கர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு, தமிழகத்தில் மதவெறிக் கலவரங்களைத் தூண்டவும் தி.மு.க.வை ஒழித்துக் கட்டவும் என்னவெல்லாம் துருப்புச் சீட்டுகள் கிடைக்கின்றன என ஆராய்ந்து சொல்வதற்கே தனியாக ஒரு குழுவை அமைத்து வேலைசெய்துவருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. வார்டு அளவில் தொடங்கி, வட்டாரம், மாவட்டம், மாநிலம் என பிரச்சினைகளை வகைபிரித்து உருவாக்கி, அதற்கு ஏற்றார் போல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது அக்கும்பல்.

அரியலூர் மாணவி லாவண்யாவின் பிணத்தை வைத்து தமிழகத்தில் மதமோதலை தூண்ட முயன்றது, தி.மு.க.விற்கு எதிரான பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் போன்றவை இத்திட்டத்தின் அங்கங்களே.

இவையெல்லாம் விவாதப் பொருளாக தமிழகத்தில் குறிப்பிட்ட அளவிற்கு தாக்கத்தைச் செலுத்தினாலும், எந்தவொரு குறித்த நடவடிக்கைகளிலும் காவிக் கும்பல் தான் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. லாவண்யா விசயத்தில், பா.ஜ.க.வின் தகிடுதத்தங்கள் அம்பலப்பட்டு நாறிப் போயின.


படிக்க : கவுதம் நவ்லகாவின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கும் நீதிமன்றம்!


அண்மையில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் திட்டமிட்டு மேற்கொண்டவையே. அதிலும், தற்போது மூக்குடைபட்டு போயுள்ளது.

***

செப்டம்பர் 6 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டமொன்றில் நிகழ்த்திய உரையில், “இந்துமதம் நம்மை சூத்திரர்களாக ஒதுக்கிவைத்துள்ளது; மனுதர்மம் சூத்திரர்களைத் தீண்டத்தகாதவர்கள், வேசிமக்கள் என்கிறது. ஆகவே மானமுள்ள யாராவது இந்துவாக இருக்க முடியுமா?” – என்று கேள்வி எழுப்பினார் ஆ.ராசா. செப்டம்பர் 12ஆம் தேதி இவ்வுரையை அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, பிரச்சினையைத் தொடங்கி வைக்கிறார்.

மனு தர்மத்தை எடுத்துக் காட்டி பேசியதை மறைத்து, ஆ.ராசா இந்துக்களை வேசிமகன் எனக் கூறிவிட்டார் என்று திரித்து பிரச்சாரம் செய்தது காவிக் கும்பல். “ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்”, “தி.மு.க. ஆ.ராசாவை பதவியிலிருந்தும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” – போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்தது.

எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் மட்டுமல்லாது, மன்னார்குடி ஜீயர், பூசாரிகள் பேரவைத் தலைவர் என தமது ‘ஆன்மிகப் பெரியோர்கள்’ மூலமாகவும் இந்துக்களை வீதியில் திரட்டப் போராடியது. மனு கொடுக்கும் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், நீலகிரி, புதுவையில் கடையடைப்பு என முடிந்த அளவிற்கு மிரட்டிப் பார்த்தும் பயனில்லாமல் தோற்றுப்போனது பாசிசக் கும்பல்.

பௌத்த-சமணர்கள், திருவள்ளுவர், சித்தர்கள், வள்ளலார், பெரியார் என தொடர்ச்சியாக தமிழகத்திற்கே உரிய பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியம் ஆ.ராசாவுக்கு துணை நின்றது. “ஆ.ராசா பேசியதில் என்ன தப்பு?” – என தமிழகம் தாக்குதல் நிலையில் பேசும் என்று சங்கிக் கூட்டம் எதிர்பார்க்கவில்லை.

மனுதர்ம எரிப்பு போராட்டங்கள், மனுதர்ம விளக்கக் கூட்டங்கள் உள்ளிட்டு பல வடிவங்களில் ஜனநாயக அமைப்புகள் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினார்கள். சமூக ஊடக விவாதங்களில், ஜனநாயக சக்திகள் அனைவரும் நிபந்தனையின்றி ஆ.ராசாவை ஆதரித்தும் மனுதர்மத்தை அம்பலப்படுத்தியும் பேசினார்கள். தான் பேசிய கருத்தில் உறுதியை வெளிப்படுத்திய ஆ.ராசா, “நான் எதுக்குடா மன்னிப்பு கேட்கனும் லூசு” என்றார்.

விளைவு, “ஆ.ராசா மேற்கோள் காட்டியது, வெள்ளைக்காரன் வில்லியம் ஜோன்ஸ் மொழிபெயர்த்த மனுதர்மம்”, “நாங்கள் சொல்கின்ற மனுதர்மத்தில் சில பிற்போக்கு கருத்துக்கள் இருந்தாலும் வேசிமக்கள் என்றெல்லாம் இல்லை”, “ஆ.ராசா கூறும் பொருளில் இல்லை”, “சூத்திரர்கள் என்றால் அதற்கு வேறு பொருள் உள்ளது”, “பல்வேறு மனுதர்மங்கள் உள்ளன, நாங்களே எல்லா மனுதர்மத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை”, “பழசெல்லாம் இப்போது எதற்கு” – என்று படுத்தே விட்டது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்.

***

அக்டோபர் 2 ஆம் தேதி, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசு அனுமதி மறுத்ததால், உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றது காவிக் கும்பல். ஆனால், தமிழக ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைந்த எதிர்ப்பால், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் போலீசு அனுமதி மறுத்துள்ளது. இது சங்கிக் கும்பலுக்கு ஏற்பட்ட அடுத்த கால்முறிவு.

காஷ்மீர் முதல் கேரளா வரை, எல்லா மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுக்கிறார்கள், ஆனால் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுப்பது நியாயமற்றது என்று புலம்பியது காவி கும்பல்.

காந்தி ஜெயந்தி, 75 ஆம் ஆண்டு சுதந்திர தினம், அம்பேத்கரின் நூற்றாண்டு பிறந்தநாள், விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தபோதே, அதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் மனுதாக்கல் செய்தார்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கொடுத்தால், மதவெறிக் கலவரத்தில் ஈடுபடுவார்கள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்று அவர் தமது மனுவில் தெரிவித்திருந்தார். மேலும், காந்தியைக் கொலைசெய்த அமைப்பே காந்தி பிறந்தநாளைக் கொண்டாடுவது அவரை இழிவுபடுத்துவது என்றும், அம்பேத்கரின் சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள், அவரது 130-வது பிறந்தநாளே முடிந்தபின்பு, நூற்றாண்டு கொண்டாடப் போகிறோம் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால், இதையெல்லாம் நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும், இல்லையென்றால், தமிழக போலீசுத் துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று மிரட்டியது. நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக, தமிழகத்தில் தமது பேரணியை வெற்றிகரமாக நடத்திக் காட்டலாம் என்று கனவுடன் இருந்த ஆர்.எஸ்.எஸ் கண்களில், மண்ணைத் தூவியது திருமாவளவனின் மற்றொரு அறிவிப்பு.

ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தும் அதே அக்டோபர் 2 ஆம் தேதி, சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்தப்போவதாக அறிவித்தார் திருமாவளவன். திருமாவளவனின் இந்த அறிவிப்பை ஆமோதித்து, சி.பி.ஐ, சி.பி.எம், திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய தேசிய லீக் உள்ளிட்டு 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள், தங்கள் கட்சிகளும் பேரணியில் பங்கேற்கும் என்று அறிவித்தன.

முக்கியத்துவம் வாய்ந்த விசயம் என்னவென்றால், நாம் தமிழர் கட்சியின் சீமானும் இப்பேரணியை ஆதரித்து பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளார். திராவிட எதிர்ப்பையே தன் மைய அரசியலாகக் கொண்டிருந்த சீமான், திடுமென இதுபோன்ற நிலையெடுக்கும் காரணத்தை நாம் கவனிக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை எதிர்த்து ஜனநாயக சக்திகள் மேற்கொள்கின்ற கூட்டுப் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி பங்கேற்பது அக்கட்சியின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பலின் கொட்டம் தீவிரமடையத் தீவிரமடைய, மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழகம் உறுதியாக அதை எதிர்த்து மோதுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை ஆற்றுகிறது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகளாக அறியப்படும் யாராக இருந்தாலும் ஒன்று அவர்கள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. எதிர்ப்பு அணியில் நம்மோடு நிற்க வேண்டும், இல்லை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வோடு இணைந்துகொண்டு எதிரணியில் நிற்க வேண்டும் – இதுதான் தமிழகத்தின் இன்றைய அரசியல் போக்கு. சீமான் இதைப் புரிந்துகொண்டுவிட்டார் என்று சொல்லலாம்.


படிக்க : இந்தித் திணிப்பு ; தாய்மொழி அழிப்பு ! அமித்ஷா குழு பரிந்துரை ! | மக்கள் அதிகாரம் கண்டனம்


இது முழுமுதல் மாற்றம் இல்லை – திராவிட எதிர்ப்பை சீமான் கைவிட்டுவிடவில்லை – என்றாலும், இந்த மாற்றம் – ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. எதிர்ப்பில் கைகோர்ப்பது – பாசிச எதிர்ப்பாளர்களுக்கு சாதகமான நகர்வு. இதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

புரட்சிகர-ஜனநாயக அமைப்புகளின் எதிர்ப்பின் காரணமாக, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுத்த போலீசு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பாளர்களின் மனிதச் சங்கிலிக்கும் அனுமதி மறுத்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேநேரம், மாற்று ஏற்பாடாக நவம்பர் 6-இல் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் உயர்நீதிமன்றம் போலீசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.

அரசுக் கட்டமைப்பு முழுவதும் பாசிசமயமாகிவரும் சூழலில், பாசிச எதிர்ப்பில் முதன்மைப் பங்காற்றுபவை களப் போராட்டங்களே. பார்ப்பனியம் இன்று பார்ப்பனிய பாசிசமாக, இந்துத்துவமாக அவதாரம் எடுத்துள்ளது. தன் வரலாறு நெடுகிலும் பார்ப்பனியத்தோடு போர் புரிந்த தமிழகத்திற்கு, அதன் பாசிச அவதாரத்தை வீழ்த்துவதில் முன்னணி கடமை உள்ளது. இது ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர், தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க