வேலையில்லாத் திண்டாட்டம் – யார் காரணம்: வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு நாம் செல்வதற்கான காரணங்களுக்கு எந்த அளவுக்கு நியாயம் உள்ளதோ, அதே நியாயம் அன்றாட வாழ்க்கைக்காக இங்கு பிழைப்பு தேடிவரும் வட மாநிலத் தொழிலாளிக்கும் பொருந்தும்தானே.

வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டம்! காரணம் என்ன?
வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?

ட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கில்லை. ஒன்றிய, மாநில அரசுத் துறைகளோ தனியார் துறையோ எங்கும் நிரந்தர வேலைக்கு ஆட்கள் எடுப்பது கிடையாது. கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் ஒப்பந்தம் (காண்ட்ராக்ட்) மூலம் நிறைவேற்றப்படுகிறது. குறிப்பிட்ட மாதங்கள், ஆண்டுகள் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி விட்டு தூக்கி எறிவது என்பதைத்தான் பெரு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

அதாவது பயிற்சித் தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி, தற்காலிகத் தொழிலாளி, NEEM, NAPS, FTE என்று பல்வேறு பெயர்களில் தொழிலாளர்களை சுரண்டிக் கொழுக்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். குறிப்பிட்ட ஆண்டுகள் (அதிகபட்சம் 3 ஆண்டுகள்) வரை அவர்களை உறிஞ்சிவிட்டு தூக்கியெறிந்து விடுவதுதான் இந்த வேலைவாய்ப்பின் லட்சணம்.

கல்வியில் முன்னேறிய தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களைக் காட்டிலும் அதிகம். தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அரசுத் தேர்வின்போது சில ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் சில லட்சக்கணக்காக விண்ணப்பங்களே இதற்கான சான்று.

எனவே, இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு தங்களது படிப்பிற்கு தொடர்பில்லாத கிடைக்கின்ற வேலையை செய்வது என்ற சூழ்நிலைதான் பெரும்பாலும் உள்ளது. வாழ்க்கை நிர்ப்பந்தங்களின் காரணமாக வேறுவழியின்றி எந்தவித வேலை பாதுகாப்பும், உத்தரவாதமும் இல்லாத வேலைகளுக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்வதும், மும்பை, பெங்களூரு, கல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களை நோக்கி ஓடுவதும் இயல்பாக நடந்து வருகிறது. இதனால் இயல்பான வாழ்க்கை, சமூக சிந்தனை, புரிதல்கள் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

படிக்க : வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !

இந்த சூழலில்தான் தமிழ்நாட்டின் இளைஞர்கள் மத்தியில் வேறொரு நஞ்சு வேகமாக விதைக்கப்பட்டு வருகிறது. வட மாநிலத் தொழிலாளர்கள் வருவதால்தான் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே வடமாநிலத் தொழிலாளர்களை விரட்ட வேண்டும் என்ற மனநிலை சீமான், பெ.மணியரசன் போன்றவர்களால் தமிழினவெறியை கிளப்புகிறார்கள். மேலோட்டமாக இதைப் புரிந்து கொண்டு இளைஞர்கள் பலரும் இனவெறிக்கு பலியாகிறார்கள்.

ஒன்றிய அரசுப் பணிகளில் வட மாநிலத்தவரை சதித்தனமாக திணிப்பதையும், அன்றாட வாழ்க்கை வாழ்வதற்காக தமிழ்நாட்டுக்கு வந்து குறைவான கூலிக்கு உழைப்பவர்களையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும்.

ஒன்றிய அரசுப் பணிகளில் சதித்தனமாக வட மாநிலத்தவரை திணிப்பது நமது உரிமையைப் பறிப்பதாகும். வாழ்க்கை வாழ்வதற்காக வருவது என்பது நாம் ஒன்றிணைவதற்கான வர்க்கம் அவர்கள் என்பதாகும். நமது பிரச்சினையும், அவர்களது பிரச்சினையும் ஒன்று என்பதாகும்.

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு நாம் செல்வதற்கான காரணங்களுக்கு எந்த அளவுக்கு நியாயம் உள்ளதோ, அதே நியாயம் அன்றாட வாழ்க்கைக்காக இங்கு பிழைப்பு தேடிவரும் வட மாநிலத் தொழிலாளிக்கும் பொருந்தும்தானே. இதை நாம் சிந்திக்க வேண்டும்.

வடக்கு, வட கிழக்கு மாநிலங்களில் இருந்துதான் பெருமளவிலான தொழிலாளர்கள் இங்கு வருகிறார்கள் என்பது நமக்குத் தெரியும். அம்மாநிலங்களில் 75 ஆண்டுகளில் கல்வி, மருத்துவம், உற்பத்தி ஆகிய அடிப்படையான பிரச்சினைகள் கூட மிகவும் பாதிக்கப்பட்டுகிடக்கின்றன. இன்னொரு பக்கம் பார்ப்பன, பனியா, சிந்தி, மார்வாடி முதலாளிகளின் கேள்விக்கிடமற்ற சுரண்டலுக்கான எல்லா வாய்ப்புகளும்(கனிமவள-இயற்கைவள கொள்ளை, தனியார்மயக் கொள்கை) ஆட்சியாளர்களால் ஏற்படுத்தித் தரப்படுகின்றன.

தங்களது அரசியல், பொருளாதார உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத நிலைமையில்தான் வடமாநில உழைக்கும் மக்கள் வைக்கப்பட்டிருக்கின்றனர். தாங்கள் யாரால் சுரண்டப்படுகிறோம் என்பதை உணராமல் இருப்பதற்காகத்தான் பார்ப்பன மதவெறி நஞ்சை ஊட்டிக் கொண்டே இருக்கின்றனர்.

சாதிய ஒடுக்குமுறையும், மதவெறியும், பிற்போக்குத்தனமும் கோலோச்சுகின்ற நிலையானது ஆட்சியாளர்களுக்கும், சுரண்டும் வர்க்கங்களுக்கும் இனிக்கத்தானே செய்யும்?

வறுமையின் பிடி தாளாமல் பிழைப்பு தேடிவரும் உழைக்கும் வர்க்கமாகிய அந்தத் வட மாநிலத் தொழிலாளர்கள் நமது உழைக்கும் வர்க்கத்தினர் என்பதை நாம் உணர வேண்டும். பெரும்பாலான வட மாநிலத் தொழிலாளர்கள் அங்கே இருந்து இங்கு வந்து சொர்க்க வாழ்க்கை வாழவில்லை. கடும் சுரண்டலிலும், உரிமைகளற்ற நிலையிலும்தான் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டிலும் இருப்புவேலை (வெல்டிங்), ஃபவுண்டரி, ரசாயண வேலை(கெமிக்கல்), பனியன், சாலைப்பணி, கட்டுமானம், உணவகம் போன்ற ஆபத்தான, பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற வேலை நிலைமைகளில் பெரும்பாலும் வட மாநிலத் தொழிலாளர்களே வேலை செய்கின்றனர். இந்த இடங்களில் எவ்வளவு சுரண்டினாலும், ஒடுக்கினாலும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. இப்படிப்பட்ட நிலைமைகளில் வாழும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுதானே மனிதாபிமானமுள்ள, ஜனநாயகமுள்ள (வர்க்கக்கோபம்) ஒருவரின் கடமையாக இருக்க முடியும்?

வடக்கன்ஸ் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ரிசர்வ் பெட்டியில் ஏறுகிறான் என கோபி-சுதாகர் என்பவர்கள் பரிதாபங்கள் வீடியோ பதிவுகளை போடுகின்றனர். இதை கிரிமினல் குற்றமாக சித்தரிக்கும் இவர்களை போன்றோர் மக்கள் வரிப்பணத்தில் கட்டியெழுப்பட்ட இரயில்வே துறையை தனியார்மயம், வளர்ச்சி என கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு தாரைவார்ப்பது குறித்து சிந்திப்பது கூட கிடையாது.

சொந்த மாநிலத்தில் வாழ முடியாமல் பசியோடு, நாடோடியாக, உள்நாட்டு அகதிகளாக 13 கோடி பேர் அலைவது குறித்தும் இதற்கு பின்னணியில் உள்ள ஐ.ஏ.எஸ் (IAS) போன்ற அதிகார வர்க்கத்தையும் நாட்டை விற்கும் நாடாளுமன்றத்தையும் அரசியல் கட்சிகளையும் தனியார்மயக் கொள்கையையும் இரட்டையாட்சி அரசமைப்பையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மூலம் வேலைவாய்ப்புள்ளது என்றும் அதில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 80 சதவீதம் வேலை தர வேண்டும் என்றும் பட்டியலிடுபவர்கள். அவை எத்தகைய வேலைவாய்ப்புகள் என்பதை பட்டியலிடத் தயாரா? பல லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் கூலியற்ற உழைப்பு(அப்ரண்டீஸ்), ஒப்பந்தமுறை(காண்ட்ராக்ட்), நீம் (NEEM), தற்காலிகம் என சட்டவிரோத சுரண்டப்படுகின்றனர்.

படிக்க : கிருஷ்ணகிரி மாவட்டம் KATERRA  நிறுவனம் – தொழிலாளிகள் மீதான  கொடூரச் சுரண்டல் – தொழிலாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்!

முதலாளித்துவ நிறுவனங்களின் இந்த கிரிமினல் நடவடிக்கையை கேள்வி கேட்காமல் புலம்பெயரும் தொழிலாளர்களை காட்டி வேலைவாய்ப்புகளை பறிப்பதாக கூச்சலிட்டு கார்ப்பரேட் கொள்ளையர்களை திட்டமிட்டு மறைக்கவும் மடைமாற்றி தமிழினவெறியை பற்றவைக்கவும் சீமான் போன்ற இனவெறியர்கள் போலிச் சமர் புரிய ஆளும்வர்க்கத்தால் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டின் இளந்தொழிலாளர்களே! சிந்தியுங்கள்! இனவெறி அரசியலுக்கு பலியாகி விடாதீர்கள்! அவ்வகையான அரசியல் மறைமுகமாக கார்ப்பரேட்டுகளை காப்பாற்றுவதற்கானது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!

நமது(தமிழ்நாட்டு தொழிலாளர்கள்) பிரச்சினையும், அவர்களது(வட மாநிலத்தொழிலாளர்கள்) பிரச்சினையும் வேறுவேறல்ல. கார்ப்பரேட் முதலாளிகளின் கொடூரமான சுரண்டலுக்கான தனியார்மயக் கொள்கைகளும், அதை தீவிரமாக அமல்படுத்தும் காவி-கார்ப்பரேட் பாசிசமும்தான் உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரி.

பொது எதிரிக்கெதிரான போராட்டத்தில் இனம், மதம், மொழி கடந்து ஒன்றிணைவது மட்டும்தான் நமக்கு முன் இருக்கும் ஒரே வழியாகும்!


தோழர். பரசுராமன்,
மாவட்ட செயலாளர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்,
தொடர்புக்கு : 97880 11784.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க