ரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதாகக் கூறி தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. மோடி தலைமையிலான ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட, சிக்கலை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை அரசு மறுத்துள்ள போதும், பல விவரங்களை வெளிக்கொண்டுவர இந்தச் சட்டம் உதவியது. ஆனால், அதை நீர்த்துப்போகும் வகையில் திங்கள்கிழமை (22.07.2019) சட்டத் திருத்தம் மேற்கொண்டு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது மோடி அரசு.

பொதுவெளியில் விவாதங்கள் ஏதும் நிகழ்த்தப்படாமல் அவசரகதியில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக செயல்பாட்டாளர்களும், எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தம், தகவல் ஆணையத்தின் சுதந்திரத்தை குறைத்துள்ளதோடு, இந்தியாவில் பலம் வாய்ந்த, பெருவாரியாக பயன்படுத்தப்படும் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் எனவும் செயல்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து செயல்பாட்டாளர்கள் டெல்லி படேல் சவுக்கில் நடத்திய போராட்டம்.

தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் இந்திய தேர்தல் ஆணையர், ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோருக்கு இணையாக தேசிய தகவல் ஆணையருக்கு இருந்த தகுதியும் அதிகாரமும் பறிக்கப்பட்டுள்ளன.

தன்னாட்சி பெற்ற அமைப்பான தேசிய தகவல் ஆணையம் தனது வலிமையை முற்றிலுமாக இழக்கிறது என்றும், மேலும் தேசிய தகவல் ஆணையர், மாநில தகவல் ஆணையர்கள் ஆகியோரின் ஊதியங்களையும் இனி மத்திய அரசுதான் நிர்ணயிக்கும் என்கிற திருத்தத்தின் மூலம் தகவல் ஆணையத்தை மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் அமைப்பாக மாற்ற முயற்சிக்கிறது என்றும்; மக்களவையில் தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தை வைத்து மத்திய அரசு இதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது எனவும் மாநில, தேசியக் கட்சிகள் விமர்சித்துள்ளன.

டெல்லியில் திங்கள்கிழமை, மக்களின் தகவல் அறியும் உரிமைக்கான தேசிய பிரச்சாரம் என்ற இயக்கம் ஏற்பாடு செய்திருந்த பேரணி மற்றும் அரங்கக்கூட்டத்தில் பல ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். அரங்கக்கூட்டத்துக்கு முன்னதாகக் கலந்துகொண்ட, எதிர்ப்பு பேரணியில் இந்த சட்டத் திருத்தம் ‘பிற்போக்குத்தனமானது’ என பலர் முழக்கமிட்டனர்.

நாடாளுமன்றம் ரப்பர் ஸ்டாம்பாக சுருங்கிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா குற்றம்சாட்டினார். “சட்டமாக்கல் குறித்து முறையான விவாதங்கள் நடத்தப்படவில்லை. பாஜக தனது பெரும்பான்மை பலத்தை வைத்து மக்களின் உரிமைகளை மிதிக்கும் விதமாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்கிறது” என்றார் அவர்.

அதிகாரத்தை குவிப்பதில் மட்டுமே அரசு அக்கறை கொண்டுள்ளது என்றும் மனித உரிமை சட்டங்களில் திருத்தங்கங்கள் மேற்கொள்வது தனது வாதத்தை மெய்ப்பிப்பதாக உள்ளது என்றும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த கியான்ஷ்யாம் திவாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

படிக்க:
தமிழகத்தை நாசமாக்காதே ! – திருவாரூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்
♦ நூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை

மக்களின் கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிக்கும் சட்டங்களை அரசு குறிவைப்பதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார். இதுபோன்ற சட்டங்களை பலப்படுத்துவதற்கு பதிலாக, அவற்றை அழிக்க பாஜக நினைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

தனது அரசின் தவறான நோக்கங்களை அம்பலப்படுத்திவிடும் என்பதற்கு பயந்து ஆர்.டி.ஐ. சட்டத்தை நீர்க்கச் செய்கிறது மத்திய அரசு என்கிறார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.

“பிரதமரின் வெளிநாட்டு பயணங்களில் அவருடன் யாரெல்லாம் பயணித்தார்கள், ரபேல் ஊழல், பாஜகவுக்கு நிதியளிக்கும் மூலங்கள், கார்ப்பரேட்டுகளுக்கு தரப்படும் ஒப்பந்தங்கள் என அரசு சர்ச்சைக்குரிய விசயங்கள் குறித்த தகவல்களை மறைக்கப்பார்க்கிறது” என அவர் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்.

இந்தியாவின் முதல் தலைமை தகவல் ஆணையராக இருந்த வஜாஹத் ஹபிபுல்லா, பல அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்படக்கூடாது என வலியுறுத்தியிருந்தனர் என்றும் தற்போதிருக்கும் நிலையிலேயே அந்தச் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும் பேசினார்.

டெல்லியில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றும், இந்தியாவின் முதல் தலைமை தகவல் ஆணையராக இருந்த வஜாஹத் ஹபிபுல்லா. (படம் – நன்றி : த வயர்)

“ஆர்.டி.ஐ சட்டம் மக்களுக்கு அதிகாரமளித்தது. தலைமை தகவல் ஆணையர்தான் இந்தச் சட்டத்தை பாதுகாக்கும் இறுதியான நீதிமன்றம். அத்தகையவர் தன்னுடைய பதவி காலம் குறித்தும் சம்பளம் குறித்தும் கவலை கொண்டால் எப்படி உண்மை வெளிவரும்?” என கேள்வி எழுப்புகிறார் அவர்.

மோடி ஊழல் இல்லாத ஆட்சி என 2015-ம் ஆண்டு அறிவித்தார். அப்படியெனில் இந்த சட்டத்தைத்தான் பலப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக, அவர் நீர்த்துப்போக வைத்திருக்கிறார் எனவும் ஹபிபுல்லா பேசினார்.

மத்திய, மாநில தகவல் ஆணையர்களின் சம்பளம், பதவிக் காலத்தை மத்திய அரசே முடிவு செய்யும் என்கிற திருத்தம், தகவல் ஆணையம் என்கிற அமைப்பின் அடிப்படையை பலவீனப்படுத்திவிடும் என்கிறார் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான அஞ்சலி பரத்வாஜ்.

“அரசுக்கு எதிரான தகவல்களை வெளியிடும் நிலையில், தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் குறைக்கப்படலாம். சம்பளம் மற்றும் இதரபடிகளும்கூட குறைக்கப்படலாம்” என்கிறார் அவர்.

படிக்க:
குஜராத் : மோடி ஆட்சியில் ஆர்.டி.ஐ. செயல்பாட்டாளரைக் கொன்ற பாஜக எம்பி !
♦ #SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் !

முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் தனக்கு தலைவலியாக இருந்த அனைத்து அமைப்புகளையும் தற்போது தனது பெரும்பான்மை பலத்தின் மூலம் பலவீனப்படுத்தக் கிளம்பியிருக்கிறது மோடி அரசு. அதில் சமீபமாக இணைந்திருக்கிறது தகவல் ஆணையம்.


அனிதா
நன்றி : த வயர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க