திரிபுரா தேர்தல்: பாசிசத்தின் புதிய மாடல்!

குஜராத் ‘வளர்ச்சி’யின் மாடலாக முன்னிறுத்தப்பட்டதை போல, எதிர்க்கட்சிகளை துடைத்தெறிவதில் திரிபுரா பாசிஸ்டுகளுக்கு மற்றுமொரு மாடலாகும்.

திரிபுரா தேர்தலுக்குப் பிந்தைய கலவரங்கள் நம்மிடம் கூறுவது என்ன?

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பா.ஜ.க குண்டர்படை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மார்ச் 2 ஆம் தேதியில் இருந்தே வன்முறை வெறியாட்டங்களை தொடங்கிவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை நிகழ்த்திவருகிறது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் தோழர்களை குறிவைத்து தாக்குகிறது.

இத்தாக்குதல்களால் தெற்கு திரிபுரா, தலாய், செபாஹிஜாலா, மேற்கு திரிபுரா, கோவாய் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்று பேர் இறந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமான வாகனங்கள், கடைகள், வணிக வளாகங்கள், வீடுகள், ரப்பர் தோட்டங்கள் போன்றவை தீக்கரையாக்கப்பட்டுள்ளன – சேதப்படுத்தப்பட்டுள்ளன.

படிக்க : தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி கலவரம் செய்ய முயலும் பாசிச பாஜகவை தடை செய்வோம்! | மக்கள் அதிகாரம்

எதிர்க்கட்சி ஆதரவாளர்களைத் தாண்டி அப்பாவி பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும், காடுகளிலும் மாநிலத்திற்கு வெளியேயும் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

இத்தாக்குதலை பா.ஜ.க குண்டர்படை அரசு நிர்வாகத்துடன் இணைந்து நடத்தியுள்ளது. ஒருபுறம், போலீசு கலவரங்களில் ஈடுபட்ட பா.ஜ.க குண்டர்களை தடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையைக் கூட பதிவு செய்ய மறுத்துள்ளது. கைது செய்யப்பட்ட 268 பேரையும் சிறிது நேரம் கழித்து விடுவித்துள்ளது. மறுபுறம், கலவரம் குறித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேச வந்த இடது முன்னணி தலைவர்களை சந்திக்க மறுத்துள்ளார் ஆளுநர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, சில தினங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் 668 தாக்குதல்களின் விவரங்கள் -இடது முன்னணி தலைவர்களால்- தலைமைச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசானது இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. “திரிபுராவில் எங்கள் தோழர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன; ஆனால் அரசாங்கமும் நிர்வாகமும் தூங்குகின்றன” என்று கூறியுள்ளது.

2018 சட்டமன்ற தேர்தலை விட, பா.ஜ.க கும்பலானது குறைவான இடங்களில் வெற்றி பெற்றிருப்பதுதான், வன்முறைக்கு காரணம் என மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது. பா.ஜ.க கூட்டணியானது 11 இடங்களை இழந்துள்ளது. துணை முதல்வர் தோற்றுள்ளார். இதன் மூலம் மார்க்சிஸ்ட் கட்சி, தற்போதைய வன்முறைகள் தேர்தல் ஆதாயத்துக்காக நடத்தப்படுகின்றன என்று சுருக்கிப் பார்க்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது நடத்தப்பட்ட வன்முறைகளுக்கும் இதே காரணத்தைத்தான் கூறியது. இது அடிப்படையிலே தவறானதாகும்.

பா.ஜ.க கும்பலானது தங்கள் அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும், வெவ்வேறு விதமான வழிமுறைகளைக் கையாளுகிறது. குஜராத்தில் கையாளப்பட்ட வழிமுறைகள் தமிழகத்தில் கையாளப்படுவதில்லை. பாசிசக் கும்பலின் மதவெறி பிரச்சாரங்கள் தமிழகத்தில் எடுபடுவதில்லை. எனவேதான் பாசிசக் கும்பல் ஆதிக்க சாதி வெறியர்களுடன் கைகோர்த்து கலவரங்களை திட்டமிட்டு தூண்டுகிறது. அதேபோல, திரிபுரா மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட வழிமுறையைக் கையாளுகிறது. அது, திட்டமிடப்பட்ட கலவரங்களின் மூலம் மக்கள் மத்தியில் தங்கள் அடித்தளத்தை விரிவுபடுத்துவது.

படிக்க : நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!

2018 சட்டமன்றத் தேர்தலிருந்து தற்போதைய சட்டமன்றத் தேர்தல் வரை, கலவரங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கலவரங்களின் மூலம் எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே பாசிசக் கும்பல்களின் நோக்கமாகும். ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே வரி போல ஒரே கட்சி என்பதும் அவர்களுடைய கொள்கை. எதிர்க்கட்சி தலைவர்களை குதிரை பேரத்தின் மூலம் விலைக்கு வாங்குவது, சி.பி.ஜ, அமலாக்கத்துறை மூலம் மிரட்டிப் பணிய வைப்பது, ஊழல் குற்றச்சாட்டுகளை பெரியதாகக்காட்டி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவது போன்ற வழிமுறைகளைப்போல, கலவரங்களின் மூலம் தாக்குதல் நடத்தி துடைத்தொழிப்பதும் பாசிசக் கும்பலுக்கு ஒரு வழிமுறைதான்.

திரிபுராவில் கலவரங்களின் மூலம் எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டுவதில் பாசிசக் கும்பல் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதிக்கும்போது, அதை நாடு முழுவதும் வாய்ப்பு உள்ள இடங்களில் அமல்படுத்தும். குஜராத் ‘வளர்ச்சி’யின் மாடலாக முன்னிறுத்தப்பட்டதை போல, எதிர்க்கட்சிகளை துடைத்தெறிவதில் திரிபுரா பாசிஸ்டுகளுக்கு மற்றுமொரு மாடலாகும்.

ஆயிஷா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க