காப்புக்காடுகளை ஒழித்துக் கட்ட எத்தனிக்கும் திமுக அரசு!

ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 35 சதவிகிதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் மொத்த வனப்பகுதியின் பரப்பளவு 23.71 சதவிகிதம்தான். எனவே காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

0

மீபத்தில் தமிழ்நாடு அரசு கனிமச் சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் (Tamil Nadu Minor Mineral Concession Rules, 1959) திருத்தங்களை மேற்கொண்டது. இது தமிழ்நாட்டின் காப்புக்காடுகளை (Reserve Forests) ஒழித்துக் கட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த திருத்தத்திற்கான அரசாணை தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தால் டிசம்பர் 14, 2022 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் பிரிவு 36 உட்பிரிவு 1(A)-இன் படி காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்விதியைத் திருத்தி காப்புக்காடுகளின் அருகில் சுரங்கங்கள் அமைப்பதற்கான தடையை நீக்கிவிட்டது திமுக அரசு.

நவம்பர் 3, 2021 அன்று தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின் படி காப்புக்காடுகள், காட்டுயிர் சரணாலயங்கள் (Wildlife sanctuaries), தேசியப் பூங்காக்கள் (National Parks), புலிகள் காப்பகங்கள் (Tiger reserves) மற்றும் யானைகளின் வலசைப் பாதைகள் (Elephant corridors) ஆகியவற்றிலிருந்து ஒரு கி.மீ தொலைவுவரை கனிமச் சுரங்கங்கள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்தப் பட்டியலில் இருந்து ‘காப்புக்காடுகள்’ மட்டும் நீக்கப்பட்டுள்ளது.


படிக்க: சத்தீஸ்கர் அரசு : காடுகளை அழிக்க காத்திருக்கும் கழுகு !


2021ஆம் ஆண்டு தடையால் 200க்கும் மேற்பட்ட குவாரிகளின் பணிகள் பாதிக்கப்படுவதாக நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வருத்தப்படுகிறார். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறதாம்!

இப்பிரச்சினை குறித்துப் பேசிய திமுக அமைச்சர் துரைமுருகன், “உச்சநீதிமன்ற ஆணையும், ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களும் காப்புக்காடுகளுக்கு அருகில் குவாரிகள் இயங்குவதை தடை செய்யவில்லை” என்று கூறினார். மேலும், டி.என். கோதவர்மன் திருமுல்பாட் (TN Godavarman Thirumulpad vs Union Of India & Others) வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, “தேசியப் பூங்காக்கள், காட்டுயிர் சரணாலயங்கள், யானைகளின் வலசைப் பாதைகள் ஆகியவற்றை சுற்றி 1 கி.மீ தொலைவிற்கு சுரங்கங்கள் அமைக்கக் கூடாது என்றுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. காப்புக்காடுகள் குறித்து அத்தீர்ப்பில் கூறப்படவில்லை” என்று சட்ட விளக்கம் வேறு கூறுகிறார்.

காப்புக்காடுகளில் இருந்து 60 மீட்டர் தொலைவில் குவாரிகள் செயல்படலாம் என்று திமுக அரசின் அரசாணை கூறுகிறது. கல் குவாரி மாஃபியாக்கள் லாபம் அடைவதற்காக முன்னர் இருந்த 1 கி.மீ தொலைவு என்பதை தற்போது 60 மீட்டர்-ஆக மாற்றி உள்ளார்கள்.

“ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 35 சதவிகிதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் மொத்த வனப்பகுதியின் பரப்பளவு 23.71 சதவிகிதம்தான். எனவே காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இப்படியான சூழலில் தமிழக அரசு செய்திருக்கும் இந்த சட்டத்திருத்தத்தின் பின்னணியில் எந்த நியாயமான காரணமும் இல்லை” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் கூறுகிறார்.


படிக்க: பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !


இந்த சட்டவிதி திருத்தங்களை ரத்துசெய்யக் கோரி விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சூழலியல் அமைப்புகளும் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளன. ஆனால் அமைச்சர் துரைமுருகனின் பேச்சு, திமுக அரசு இம்முடிவில் இருந்து பின்வாங்காது என்பதையே உணர்த்துகிறது. அதாவது கல்குவாரி மாஃபியாக்களின் நலன்களை பாதுகாப்பதில் இருந்து திமுக அரசாங்கம் பின்வாங்கப் போவதில்லை என்பதையே அமைச்சரின் பேச்சு நமக்கு உணர்த்துகிறது.

பாசிச எதிர்ப்பு என்பது வெறும் காவி எதிர்ப்பு மட்டுமல்ல என்பதை ஜனநாயக சக்திகள் உணர்ந்து கொண்டு, திமுகவின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை எதிர்த்து களத்தில் நின்று சமரசமின்றி போராட வேண்டும்.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க