குஜராத்: ஆர்.டி.ஐ-யில் கேள்வி கேட்க 10 பேருக்கு வாழ்நாள் தடை! – பல்லிளிக்கும் ஜனநாயகம்!

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்பதையே ஜனநாயக விரோதமாக தடை விதிக்கும் இந்த காவி-கார்ப்பரேட் பாசிசத்தை, அரசு கட்டமைப்புக்கு வெளியில் நின்று வீழ்த்துவது மட்டுமே தீர்வாக இருக்க முடியும்!

0

குஜராத் மாநிலத்தில் கடந்த 18 மாதங்களில் தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) கேள்விகளை தாக்கல் செய்ய 10 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் தகவல் ஆணையம் (ஜிஐசி) இந்தத் தடையை விதித்துள்ளது. மேலும் அவர்கள் ஆர்டிஐ கேள்விகளைத் தாக்கல் செய்வதைத் தடை செய்வதற்கான காரணங்களாக ‘ஆர்டிஐ சட்டத்தைப் பயன்படுத்தி அரசு அதிகாரிகளைத் துன்புறுத்துதல்’ மற்றும் ‘பல கேள்விகளை தாக்கல் செய்தல்’ என்று பட்டியலிட்டுள்ளது.

முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா, “இந்த உத்தரவுகள் முற்றிலும் சட்டவிரோதமானதும்” என்றார்.

மஹிதி அதிகார் குஜராத் பஹேல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், RTI உதவி மையத்தை நடத்துகிறது. அது தடை வழக்குகளை ஆய்வு செய்தது.

ஒரு வழக்கில், காந்திநகரில் உள்ள பெத்தாபூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான அமிதா மிஸ்ரா என்ற விண்ணப்பதாரர், தனது சேவை புத்தகம் மற்றும் சம்பள விவரங்களின் நகலைக் கேட்டு ஆர்டிஐ வினவலை தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், அவர் வாழ்நாள் முழுவதும் RTI கேள்விகளை தாக்கல் செய்ய தடை விதிக்கப்பட்டது.

மற்றொரு வழக்கில், தகவல் ஆணையர் கே.எம். அத்வர்யு மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் சர்வ வித்யாலயா கதி ஆகியோரின் விண்ணப்பங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டார். ஒரு பக்கத்துக்குத் தேவையான ரூ.2 ஆர்டிஐ கட்டணத்தை அவர் செலுத்தவில்லை என்றும், கேட்ட கேள்விகளையே மீண்டும் கேட்பதாகவும் பள்ளி நிர்வாகம் புகார் கூறியது.


படிக்க : தகவல் அறியும் உரிமை சட்டத்தை ’ வெளிப்படையான ’ மோடி அரசு திருத்துவது ஏன் ?


இன்னுமொரு வழக்கில், பெட்லாட் நகரத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர் ஹிதேஷ் படேல் மற்றும் அவரது மனைவிக்கு அவரது குடியிருப்பு சமுதாயம் தொடர்பான 13 RTI கேள்விகளை தாக்கல் செய்ததற்காக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. RTI கேள்விகளைத் தாக்கல் செய்வதற்கான அபராதம் விதிக்கப்பட்டது என்பது அதன் வரலாற்றில் முதல் முறையாகும்.

மற்றுமொரு வழக்கில், மொடாசா நகரத்தில் உள்ள கஸ்பாவைச் சேர்ந்த பள்ளி ஊழியரான சத்தார் மஜித் கலீஃபா தனது நிறுவனம் குறித்து கேள்விகளைக் கேட்கத் தொடங்கியபோது, ​​RTI கேள்விகளைத் தாக்கல் செய்ய தடை விதிக்கப்பட்டது. தகவல் ஆணையர் அத்வர்யு, கலீஃபா “ஆர்டிஐ கேள்விகளைத் தாக்கல் செய்வதன் மூலம் பள்ளியை பழிவாங்க முயற்சிக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

ஆர்டிஐ விண்ணப்பங்களின் மீதான பல்வேறு வழக்குகள் தீர்வு காணப்படாமலேயே நிலுவையில் உள்ளது. அக்டோபர் 2017 நிலவரப்படி, மத்திய தகவல் ஆணையத்தில் (சிஐசி) 37,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த ஆண்டு(2022) நிலைமை பெரிதாக மாறவில்லை. ஜூலை 18 வரை, RTI சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட 26,518 மேல்முறையீடுகள் மற்றும் புகார்கள் CIC-யிடம் அனுமதி பெற நிலுவையில் உள்ளன.

தவறான அகற்றல் விகிதத்திற்கு முதன்மைக் காரணம், தகவல்களை மறுப்பதற்காக அதிகாரிகளால் பல விண்ணப்பங்கள் கவனிக்கப்படாமல் இருப்பதே ஆகும். இருப்பினும், CIC அதிகாரிகளின் கூற்றுப்படி, விண்ணப்பங்களின் “அற்பத்தனமான” தன்மையே விண்ணப்பங்கள் அதிக அளவில் நிலுவையில் இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று கூறப்படுகிறது.


படிக்க : தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு பாமரனை பந்தாடிய கதை!


தகவல் அறியும் உரிமை சட்டம் என்பதை பயன்படுத்தி பல்வேறு கேள்விகளை; தரவுகளை அரசாங்கத்திடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று ஜனநாயகத்தின் கடைசி வாய்ப்பாக பலர் கருதி வந்தனர். ஆனால், அதில் நீங்கள் கேள்விகள் தாக்கல் செய்தால் குற்றம்சாட்டப்படுவீர்கள்; கேள்வி கேட்கவே கூடாது என்று வாழ்நாள் தடைவிதிக்கப்படுவீர்கள் என்று ஓர் ஜனநாயக விரோத நடவடிக்கை அரங்கேற்றப்படுகிறது.

இந்த தனியார்மய அரசியல் சட்டத்திற்குள் எந்த தீர்வையும் காணமுடியாது என்பதற்கு இதைவிட ஓர் நல்ல உதாரணம் இருக்க முடியாது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்பதையே ஜனநாயக விரோதமாக தடை விதிக்கும் இந்த காவி-கார்ப்பரேட் பாசிசத்தை, அரசு கட்டமைப்புக்கு வெளியில் நின்று வீழ்த்துவது மட்டுமே தீர்வாக இருக்க முடியும்!


காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க