சூரரைப் போற்ற முடியாது – பாகம் 1

சூர்யா நடித்த சூரரைப்போற்று என்ற ஒரு திரைப்படம் அண்மையில் அமேசான் இணையதளத்தில் நேரடியாக வெளிவந்து பரவலான விவாதங்களை கிளப்பியது. அந்தப் படத்தை இயக்கியவர் மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பயிற்சி பெற்ற சுதா கொங்கரா என்ற பெண். 2000 ஆண்டுகளில் ஏர் டெக்கான் என்ற விமான போக்குவரத்து நிறுவனத்தை நிறுவி, நடத்திய கர்நாடகாவைச் சேர்ந்த பார்ப்பனர் கேப்டன் கோபிநாத் என்பவர்தான் இந்தப்படத்தில் வரும் சூரர்.

ஒரு புத்தகத்தையோ அல்லது ஒருவரது வாழ்க்கையையோ தழுவி எடுக்கப்படும் படங்கள் உண்மை கதைக்கு மிக நெருக்கத்தில் இருப்பதுதான் நியாயம், அவ்வாறின்றி படத்தின் விளம்பரத்திற்காக சில வணிக விடயங்களை சேர்த்துக் கொண்டாலும் நாம் அதை விமர்சிக்கப் போவதில்லை. ஆனால் நிஜக்கதைக்கும், உண்மைக்கும் தொடர்பில்லாத விடயங்களை மக்கள் மத்தியில், மக்களின் மூளைகளில் ஏற்றும்போது அதை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது.

விமான் நிறுவனம் தொடங்கினாரா, விமானம் பறந்ததா இல்லையா என்பதே சூரரைப்போற்று திரைப்படத்தின் கதைக்களமாக இருந்தாலும், விமான நிறுவனம் தொடங்க சொல்லும் காரணமாக ”Not only cost barrier, break the damn caste barrier” எனச் சொல்லுவதாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிக்கவே விமானப் போக்குவரத்து நிறுவனத்தை தொடங்க விரும்புகிறார் நாயகன்.

திரைப்படத்தில் விமான நிறுவன விமான போக்குவரத்து நிறுவனத்தை துவங்கும் சூர்யா, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் விமானப் போக்குவரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறார்.


படிக்க : விக்ரம்  திரைப்பட வசூல் : மக்கள் அளித்த பணம் கவர்ச்சிக்கா? கருத்துக்கா?


பணக்காரர்களுக்கும் உயர் ஜாதியினருக்கு மட்டுமானது அல்ல விமானப் போக்குவரத்து, மாறாக ஏழைகளுக்கும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமத்து, விவசாய மக்களுக்கும் விமானம், பறக்க வேண்டும் என்கிறார் கதாநாயகன். கருப்புச்சட்டை அணிந்து சுயமரியாதை திருமணம் நடத்துகிறார். தங்களது ஊரில் நிற்காத ரயிலை மறித்து போராட்டம் எதிர்த்து போராட்டம் நடத்துகிறார் கதா நாயகன்.
மாறன் என்ற திராவிட இயக்க, தனித்தமிழ் பெயரையும் கதையின் நாயகனுக்கு சூட்டியுள்ளனர். பெரியார் படத்தையும் அங்காங்கே காட்டியுள்ளனர். பெரு நிறுவனங்களை விமர்சிக்கும் வகையிலான சில விமர்சனங்களையும் சேர்த்துள்ளனர்.
சாதியை விமர்சிக்கும் வசனங்களையும் ஆங்காங்கே தூவி விட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமத்தில் இருந்து, பிறந்து வளர்ந்த, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியதாக காட்டுகிறார்கள்.

மேற்சொன்ன படத்தில் காட்டப்பட்ட மேற்சொன்ன கதைக்கும் கோபிநாத்தின் உண்மை கதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கோபிநாத் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த அய்யங்கார் ஜாதியை சேர்ந்தவர்.

ஏன் இப்படி உண்மைக்கு தொடர்பில்லாத வகையில் கதாபாத்திரத்தை வடிவமைக்க வேண்டும்? காரணங்கள் பல.

அகரம் அறக்கட்டளை, நீட் விஷயத்தில் சூர்யாவின் கண்டன அறிக்கை, அவரது மனைவி ஜோதிகாவின் சமீபத்திய ”கோயில்கள் தேவையில்லை, மருத்துவமனைகள் தேவை” என்ற பேச்சு ஆகியவை சூர்யாவுக்கு அண்மைக்காலத்தில் ஒரு முற்போக்கு பாத்திரத்தை தந்துள்ளன.

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் கதை என்பதாலும், படத்தைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்க அல்லது அதற்கும் கீழான பொருளாதார பார்க்க பின்னணியில் இருப்பவர்கள் என்பதாலும், தொழில் முனைவோர் கனவில் இருப்போர் என்பதாலும், விமானத்தில் ஒருமுறையாவது பறந்து விட மாட்டோமா என்ற ஏக்கத்தில் இருக்கும் ஒரு பெருங்கூட்டம், நாமும் பெரு முதலாளி ஆகிவிடுமோ நாம் விட மாட்டோமா என்ற கற்பனையில் இருக்கும் சிறு-குறு முதலாளிகள் போன்றோரை குறி வைத்தும்,
பார்ப்பன எதிர்ப்பிற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதரவு என்ற பல காரணிகளை இணைத்து, எடுக்கப்பட்ட திரைப்படம் சூரரைப் போற்று.

கோபிநாத்தின் ஒரிஜினல் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட படத்தில் சொல்லப்பட்டுள்ள கதைக்கும் கோபிநாத்தின் ஒரிஜினல் கதைக்கும் தொடர்பே இல்லை.

யார் அந்த உண்மையான கோபிநாத்?

1990-களின் தொடக்கத்தில் இந்தியாவில் வணிக சந்தை தனியாருக்கு வரம்பின்றி திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகள் முழுமையாக தனியாரின் கட்டுப்பாட்டில் வந்தன. கருப்பட்டி மிட்டாயை ஈ மொய்ப்பது போல், 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியாவை கார்ப்பரேட்களும், முதலாளித்துவ நிறுவனங்களும் மொய்த்தனர். அவற்றில் ஒரு வகை விமான போக்குவரத்து நிறுவனங்கள்.

பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியாவும் இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமே விமான சேவை வழங்கி வந்த நிலையில், இந்தியாவை உய்விக்க ”தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” வந்தால்தான் முடியும் என்ற முதலாளித்துவ திட்டத்தின் ஒரு பகுதிதான் தனியார் விமான சேவை நிறுவனங்கள். ஜெட் ஏர்வேஸ், பரமௌண்ட், பைஸ்ஜெட், இண்டிகோ, கிங்ஃபிஷர், என பற்பல தனியார் விமான நிறுவனங்கள் புற்றீசல் போல் முளைத்தன.

சில காலம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த கோபிநாத்துக்கு தொழில் முனைவர் ஆகும் ஆசை வந்தது எட்டு ஆண்டுகளில் ராணுவத்தை விட்டு விலகி, பட்டுப்பூச்சி பண்ணை, வாகன விற்பனை, ஹோட்டல் என பல சிறு சிறு தொழில்களை முயன்ற கோபிநாத்துக்கு இலக்கு பெரும் முதலாளியாக மாறுவது. அதன் நுழைவு வாயிலாக விமான போக்குவரத்து தொழிலை தேர்ந்தெடுத்தார் கோபிநாத். 1997 ஆம் ஆண்டில் தனது நண்பருடன் நண்பர் சாமுவேல் உடன் இணைந்து டெக்கான் ஏவியேஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் சாமுவேல் ஓர் தொழில்முறை விமானி. அவர்கள் இணைந்து தொடங்கிய டெக்கான் ஏவியேஷன் ஆரம்பத்தில் தனி நபர்களுக்கான விமான சேவை எனப்படும் ”சார்ட்டர் விமான சேவையை” வழங்கியது. அரசியல்வாதிகளும் கொழுத்த பணக்காரர்களும் கோபிநாத்தின் வாடிக்கையாளர்கள். சிறு குறு தொழில்களை செய்து வந்த கோபிநாத் இப்போது நடுத்தர முதலாளி ஆகிவிட்டார். ஆனால் முதலீட்டும் எண்ணம் அத்தோடு நின்று விடுமா?

கேட்பாரின்றி இறந்து கிடந்த இந்திய சந்தையும் நூறு கோடி மக்களும் கோபிநாத் கோபிநாத் பெரு முதலாளி கனவிற்கு தூண்டில் போட்டன. அதன் விளைவாக அரசியல்வாதிகளுக்கும், கொழுத்த பணக்காரர்களுக்கு மட்டுமே பறந்த டெக்கான் ஏவியேஷன், ஏர் டெக்கான் ஆக உருமாறி அனைத்து தரப்பு மக்களுக்குமான பொதுப் போக்குவரத்து விமான நிறுவனமாக பறந்தது. 2003இல் உருவெடுத்த ஏர் டெக்கானை, விளம்பரப்படுத்தி, பெரிய அளவில் சந்தை படுத்துவது எப்படி என முதலாளி கோபிநாத் சிந்திக்காமல் இருப்பாரா? சந்தை படுத்தாமல் எப்படி பெரு முதலாளி ஆவது?

உலகெங்கும் இன்று வரை பயணிகள் விமான போக்குவரத்து தொழில் முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டித் தரவில்லை. மிகக் குறைந்த நிறுவனங்களே லாபத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

தொழிற்போட்டி, ஏர்பஸ், போயிங் என்ற இரு நிறுவனங்களின் ஏகபோக உரிமையில் உள்ள விமானத் தயாரிப்பு, சர்வதேச சட்டங்கள், விதிமுறைகள், எரிபொருள் செலவு, விமான நிலையங்களுக்கு தர வேண்டிய கட்டணம் போன்ற பல்வேறு காரணிகளால் பல விமான நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன அல்லது நட்டத்தில் இயங்குகின்றன.


படிக்க : முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !


லாபத்தில் பல்லிளிக்கவும், கும்மாளம் போடவும் எந்த முதலாளிக்கும் கசக்காது. ஆனால் நட்டத்தை பொறுப்பேற்க எந்த முதலாளி முன் வருவார்? குறைவான லாபம் அல்லது நட்டம் என்ற அளவில் இயங்கி வரும் விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் நட்டத்தை, அதாவது செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகரிக்க, கையிலெடுத்த யுத்தி No Frill Service, அதாவது எவ்வகையிலாவது விமானத்தை இயக்கும் செலவைக் குறைப்பது தான் இந்த மாடல்.

விமான வடிவமைப்பை மாற்றுவது, இருக்கைகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை குறைத்து அதிக இருக்கைகளை வடிவமைப்பது, பயணிகளுக்கு வழமையாக பயணச் சீட்டோடு வழங்கி வந்த உணவுப்பொருட்கள், மது போன்றவற்றை தனியாக பணம் பெற்று வழங்குதல்,
குறைந்த அளவிலான தொழிலாளர்களைப் பணியமர்த்துதல், முடிந்த அளவு குறைவான ஊதியம் வழங்குதல், டிக்கெட்டுகளை நேரடியாக விற்றல் என முடிந்த வகையில் செலவுகளை குறைத்து லாபத்தை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டன. குறைந்த விலையில் டிக்கெட்டுகளை விற்பதின் மூலம், அதிகப் பயணிகளை ஈர்க்க முடியும் என்ற உத்தியும் உண்டு.

Lean and Mean, No Frill, low-cost service என பல பெயர்களில் அறியப்பட்டாலும் குறைந்த செலவில் விமானத்தை இயக்கி அதிக அளவில் பயணிகளை ஈர்த்து, அதிக லாபத்தை ஈட்டுவது தான் விமான நிறுவனங்களில் அடிப்படை நோக்கம். இம்முறையில் அமெரிக்காவைச் சேர்ந்த சவுத் வெஸ்ட் ஏர்வேஸ் , அயர்லாந்தைச் சேர்ந்த ரியான் ஏர் போன்ற சில நிறுவனங்கள் மலிவு விலையில் பயண டிக்கெட்டுகளை தந்து அதிக லாபத்தை ஈட்டி வந்தனர், அதைப் பின்பற்றிய கோபிநாத், இந்திய பயணிகள் விமான போக்குவரத்து துறையில் பல செலவு குறைப்பு முறைகளை அறிமுகப்படுத்தினார்.

(தொடரும்…)

சு.விஜயபாஸ்கர்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க