இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மீண்டும் கிளர்ந்தெழுவோம்!

உண்மையில் 1965 ஆம் ஆண்டு போராட்டத்தை போல் மாணவர்களும் மக்களும் அமைப்பாக திரண்டு போராடுவதன் மூலம்தான் நமது உரிமைகள் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

1947 அதிகார மாற்றத்திற்கு பிறகு வந்த எல்லா இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களும் இந்தியை திணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க.வினரின் இந்தியை திணிக்கும் முயற்சி “இந்து-இந்தி-இந்து ராஷ்டிரியம்” என்னும் பெரும் நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். 80 ஆண்டுகளாக தமிழ்நாடு இந்தி திணிப்பை சந்தித்து வந்திருக்கிறது. அதை போர்க்குணத்தோடு எதிர்த்து போராட்டியிருக்கிறது. ஆனால் இன்றைய அரசியல் சூழலில் இந்தி திணிப்பு என்பது என்ன பரிணாமத்தில் இருக்கிறது. அதை தமிழ்நாடு எப்படி எதிர்கொள்கிறது என்பதை நாம் பரிசீலனை செய்யவேண்டிய தேவையிருக்கிறது.

1965 ஜனவரி 26 ஆம் தேதி இந்த குடியரசின் 15 ஆண்டுகள் நிறைவு செய்யும் அதே தினத்தில் அரசியல் அமைப்புச் சட்டப்படி அலுவல் மொழியாக ஆங்கிலத்தின் காலம் முடிவடைதாகவும் அதற்கு பதிலாக இந்தியை கொண்டுவர வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது.

ஆனால் தமிழ்நாடு (அன்றைய மெட்ராஸ் மாகாணம்) போன்ற பெரிய அளவிலான தீவிரமான கிளர்ச்சிகள் மூலமாக இந்திய அரசாங்கத்தின் மொழிக் கொள்கை மீது ஆழ்ந்த அதிருப்தியை வேறு எந்த மாநிலமும் வெளிப்படுத்தவில்லை. அன்றைய மாணவர்களின் போராட்டத்தை கண்டு ஒன்றிய அரசு தொடை நடுங்கியது.

படிக்க : ஜனவரி 25: இந்தி திணிப்புக்கெதிரான மொழிப்போர் தியாகிகளது தீரத்தையும், தியாகத்தையும் நெஞ்சிலேந்துவோம்!

இந்தியை திணிக்கும் மொழிக் கொள்கையை எதிர்த்து குடியரசு தினத்தை “துக்க தினமாக” கடைபிடிக்கப்போவதாக தி.மு.க அறிவித்தது. ஆனால் அரசு அதற்கு தடை விதித்தது.

இதையடுத்து, ஜனவரி 24, 1965 அன்று, குடியரசு தினத்தன்று நடந்தப்பட இருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அரசு விதித்துள்ள தடையை மீறப்போவதாக தி.மு.க அறிவித்தது. இதனால், ஜனவரி 26 அதிகாலையில், சி.என்.அண்ணாதுரை மற்றும் சுமார் நூற்றைம்பது தி.மு.க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் விளைவாக, கட்சி திட்டமிட்டிருந்த கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறவில்லை.

ஆனால் போராட்டத்தின் உண்மையான நாயகர்களான மாணவர்களின் பங்கு இப்போது இன்னும் தீவிரமாக இருந்தது. மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் தொடங்கியது. மதுரையில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது, போலீசார் தடியடி நடத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் சிலர் காயமடைந்தனர்.

சென்னை கடற்கரையில் இந்தி புத்தகங்களை எரித்து மாணவர்கள் தங்களை எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் ஆங்கிலத்தின் நிலையைப் பாதுகாக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து பெரிய அளவிலான மாணவர்கள் தலைமைச் செயலகத்திற்கு பேரணியாகச் சென்றனர்.

மேலும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அட்டூழியம் செய்தனர். ஜனவரி 27 அன்று, அதிகாலையில், சென்னையிலுள்ள பல கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி மாணவர் தலைவர்களைக் கைது செய்தனர். மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். இது மாணவர்களின் மத்தியில் நிலைமையை கொதிப்படையச் செய்தது.

இந்த காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையால் போராட்டத்தை நசுக்கிவிட்டதாக நினைத்து பிப்ரவரி 8 ஆம் தேதி கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு ஏற்பாடு செய்தது. ஆனால், பெரும்பாலான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இனியும் இது மாணவர்களாலும் தீவிர தி.மு.க ஆதரவாளர்களாலும் நடத்தப்படும் போராட்டமாக மட்டும் அல்ல; இது மக்கள் மத்தியில் பிரபலமான இயக்கமாக மாறியது.

கோயம்புத்தூரில் முழு அடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ரயில்கள் நிறுத்தப்பட்டன. பிப்ரவரி 10 அன்று போலீஸ் ஏழு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது, அதில் இருபத்தி நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருபத்தைந்து பேர் காயமடைந்தனர். பிப்ரவரி 11 ஆம் தேதி, மீண்டும் பல இடங்களில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்தி திணிப்பு இருக்காது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். மத்திய நிதியமைச்சரும், தமிழருமான டி.டி.கிருஷ்ணமாச்சாரி, தன்னைப் போன்ற தமிழக அமைச்சர்கள், C.சுப்பிரமணியம் (உணவுத் துறை அமைச்சர்) தென்னகத்தின் நலன்களைக் கவனித்துக்கொள்வதால்,  இந்தப் போராட்டம் தேவையற்றது என்றார். ஆனால் அவர் சொன்னதற்கு முரண்பாடாக, டில்லியில் சுப்பிரமணியம் மற்றும் சென்னையைச் சேர்ந்த அழகேசன் ஆகிய அமைச்சர்கள் ஆட்சியாளர்களின் மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமரிடம் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.

பிப்ரவரி I2 அன்று சென்னை மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பதினொரு இடங்களில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். நிலைமை இப்போது வெளிப்படையாகக் கட்டுப்பாட்டை மீறியதால், மற்ற மாநிலங்களில் இருந்து போலீசுத்துறை மற்றும் துருப்புக்கள் அதிக அளவில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். பிப்ரவரி I3 அன்று பதினைந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், இந்த போராட்டத்தின் போது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக மொத்தம் 66 பேர் என சொல்லப்பட்டது. ஆனால் போலீஸார் கொல்லப்பட்டும், இந்த போராட்டத்திற்காக தீக்குளித்தும், விஷம் குடித்தும் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டவர்களையும் சேர்த்து 200 பேர் இறந்திருப்பார்கள்.

இந்த போராட்டம் தி.மு.க.வால் தூண்டப்பட்டது என்று சென்னை மாகாண அரசு நினைத்தது தவறு என்பதை மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நிரூபித்தது. மாணவர்களின்‌ போராட்டம் பொது மக்களையும் போராட்டத்திற்கும் இழுத்து வந்தது.

ஜனவரியில் திருச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடு மற்றும் தி.மு.க.வினரால் அறிவிக்கப்பட்ட “குடியரசு தினத்தை துக்க நாளாக கடைபிடிப்பது” ஆகிய போராட்டத்திற்கான ஆயத்த எதிரொலியை மாணவர்களிடையே எழுப்பியது. ஆனால் ஜனவரி 27 அன்றுதான் போராட்டத்தை வழிநடத்த ஒரு மாணவர் அமைப்பாக  “தமிழ்நாடு மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டக்குழு” (Tamilnad Students’ Anti-Hindi Agitation Council) அமைக்கப்பட்டது. அப்போது திமுகவின் முக்கிய தலைவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்தனர்.

இந்த மாணவர்கள் அமைப்பு மெட்ராஸ் நகரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், மாநிலத்தின் பெரும்பாலான கல்லூரிகளுடன் மிக விரைவாக தொடர்புகளை ஏற்படுத்தியது. பெரும்பாலான கல்லூரிகளில் நடவடிக்கைகளை எடுத்துச் செல்வதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த அமைப்புக் குழுக்களில் கணிசமான மாணவர் தலைவர்கள் தி.மு.க.வுடன் எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை, மேலும் தி.மு.க.வால் இந்த மாணவர்கள் அமைப்பில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்பதே உண்மை.

தி.மு.க.வின் உயர்மட்டத் தலைவர்கள் கேட்டுக் கொண்டபோதும் மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்ப மறுத்தனர். போராட்டத்தைக் கைவிடவும் மறுத்தனர் என்பதிலிருந்து தி.மு.க தலைமை இந்த மாணவர்களின் போராட்டத்தை வழி நடத்தவில்லை என்பது நிரூபணமாகிறது.

இந்தப் போராட்டத்திற்கான ஆரம்ப கால உத்வேகம் தி.மு.க தரப்பில் இருந்து வந்தது என்பதில் சந்தேகமில்லை. இதன் மூலமாக ஏற்கனவே மக்கள் மத்தியில் இருக்கும் மொழி சார்ந்த உணர்ச்சிகளைக் கைப்பற்றிக்கொள்வதற்கும், காங்கிரஸ் எதிர்ப்பு சக்திகளின் பரந்த கூட்டணியை உருவாக்குவதற்கும் தி.மு.க முயற்சித்தது. ஆனால் போராட்டம் விரைவில் தி.மு.க.வின் கட்டுப்பாட்டை மீறிச்சென்றது. இறுதியில் மாணவர்களின் தன்னெழுச்சியான போர்ட்டங்களைக் கண்டு தி.மு.க தலைவர்கள் திகைத்து நின்றனர் என்பதே உண்மை.

மாணவர்களின் போராட்டங்கள் “காங்கிரஸ் எதிர்ப்பு பெரும் பணக்காரர்களால் நிதியுதவி செய்யப்பட்டது” என்ற பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டது. மாணவர்களின் இந்த போராட்ட அமைப்பிற்குப் பின்னால் கணிசமான அளவு நிதி இல்லை. அதனால் ஒவ்வொரு போராட்ட யூனிட்டும் அதற்குத் தேவையான நிதியைத் தாங்களாகவே திரட்டிக்கொள்ள வேண்டிருந்திருந்தது.

தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் நோக்கம் நாடாளுமன்றத்திலும் இந்திய அரசாங்கத்திலும் செல்வாக்கு செலுத்துவதாக இருந்த இந்தி ஆதரவாளர்களையும் அவர்களின் இதுநாள் வரை அனுபவித்து வந்த சலுகைகளையும் பறிக்கும் வகையில் அமைந்தது.

படிக்க : வேலையில்லாத் திண்டாட்டம் – யார் காரணம்: வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?

இப்படி மத்திய மாநில அரசுகளையும் பணிய வைக்கும் வகையில் போர்க்குணமாக மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்த மொழிப்போரில் தங்களது தியாகங்களால் உரிமைகளை பெற்றத் தந்தது மட்டுமல்ல மாணவர்கள் அமைப்பாக போராடுவதன் அவசியத்தையும் எதிர்கால தலைமுறையினருக்கு கற்றுத் தந்தனர்.

ஆனால், இன்று தமிழ்நாட்டின் நிலை என்ன? மத்தியில் பா.ஜ.க பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. மாநிலங்களான ஒவ்வொரு உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது. அதை எதிர்க்க வக்கற்று நிற்கின்றனர் தி.மு.க ஆட்சியாளர்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியைப் பயிற்றுவிப்பதற்கான ஊடகமாக பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யும் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்கும் முயற்சி என்று சம்பிர்தாயமாக எதிர்ப்பு தெரிவித்தது தி.மு.க. அதற்கு மேல் ஒன்றுமில்லை. இவர்களின் பாசாங்கான எதிர்ப்புகளால் பா.ஜ.க தனது நோக்கத்தை கைவிடப்போவதில்லை. உண்மையில் 1965 ஆம் ஆண்டு போராட்டத்தை போல் மாணவர்களும் மக்களும் அமைப்பாக திரண்டு போராடுவதன் மூலம்தான் நமது உரிமைகள் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

ராஜன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க