“ஒரேநாடு”! ஒன்றுகலக்காத “தமிழ்நாடு”!

ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு கொடுக்கும் அடி என்பது, ‘நம்மை எதிர்க்கும் வலிமையுள்ள சக்திகள் எதுவும் அரசியல் அரங்கில் இல்லை’, ‘எவ்வித தங்குதடையும் இல்லாமல் இந்துராஷ்டிரத்தை நோக்கி முன்னேறிவிடலாம்’ என்று கருதிக் கொண்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

டம்தெரியாமல் மோதிக்கொண்டிருந்த’ ஆளுநர் ரவிக்கு, “தமிழ்நாடு” என்றால் என்னவென்று இந்நேரம் புரிந்திருக்கும்; புரியவைத்திருக்கிறது தமிழ்நாடு. ஆனாலும், 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு, இந்த ஆண்டு பொங்கலை போராட்டப் பொங்கலாக, அரசியல் புத்துணர்ச்சியோடு தொடங்கிவைத்த பெருமை அவரையேச் சாறும் என்பதால், நாம் அவருக்கு நன்றிசொல்லித்தான் ஆகவேண்டும்.

கிண்டி ராஜ்பவனில், கடந்த மாதம் 5ஆம் தேதி, தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் உறவாடிக் கெடுக்கும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தன்னார்வலர்களுக்கு, பாராட்டு நிகழ்ச்சி நடத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அந்நிகழ்ச்சியில், “தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு” என்று தனது ‘ஆதங்கத்தை’ வெளிப்படுத்தினார். மேலும், “தமிழ்நாடு என்று சொல்வதைவிட, தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்; பாரதத்தின் ஒருபகுதியே தமிழகம்” என்று பேசியதை அனைவரும் அறிவோம்.

“திருக்குறள் ஆன்மிகத்தைப் போதிக்கிறது”, “திராவிடம் என்பது இனமல்ல, இடப்பெயர்”, “சனாதனம் தமிழகத்தில் தோன்றி, பாரதம் முழுக்க பரவியது” – என தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சீண்டும்வகையில் பேசிவந்ததன் உச்சம்தான் “தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வேண்டும்” என்ற திமிரான பேச்சு!

இனியும் சகித்துக் கொள்ளமுடியாது என்ற நிலைக்கு தமிழ்நாட்டு அரசியல் சக்திகளைத் தூண்டிவிட்ட ரவி, அதற்கே உரிய எதிர்வினையையும் சந்தித்தார்.


படிக்க: சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | காணொலி


“தமிழ்நாடு-தமிழன்-தமிழ் என்பவை ஆளுநர் ரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன; எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்” என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆளுநரை விமர்சித்திருந்தார். கி.வீரமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆளுநரின் பேச்சுக்கு பதிலடியாக, “தமிழ்நாடு” என்ற ஹாஷ்டாக், டிவிட்டரில் பிரபலமாகியது.

ஜனவரி 9-ஆம் தேதி, ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு ஆளுநர் உரை வழங்குவதற்காக வந்திருந்த ஆர்.என்.ரவியைக் கண்டித்து, வி.சி.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, சி.பி.ஐ., சி.பி.எம்., காங்கிரஸ் ஆகிய தி.மு.க. கூட்டணிக் கட்சிகள், “வாழ்க தமிழ்நாடு”, “எங்கள் நாடு தமிழ்நாடு”, “ஆளுநர் உரையைப் புறக்கணிப்போம்” என்று முழக்கமிட்டனர். பின்னர், ஆளுநர் உரையைப் புறக்கணித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பா.ம.க.வினரும் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்.என்.ரவியின் அடாவடி!

தாம் பேசியது சட்டமன்றத்திலேயே எதிர்ப்புக்கு உள்ளாகியிருந்தபோதும், திமிர் பிடித்த ஆர்.என்.ரவி, மேலும் அகம்பாவமாக நடந்துகொண்டார். தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்காமல், சில விசயங்களை வெட்டியும் ஒட்டியும் வாசித்தார். குறிப்பாக “தமிழ்நாடு அரசு” என்ற சொல்லைப் புறக்கணித்து, அச்சொல்லுக்கு பதிலாக “இந்த அரசு” என்று குறிப்பிட்டு பேசினார்.

“சமூகநீதி”, “சுயமரியாதை”, “சமத்துவம்”, “பகுத்தறிவு”, “திராவிட மாடல்” உள்ளிட்ட சொற்களையும், “தந்தை பெரியார்”, “அண்ணல் அம்பேத்கர்”, “பெருந்தலைவர் காமராசர்”, “பேரறிஞர் அண்ணா”, “முத்தமிழறிஞர் கலைஞர்” ஆகிய தலைவர்களது பெயர்களையும் வாசிக்காமல் புறக்கணித்தார்.

ஆளுநர் உரை முடிந்ததும் எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தம்மால் இசைவளிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரையையே ஆளுநர் முறையாகவும், முழுமையாகவும் படிக்காததால், உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். தன்னுடைய திமிருக்கு அனைத்து வகைகளிலும் பதிலடி கிடைத்துக் கொண்டே இருந்ததால், பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்.என்.ரவி தேசியகீதம் பாடப்படும் முன்பே வெளியே ஓடினார்.

தி.மு.க.விற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமானால், ஆர்.என்.ரவி வேறுவகைகளில்கூட செய்திருக்கலாம். ஆளுநர் உரை நிகழ்த்தாமல், சட்டமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்துக் கூட இருக்கலாம். ஆனால், தீர்மானிக்கப்பட்ட உரையை ஏற்றுக் கொண்டு, வாசிக்கும்போது மாற்றி வாசிப்பது – திருத்தி வாசிப்பது போன்றவை எல்லாம் தி.மு.க. என்ற தனிப்பட்ட கட்சிக்கு எதிரான நடவடிக்கை அல்ல; தமிழ்நாடு அரசுக்கு உரிய இறையாண்மையையே கேள்விக்கு உள்ளாக்குவதாகும்.


படிக்க: திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை : பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?


அடுத்து, ஜனவரி 10-ஆம் தேதி, ஆளுநர் மாளிகை சார்பில் வெளியான பொங்கல் விழா அழைப்பிதழிலும், “தமிழ்நாடு ஆளுநர்” என்ற சொல்லுக்குப் பதிலாக “தமிழக ஆளுநர்” என்ற சொல் இடம்பெற்றிருந்தது; தமிழ்நாட்டு அரசின் இலச்சினைக்குப் பதிலாக, ஒன்றிய அரசின் இலச்சினையும், திருவள்ளுவர் ஆண்டுக்குப் பதிலாக, ஆங்கில தேதியும் இடம்பெற்றிருந்தது.

தி.மு.க. அரசையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் சீண்டிப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டு, தொடர்ச்சியாக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சவாலுக்கு அழைத்தார் ரவி.

பாசிசத் திமிருக்கு செருப்படி!

பா.ஜ.க, அடிமை அ.தி.மு.க.வைத் தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தமிழ்நாட்டு மாணவர்கள், மக்களிடமிருந்தும் எதிர்ப்புக் குரல் ஓங்கியது.

சட்டமன்ற முதல் கூட்டம் நடந்து முடிந்த அன்றே வி.சி.க. மற்றும் சி.பி.எம். ஆகிய கட்சிகள் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தன.

ஜனவரி 12-ஆம் தேதி சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து மரபுகளை மீறாமல் பணியாற்ற ஆளுநருக்கு அறிவுறுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை வழங்கினர்.

சென்னையில் பல இடங்களில் ஆளுநரைக் கண்டித்து தி.மு.க-வினரால் #GetOutRavi (கெட் அவுட் ரவி) என்ற ஹாஷ்டாக் போடப்பட்ட நீளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும், ஆளுநரை பதவி விலகக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியும், “தமிழ்நாடு வாழ்க” என மக்கள் நீதி மய்யமும் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டியது. பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க. மற்றும் அதன் மாணவர் அணி சார்பாக கருப்புக்கொடி ஏந்தியும் ஆளுநர் ரவியின் புகைப்படத்தை எரித்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

திருப்பூர் மற்றும் புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பியும் ஆளுநர் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பொள்ளாச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆளுநரின் உருவபொம்மையை எரித்தனர். இவையன்றி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆளுநருக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.


படிக்க: ஜே.என்.யூ மாணவர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்கள்


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார்பு நீதிமன்றம் எதிரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் உருவப்படத்தை மிதித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநருக்கு எதிராக கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் குதித்தனர். சென்னை மாநிலக்கல்லூரி, புதுக்கல்லூரி, திருத்தணி கலைக் கல்லூரி, எடப்பாடி அரசு கலை அறிவியல் கல்லூரி, சேலம் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆளுநருக்கு எதிராக “எங்கள் நாடு தமிழ்நாடு”, “ஆளுநரே வெளியேறு”, “தமிழ்நாடு வாழ்க” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பட்டாபிராமில், இந்து கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயிலின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, ஆளுநரின் உருவப்படத்தைக் கிழித்து எரிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

“சட்டப்பேரவையில் மாண்பையும், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் காக்கின்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள அறவழியிலானப் போராட்டத்தை மேற்கொண்ட காரணத்தால், இந்தப் பொங்கல் விழா நமக்குக் கூடுதல் இனிப்பு நிறைந்த சர்க்கரைப் பொங்கலாக அமைந்துள்ளது” என சட்டமன்ற நிகழ்வை மறைமுகமாக மேற்கோள் காட்டி, தமது பொங்கல் வாழ்த்து அறிக்கையை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழ்நாடு வாழ்க” எனக் கோலமிட்டு தமிழர் திருநாளைக் கொண்டாடுமாறு, மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதனை வரவேற்று, “தமிழ்நாடு”, “தமிழ்நாடு வாழ்க”, “எங்கள் நாடு தமிழ்நாடு”, “GetOutRavi” போன்ற முழக்கங்கள், பொங்கல் அன்று பலரது வீட்டு வாசல்களையும் அலங்கரித்தன. மேலும், இரண்டு நாட்களுக்கு மேலாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #தமிழ்நாடு #GetOutRavi உள்ளிட்ட முழக்கங்களே ஆதிக்கம் செலுத்தின.

தமிழ்நாடு என்றால், காவிகளுக்கு எரிவது ஏன்?

இதற்கு முன்பு தமிழ்நாடு, தமிழகம் என இரண்டு பெயர்களையும் பொதுவாகப் பயன்படுத்திவந்த பலரும், தற்போது தன்னுணர்வோடு “தமிழ்நாடு” என்று முழங்குகின்றனர். ஏனெனில், “தமிழ்நாடு” என்பதற்கும், “தமிழகம்” என்பதற்கும் இடையிலான வேறுபாடு வெறும் சொல் அல்ல.

“நாடு” என்பதுதான் பிரச்சினை என்றால், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற பெயர்களில் உள்ள “ராஷ்டிரா”, “பிரதேசம்” என்பதும் தனிநாட்டைக் குறிப்பது போன்ற பெயர்கள்தானே, “தமிழ்நாடு” என்ற பெயர் மட்டும் அவர்களுக்கு ஏன் பிரச்சினையாக உள்ளது என்று பலர் கேள்வி எழுப்பினர்; “ஒரே நாடு”, “ஒரே தேசம்” என்ற பெயரில் பல்தேசிய இனங்களின் தன்னுரிமையை நசுக்கி, இந்துராஷ்டிரத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு இன்றுவரை சிம்மசொப்பனமாக திகழ்வது “தமிழ்நாடு” மட்டுமே என்பதுதான் அதற்கான காரணம்.

அப்படியிருக்க, “தமிழ்நாடு” என்ற பெயர் கூட தன்னை தனிநாடு போல அடையாளப்படுத்திக் கொள்வதும், அதன்மூலம் ஒரே பாரதக் கொள்கையைக் கேள்விக்கு உள்ளாக்குவதையும் காவிக் கும்பலால் செரிக்க முடியவில்லை. அந்த வயிற்றெரிச்சலின் வெளிப்பாடுதான் ஆர்.என்.ரவியின் பேச்சு.

ரவி மட்டுமல்ல, “தினமல(ர்)ம்”, “துக்ளக்” உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் ஆதரவு பத்திரிகைகள் அனைத்திலும் “தமிழ்நாடு” என்ற பெயருக்கு பதிலாக, “தமிழகம்” என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் உள்ளக் குமுறலை பகிரங்கமாகப் பேசியதன் மூலம் வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொண்டார் ரவி.

பாசிச உளவாளியை விரட்டியடிப்போம்!

“ஊழல்”, “இந்துவிரோதம்”, “சட்ட ஒழுங்கு சீர்குலைவு” என தி.மு.க.விற்கு எதிரான பிரச்சாரங்களில் ஏறியடித்துப்பேசும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், புலி வாயில் விரலைவிட்ட கதையாக, தமிழ் மக்களின் உணர்வை சீண்டிப் பார்த்த ரவிக்கு, முட்டு கொடுக்க முடியாமல் தவித்தது. இறுதியில் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டிடம் மண்டியிட்ட கூத்தும் அரங்கேறியது.

“காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்கவே தமிழகம் என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதே மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வது தவறானது” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

ரவி அந்த பொருளில் சொல்லவில்லையாம், நாம் தவறாக புரிந்துகொள்கிறோமாம். அவ்வாறெனில், பொங்கல் நிகழ்ச்சி அழைப்பிதழில் தமிழ்நாடு பெயரும் தமிழ்நாடு அரசின் இலட்சினையும் ஏன் இல்லை என்று கேட்டால் பதில் இருக்கப் போவதில்லை. மண்டியிடுவது என்று முடிவுசெய்தபின், அதையும் ‘கவுரமாக’ச் செய்ய வேண்டுமாம்!

அதோடு விட்டாரா ரவி, இப்போதெல்லாம் எங்கே சென்றாலும், ‘ஒரு பாதுகாப்புக்கு’ தமிழ்நாடு என்று உச்சரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டார். அண்மையில் புதிதாக பயிற்சியில் இணைந்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் பேசிய ஆர்.என்.ரவி, தொடர்பே இல்லாமல் அந்த இடத்தில், “தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழ் மொழியையும் மிகவும் நேசிக்கிறார்கள்” என்று பேசியுள்ளார். இன்னொரு கூட்டத்தில், உரையை முடிக்கும்போது, “வாழ்க தமிழ்நாடு”, “வாழ்க பாரதம்” என்று முழங்கியுள்ளார்.


படிக்க: சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | துண்டறிக்கை!


‘நாகாலாந்தில் போராளிக் குழுக்களை ஒடுக்கி, அமைதியை நிலைநாட்டிய தீரர்’ என்று சித்தரிக்கப்பட்ட ரவியை “மூச்ச்..” என்று அடக்கிப் பணிய வைத்திருக்கிறது தமிழ்நாடு. ரவி ஆளுநராக பதவியேற்ற காலந்தொட்டு, அவரது தமிழ்நாட்டு அரசு விரோதப் போக்கை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், அதற்கெல்லாம் ரவி தன்னிலை விளக்கம் கொடுத்ததில்லை. பாசிசத் திமிரோடுதான் நடந்துவந்திருக்கிறார். அப்படிப்பட்ட ரவியை மண்டியிடச் செய்திருப்பதென்பது முக்கியமான விசயமாகும்.

ஆனால், இதுவொரு தொடக்கம்தான். தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அதன்மீது அமர்ந்திருக்கிறார் ஆர்.என்.ரவி. ஏழுதமிழர் விடுதலை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மசோதா மீது கடைசிவரை முடிவெடுக்காமல் வஞ்சகமாகச் செயல்பட்டார்; நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதற்காக நடந்த போராட்டங்கள்தான் எத்தனை; ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் இன்றுவரை இழுத்தடிப்பதால், உயர்ந்துகொண்டே இருக்கிறது பிணங்களின் எண்ணிக்கை.

எனவே, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஏவியுள்ள இந்த உளவாளியை விரட்டியடிக்காமல், Get-out-Ravi என்ற முழக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்காமல், நமது வெற்றி முழுமையடையாது!

ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு கொடுக்கும் அடி என்பது, ‘நம்மை எதிர்க்கும் வலிமையுள்ள சக்திகள் எதுவும் அரசியல் அரங்கில் இல்லை’, ‘எவ்வித தங்குதடையும் இல்லாமல் இந்துராஷ்டிரத்தை நோக்கி முன்னேறிவிடலாம்’ என்று கருதிக் கொண்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பாசிசப் படையெடுப்பின் உளவாளிகளான ஆர்.என்.ரவிகள், கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்கம், டெல்லி என எதிர்க்கட்சிகள் ஆளும் மற்ற மாநிலங்களிலும் உள்ளார்கள்; அங்கெல்லாம் ஆளுநர் என்ற பெயரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக குடைச்சல் கொடுத்துவருகிறார்கள். தமிழ்நாடு அடிக்கும் அடி, மற்ற மாநில மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்; பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு ஊக்கமளிக்கும். எனவே, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை எதிர்த்து தமிழ்நாட்டில் களமாடும் அனைத்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கும் உளவாளி ரவியை விரட்டியடிப்பதுதான் உடனடிக் கடமையாக இருக்க வேண்டும்!

பானு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க