பாசிச ஹிட்லரை வீழ்த்திய தோழர் ஸ்டாலின் பிறந்தநாள் – சென்னையில் தெருமுனைக்கூட்டம்!

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 21-12-22 அன்று மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

“ஹிட்லர்-முசோலினியின் பாசிசத்தை வீழ்த்திய பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் பிறந்தநாளை நெஞ்சிலேந்துவோம் !, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம் !” என்கிற முழக்கங்களின் அடிப்படையில் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 21-12-22 அன்று மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் தலைமை தாங்கினார். முதல் நிகழ்ச்சியாக சைதை பகுதி பொருளாளர் தோழர் பிரியா, தோழர் ஸ்டாலின் அவர்களின் திருவுருவ படத்தை திறந்து வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தோழர் இளங்கோவன் அவர்கள் தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை உயர்த்திப்பிடிப்போம் என்றும், அவர் எப்படி பாசிஸ்டுகளை ஓட ஓட விரட்டினாரோ அதேபோல் நாம் நம் நாட்டில் இருக்கும் பாசிச கும்பலை விரட்டியடிக்க வேண்டும் என்று பேசினார்.

படிக்க : “கோழைகளுக்கு வாழ்வில்லை; வீரர்களுக்கு சாவில்லை” | தோழர் மருது | வீடியோ

அடுத்ததாக, சென்னை மண்டல இணைச்செயலாளர் புவனேஸ்வரன் உரையாற்றினார். உழைக்கும் மக்கள் அனைவருக்கும், ஏன் இன்று தோழர் ஸ்டாலின் தேவைப்படுகிறார் என்பதை விளக்கி பேசினார்.

“இங்கு புரட்சி தலைவர், தலைவி, புரட்சி தமிழன், என்று அடைமொழி வைத்து சுற்றுவது அல்ல புரட்சி. உழைக்கும் மக்களின் விடுதலைக்கு ஆளும் வர்க்கத்தை எதிர்த்து உழைக்கும் மக்கள் படையை திரட்டி போரிட்டு வெல்வதுதான் புரட்சி. ஹிட்லர் என்ற சர்வாதிகாரனை வீழ்த்தி உலகத்தை காத்தவர்தான் ஸ்டாலின் என்றார். இங்கு பெட்ரோல், டீசல், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலைகள் நாள்தோறும் உயர்ந்துகொண்ட இருக்கிறது. உழைக்கும் மக்கள் வாழ்வின்றி தவிக்கிறார்கள், ஆனால் ரஷ்யாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக விலைவாசியே உயர்த்தாத நாடு சொல்லப்போனால் விலைவாசி ஏற்றம் என்றால் தெரியாத தலைமுறை ரஷ்யாவில் வாழ்ந்து உள்ளார்கள்” என்றார்.

மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா தனது உரையில், இன்று ஏன் ஸ்டாலின் தேவைப்படுகிறார், ரஷ்யாவில் பிறந்த ஸ்டாலின் எப்படி உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களுக்கு தலைவரானார். ஜெர்மானியர் தான் உலகத்தை ஆழ பிறந்தவர்கள் என்று உலகத்தை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சித்த பாசிஸ்ட் ஹிட்லரை வீழ்த்திய மாவீரன் தான் ஸ்டாலின். உலகத்தில் கம்யூனிசம் முடிந்துவிட்டது என்று உலக வல்லாதிக்க கும்பல் கொக்கரித்தபோதும் அவர்களின் கொட்டத்தை அடக்கியவர்தான் ஸ்டாலின்.

படிக்க : பாசிச ஹிட்லரை வீழ்த்திய தோழர் ஸ்டாலின் பிறந்தநாள் – மதுரையில் எழுச்சிகரமாக நடைபெற்ற அரங்கக் கூட்டம்!

விவசாயிகள் விமானத்தில் சென்று தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்த நாடு ரஷ்யா, விபச்சாரம் ஒழிக்கபட்ட நாடு ரஷ்யா. ஆனால் இந்தியாவில் இன்று கருமுட்டை விற்கப்படுகிறது, சிறுநீரகம் விற்கப்படுகிறது, ஏழைகளின் உயிர் பறிக்கப்படுகிறது, இன்னும் எதற்காக நாம் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். ரஷ்யா போல் பாசிசத்தை வீழ்த்த நமக்கு ஒரு போல்ஷிவிக்குமயமான கம்யூனிஸ்ட் கட்சி தேவைப்படுகிறது. காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில் உறுதியேற்போம் என்று தோழர் அமிர்தா பேசினார்.

இறுதியாக சேத்துப்பட்டு பகுதி இணைச்செயலாளர் பாஸ்கர் நன்றியுரை கூறினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம் – சென்னை மண்டலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க