பண மதிப்பிழப்பு செல்லும்! | பாசிஸ்டுகளிடம் சரணடைந்த நீதிமன்றம்!

பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது ஒரு பெரிய கேலிக்கூத்து. அதிலும், பணமதிப்பிழப்பு செல்லும் என்ற தீர்ப்பு அபத்தத்தின் உச்சகட்டம்.

1

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று ₹500 மற்றும் ₹1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக அறிவித்தார். மேலும், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற 52 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. கருப்புப் பணத்தை ஒழிக்கவும், இலஞ்சம் ஊழலை தடுக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார். இதன் விளைவாக ஏடிஎம் வாசல்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடந்ததும், வரிசையில் நின்று கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து இறந்த கொடூரங்களும் நமது மனங்களில் இருந்து மறையவில்லை.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு ஆராய்ந்து எடுக்கப்படாத முடிவு என்பதால் அதனை செல்லாது என அறிவிக்கக் கோரி 58 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன. பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் 22 அன்று விசாரணை முடிக்கப்பட்டு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று (ஜனவரி 2, 2023) வெளியாகியுள்ளது. இதில் நான்கு நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.


படிக்க: பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?


பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மத்திய அரசின் பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதால் அரசின் இந்நடவடிக்கையில் எந்தக் குறையையும் காண இயலவில்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். “ரிசர்வ் வங்கிச் சட்டம் பிரிவு 26(2)-இன்படி பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கான பரிந்துரை என்பது ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவிடம் இருந்து வந்திருக்க வேண்டும்; ஆனால் இப்பரிந்துரை என்பது மத்திய அரசிடம் இருந்து வந்திருக்கிறது; ரிசர்வ் வங்கி தனது மூளையை சொந்தமாக பயன்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “இது போன்ற முக்கிய முடிவுகளில் நாடாளுமன்றத்தை புறந்தள்ளக் கூடாது. ரகசியம் தேவை என்று கருதினாலும் கூட அவசர சட்டமாக நிறைவேற்றி இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

நடைமுறையில் உள்ள சட்டங்களை இந்த ஆர்.எஸ்.எஸ்–பாஜக காவி கும்பல் கழிவறை காகிதமாக பயன்படுத்துகிறது என்பதையே நீதிபதி பி.வி. நாகரத்னாவின் மாறுபட்ட தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது. அனைத்து நீதிபதிகளுமே பணமதிப்பிழப்பை கொள்கை என்ற அளவில் ஏற்றுக் கொள்வதைத் தான் இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது. மாறுபட்ட தீர்ப்பு கூட பணமதிப்பிழைப்பை சட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளாததை மட்டுமே கேள்வி எழுப்பியிருக்கிறது. ‘அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று ஒதுங்கிக் கொள்வதன் மூலம் பாசிசத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது நீதிமன்றம்.


படிக்க: பணமதிப்பழிப்பு மரணங்கள் : பதில் சொல்ல முடியாது என்கிறது பிரதமர் அலுவலகம் !


பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது ஒரு பெரிய கேலிக்கூத்து. அதிலும், பணமதிப்பிழப்பு செல்லும் என்ற தீர்ப்பு அபத்தத்தின் உச்சகட்டம். பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிக்காமல், இவ்வளவு தூரம் காலதாமதப்படுத்தி இருப்பதானது நீதிமன்றம் ஆளும் வர்க்கத்திற்கு துணைபோய் இருப்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி இருக்கிறது. நீதிமன்றம் மக்கள் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறது!

பொம்மி