இலங்கை அரசின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட (ATA) வரைவு: ஐ.எம்.எப்-ன் (IMF) வேட்டைக்காக இலங்கை மக்கள் மீதான கொடும் தாக்குதல்

இச்சட்டமசோதா நிறைவேற்றப்பட்டால், மக்கள் ஜனநாயக ரீதியாக பேசவோ, கருத்து தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படும். சங்கம் அமைக்க முடியாது. ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்ற முடியாது. துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதும், சுவரொட்டி ஒட்டுவதையும்கூட பயங்கரவாத நடவடிக்கையாக முத்திரை குத்த முடியும்.

மார்ச் 21 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மசோதா (ATA – Anti-Terrorism Act) கொண்டு வரப்பட்டிருக்கிறது. இலங்கையில் ஏற்கனவே 1979 ஆம் ஆண்டில்  பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PTA – Prevention of Terrorism Act) ஒன்று கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் துணைகொண்டு குறிப்பாக தேசிய இன உரிமைகளுக்காக போராடிய தமிழ் இளைஞர்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டனர்.

இதன் பின்னர் 2019 ல் புதிதாக ஒரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (CTA) கொண்டு வர எடுக்கப்பட்ட இலங்கை அரசின் முயற்சி மக்கள் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் இலங்கை அரசு கொண்டு வரவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) என்பது இலங்கையின் இரண்டேகால் கோடி மக்களையும் பயங்கரவாதிகளாக சித்தரித்து வடிவமைக்கப்பட்டுள்ள சட்ட வரைவாகும். பயங்கரவாதம் என்றால் என்ன என்பது பற்றிய வரைவிலக்கணங்களைக் கூட வரையறுக்காமல் இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தை எதிர்த்துப் பேசுகின்ற, விமர்சிக்கின்ற, தவறுகளை ஜனநாயகரீதியாக முன்வைக்கின்ற அனைவரையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்ற காட்டுமிராண்டித்தனமான சட்டமாக இது கொண்டு வரப்பட இருக்கிறது.

படிக்க: மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி

இலங்கை அரசு கொண்டுவரவுள்ள சட்டத்தின் மூலம் சாதாரண சப் இன்ஸ்பெக்டர் ஒரு இலங்கை குடிமகனின் ஆடையைக் கழற்றி பரிசோதனை செய்யும் அதிகாரம் வழங்கப்படுகிறது. கைவிரல் ரேகையைப் பெற வேண்டுமானால் நீதிமன்றத்தில் சென்று அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை மாற்றி சாதாரண போலீசுக்கு அந்த வாய்ப்பை இச்சட்டம் வழங்குகிறது. இச்சட்டம் போலீசு அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அதிகாரத்தை வழங்குகிறது.

இலங்கையினுடைய அதிபர் நினைத்தால் எந்த ஒரு அரசியல் கட்சியையும், இயக்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் பயங்கரவாத அமைப்பு என அறிவித்து தடை செய்யக் கூடிய வாய்ப்பை இச்சட்டம் வழங்குகிறது. இம்முடிவை பரிசீலிக்க முறையிட வேண்டுமென்றாலும் இலங்கை அதிபரிடம்தான் முறையிட வேண்டும்.

இச்சட்டமசோதா நிறைவேற்றப்பட்டால், மக்கள் ஜனநாயக ரீதியாக பேசவோ, கருத்து தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படும். சங்கம் அமைக்க முடியாது. ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்ற முடியாது. துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதும், சுவரொட்டி ஒட்டுவதையும்கூட பயங்கரவாத நடவடிக்கையாக முத்திரை குத்த முடியும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையே  (PTA) அகற்ற வேண்டும் என்று அரசியல் இயக்கங்களும், மக்களும், சர்வதேச இயக்கங்களும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் இப்புதிய சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது.

படிக்க: புரட்சிகர கட்சிக்காக ஏங்கும் இலங்கை மக்கள் போராட்டம் !

இப்புதிய சட்டத்தைக் கொண்டு வர தேவை என்ன? இலங்கையின் பொருளாதாரம் திவாலான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்க அடியாளான ஐஎம்எப் (IMF) எனப்படும் உலக நாணய நிதியத்தின் கட்டுப்பாட்டில் இலங்கை அரசு கொண்டு வரப்பட்டுள்ளது. அரசின் அனைத்துத் துறைகளையும் தனியார்மயப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ஐஎம்எப் இலங்கை அரசுக்கு விதித்திருக்கிறது.

இந்த நிபந்தனைகள் இலங்கை அரசால் வலுக்கட்டாயமாக நிறைவேற்றுகின்ற போக்கில் மக்கள் பன்மடங்காக கிளர்ந்தெழுவார்கள். அப்படி கிளர்ந்தெழுகின்ற மக்களை கொடூரமாக ஒடுக்குவதற்கே உத்தசே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) என்ற பெயரில் ஒரு சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வர இருக்கிறது.  இலங்கையில் உள்ள அனைத்து புரட்சிகர ஜனநாயக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், உழைக்கும் மக்கள் அனைவரும் இச்சட்டத்தை முறியடிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

மோடி அரசை விமர்சிக்கின்ற அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள், தொழிற்சங்கவாதிகள், தனிநபர்கள்  என அனைவரும் இந்தியாவில் ஊபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் வாயிலாக வரைமுறையின்றி ஒடுக்கப்படுவதை நாம் அறிவோம். ஏற்கனவே ஊபா சட்டத்தை (Unlawful Activities Prevention Act) மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் எதிர்க்கும் நிலையில், ஊபா சட்டம் குறித்து சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற காரணத்திற்காகவே ஒருவரை கைது செய்ய முடியும் என்று கூறுகிறது. ஏகாதிபத்திய கார்ப்பரேட் கும்பல், அதானி – அம்பானி கும்பல் ஆகியோரின் நலனுக்காக நாட்டின் வளங்களையும், அரசுத்துறைகளையும் தனியார்மயப்படுத்தி மக்கள் வாழ்வை சூறையாடும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் சூழலில் பாசிசமயமாகிவரும் அரசுகளிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

இந்தியாவில் உள்ள புரட்சிகர ஜனநாயக இயக்கங்கள், அறிவுஜீவிகள், உழைக்கும் மக்கள் அரசியல் கட்சிகள் என அனைவரும் இலங்கை அரசைக் கண்டனம் செய்ய வேண்டும். உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (ATA) திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும். போராடும் இலங்கை மக்களுக்கு துணை நிற்க வேண்டும்.

நாடு முழுவதும் இலங்கை மக்களின் கடும் எதிர்ப்பாலும் எதிர்க்கட்சிகளும் வழக்கறிஞர்களும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாலும் இச்சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை தற்காலிகமாக தாமதப்படுத்தியுள்ளது இலங்கை அரசு.

அய்யனார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க