அரிய நாயகிபுரத்தில் ஏழாம் வகுப்பு பயின்ற சிறுவனின் சந்தேக மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை.

தென்காசிக்கு அருகில் உள்ள அரியநாயகிபுரம் எனும் கிராமத்தில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த எழாம் வகுப்பு பயிலும் 12 வயதாகிய சிறுவன், அவர் வீட்டிலே கடந்த 14-10-22 ஆம் தேதி காலை பத்துமணி வாக்கில் மர்மமான வகையில் தூக்கில் மரணமடைந்து கிடந்தார். இது தற்கொலைதானா அல்லது வேறுவகையில் நிகழ்ந்த மரணமா என்பது பற்றி சந்தேகம் எழுந்த நிலையில், இது குறித்து சிறப்பு விசாரணை வேண்டும் என்று கோரி அப்பகுதியினர் போராட்டம் நிகழ்த்தினர். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து உண்மையை அறிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலர் பேரா. இரா.முரளி, தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் முத்துக்குமார்,மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் வழக்கறிஞர் ஆ.ஜான்வின்சென்ட், வழக்கறிஞர் ச.மனோகரன் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்(CPCL), வழக்கறிஞர் முனைவர் கரு.சித்தார்த்தன், மற்றும் மக்கள் கலை இலக்கிய கழக மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் இரா.சங்கர் ஆகியோர் அடங்கியக் குழு 11-11-22 அன்று அக்கிராமத்திற்குச் சென்று கள ஆய்வு நடத்தியது.

இறந்த சீனுவின் தந்தை ஆறுமுகம், கட்டுமானக் கூலிவேலை செய்துவருகின்றார். தாய் மாரியம்மாள் திருவேட்ட நல்லூரில் தூய்மைக் காவலராகப் பணிபுரிகின்றார். முன்பு அரியநாயகிபுரம் பஞ்சாயத்தில் அவர் ஐந்து ஆண்டுகள் வார்டு உறுப்பினராகவும் சேவை செய்திருக்கின்றார். மேலும் சீனு படித்து வந்த இந்து நாடார் உறவின் முறை மேல்நிலைப்பள்ளியில் சிறிது காலம் உதவியாளராகவும் பணிபுரிந்திருக்கின்றார். இறந்த சீனுவின் அண்ணன் கணேஷ்குமார் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயில்கின்றார்.

சம்பவத்தன்று பிள்ளைகளைப் பள்ளிக்கு காலை 9:30 மணிக்கு அனுப்பி விட்டு பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிட்டனர்.  தாய் மாரியம்மாள் வழக்கம்போல காலை 11.30 மணிக்கு பணி இடைவேளையில் வீடு திரும்பியிருக்கின்றார். அச்சமயம் வீடு திறந்திருந்தது. உள்ளே பார்த்தால் சிறுவன் சீனு அறையில் உள்ள மின் விசிறியில் தன் தாயின் வெள்ளை நிறச் சேலையில் கட்டி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டிருக்கின்றார்.


படிக்க : சாதிவெறி : தாழ்த்தப்பட்ட பெண் சமைத்த உணவை புறக்கணிக்கும் பள்ளி மாணவர்கள்


  • கழுத்தைச் சுற்றி புடவை சுற்றப்பட்டும், சுருக்கிடப்பட்ட இடத்தில் ஐந்து முடிச்சுக்களும் காணப்பட்டதாக மாரியம்மாள் தெரிவிக்கின்றார். மேலும் ஒரு இரும்புக் கட்டிலின் மேல் நின்று சீனு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கின்றார். கால்கள் கட்டிலில் ஊன்றியிருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் மலம் கழிந்த நிலையிலும், நாக்கு பக்கவாட்டில் கடித்தபடி வாயில் நுரையும் வடிந்த நிலையிலும் சீனுவின் உடல் காணப்பட்டத்தையும் அவர் தெரிவித்தார்.
  • மகனுக்கு ஒருவேளை உயிர் இருக்குமோ என்ற ஆசையில் உடலை இறக்கி, அதை அருகில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்திற்கு எடுத்துச் சென்று அங்கு இறந்துவிட்டான் என சொல்ல, மேலும் உறுதிபடுத்த வீர சிகமணி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தனர். அவர்கள் இறப்பை உறுதி செய்தபின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர்.
  • இதற்கிடையில் தகவலறிந்த காவலர்கள் வீட்டிற்கு வந்து சிறுவனின் சடலத்தை சடல உடல்கூறாய்விற்காகப் பாளையம்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
  • படித்த பள்ளியில் சிறுவன் மரணத்திற்கு காரணமான சம்பவம் நடைபெற்றிருக்க வேண்டும் என்று பெற்றோரும் அவர்கள் உறவினர்களும், நண்பர்களும் கருதுகின்றனர். சீனுவின் தந்தை இதன் விளைவாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்படவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்து டி.எஸ்.பி. தலைமையிலான விசாரணைக்குழு அமைக்க ஆணை பெற்றார். அது வரை சீனுவின் உடல் கூறாய்வு செய்யப்பட்ட சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்றது.
  • இம்மரணத்தில் பள்ளியில்தான் காரணம் இருக்கின்றது என வலுவாக சீனுவின் பெற்றோர்கள் நம்புகின்றனர். அதற்குரிய காரணங்களையும் அவர்கள் முன்வைத்தனர்.
  • அரிய நாயகிபுரம் இந்து நாடர் உறவின் முறை மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகளாக அப்பகுதியில் செயல்பட்டுவரும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம் ஆகும்.
  • சம்பவம் நிகழ்ந்த அன்று பள்ளிக்கு சீனுவின் மரணத்தை ஒட்டி விடுமுறை விடப்படவில்லை.
  • சீனுவின் இல்லம் பள்ளியில் மதில் சுவரை ஒட்டியே உள்ளது.
  • சீனுவின் வக்குப்பறையில் ஜன்னல்கள் கூட சீனு வீட்டை ஒட்டியே உள்ளது.
  • விடுமுறை விடாதது மட்டுமல்ல, இன்று வரை பள்ளி தரப்பிலிருந்து எந்தப் பொறுப்பாளரும் இறந்த மாணவரின் இறப்பிற்கு வருத்தம் தெரிவிக்ககூட வரவில்லை.
  • சம்பவம் நடந்த அன்று வழக்கத்திற்கு மாறாக பள்ளி மாணவர்கள் மாலை ஆறு மணி வரை பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
  • சீனுவுடன் பயிலும் சக மாணவர்கள் சிவமுகுந்தன் மற்றும் கதிர்வேல் எனும் இருவரை (இருவரும் அருந்ததியர் இனத்தைச் சார்ந்தவர்கள்) மட்டும் பள்ளி நிரிவாகத்தைச் சார்ந்தவர்கள் தனியாக மாடிக்கு அழைத்துச்சென்று, சீனுவுக்கு வயிற்று வலி அதிகம் இருந்தது என்றும், அதனால் அவன் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் எழுதித் தர கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு சரிவர எழுதத் தெரியாதாகையினால் அலுவலக உதவியாளர் பால முருகனும், பள்ளிக் காவலர் ஒருவரும் வெவ்வேறு தாள்களில் எழுதிக்கொடுத்து அதைப்போல எழுதித் தரச்சொல்லி எழுதி வாங்கியுள்ளனர். பொழுதாகியும் மாணவர்கள் வராததால் பள்ளிக்கு சென்ற இவர்களின் பெற்றோர் உள்ளே சென்று மாடியில் சத்தம் கேட்டு அங்கே சென்று உதவியாளர் எழுதிக் கொடுத்த கடிதங்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்த நிகழ்வு பள்ளியின் மீது பெருத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
  • இப்பள்ளியைப் பெறுத்தவரை தலைமை ஆசிரியர் திரு.செல்லையா மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் சக்திமுருகன் ஆகியோர் பட்டியலின மாணவர்களைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் ” சக்கிலியப் பயல்களா, செத்த மாட்டைத் திங்கிறவங்க, பீ அள்ளுகின்ற பயலுங்க” போன்ற வசவுகளை வீசி அவமானப்படுத்துவது நடைபெற்று வருவதாகத் தெரிகின்றது.
  • பள்ளியில் பெற்றோர் சந்திப்பு கூட்டங்களில் பிற பெற்றோர்கள் அமரவைக்கப்பட்ட நிலையில், பெரும்பாலும் தாங்கள் பின் வரிசையில் நிற்கவே வைக்கப்பட்டதாகவும், தான் பணி செய்த நாட்களிலும் சாதியப் பாகுபாடு காட்டப்பட்டதாகவும் மாரியம்மாள் கூறுகின்றார்.
  • மூன்று மாதங்களுக்கு முன் தன் மூத்த மகனை ஆசிரியர் ஒருவர் சாதி பற்றி இழிவாக குறிப்பிட்டு திட்டியதிற்கு புகார் கொடுத்தபோது தலைமை ஆசிரியர் இங்கு இப்படித்தான் இருக்கும் உங்களுக்கு வேண்டுமானல் சக்கிலியர் நடத்தும் பள்ளியில் போய் பிள்ளைகளை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று என்று கூறினாராம்.
  • தலித் மாணவர்கள் எப்போதுமே வகுப்பறையில் கடைசி வரிசையில்தான் அமரவைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
  • பொதுவாக சிறுவன் சீனு வீட்டிற்கு வெளியில் உள்ள இடத்தில் தான் நண்பர்களோடு விளையாடிக்கொண்டிருப்பது வழக்கமாம். வெளியில் எங்கும் போகமாட்டான் என்றும் தெரிந்தது.
  • சம்பவம் நடந்த அன்று பள்ளியின் கண்காணிப்பு கேமிரா அகற்றப்பட்டுள்ளது. பின்னர் புது கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.
  • சீனு குடும்பத்தினர் மற்றும் மூன்று அருந்ததியின குடும்பத்தினர் ஒன்றாக வீடு கட்டி வசிக்கும் பகுதி நாடார்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். இருபதிற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இவர்கள் தங்களுக்கான மின்சார வசதி கேட்டும் கொடுக்காத மின்துறை, சீனு இறந்த ஒரு சில நாட்களுக்குள் மின்சார இணைப்பைக் கொடுத்துள்ளது. அதுவரை அவர்கள் “வாடகை மின்சாரம்” பெற்றே பயன்படுத்தி வந்தனர்.
  • அதைப்போலவே அவர்கள் சென்று வருவதற்கான பாதை திறக்கப்பட்டு சிமெண்ட் சாலை உடனடியாகப் போடப்பட்டுள்ளது.
  • கல்வித் துறை அதிகாரிகளும் இவர்களை விசாரிக்கவில்லை. உள்ளூர் காவல் துறையும் தீர விசாரிக்கவில்லை.
  • தந்தை ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில்தான் சேர்ந்தமரம் காவல் நிலையம் குற்ற எண் 310/2022 என்ற எண்ணில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளனர்.
  • இப்பள்ளியில் 105 தலித் மாணவர்கள் பயில்வதாகவும் அதில் 45 பேர் அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள். அருகில் வேறு பள்ளிகள் இல்லாத நிலையில் இவர்கள் எல்லோரும் இப்பள்ளியிலேய படிக்கவேண்டிய நிலை உள்ளது. முன்பு இல்லாத வகையில் சமீப கலங்களாகத்தான், அதுவும் புதிய இளம் நிர்வாகத்தினர் பொறுப்பேற்ற பிந்தான் இந்த சாதியப் பாகுபாடு அதிகரித்துள்ளதாக சொல்லப்பட்டது.
  • இப்பள்ளியில் சத்துணவுப் பணியாளராக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த தமிழ் செல்வி என்பவர். இவர் இந்த சம்பவத்தை ஒட்டி நடந்த போராட்டத்திற்கு பிறகு சாதிப் பாகுப்பாட்டினால் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தினால் பணியை விட்டுவிட்டு பெரியசாமிபுரம் எனும் ஊரில் உள்ள பள்ளியில் பணிக்குச் சென்றுவிட்டாராம்.
  • சி.பி.சி.ஐ.டி விசாரணைக் கோரி சீனுவின் தந்தை ஆறுமுகம் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். (W.P No.24274/2022) இதன் விளைவாக காவல் துறைத் துணைத்தலைவர் மேற்பார்வையில், துணைக் கண்காணிப்பாளர் திரு. சுப்பையா வழக்கை விசாரிக்க உத்திரவிடப்பட்டுள்ளது.
  • இதற்கு முன்பாக அக்டோபர் 20 ஆம் தேதி காலை சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. போராடிய உறவினர்கள், பெண்கள், தமிழ்புலிகள் அமைப்பினர் சிலர் என பலர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறை சிறையிலடைத்து உள்ளது. இதில் கொலை முயற்சி வழக்கும் அடங்கும். நவம்பர் 11 அன்று அவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.
  • பள்ளித் தலைமை ஆசிரியரையும், சில ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்திக்கப் பள்ளிக்குச் சென்றபோது அங்கே குழுமியிருந்த காவல்துறையினர். உள்ளே செல்லவே அனுமதி மறுத்தனர். பாதுகாப்புப் பணியிலிருந்த சார்பு ஆய்வாளர் உயர்நீதி மன்ற உத்திரவுப் படி விசாரணை நடந்து வருவதால் யாரையும் அனுமதிக்க முடியாது என்றார்.
  • இதற்கு முன்பாகவே உண்மையறியும் குழுவின் உறுப்பினர் தலைமை ஆசிரியரை வழியில் சந்தித்து இது குறித்து விசாரித்தபோது, சீனு இறப்பதற்கு முதல் நாள் வரையில் பள்ளிக்கு வந்ததாகக் கூறினார். சம்பவம் நடந்த அன்று சீனு வந்தது பற்றி அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில் டிஜிட்டல் வருகைப் பட்டியல் காலை பத்துமணி அளவில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.டிஜிட்டல் வருகை என்பது மாவட்ட கல்வி அதிகாரியின் அலுவலகத்திற்கு உடனடியாக, தானியங்கியாக பகிரப்பட்டுவிடும். இருப்பினும் மேலும் விபரங்களுக்கு காவல்துறை அனுமதி தேவை என்று சொல்லிவிட்டார்.
  • இப்பள்ளியில் பயின்ற மறவர் இனம் மற்றும் புதிரை வண்ணார் இனத்தை சேர்ந்த வேறு இரு மாணவர்கள் சில மாதங்களுக்கு முன் இம்மாதிரியே தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளதை அறிந்து உண்மையறிய முற்பட்ட குழுவினர் அதில் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மரணமடைந்த பாறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இன்பராஜ் எனும் பதினோராம் வகுப்பு மாணவர் இல்லத்திற்கு சென்று விசாரித்தனர். இம்மாணவனின் தாயாரும் அவன் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை என்பதைம் மிகவும் வருத்தத்துடன் கூறினார். இம்மாணவரும் காலை பள்ளிக்குச் சென்றவர், முற்பகலிலே வீடு திறந்த நிலையிலேயே தூக்கில் மரணமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
  • இப்பள்ளியில் பயின்ற மற்றொரு பட்டியலின மாணவர் குமரேசன் என்பவர் புன்னைவனம் கிராமத்தைச் சார்ந்தவர் இம்மாதிரியே மரணமடைந்துள்ளார்.

உண்மையறியும் குழுவின் புரிதல்கள்

அரிய நாயகிபுரத்தில் உள்ள இந்து உறவின்முறை மேல் நிலைப் பள்ளியில் சாதியப் பாகுபாடு சமீப காலமாக சில ஆசிரியர்களால் பார்க்கப்படுவதுடன் தலித் மாணவர்கள் இழிவுபடுத்தப்பட்டு வருவதும் தெரிகின்றது. வேறு பள்ளி வசதிகள் இல்லாத நிலையில் இங்கு தலித் மாணவர்கள் பயிலும் நிலை நிலவுகின்றது.

இந்த சூழலில், சிறுவன் சீனு தானாகவே அதுவும் மின்விசிறியில் சேலையைக்கட்டி தூக்கிடுக்கொள்ள முடியுமா என்பது பலத்த சந்தேகத்தைத் தருகின்றது. ஆனால் மலம் கழித்துள்ளான் மற்றும் வாயில் எச்சில் நுரை காணப்பட்டது என்றாலும் யாரேனும் சிறுவனை தாக்கி உயிர் போகும் நிலையில் வீட்டில் கொண்டு வந்து தொங்க விட்டிருக்கலாம் என்ற ஐயம் வலுவாக எழுகின்றது. அவனே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அதற்கு அச்சிறுவனுக்கு வலுவான காரணம் குடும்ப அளவில் இல்லை என்றும் தெரிகின்றது. அவனுக்கான வேறு வெளி என்பது பள்ளியாகவே உள்ளதால் சீனுவின் மரணத்திற்கு பள்ளியில் காரணம் உள்ளது என கணிக்கின்றோம்.

ஆனால் பள்ளி தரப்பிலிருந்து தகவல் பெற முடியாமல் தடை செய்யப்பட்டது மட்டும் அல்ல, அவர்கள் சீனுவின் நண்பர்கள் இருவரை வலுக்கட்டாயமாக வயிற்று வலி காரணமாக சீனு தற்கொலை செய்துகொண்டான் என்று எழுதித்தரச் சொன்னது ஏன் என்ற கேள்வியும் எழுகின்றது.

மேலும் கண்காணிப்பு கேமிரா அதுவும் சீனு வீட்டிற்கு நெருக்கமாக இருந்த கேமிரா ஏன் அன்று நீக்கப்பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.

ஏற்கனவே இயங்கிய கேமரா அகற்றபட்டு மீண்டும் புதிய கேமராக்கள் தற்போது வைக்கபட்டுள்ளது ஏன்?

ஏன் மாலை ஆறுமணிவரை மாணவர்கள் பள்ளியிலே இருக்கவைக்கப்பட்டார்கள்?

ஏன் உள்ளூர் காவல்துறை பெற்றோரைத் தீவிரமாக விசாரிக்கவில்லை?

வழக்கில் பள்ளி சம்பந்தப்பட்டவர்கள் குற்றப்பத்திரிக்கையில் ஏன் இணைக்கப்படவில்லை?

ஏன் துக்கம் தெரிவிக்ககூட பள்ளி நிர்வாகமோ,ஆசிரியர்களோ வரவில்லை?

ஏன் இருபது ஆண்டுகளாக கொடுக்கப்படாத மின்இணைப்பு உடனடியாகக் கொடுக்கப்பட்டது?

ஏன் உடனடியாக சீனு வீட்டிற்கு சிமெண்ட் சாலை போடப்பட்டது?

சமீபத்தில் சீனுவைப் போன்றே மரணமடைந்த தலித் சிறுவர்கள் மரணத்தின் காரணங்கள் என்ன?

தொடர்ந்து சாதியப் பாகுபாடை உருவாக்கும் வசவுகளைப் பொழியும் உடற்பயிற்சி ஆசிரியர் ஏன் கண்டிக்கவோ தண்டிக்கப்படவோ இல்லை?

போன்ற பல பதிலில்லா கேள்விகள் பள்ளியின் மீது வலுவாக சந்தேகப்படவே வைக்கின்றன.

அப்படி பள்ளி இதற்கான காரணமாக இல்லை என்றால் வெளியிலே உள்ள ஆபத்தான நபர்கள் யார் என்பதையும் காவல் துறை கண்டுபிடிக்கவேண்டும்.

டிஜிட்டல் வருகைப் பதிவை சோதனை செய்வதுடன், சீனுவுடன் பயிலும் மாணவர்களையும் விசாரிக்கக் கோருகின்றோம்.

எது எப்படியாயினும் சாதி பாகுபாட்டை ஒழிக்க கல்வியை பயிற்றுவிக்க வேண்டிய கல்வி நிலையத்தில் தொடர்ந்து சாதி பாகுப்பட்டை வலுபடுத்தும் நிகழ்வுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது.

போராட்டத்தில் முன்னணீயாக செயல்பட்ட குற்றாலம் குமார்,சந்திரசேகர் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆய்வாளரை கொலை செய்ய முயற்சி செய்தனர் என்ற குற்றம் சாட்டி கைது செய்தது என்பதும் காவல்துறை உள்நோக்கத்தோடே செயல்பட்டுள்ளது போல உள்ளது.


படிக்க : திருவள்ளூர் பள்ளி மாணவி மர்ம மரணம் – அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்த மக்கள்!


பரிந்துரைகள்:

1.தமிழகத்தில் குறிப்பகத் தென் தமிழகப் பள்ளிகளில் சாதிப் பாகுபாடு காணப்படுவதை தடுக்க, அது இல்லாமல் ஆக்க தமிழக அரசு அதற்கான கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்குவதுடன். புகார்கள் மேலிடத்திற்கு உடனடியாக அனுப்பும் வகை செய்யவேண்டும். மேலும் கல்வி அதிகாரிகள் இது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு கூட்டங்களையும், சாதிப் பாகுபாடு அற்ற நல்லுறவு உண்டாக்கும் கல்வி சூழலையும் உருவாக்க தீவிரமாக செயல் படவேண்டும்.

2.தலித் மாணவர்களை இழிவாக நடத்தும் ஆசிரியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுக்க ஆவன செய்யவேண்டும்.

3.சீனுவின் மரணம் என்பது மிகவும் சந்தேகத்துக்குரியது. அப்படியே தற்கொலை செய்துகொண்டாரெனில் அதற்குத் தூண்டியது யார் என்பதை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

4.தமிழகத்தில் பள்ளியில் பயிலும் தலித் மாணவர்களிடம், பள்ளியில் சாதியப் பாகுபாடு எந்த அளவில் நிலவுகின்றது  என்பது பற்றி கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாயரிக்க தக்க மனித உரிமை ஆர்வலர்களையும், ஒய்வு பெற்ற நீதிபதியையும் கொண்ட குழுவை அமைத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுகின்றோம்..

5.மேலும் பள்ளி நிர்வாகத்தில் ஏற்படும் பிரிவினைகளும், மோதல்களும் மாணவர்களையும், கல்விச் சூழலையும் பாதிக்காத நிலை உருவக்கப்படவேண்டும்.

6.கிராமப்பகுதிகளில் சாதிய கட்டுமானங்களோடு மக்கள் வாழ்வதால் கிரமப்புறப் பள்ளிகளுக்கு நகரப்பகுதி ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டுகிறோம்.

7.பள்ளி ஆசிரியர்களுக்கு சாதிக் கண்ணோட்டம், பாகுபாடு அற்ற கல்வி சூழலை பள்ளியில் வழங்க சிறப்பு பயிற்சி தேவை.

8.இறந்த சிறுவன் சீனுவின் மரணத்தில் புற சக்திகளுக்குத் தொடர்ப்பிருக்க வாய்ப்புள்ளது என கருதுவதால் இளம் மாணவர்களை உயிர் பலியாக்கும் சக்திகள் இருக்கின்றனவா என்பதையும் விசாரணை அதிகாரி அறியவேண்டும் என வேண்டுகின்றோம்.

9.சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மரணமடைந்துள்ள சிறுவன் சீனுவின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 25,00,000 இழப்பீடாக வழங்கக் கோருகின்றோம்.

10.குற்றாலம் குமார்,சந்திரசேகர் மற்றும் கனகராஜ் ஆகியோர் மீது வன்மமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை அரசு வாபஸ் பெற வேண்டுகிறோம்.

9.இந்த வழக்கு குறித்து SC/ST ஆணையம் கள ஆய்வு மேற்கொள்ளவும் கோருகின்றோம்.

உண்மையறியும் குழுவினர்:

1.பேரா.இரா.முரளி, (தேசிய செயலர்,மக்கள் சிவில் உரிமைக் கழகம்- PUCL)

2.வழக்கறிஞர் ஆ. ஜான்வின்சென்ட் (மாநிலப் பொதுசெயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் – தமிழ்நாடு & புதுவை- PUCL)

3.வழக்கறிஞர் ச. மனோகரன், (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்( CPCL) ராஜபாளையம்

4.வழக்கறிஞர் முனைவர்.கரு.சித்தார்த்தன்,

5.இரா.சங்கர் (மக்கள் கலை இலக்கியக் கழக மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்)

6.திரு.முத்துக்குமார் (தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க