ப்பந்த விதிமுறைகளை மீறி அராஜகமான பணியிட மாற்றம், கட்டாய பணி நீக்கம், நிரந்தரப் பணிகளுக்கு பதிலாக அவுட்சோர்சிங் முறையில் தற்காலிக பணிகளாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்கள் மத்திய அரசிடம் கடிதங்கள் கொடுத்தன. அந்த அடிப்படையில் நடந்த பேச்சு வார்த்தை கடந்த 16 ஆம் தேதி வங்கிகளின் கூட்டமைப்பு தொழிலாளர் நலத்துறை ஆணையர் மற்றும் வங்கி ஊழியர் சங்கம் இடையே நடந்து தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வங்கி ஊழியர் சங்கம் சார்பாக நவம்பர் 19 ஆம் தேதியன்று அகில இந்திய அளவிலான போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறும்போது “வங்கிகள் இருதரப்பு ஒப்பந்தங்களை மதிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கின்றன. உதாரணமாக, கடந்த 2005 ஆம் ஆண்டு வங்கி ஊழியர் சங்கம் – இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதன்படி, எந்த வங்கிக் கிளைகளில் கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை, ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கிக் கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன்மூலம், அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பார்கள். சில வங்கிகள் இந்த ஒப்பந்தத்தை மீறி, ஊழியர்களை வெளியூர்களுக்கு இடமாற்றம் செய்கிறது. ஒரு வங்கியில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயல். பணம் கொண்டு செல்லும் ஊழியர், துப்புரவு ஊழியர் ஆகிய பணிகளுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிப்பதற்கு பதிலாக அயல்பணி மூலம் தனியாருக்கு வழங்க சில வங்கிகள் முடிவு செய்துள்ளன. ஒரு முன்னணி வங்கி பொதுமக்களிடம் வைப்புத் தொகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட 240 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுடன், அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை” என்பதை முன் வைத்தார்.

படிக்க : டிசம்பர் 16, 17 : வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரிப்போம் || புஜதொமு

எஸ்.பி.ஐ வங்கியாளர் தாமஸ் பிரான்கோ கூறியதாவது, “முதலாவதாக, தொழிற்சங்கங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக பெடரல் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டரட் வங்கி போன்ற நான்கு வங்கிகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. தொழிற்சங்க தலைவர்களாக இருந்தவர்களை பணியிட மாற்றம் அல்லது பணி நீக்கம் செய்திருக்கிறார்கள்.

இரண்டாவதாக, வங்கிகளை பொறுத்தவரை இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால்தான், அவர்களை பணியிட மாற்றம் செய்யவேண்டும் என்ற வங்கி பணியிட மாற்ற பாலிசி உள்ளது. இதைமீறி மத்திய இந்திய வங்கி 3,300 பேரை பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள். இதுவும் ஒரு தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கையாகவே தெரிகிறது.

மத்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக தொழிற்சங்க உரிமைகளை பறித்து வருகிறது. மேலும் தொழிற்சங்க உரிமைகளை பறிக்க புதிய தொழிலாளர் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு நாட்டிலும் தொழிற்சங்க உரிமைகளை பறிக்கக்கூடாது. அது மக்களின் வளர்ச்சியை பாதிக்கும்” என்று கூறினார்.

மேற்கண்ட தொழிற்சங்க தலைவர்கள் கூறும் பிரச்சினைகள் வங்கிகளை தனியார்மயமாக்குவதை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்த மத்திய மோடி அரசு செய்து வரும் நடவடிக்கையாகவே பார்க்க முடியும்.

அரசு பொதுத்துறை வங்கிகளில் இருந்து பல லட்சக்கணக்கான கோடிகளை எடுத்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கினர். அந்தப் பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் வசூல் செய்ய துப்பற்ற அரசாங்கம் பொதுத்துறை வங்கிகள் நட்டத்தில் இயங்குகின்றன என பழி போட்டனர். அதனால் “அரசே பொதுத்துறை வங்கிகளை நடத்த முடியாது தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்” என சொல்லி அதற்கான சீர்திருத்த சட்டங்களை கொண்டுவர துடிக்கிறார்கள். அரசு பொதுத்துறை வங்கிகளில் அரசு வைத்திருக்க கூடிய 51% பங்கினை விலக்கிக் கொண்டு 26 சதவீதம் இருந்தால்போதும் என்ற வங்கிகள் திருத்த மசோதாவை 2021-இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முனைந்தனர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு ஏதுவாகதான் வங்கிகள் இணைப்பு, நிரந்தர வங்கி பணியிடங்களை தற்காலிக பணியிடங்களாக மாற்றுவது போன்றவற்றை மிகவும் வேகமாக செய்து வருகின்றனர். இந்த விஷயங்களை தொடர்ச்சியாக வங்கி ஊழியர் சங்கங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வருகின்றனர். அதனால்தான் தொழிற்சங்க தலைவர்களை விதிமுறைகளை மீறி பணியிட மாற்றம் செய்வது, ஊழியர்களையும் பணியிட மாற்றம் செய்வது, பணி நீக்கங்கள் செய்வது போன்ற வேலைகளை தீவிரமாக செய்து ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களையும் அச்சுறுத்துகிறார்கள். இப்படி வங்கி ஊழியர்களை அச்சுறுத்தி பணிய வைப்பதன் மூலமே வங்கிகள் தனியார்மயத்தை மேலும் தீவிரபடுத்த முடியும் என்பதுதான் மத்திய மோடி அரசின் கணக்கு.

வங்கிகள் தனியார்மயத்தை தீவிரப்படுத்தி ஒட்டுமொத்த மக்கள் பணத்தையும் கார்ப்பரேட்டுகள் கையில் ஒப்படைத்துவிட்டு மக்களுக்கு மஞ்சள் கடுதாசி கொடுக்க தயாராகி வருகிறார்கள். உண்மையில் வங்கிகளை திவாலாக்கி மக்களையும் திவாலாக்க வேலை செய்து வருகிறார்கள். ஆதலால் பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வங்கி ஊழியர்கள் சங்கம் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் துணை நிற்போம். ஆதரவாக களத்தில் இறங்குவோம்.

ரவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க