நவ.13 டெல்லி பேரணி: பு.ஜ.தொ.மு பயணத்தில் ஒரு மைல்கல்!

ராம்லீலா மைதானத்துக்கு வெளிப்புறம் வந்தடைந்த பேரணியின் வரிசையில் பு.ஜ.தொ.மு - மாநில ஒருங்கிணைப்புக்குழு ஏழாமிடத்தில் தன்னை இணைத்துக்கொண்டு விண்ணதிர முழக்கமிட்டது.

கில இந்திய அளவில் புரட்சிகர அரசியலின் அடிப்படையில் இயங்கி வருகின்ற 16 தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர் உரிமைகள் மற்றும் போராட்டங்களுக்கான இயக்கம் (Mazdoor Adhikar sankarsh Abhiyan – MASA) என்கிற கூட்டமைப்பு கட்டியமைக்கப்பட்டிருப்பதும், பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழுவும் இந்த கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாக இருப்பதும், MASA சார்பில் நவம்பர் 13 அன்று 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தை நோக்கி மாபெரும் தொழிலாளர் பேரணி நடைபெற திட்டமிடப்பட்டதும், நவ.2 அன்று வெளியிட்ட பத்திரிகை செய்தியில் தெரிவித்திருந்தோம்.

பு.ஜ.தொ.மு (மா.ஒ.கு) சார்பில் இந்த பேரணியில் பங்கேற்க சுமார் 40 பேர் கொண்ட குழு (முன்னணியாளர்களது குடும்பத்தினர் உள்பட) 11.11.2022 இரவு டெல்லிக்கு புறப்பட்டது. 13.11.2022 அதிகாலை 5.30 மணியளவில் நடுங்கும் குளிரில் டெல்லி மாநகராட்சி சமூக கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ஆந்திரா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுடன் நமது தோழர்கள்  இணைந்து கொண்டனர்.

படிக்க : நவ.13 : MASA குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி! | பு.ஜ.தொ.மு தமிழகம் முழுவதும் பிரச்சாரம்

காலை 11 மணியளவில் துவங்கப்போகும் பேரணிக்கு உடனடியாக தயார் செய்து கொண்டனர்.  பேரணி துவங்குமிடமான ராம்லீலா மைதானத்தில் 16 உறுப்பு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. நாமும் கலந்து கொண்டோம்.

டெல்லியில் 144 தடை உத்தரவு இருப்பதால் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கிய பேரணிக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுத்த நிலையில், ராம்லீலா மைதானத்திலேயே பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், மதியம் 2 மணியளவில் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, தடையை மீறி குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கிய பேரணியை முன்னெடுப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

நண்பகல் 12 மணியளவில் துவங்கிய பொதுக்கூட்டத்தில் நமது அமைப்பு சார்பில் தோழர் அமிர்தா உரையாற்றினார்.

“நாங்கள் தமிழகத்திலிருந்து வந்திருக்கிறோம். ஆசியாவின் முதல் தொழிற்சங்கமான MLU (மெட்ராஸ் லேபர் யூனியன்) துவங்கப்பட்ட மண்ணிலிருந்து வந்திருக்கிறோம். காலனிய இந்தியாவிலும், அதற்குப் பிந்தைய இந்தியாவிலும் பல்வேறு போர்க்குணமிக்க தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்த, செறிந்த அனுபவம் வாய்ந்த மண்ணில் ஆட்டோமொபைல் துறை துவங்கி ஐ.டி துறை வரை; அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் துவங்கி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வரை; பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் பயின்ற அனுபவத்திலிருந்து எமது முன்மொழிதல்களையும், இந்திய தொழிற்சங்க இயக்கம் கருத்தில் கொள்ள வேண்டிய முதன்மை அம்சங்களையும் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.

மாசா முன்வைத்துள்ள 7 அம்ச முதன்மை கோரிக்கைகள், எஞ்சிய துணைக் கோரிக்கைகள் ஆகியவற்றுடன் முழுமையாக எமது அமைப்பு உடன்படுகிறது. எனினும், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுபேர உரிமை ஆகிய இரண்டு அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும்போது, ஆலையின் உற்பத்தி அளவு, தொழிலாளர்களின் பணி நிலைமைகள், நாம் உருவாக்கும் இலாபத்தில் நமக்குரிய பங்கு ஆகியவற்றை தீர்மானிக்க முடியும். இந்த இரண்டு அடிப்படை உரிமைகளே ஏனைய கோரிக்கைகளுக்கு திறவுகோலாகவும் அமையும்.

இந்திய தொழிலாளி வர்க்கம் மேற்குறிப்பிட்ட அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவது சாதாரண விசயமல்ல. நாம் இங்கே பல்லாயிரக்கணக்கில் கூடி இருக்கிறோம். நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். உங்களில் பலர் பீகாரிலிருந்தோ, கர்நாடகாவிலிருந்தோ, மேற்கு வங்கத்திலிருந்தோ, தேசிய தலைநகர பிராந்தியம் எனப்படும் NCR மண்டலத்திலிருந்தோ, வேறு ஏதேனும் மாநிலத்திலிருந்தோ வந்திருக்கிறோம்.

நாம் மொழியாலும், பண்பாட்டாலும், நிலப்பரப்பாலும், இன்னபிறவற்றாலும் பிரிந்து கிடக்கிறோம். நம் அனைவரையும் ஒற்றைச் சொல், ஒற்றை உணர்வு  ஒன்றிணைக்கிறது. அதுதான் “வர்க்க உணர்வு” என்கிற ஒற்றை சொல்லும்,உணர்வுமாக இருக்கிறது.

பல்வேறு கூறுகளால் பிளவுபட்டிருக்கும் நாம்  ஒற்றை உணர்வால் ஒன்றுபடுகிறோம். இந்த ஒன்றுபடுதல் கீழிருந்து துவங்க வேண்டும். ஆலைக்குள்ளிருந்து மட்டுமல்ல, ஆலைக்கு வெளியில் இருந்தும் துவங்க வேண்டும். தொழிலாளி வர்க்கத்தை குடியிருப்புகள், தொழிற்பேட்டைகள் என ஆலைக்கு வெளியில் அணி திரட்டுவோம். குடும்பங்களோடு அணி திரட்டுவோம். என் முதலாளி – உன் முதலாளி என தனித்தனியாக எதிர்த்து நிற்காமல் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கும் பொது எதிரி முதலாளி வர்க்கம் என்கிற அடிப்படையிலிருந்து நமது வர்க்கப் போராட்டத்தை கட்டியமைப்போம்… வாருங்கள் தோழர்களே…!” என்கிற அறைகூவவலுடன் தோழர் அமிர்தாவின் உரை நிறைவுற்றது. அடுத்தடுத்து நடந்த உரைகளுடன் பொதுக்கூட்டம் முடிவுற்றது.

கருத்துரைகளுக்கு முன்னதாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தின. நம் தரப்பில் காஞ்சிபுரம் பகுதி தோழர்கள் “நான் உலகம்! நானே உலகம்!” பாடலை எழுச்சியுடன் பாடினர்.

பொதுக்கூட்டம் முடிந்த பிறகு மதியம் 3 மணிக்கு பேரணி துவங்கியது. ராம்லீலா மைதானத்துக்கு வெளிப்புறம் வந்தடைந்த பேரணியின் வரிசையில் பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழு ஏழாமிடத்தில் தன்னை இணைத்துக்கொண்டு விண்ணதிர முழக்கமிட்டது. இந்தி மொழியில் பிரதான முழக்கம் அமைந்த நிலையில் நமது முழக்கம் தமிழிலும், ஆங்கிலத்திலும் அதிர்ந்தது.

படிக்க : நவ.13 : நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அறைகூவலுடன் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி!

பேரணி மைதானத்தின் வெளிச் சுற்றுப்புறத்தில் முன்னேறியபோது டெல்லி போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டது. தடைக்கான காரணங்களைச் சொன்னதோடு, 16 அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட 5 பிரதிநிதிகள் மட்டும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்ல தயாராக இருப்பதாகவும், அவ்வாறு வருகின்ற பிரதிநிதிகள் குடியரசுத்தலைவர் இல்லத்தில் MASA அமைப்பின் கோரிக்கைகளை கடிதமாக தர முன்வர வேண்டும் எனவும் டெல்லி போலீசு சொன்னது.

இதையடுத்து 16 அமைப்புகளின் கூட்டுக்குழுவில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தலைவர் இல்லத்துக்கு சென்றனர். அங்கு கோரிக்கை பட்டியலை கொடுத்துவிட்டு வரும் வரையில் பேரணியில் வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலையில் அமர்ந்து தலைவர்களது அறிவிப்புக்காக காத்திருந்தனர்.

இறுதியாக MASA தலைமைக்குழு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் பேரணி நிறைவடைந்தது.

இந்த போராட்டம் பல்வேறு புதிய அனுபவங்களை கொடுத்திருக்குறது. நமது கடந்தகால அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வைத்திருக்கிறது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஏப்ரல் 2021-ல் பிளவுபடுவதற்கு முந்தைய காலத்தில் முன்னெடுத்த நிகழ்வுகள், பிளவுக்குப் பிறகு பு.ஜ.தொ.மு-வின் வாரிசாக மாநில ஒருங்கிணைப்புக்குழு இயங்கி வருவதை நிலைநாட்டியுள்ளோம்.


இவண்,
பு.ஜ.தொ.மு,
மாநில ஒருங்கிணைப்புக்குழு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க