மிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிக்கபூவத்தி ஊராட்சியில் அமைந்துள்ளது குருதட்டனூர் என்ற குக்கிராமம். அக்கிராமத்தில் கிட்டத்தட்ட 600 பேர் வசிக்கின்றனர்; அதில் ஏறக்குறைய 400 பேர் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

குருதட்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லி என்ற பெண்மணி. அவரது கணவர் மாரப்பன் மே 2021 இல் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மாரப்பனின் உடலை அவர்களின் பூர்வீக நிலத்தில் அடக்கம் செய்ய மல்லி முடிவெடுத்தார். அந்நிலம் அப்பகுதியில் வாழும் இருளர் இன மக்களுக்குச் சொந்தமான நிலமாக இருந்துவந்தது. 1990களில் அந்நிலத்தை வனத்திற்குச் சொந்தமான நிலம் என்று கூறி அங்கு வாழ்ந்து வந்த இருளர்களை இடம் மாற்றினர். அந்நிலத்திற்கு அரை கிலோமீட்டர் தள்ளி இருளர்கள் குடியமர்த்தப்பட்டனர். ஆனாலும் இருளர்கள் அந்நிலத்தில் விவசாயம் செய்வதை நிறுத்தவில்லை.

மல்லியின் கூற்றுப்படி 70 ஆண்டுகளாக அவர்களது குடும்பம் அந்த இடத்தில் விவசாயம் செய்து வருகிறது. 2006 ஆம் ஆண்டில், பழங்குடிகளின் வன உரிமையை மீட்டெடுப்பதாகக் கூறி வன உரிமைச் சட்டம் (Forest Rights Act 2006) நிறைவேற்றப்பட்டது. ஆனால் அச்சட்டத்தின் கீழ் வன உரிமைக்காக 15 முறைக்கும் மேலாக விண்ணப்பித்தும் மல்லிக்கு எந்தப் பலனும் இல்லை. சிலமுறை விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டது; சிலமுறை நிராகரிக்கப்பட்டது; பலமுறை பதில் ஏதும் கிடைக்கவில்லை.

2020 ஆம் ஆண்டில் மல்லியும் அவரது கணவரும் அவர்களின் பூர்வீக நிலத்தில் 40 மாங்கன்றுகளை நட்டு இருந்தனர். ஆனால் வன உரிமை சட்டத்தின் கீழ் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாததால் வனத்துறை அதிகாரிகள் அவற்றைப் பிடுங்கி எறிந்தனர்.

மல்லியின் கணவர் இறந்தபோது, வனக்காவலர்கள் அவரின் உடலை புதிய இடுகாட்டில் அடக்கம் செய்ய வலியுறுத்தினர். ஆனால் அந்த பகுதி மண்ணரிப்பு ஏற்படும் பகுதியாகும். அதனால் மல்லி அவரது கணவரின் உடலை அங்கு அடக்கம் செய்ய மறுத்துவிட்டார். வனத்துறையின் உத்தரவை மீறி அவரது பூர்வீக நிலத்திலேயே மாரப்பனின் உடலை அடக்கம் செய்துள்ளார்.

இருளர்கள் தங்களது பாரம்பரிய நிலங்களை மீட்க பலமுறை முயற்சி செய்தும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. 2015 ஆம் ஆண்டில் பழங்குடிகள் அல்லாதவர்கள், வனத்துறையினரின் ஒத்துழைப்புடன் நிலங்களை கையகப்படுத்திக் கொள்வதாக இருளர் மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.


படிக்க: இருளர் மக்களை பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யும் போலீசு!


குடியமர்த்தப்பட்ட இருளர் இன மக்கள் சிலருக்கு அரசு நிர்வாகம் சார்பாக நில உரிமைப் பட்டா வழங்கப்பட்டது. சிலருக்கு தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 35,000 வழங்கப்பட்டது; இன்னும் சிலருக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரூ. 1,00,000 வழங்கப்பட்டது.

அங்குள்ள 40 குடும்பங்களுக்கு இரண்டு சென்ட் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 30 குடும்பங்களுக்கு நிலமோ வீடோ (1990களில் இருந்து) தற்போது வரை வழங்கப்படவில்லை. மேலும், அவர்களின் பூர்வீக நிலங்களை பயன்படுத்துவதில் பல தடைகளையும் சந்தித்து வருகிறார்கள். வனத்துறை அதிகாரிகளால் தொடர்ந்து சீண்டப்படுவதும் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் வனவாசிகளின் (forest dwellers) உரிமைகள் பாதிக்கப்படுவதற்கு குருதட்டனூர் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான சம்பாசிவம் வன உரிமைச் சட்டம் (FRA) அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று வழக்கு தொடுத்தார். இதன் காரணமாக பிப்ரவரி 2008 இல் உயர்நீதிமன்றம், அச்சட்டத்தின் கீழ் நிலப்பட்டா வழங்குவதற்குத் தடை விதித்தது. மீண்டும் ஏப்ரல் 2008 ஆம் ஆண்டில், நீதிமன்றத்தின் அனுமதியுடன் அரசு பட்டா வழங்கலாம் என்று உத்தரவிட்டது.

ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் இதே போன்ற தடைகள் இருந்தன. ஆனால் அம்மாநில அரசாங்கங்கள் 2009 ஆம் ஆண்டில் அவற்றை எதிர்த்து முறியடித்தன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை.


படிக்க: இருளர்கள் மீது தொடரும் போலீசின் வெறியாட்டங்கள் !


2015 ஆம் ஆண்டில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2016 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஏப்ரல் 2008 உத்தரவை ரத்து செய்தது.

அதன் பின்னரும் கூட, வன உரிமைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு முறையாக அமல்படுத்துவதில்லை. வன உரிமைகள் வழங்குவதில் மோசமான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 5-வது இடத்தில் இருக்கிறது. ஜூன் 30 வரையிலான தரவுகளின் படி, இதுவரை வன உரிமைகளுக்காக 33,775 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், வெறும் 8,144 உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அதாவது 75 சதவிகித விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன; தேசிய சராசரியோ 50 சதவிகிதம் தான்.

மனித வளர்ச்சிக் குறியீட்டில் (Human Development Index) இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் வனவாசிகள் மற்றும் பழங்குடியினரின் நிலை இதுதான். அவர்கள் உயிர் வாழ்வதே இவ்வளவு கடினமானதாக இருக்கிறது. அரசால் இம்மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள்.

பொம்மி
நன்றி: ஸ்கிரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க