகிடுதித்தங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.

1. ஆம்னி பஸ்களுக்கு வழிகாட்டி ஏர் டெக்கான். கடைசி நேரத்தில் டிக்கெட் வாங்கினால் உச்சபட்ச விலை.
2. பொதுமாக்களின் விமான ஆசைக்கு தூண்டிலாக சில டிக்கெட்டுகள் குறைந்த விலையில் தரப்பட்டன.
3. டிக்கெட்டை கேன்சல் பண்ணினால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறையை முதன்முதலில் கொண்டு வந்தது ஏர்டெக்கான்.
4. எவ்வளவு குறைவான தொழிலாளர்களை வைக்க முடியுமோ, அவ்வளவு குறைவான தொழிலாளர்களை வைத்து, எவ்வளவு அதிகமான வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு அதிகமான வேலை வாங்கியது ஏர் டெக்கான். செலவை குறைக்க வேண்டுமெனில் ஆட்களைக் குறை அல்லது சம்பளத்தை குறை. இது தான் தனியார் முதலாளிகளின் தாரக மந்திரம். இதுவே கோபிநாத்தின் தந்திரம்.
5. பழைய ஹெலிகாப்டர்கள், பழைய விமானங்கள் என வாங்கி அதை வைத்து விமான நிறுவனம் நடத்தி, உயிருக்கு உலை வைக்கும் வேலையை செய்தார் கோபிநாத்.
6. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருப்பது, வேலையை விட்டு நீக்குவது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் கோபிநாத்துக்கு அத்துப்படி.
7. SBI, AXIS என பல வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு, திருப்பித்தரவில்லை கோபிநாத். கடனை திருப்பி தராததால், SBI கோபிநாத்தின் சொத்துக்களை ஏலம் விட்டது.
8. ரைட் சகோதரர்கள் இன்று உயிரோடு இருந்து, விமான நிறுவனம் நடத்தினால், வில்பர் ரைட் தனது தம்பி ஆர்வில் ரைட்டை வேலையை விட்டு தூக்கிருப்பான் என ஒருமுறை சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனர் (Herb Kelleher) காமெடியாக சொன்னார். இதைத் தான் அனைத்து தனியார் முதலாளிகளும் செய்கிறார்கள். கேப்டன் கோபி நாத் செய்ததும் இதுதான். 2020 மார்ச் 22ல் லாக்டவுனை இந்திய அரசு அறிவிக்கிறது. ஏப்ரல் 5 ஆம் தேதி ஏர் டெக்கான் தனது அனைத்து தொழிலாளர்களையும் வேலையை விட்டு விலகச் சொல்லிவிட்டது அல்லது சம்பளம் இல்லாத நீண்ட கால விடுப்பில் போகச்சொல்லி விட்டது. மற்ற எந்த விமான நிறுவனங்களும் இதைச் செய்யவில்லை. முதன் முதலில் ஏர் டெக்கான் செய்தது.


படிக்க : சர்தார் உத்தம்சிங் திரைப்படம் : பயங்கரவாதியா ? புரட்சியாளரா ?


பல நாள் திருடன் ஒரு நாளும் அகப்படவில்லை

2003 இல் துவங்கிய ஏர் டெக்கான் கடுமையான நட்டத்தை சந்தித்தது, 2007 இல் விஜய் மல்லையாவுக்கு விற்று விட்டார். ஏர் டெக்கானை வாங்கியது விஜய் மல்லையாவின் சரிவுக்கு முக்கிய காரணம். 2009 இல் டெக்கான் 360 என்ற சரக்கு விமான போக்குவரத்தை ஆரம்பித்து, நட்டத்தினால் 2011 இல் இழுத்து மூடினார். 2012 இல் குஜராத்தின் சில நகரங்களுக்கு (அகமதாபாத், சூரத், ஜாம் நகர், பாவ் நகர், கண்டலா) இடையேயான விமானப் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பித்து 2013 இல் நட்டத்தினால் மூடிவிட்டார். இத்தனை முறை நட்டத்தினால் மூடிவிட்டாலும், 2017 இல் மோடி அரசாங்கம், குறுநகரங்களுக்கான விமானப் பயணம் என்ற நோக்கத்திற்காக கொண்டு வந்த UDAN என்ற திட்டத்தின் கீழ் 34 நகரங்களுக்காக விமானப் பயண அனுமதியை கோபிநாத் வாங்கியுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ், பாரமவுண்ட், ஏர் சஹாரா, கிங்பிஷர் என பல விமான நிறுவனங்கள் நட்டத்தை சமாளிக்க இயலாமல் நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு ஒடிய போதும், பல முறை நட்டமடைந்தாலும், 2017 இல் மீண்டும் ஏர் டெக்கானை ஆரம்பித்த கோபி நாத், 2020 ஆம் ஆண்டு ஏப்ரலில் அதனை தற்காலிகமாக இழுத்து மூடிவிட்டார். இதன் பின்னரும் UDAN என்ற இந்திய அரசின் திட்டத்தின் தலைமை ஆலோசகராக கோபிநாத் உள்ளார்.

அதன் மர்மம் என்ன?

பாரத் மகாதேவன் என்ற விமானத்துறையைச் சார்ந்த உயரதிகாரி, “விமானத்துறையில் கோபிநாத் செய்த தவறுகளுக்கும் குற்றங்களுக்கும்” ஒருபோதும் மாட்டவில்லை என்கிறார். அவரைத் தப்ப விடுவது யார்? பார்ப்பன லாபியா?

இதற்கு கோபி நாத்தே பதில் சொல்லுகிறார். 2017 இல் ஏர் டெக்கானை மீண்டும் ஆரம்பித்தபோது ஒரு பேட்டியில், ”ஏர் டெக்கானை விஜய் மல்லையாவுக்கு விற்ற போது, இவ்வளவு பிரச்சினைகள் வருமென கணித்தீர்களா” என Network 18 பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு, “விஜய் மல்லையா புத்திசாலித்தனமாகவும் அரசியல் சூழலை சிறப்பாக நிர்வகிக்கவும் செய்திருக்க வேண்டும், ஏனெனில் மற்ற சில பெரு நிறுவனங்களின் கடனுடன் ஒப்பிடும்போது விஜய் மல்லையாவின் கடன் மிகக் குறைவு. மற்ற பெரு நிறுவனங்கள் கடனை திருப்பிச்செலுத்தாமல் சமாளிக்கின்றன. ஆனால் அவரால் தனது கடனை சமாளிக்கவோ அல்லது விமானச் சேவையை மறுதொடக்கம் செய்யவோ முடியவில்லை” என்கிறார். சுருக்கமாக, தனக்கு உள்ள புத்திசாலித்தனம் மல்லையாவுக்கு இல்லை எனக் கூறுகிறார் என எடுத்துக் கொள்ளலாமா?

சிலமுறை தேர்தலில்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தும், சில அரசியல் கட்சிகளோடும் இன்றும் இணக்கமாகவும் உள்ள அந்த தந்திரம் மல்லையாவுக்கு இல்லை எனக் கூறுகிறார் என எடுத்துக் கொள்ளலாமா?.

கையில் எடுத்த தொழிலெல்லாம் தோல்வியில் முடிந்தாலும், இன்றும் அதிகார வர்க்கத்தின் செல்லப்பிள்ளையாக இருக்கும் கோபிநாத்தின் திறமை மல்லையாவுக்கு இல்லை எனக் கூறுகிறார் என எடுத்துக் கொள்ளலாமா?

எப்படி எடுத்துக்கொண்டாலும் தவறில்லை.

சேவை கண்ணோட்டம் கொண்ட முதலாளி சாத்தியமா?

எந்த முதலாளி தனது லாபத்தை கைவிடுவார் அல்லது லாபத்தை கைவிட்டு மக்களுக்கு சேவை செய்ய அவர் ஏன் முதலாளி ஆகவேண்டும்? கோபி நாத் அறிமுகப்படுத்திய மலிவுவிலை விமானம் ஜாதியை பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒழிக்க வந்த வாகனம் இல்லை.
ஆண்டுக்கு சராசரியாக 0.2 முறை விமானத்தில் பறக்கும் இந்திய குடிமக்களை, அதைவிட அதிக முறை பறக்க வைத்து லாபம் சம்பாதிக்க கோபிநாத் பெரும்படு தேர்ந்தெடுத்த வியாபார உத்திதான் மலிவு விலை விமான பயணம். ஒரு ரூபாய் டிக்கெட் என்பது விமானத்தில் பறக்க அவர்களை விமானத்தை நோக்கி கவர்ந்திழுக்கும் இனிப்பு மிட்டாய் போல தூண்டில் போட்டு மீனை இழுக்கும் வியாபாரத் தந்திரமே அன்றி மக்கள் சேவை அல்ல. பணக்காரர்கள் மட்டுமே வைத்திருந்த செல்போன் இன்று ஒருவருக்கு ஒன்று என பரவலானதின் பின்னணி தனியார் தொலைத்தொடர்பு கம்பெனிகளின் தொழில்தந்திரமும் வியாபார உத்தியும் அன்றி, அனைத்தையும் அனைவருக்கும் பரவலாக்கும் பொதுவுடமை இல்லை. 500 ரூபாய்க்கு செல்போன் விற்று அனில் அம்பானி லாபம் சம்பாதித்தாரா இல்லை அதை வாங்கிய 500 ரூபாய் மாதச் சம்பளம் பெற்ற தொழிலாளி லாபம் சம்பாதித்தாரா?

தொழில் போட்டியும், புதிய சந்தையை உருவாக்குவதும், பழைய சந்தைகளை அழிப்பதும், முதலாளித்துவத்தின் அடிப்படை இயங்கு முறை. முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை, ”ஒருபுறம் வலுக்கட்டாயமாக உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும் பகுதியை அழிப்பதன் மூலமும், மறுபுறம் புதிய சந்தைகளை கைப்பற்றுதல், பழைய சந்தைகளை கடைசிவரை கடைசி சொட்டு வரை சுரண்டுதல் மூலமும் சமாளிக்க முயற்சிக்கிறது” என்றார் காரல் மார்க்ஸ.

தொழில் போட்டிகளுக்காக விலையை குறைப்பது ஒன்றும் புதிதல்ல. அது பழைய கடைச்சரக்கு. தொலைதொடர்பு துறையில் திடீரென நுழைந்த முகேஷ் அம்பானி மற்ற நிறுவனங்களின் கையில் இருந்த சந்தையைக் கைப்பற்ற, ஜியோ சிம் கார்டை விலையில்லாமல் மூன்று மாதங்களுக்கு தந்தார். அதன் விளைவாக ஏராளமான பேர் மற்ற நிறுவனங்களிலிருந்து விலகி, ஜியோ சிம் கார்டை பயன்படுத்த ஆரம்பித்தனர். ஏற்கனவே நெருக்கடியில் இருந்த வோடபோன், ஏர்செல், ஐடியா, போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முகேஷ் அம்பானியோடு சண்டை செய்ய இயலாமல் வீழ்ந்தன. ”அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்போது காலியாகும்” என காத்திருந்த முகேஷ் அம்பானி தொலைதொடர்பு கட்டணத்தை 30 சதவிகிதம் உயர்த்தினார். 2015 ஆம் ஆண்டில் தொலைத்தொடர்புத் துறையில் நுழைந்த முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் இன்று 50 சதவீத செல்போன் சந்தை உள்ளது.

குறைந்த விலைக்கு பொருட்களை விற்று, போட்டியாளர்களை வீழ்த்தி சந்தையைக் கைப்பற்றி பின்னர் விலையை உயர்த்தி லாபத்தை அதிகரிப்பது முதலாளிகளுக்கு பாலபாடம். முகேஷ் அம்பானி இன்று செய்ததை கோபிநாத் அன்று செய்தார். 2003 ஆம் ஆண்டில் மலிவு விலை டிக்கெட் என்ற வியாபார யுத்தியுடன் விமானச் சந்தைக்குள் நுழைந்த கோபிநாத் 3 ஆண்டுகளில் 20 சதவீத சந்தையை கைப்பற்றினார். தனிப்பெரும் முதலாளி கனவோடு இருந்த கோபிநாத்தை இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற மலிவு விலை விமான நிறுவன முதலாளிகள் கோபிநாத்தின் உத்தியை வைத்தே அவரை வீழ்த்தின. தொழில் போட்டியும் கடனும் நெருக்க தனது நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை 550 கோடி விஜய் மல்லையாவுக்கு விற்று நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொண்டார். ஏர் டெக்கானை வாங்கிய விஜய் மல்லையா விழுந்தது தனிக்கதை.

ஒரு ரூபாய்க்கு டிக்கெட் விற்றவர் ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆனது எப்படி? சேவை மனப்பான்மையுடன் இருந்ததாலா?

வரம்பின்றி திறந்து விடப்பட்ட இந்திய பெரு சந்தையில் கால்பதித்த முதலாளி வர்க்கத்தின் உற்பத்திப் பொருட்களுக்கு மென்மேலும் விரிவடைந்து வரும் சந்தைத் தேவை. அதற்கு அந்தத் தேவை, முதலாளி வர்க்கத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் ஓடும்படி விரட்டுகிறது. அது எல்லா இடங்களிலும் கால் பதிக்க இடம் தேடி தேட வேண்டியதாகிறது. எல்லா இடங்களிலும் தொடர்புகளை நிறுவ வேண்டியதாகிறது. ஏர் டெக்கான் மூலம் கோபிநாத் இந்தியாவின் சிறு குறு நகரங்களை நோக்கிப் போனார். ஒவ்வொரு முதலாளியும் தனது தொழிலை வளர்க்க லாபத்தை பெருக்க செய்யும் செயல் அது. அதற்காக எதையும் செய்ய துணிந்தால் தான் அவர்களால் முதலாளியாக நீடிக்க முடியும். கோபிநாத்தும் இதற்கு விதிவிலக்கல்ல.


படிக்க : சாராஸ் திரைப்படம் : குழந்தைப் பேறு வரமா ? சாபமா ? || ராஜசங்கீதன்


மனிதகுலம் சந்திக்கும் துன்ப, துயரங்களை பயன்படுத்தி மூலதனக் குவிப்பை செய்வது முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத குணாம்சமாக இருக்கிறது. எதையும் லாபமாக பார்க்கும் முதலாளி வர்க்கம், கொரானா பெருந்தொற்று காலத்தையும் லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பாகவே பார்த்தது. அதனால் தான் கொரானா காலத்திலும் யுபிஎஸ் (UBS), பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (Price Waterhouse Cooper’s -PWC) அறிக்கையில் இந்திய பணக்காரர்களின் நிகர வருமானம் 2020 ஏப்ரல் – ஜுலையில் மட்டும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 423 பில்லியன் டாலர். நாடு முழுவதும் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு பொதுமுடக்கம் கடும் அமலில் இருந்த காலகட்டத்தில் பணக்காரர்களின் வருமானம் இவ்வளவு உயர்ந்துள்ளது.

பணக்காரர்களை எனது வாடிக்கையாளராக கருதவில்லை மாறாக எனது அலுவலகத்தில் சுத்தம் செய்யும் பெண்ணும், ஆட்டோ ஓட்டுநரும், மற்றும் இவர்களைப் போன்ற ஏழை மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம், ஏழை மக்களும் பறக்க முடியும் என கனவு காண வேண்டும். அந்தக் கனவை நாங்கள் நனவாக்குவோம் என்றார் கோபிநாத். அந்தக் கனவு உண்மையில் மக்களின் கனவல்ல. அது கோபிநாத் என்ற முதலாளியின் கனவு. ஏழை எளிய மக்கள் விமானத்தில் பறப்பதின் மூலம் தன் வாழ்வில் எந்தப் பிரச்சினைகளையும் திருத்தி விடப்போவதில்லை. ஆனால் முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பது நிச்சயம். எனவே மக்களுக்கு இல்லாத கனவைத் தூண்டி, அதன் முலம் நுகர்வை அதிகரித்து, தங்கள் மூலதனத்தை பெருக்குவதே முதலாளித்துவம் காணும் கனவு.

தாங்கள் காணும் கனவை மக்களின் கனவாக மாற்றுவதுதான் முதலாளிகள் செய்யும் சேவை.

(தொடரும்…)

சு.விஜயபாஸ்கர்

disclaimer

1 மறுமொழி

  1. திரைவிமர்சனம், தலையில் அடித்தமாதிரி குறி பார்த்து வீழ்த்துகிறது.
    மேன்மக்கள் ரசனையை,”தாங்கள் காணும் கனவை மக்களின் கனவாக மாற்றுவதுதான் முதலாளிகள் செய்யும் சேவை” என்பது சரியே.
    இதன் வரலாறு நெடியது…கம்ப ராமாயணத்தை கம்பரசமாக்கி வயிறுமுட்ட குடிக்கும் மேட்டுக்குடி பித்தர்கள் அதில் மயங்கி,,அஹா…ஓஹோ..ஓஓ என்று தலைக்காய்ந்த தமிழன் மீது அதை வாந்தி எடுப்பார்கள்.
    இது அப்படியே இப்போது, சினிமா விமர்சனமாக சந்தை ஊடகங்களில் தொடர்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க