முன்னாள் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் கடைசி அதிபரான கோர்பி என்கிற மிகைல் கோர்பச்சேவ் தனது 91-வது வயதில் இறந்த செய்தி ஊடகங்களில் வெளியான பிறகு,  ஏகாதிபத்தியவாதிகள், மேற்கத்திய ஊடகங்கள் மிகுந்த நன்றி உணர்வுடன் அவருக்கு இரங்கல் தெரிவித்தன. மற்றொருபுறம், 1992-இல் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் சிதைவதற்குக் காரணமாக இவர் இருந்தார் என்பதால், ரஷ்ய அதிபர் புடின், கோர்பச்சேவ்-வின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை. இதே காரணத்திற்காக சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகளும் கோர்பச்சேவுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை.

***

அன்றைய சோவியத் சோசலிச ரஷ்யாவின் உக்ரைன் குடியரசில் 1931-இல் பிறந்தவர் கோர்பச்சேவ். 1953-இல் தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர், கம்யூனிச துரோகி குருஷேவ் கொல்லைப்புறமாக ஆட்சியைக் கைப்பற்றி, சோசலிசத்தைத் திரித்து, முதலாளித்துவப் பாதைக்கு ரஷ்யாவை இட்டுச் சென்றான். “அமைதி வழி மாற்றம்” என்ற திரிபுவாதப் பாதையை முன்வைத்தான். இதன் மூலம், உலகெங்கிலும் கம்யூனிச உலகத்தைப் பிளவுபடுத்தினான். சோசலிச ரஷ்யாவை சமூக ஏகாதிபத்தியமாக சீரழித்தான். அமெரிக்காவுடன் உலக மேலாதிக்கப் போட்டியில் இறங்கினான்.

குருஷேவின் திரிபுவாதப் பாதையை அடுத்தடுத்து வளர்த்தெடுத்த துரோகிகளான பிரஷ்னேவ், ஆந்திரோபோவ், சேர்னன்கோவ் வரிசையில் கடைசியாக இடம்பெற்றவன்தான் கோர்பச்சேவ். ஏகாதிபத்தியவாதிகள் புகழாரம் சூட்டுவதைப் போல, கோர்பச்சேவ் சோசலிச ரஷ்யாவின் அதிபரல்ல, கம்யூனிசத் துரோகப் பாதையைப் பின்பற்றிய ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் கடைசி அதிபர்.

இவர் 1985 முதல் 1991-ஆம் ஆண்டு வரையில் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் அதிபராக இருந்தார். இவரது கம்யூனிசத் துரோகத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், இந்த துரோகிகளின் பரம்பரையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

படிக்க : ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!

1917-இல் உலகத்தில் முதல் சோசலிச அரசாக ரஷ்யா உதயமானது. ரஷ்யாவில் முதலாளித்துவ நாடாளுமன்றப் பாதைக்கு முடிவு கட்டி, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஏகாதிபத்திய உலகத்தில் சிக்குண்ட பல நாடுகளுக்கு சோசலிச ரஷ்யா விடிவெள்ளியாகத் திகழ்ந்தது. உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள், அறிவாளிகள் சோசலிசத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். உலக முதலாளித்துவம் பிழைத்திருக்க வேண்டுமென்றால், சோவியத் ரஷ்யாவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று ஏகாதிபத்திய முதலாளிகள் பல்வேறு சீர்குலைவு நடவடிக்கைகள், கலகங்களைத் தூண்டிவிட்டனர்; நேரடியாகவும் மறைமுகமாகவும் ரஷ்யாவின் மீது போர் தொடுத்தனர்; பொருளாதாரத் தடைகளை விதித்தனர். இருப்பினும், தோழர் லெனின் தலைமையிலும், அதனைத் தொடர்ந்து தோழர் ஸ்டாலின் தலைமையிலும் ரஷ்யா சோசலிசத்தை நோக்கிப் பீடுநடை போட்டு முன்னேறியது.

1930-களில் ஏகாதிபத்திய முதலாளித்துவம் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போது, ரஷ்யா முன்னேற்றத்தில் இருந்தது. ஜெர்மனின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி போன்றவர்களின் தலைமையிலான பாசிச ஆட்சிகளை வீழ்த்தி உலகத்தைக் காத்தது ரஷ்யா. இதற்காக அன்றைக்கு 2 கோடி ரஷ்யர்கள் தங்களது இன்னுயிரை ஈந்தனர்.

சோசலிச ரஷ்யாவில் விவசாயத்தில் இருந்த தனியுடைமை ஒழிக்கப்பட்டு கூட்டுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டிருந்தன. தனியுடைமைகள் அனைத்துத் துறைகளிலும் ஒழிக்கப்பட்டு கூட்டுத்துவ சோசலிச உற்பத்தி முறை புகுத்தப்பட்டிருந்தது. ஒட்டுமொத்த சமூகமே மேற்கொண்ட இந்த பிரம்மாண்டமான உற்பத்தியால், முதலாளித்துவ உலகம் 150 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியை பல நெருக்கடிகளுக்கும் இடையில் ரஷ்யா சில பத்தாண்டுகளில் அடைந்தது.

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ரஷ்யாவில், இன அடையாளங்கள் மறைந்து மக்கள் ஐக்கியமடைந்தனர். “ரஷ்ய சோவியத் சோசலிசக் குடியரசுகளின் கூட்டமைப்பு” (USSR) என்று ரஷ்யா அழைக்கப்பட்டது. இது 21 குடியரசுகளும், ஒரு சுயாட்சிப் பிரதேசமும், பத்து சுயாட்சி மாவட்டங்களையும் கொண்டிருந்தது. இவை மட்டுமின்றி 2.5 கோடி பேர் பல தேசிய இனங்களாக இருந்தனர். அவர்கள் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களது மொழி, கல்வி, பண்பாடு, தனித்துவம், மத உரிமைகள் ஆகியவற்றை அவர்களே பாதுகாத்துக் கொண்டனர். பல தேசிய இனங்களைக் கொண்ட ஜனநாயகக் குடியரசாக ரஷ்யா திகழ்ந்தது. இந்தப் பாதையில் பல நாடுகள் தேசிய இன சுயநிர்ணய உரிமையுடன் கூடிய குடியரசுகளை அமைத்துக் கொண்டு சோசலிசப் பாதையில் முன்னேறின. இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில், உலகில் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் சோசலிசப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தன.

உலகம் சிவப்பாக மாறி வருவதை ஏகாதிபத்திய முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தங்களது காலனி நாடுகளில் இருக்கும் தரகு அதிகார வர்க்க முதலாளிகள், முதலாளித்துவத்திற்கு முந்தைய, அரை நிலவுடைமைத் தன்மை கொண்ட பிற்போக்காளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். தமது காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளுக்கு ‘விடுதலையை’ வழங்கினர். ஏகாதிபத்தியங்களிலிருந்து ‘விடுதலை’யடைந்த நாடுகளில் ‘மக்கள் நல’ அரசுகள் உருவாகின. அந்த நாடுகளின் அரசியல் சாசனங்களில் ‘சோசலிசம்’ என்ற சொல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குதல், பொது வினியோக முறைகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ‘ஜனநாயக’ ‘சோசலிச’ நாடுகளாகத் தங்களது நாடுகளைக் காட்டிக்கொண்டன. இதன் மூலம் தத்தமது நாடுகளில் புரட்சி வெடிக்காமல் தடுப்பதற்கான வேலையில் இறங்கின.

அந்த வரிசையில்தான், நமது நாடும், மதசார்பற்ற ஜனநாய சோசலிச இந்தியா என்று அறிவிக்கப்பட்டது; நேரு, இந்திரா ஆட்சி காலங்களில் மன்னர் மானிய ஒழிப்பு, பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குதல், பொதுவினியோக முறையைக் கொண்டுவருதல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன; இத்துடன், சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய போலி கம்யூனிசக் கட்சிகள் நாடாளுமன்றப் பன்றித் தொழுவத்தில் புரளத் தொடங்கியதும் நடந்தேறின.

***

சோசலிசத்தை வீழ்த்துவதற்கு இடைவிடாது சதிச் செயல்களை மேற்கொண்டுவந்த ஏகாதிபத்திய முதலாளிகள், தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர், கட்சியில் இருந்த முதலாளித்துவப் பாதையாளர்களான குருஷேவ்-பிரஷ்னேவ் கும்பல் மூலமாக ரஷ்யாவை முதலாளித்துவப் பாதைக்குத் திருப்பினர். புரட்சியின் மூலம் சோசலிசத்தை நிலைநாட்டுவதற்குப் பதிலாக, ‘சமாதானம்’, ‘அமைதிவழி மாற்றம்’ என்ற திரிபுவாதப் பாதை முன்வைக்கப்பட்டது. உற்பத்தியில் முன்னேற்றத்தைக் காட்டுபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதன் மூலமாக, சோசலிச உடைமைக்குப் பதிலாக, அதிகார வர்க்க முதலாளித்துவம் புகுத்தப்பட்டது. இத்துடன் ஒற்றுமையாக இருந்த தேசிய இனங்களுக்கு இடையில் பகைமை உருவாக்கப்பட்டது.

சுமார் 25 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிகார வர்க்க முதலாளித்துவப் பாதையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று, புதிய ஏகபோக முதலாளித்துவத்தை நிலைநாட்டும் வகையில், சட்டப் பூர்வமாக முதலாளித்துவ தனியுடைமையை உருவாக்கி, சோசலிசம் என்பதை பெயரளவில் கூட இல்லாமல் ஒழிக்கும் வேலையைச் செய்தவர்கள்தான், இப்போது இறந்த போன கோர்பச்சேவும் அவருக்குப் பின்வந்த யெல்ட்சினும்.

தன்னை மிகப்பெரும் சீர்திருத்தவாதி என சொல்லிக்கொண்ட கோர்பச்சேவ் ரஷ்யாவின் பொருளாதாரத்தை மறுசீரமைக்கப் போவதாகவும், அரசியலில் சீர்திருத்தம் செய்ய வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதாகவும் கூறிக் கொண்டார். மறுசீரமைப்பு (பிரஸ்ட்ரோய்க்கா), திறந்து விடுதல் (க்ளாஸ்னாட்ஸ்) என்ற பெயரில் அப்பட்டமான முதலாளித்துவத்தை முன்வைத்ததுதான் கோர்பி கும்பல் செய்தது. இதன் மூலம், கோடிக்கணக்கான ரஷ்ய உழைப்பாளிகள் ரத்தம் சிந்தி உருவாக்கிய செல்வங்களை எல்லாம், கையளவேயான ஏகபோக முதலாளிகள் சூறையாட அனுமதித்தது மட்டுமின்றி, மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் சூறையாட அனுமதித்தது.

இதன் விளைவு, நெருக்கடியில் இருந்த ரஷ்யப் பொருளாதாரம் சின்னாபின்னமாக்கப்பட்டது. நுகர்வுக் கலாச்சாரம் தலைத்தூக்கியது; சமுதாயத்தின் ஒரு சிறு பிரிவினர் சுகபோகங்களை அனுபவிக்கும் வகையில் சந்தைப் பொருளாதாரம் கலைக்கட்டியது. வேலையிலிருந்து பெண்கள் துரத்தப்பட்டதால், பல ஆயிரக்கணக்கானோர் விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்டனர். சிறுகுழந்தைகள் கூட விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்டனர். இதற்காக, ஆண், பெண் பிஞ்சுக் குழந்தைகளின் புகைப்பட ஆல்பங்கள் உலகம் முழுதும் மேட்டுக்குடி கும்பலின் பாலியல் வக்கிரத்திற்காக உலாவ விடப்பட்டன. அடுத்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 லட்சம் மக்கள் பட்டினியால் செத்து மடிந்தனர்.

படிக்க : உலகளவில் ஏழைகளாக மாறிய 7 கோடி பேரில், இந்தியர்கள் 5.6 கோடி

தங்களது சதி, நாச வேலைத் திட்டங்களை ரஷ்யாவில் நடைமுறைப்படுத்திய காலத்தில், கோர்ப்பச்சேவை ஏகாதிபத்தியவாதிகள் கொண்டாடினர். அவருக்கு 1990-இல் அமைதிக்கான நோபல் பரிசையும் வழங்கினர். ஆனால், கோர்ப்பசேவ் அவருக்குரிய நாச வேலைகளைச் செய்து முடித்த பின்னர், தங்களின் கைப்பாவையான யெல்ட்சின் மூலமாக அதிகார ஆட்சிப் கவிப்பு நடத்தி, கோர்பச்சேவைக் கழிவறைக் காகிதமாக வீசியெறிந்தனர்.

‘கம்யூனிஸ்ட்’ கட்சியின் பெயரால் ஏகாதிபத்திய சேவை செய்வதற்கு பதில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்து விட்டு முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தையும், ‘ஜனநாயக’த்தையும் கொண்டு வரவேண்டும் என ஏகாதிபத்தியங்கள் யெல்ட்சினை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே கலவரங்களைக் கட்டவிழ்த்து விட்டன.

அப்பட்டமாக அதிகாரப் போட்டி நடந்தது. இதுமட்டுமின்றி, தேசிய இனங்களுக்குள் சண்டை மூட்டி விடப்பட்டது. மிகப்பெரும் அளவில் இனக்கலப்பு நடந்த நாட்டில், இனவெறி தலைக்கேறி, கலவரங்களும் நாடு பிடிக்கும் போட்டியும் உருவானது.

1953-இல் சோசலிச ரஷ்யாவில் தொடங்கிய முதலாளித்துவ மீட்டுருவாக்கத்தின் விளைவாக, ரஷ்ய மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தனர். 1992-இல் ரஷ்ய சமூக ஏகாதிபத்தியம் சிதைந்ததை அடுத்து, “சோசலிசம் வீழ்ந்துவிட்டது”, “கம்யூனிசம் தோற்றுவிட்டது” என்று சொல்லி முதலாளித்துவத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் இன்று “முதலாளித்துவம் கொல்லும், கம்யூனிசமே வெல்லும்” என்று முழங்குகின்றனர். மீண்டும் கம்யூனிசத்தின் மீதான பார்வை உலகம் முழுவதும் திரும்பிக் கொண்டிருக்கிறது. இது அடுத்த சோசலிச அலையை உலகம் முழுவதும் உருவாக்கும்; மீண்டும் உலகம் செங்கொடிகளால் சிவக்கும்; முதலாளித்துவம் முடிவினும் முடிவாக சவக்குழிக்குத் தள்ளப்படும்; அத்துடன் கோர்ப்பசேவ் போன்ற கம்யூனிசத் துரோகிகளின் கணக்கும் முடிக்கப்படும்.

அந்த நாளுக்காகக் காத்திருப்போமாக!


தங்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க