திருவள்ளூர் பள்ளி மாணவி மர்ம மரணம்
– அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்த மக்கள்!

கள்ளக்குறிச்சி மக்களின் போர்க்குணமிக்க போராட்டம் வழிகாட்டுகிறது!

கலகங்களின் தேவையை இறுகப் பற்றிக் கொள்ளும் தருணமிது!

திருவள்ளூர் மாவட்டம் – திருத்தணி அருகே கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி சரளா (17) ஜூலை 25 அன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

பள்ளி நிர்வாகம் மாணவியின் மரணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய பதிலை தர வேண்டும் எனக்கோரி மாணவியின் சொந்த ஊரான தெக்களூரில் பொதட்டூர்பேட்டை – திருத்தணி சாலையில் 4 அரசுப் பேருந்துகளை மக்கள் சிறைப்பிடித்து, சாலை மறியலிலும் ஈடுபடுகின்றனர். உடனடியாக அங்கு வந்த திருத்தணி போலீசும், எம்.எல்.ஏ சந்திரனும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கின்றனர்.

இது தொடர்பாக மப்பேடு போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்கின்றனர். டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படுகிறது. மாணவியின் மரணம் குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது. அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி விடுதியின் முன்பு குவிந்தனர்.


படிக்க : கள்ளக்குறிச்சி-போராடியவர்கள் மீது ஒடுக்குமுறை: கண்டனப் பதிவுகள் | வீடியோ


திருவள்ளூர் எஸ்.பி பெகர்லா செபாஸ் கல்யாண், வட்டாட்சியர் செந்தில்குமார், குழந்தைகள் நல அதிகாரிகள் உடனடியாக பள்ளி விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொள்கிறார்.

மாணவியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.க்கள் வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடனடியாக விசாரணை மேற்கொள்கிறார். தங்களது மகள் சரளாவின் மர்ம மரணத்திற்கு நியாயமான பதில் கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என பெற்றோர் தெரிவித்ததை தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இதில் மாணவி சரளாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்படுகிறது.

இதன் பின்பே மாணவியின் உடல் பெற்றோர்களால் பெற்றுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் ஒரே நாளில் நடக்கின்றன.

கள்ளக்குறிச்சி போராட்டத்தில் நான்கு நாட்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், போராடிய மக்களை துச்சமென நினைத்து, இழுத்தடித்து, அடக்குமுறைகளை ஏவி வந்த அதிகார வர்க்கம் திருவள்ளூரில் நடந்த சம்பவத்துக்கு ஒரே நாளில் நடவடிக்கை எடுக்கிறது என்றால்,  மக்களின் மேல் அக்கறை உள்ளவர்கள் போல்  காட்டிக் கொள்கிறது என்றால் என்ன காரணம்?

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் திருவள்ளூரானது கள்ளக்குறிச்சி போராட்ட வடிவத்தை கைக்கொண்டு விடும் என்பதுதான் காரணம். “கலகம் செய்யாமல் நியாயம் பிறக்காது” என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள் என்பதே காரணம். அதை கள்ளக்குறிச்சியில் மக்கள் நடத்திய போர்க்குணமிக்க போராட்டம் ஒருபடி மேலே கொண்டு சென்றுவிட்டது. மக்கள் அமைதியாக இருக்கும் வரை அவர்களின் மீது வரைமுறையற்ற ஒடுக்குமுறைகளை ஏவுபவர்கள் உழைக்கும் மக்களின் கலகத்தை கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு  தள்ளப்படுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், கள்ளக்குறிச்சி போராட்டம் ஆகியவை தமிழக மக்களின் போராட்ட வடிவத்தை தீர்மானிக்கும் முன்னுதாரணமான விசயங்களாக மாறுகின்றன. அடுத்தடுத்து இந்த வடிவங்களை நிரந்தரமாக்கிக் கொள்ளும் நிலைக்கு மக்களை தள்ளிவிடக் கூடாது என்ற எச்சரிக்கைதான் திருவள்ளூரில் அதிகார வர்க்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு முக்கியமான காரணம்.

கள்ளக்குறிச்சி போராட்டத்தின் மூலம் பெற்ற போராட்ட உணர்வை திருவள்ளூரிலும் தெக்களூர் பகுதி மக்கள் பேருந்துகளை சிறைப்பிடித்தன் மூலம், சாலைகளை மறித்ததன் மூலம் வெளிக்காட்டத் தொடங்குகின்றனர். இனியும் தாமதித்தால் தமிழகமே கலகத்தில் இறங்கும் என்ற அச்சம்தான் ஆளும் வர்க்கத்தை உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தள்ளுகிறது.

கள்ளக்குறிச்சியில் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தியதால் போலீசின் அடக்குமுறைக்கு ஆளாகி நூற்றுக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் சிறைக்கு சென்றார்கள் என்பது உண்மைதான்.

உலகளாவிய கார்ப்பரேட் பயங்கரவாத நிறுவனமான ஸ்டெர்லைட்டை தூத்துக்குடி மக்கள் 13 பேரின் இன்னுயிரை கொடுத்துத்தான் மூடியுள்ளார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் போலீசின் தாக்குலை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு களத்தில் நின்றார்கள் தமிழக இளைஞர்கள்.

இந்தப் போராட்டங்கள் இந்த அரசும், போலீசும் யாருக்காக நிற்கிறது முற்றிலும் அம்பலமாகின.

இத்தகைய தியாகமும், அர்ப்பணிப்பும் மிக்க கலகங்கள்தான் ஆளும் வர்க்கத்தை அச்சுறுத்துகின்றன. அதுதான் திருவள்ளூரில் விரைவான நடவடிக்கையை நோக்கி ஆளும் வர்க்கத்தை  தள்ளியது என்பதை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.


படிக்க : கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | Press Meet


அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் போர்க்குணத்துடன் போராடிய மக்களின் நியாயத்தை திருவள்ளூரில் எடுத்த நடவடிக்கையின் மூலம் ஆளும் வர்க்கம் ஒத்துக் கொண்டுள்ளது என்பதே தர்க்கரீதியான உண்மை.

தற்போது அதிகார வர்க்கம் எடுக்கும் நடவடிக்கைகள் நம்மை வாழவைப்பதற்காக அல்ல. தனது எஜமானனான சுரண்டும் வர்க்கத்தை பாதுகாப்பதற்கும், மக்கள் மீது பாய்வதற்கான தருணத்தை எதிர்நோக்கி பதுங்கிக் கொள்கிறது என்பதே உண்மை. ஏனெனில் அதன் இயல்பே அதுதான்!

அதிகார வர்க்கத்தின் தயவின் மூலம் நமது உரிமைகளை ஒருநாளும் பெற முடியாது!

போர்க்குணமிக்க உழைக்கும் மக்களின் போராட்டத்தை நிபந்தனையின்றி ஆதரிப்போம்!

உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கான கலகங்களை நிரந்தரமாக்குவதன் மூலம் வர்க்கப் போராட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்!


இனியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க