01.10.2022

நவம்பர் 06 –  தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த பாசிச ஆர்.எஸ்.எஸ்.க்கு
அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

இது தமிழினத்துக்கு விடப்பட்ட சவால்!
பாசிச ஆர்.எஸ்.எஸ் பேரணியை தடுத்து நிறுத்துவோம்!

பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அமைப்புகளை தடை செய்
எனும் முழக்கம் தமிழ்நாடெங்கும் பரவட்டும்!

மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்தது. தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது பாசிச ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழக்கினை பரிசீலித்த நீதிமன்றம் அக்டோபர் 2-ம் தேதி பேரணி நடத்த அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த தடைவிதிக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக அதே அக்டோபர் 2-ம் தேதி மதநல்லிணக்க பேரணி நடத்துவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார். தொல்.திருமாவளவன் அவர்களுடைய அறிவிப்பினை தமிழ்நாடே உளப்பூர்வமாக ஏற்று ஆதரித்தது. தமிழ்நாடு அரசும் சட்டம் ஒழுங்கு நிலைமையை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை விதித்தது.


படிக்க : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை! | மக்கள் அதிகாரம் கண்டனம்!


தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துவிட்டது என்று ஆர்.எஸ்.எஸ் தொடுத்த வழக்கில்தான் மேற்கண்ட தீர்ப்பான, வருகின்ற நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அனுமதி அளிக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாக வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு குண்டுவெடிப்புகள், பல்வேறு மதக்கலவரங்கள், சாதிக் கலவரங்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த பாசிச பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட வேண்டிய ஒரு அமைப்பு.

அப்படிப்பட்ட ஒரு அமைப்புக்கு பேரணி நடத்த அனுமதி கொடுத்ததன் மூலம் மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் சாதி – மதக் கலவரங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் எதிராகவும் உள்ள இந்தத் தீர்ப்பை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

மேலும் நவம்பர் 6-ம் தேதி பாசிச ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரம்  கேட்டுக்கொள்கிறது.

நீதித்துறை, போலீஸ், ராணுவம் நிர்வாகம் என சகல துறைகளிலும் ஊடுருவியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் இந்து மதவெறி பாசிஸ்டுகள், தமிழ்நாட்டில் பேரணி நடத்தினால் அது திருவள்ளுவர் முதல் சித்தர்கள், வள்ளலார், பெரியார் வரையிலான வேத – ஆரிய –  பார்ப்பன எதிர்ப்பு மரபான தமிழ் மரபுக்கு விடப்படும் சவால் ஆகும்.


படிக்க : தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! | மக்கள் அதிகாரம்


ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இந்து மதவெறி பாசிச அமைப்புகளை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்-ஸின் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. ஒருவேளை நீதிமன்ற மிரட்டலால் தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதை எப்பாடுபட்டாவது தமிழ் நாட்டு மக்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க