ஆட்சியை பிடிக்க கலவரம் செய்வோம்: காவிக் கும்பல்களின் பார்முலா!

கலவரங்களை அரங்கேற்றும் காவி பாசிச கும்பலே  கலவரங்களை தடுக்கும் காவலனாக பேசிவருவது அயோக்கியத்தனமானது. இதன்மூலம் பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள்.

ந்து மதவெறி காவிகும்பல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இந்தியா முழுவதும் திட்டமிட்டு மதக்கலவரங்களை உருவாக்கி வருகிறது. மதக்கலவரங்களை இயல்பாக்கி உழைக்கும் மக்களை சாதி-மத ரீதியாக பிளவுபடுத்துகிறது காவிக் கும்பல்.

1992 பாபர் மசூதி இடிப்பு 2014-ஆம் ஆண்டில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்க வித்திட்டது. 2002 குஜராத் இனப்படுகொலையின் மூலம் அம்மாநிலத்தில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டது. அந்த குஜராத் கலவர மாடலை மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த தொடங்கிவிட்டது.

அந்த வகையில், விநாயகர் சதுர்த்தி கலவரங்களை போல சமீப காலமாக ராம நவமியன்று கலவரங்களை நிகழ்த்துகிறார்கள். கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரவிருந்த ராம நவமி பண்டிகையை எதிர்நோக்கி இருந்த காவிக் குண்டர்கள் பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கர்நாடகா, குஜராத்  போன்ற மாநிலங்களில் திட்டமிட்டு மதக் கலவரங்களை நிகழ்த்தினர்.

பீகாரில் நடைபெற்ற ராம நவமி பேரணியின்போது மதக்கலவரங்களை உருவாக்கும் திட்டத்தில் இருந்த காவிக் குண்டர்கள் இஸ்லாமியர்களுடன் திட்டமிட்டே மோதல்களை உருவாக்கினர். குறிப்பாக, சசாராம் பகுதியில் காவிக் குண்டர்கள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதோடு இஸ்லாமியர்களின் வாகனங்களுக்குத் தீவைத்து பெரும் கலவரமாக மாற்றினர். அதையடுத்து மாநிலத்தின் சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்தபோதே சசாராம் பகுதில் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது இந்து மதவெறி காவிக் கும்பல். இதில், ஆறு பேர் காயமடைந்தனர். வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக இஸ்லாமியர்கள் உட்பட 160-க்கும் மேற்பட்டோரை பீகார் போலீசுத்துறை கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறது.

இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றுக்காக பீகார் வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா பீகார் மாநிலத்தில் இம்மாதிரியான கலவர சம்பவங்கள் நடைபெறமால் இருக்க அமைதியை நிலைநாட்ட பாரதிய ஜனதா கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என மேடையில் பேசினார்.


படிக்க: ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !


அதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சம்போஜி நகரிலும் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்திய காவிக் கும்பல் அங்குள்ள மசூதிகளில் நேரடியாக தாக்குதல் தொடுத்தது. மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்திற்கும் தீ வைத்ததுடன் இஸ்லாமியர்களை விரட்டி விரட்டி தாக்குலில் ஈடுபட தொடங்கியது. இப்படி அங்கேயும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ’இந்து’ மக்களை அணிதிரட்டி மதக் கலவரத்தை முன்நின்று நடத்தியுள்ளனர் காவிக் குண்டர்கள்.

அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனங்களையும் தீ வைத்து எரித்துள்ளது இக்கும்பல். பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நொறுக்கப்பட்டு கலவரம் அடுத்த நிலைக்கு சென்றதன் அடிப்படையில் கூடுதல் போலீஸ்படை இறக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இப்படி மாநில அரசுகளையே ஆட்டம் காண விட்டுக்கொண்டிருக்கிறது காவிக் கும்பல்.

மேற்குவங்கத்திலும் ராமநவமியை முன்னிட்டு ஹவுரா மாநகரில் மிகப்பெரிய அளவிலான ராம நவமி ஊர்வலம் நடைபெற்றது. பேரணியாக சென்ற காவிக் கும்பல் காசிபரா என்ற இடத்தின் அருகில் நெருங்கியதும் சிறுபான்மையினருக்கு எதிராக மதக் கலவரங்களை தூண்டும் வகையில் முழக்கமிட ஆரம்பித்தது.

மேலும் மசூதி அமைந்துள்ள பகுதிகளில் நின்றுகொண்டு தொடர்ந்து இஸ்லாமிய கடவுளுக்கெதிராக முழக்கமிட்டதுடன் அங்கு நின்ற இஸ்லாமியர்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட தொடங்கியது. அதோடு அங்கிருந்த கடைகளையும் சூறையாடியது. இதையடுத்து மோதலில் ஈடுபட்டதாக கூறி இஸ்லாமியர் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டனர். இப்பிரச்சினை முடிந்து இயல்புநிலைக்கு திரும்பி கொண்டிருந்த மறுநாளே ஷிப்பூர் பகுதியில் மீண்டும் மதக்கலவரங்களில் ஈடுபட்டு மோதல்களில் இறங்கினர் காவிக் குண்டர்கள். இப்படி தொடர்ந்து அம்மாநிலத்தில் சட்டஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி ஆளும் அரசிற்கு கடும் நெருக்கடியை கொடுத்தனர்.

நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ”ஊர்வலங்கள் நடத்தும்போது பாஜக – ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இதுபோன்ற மதக் கலவரங்களை ஏற்படுத்துவதற்காகவே வெளியில் இருந்து குண்டர்படைகள் அழைத்து வரப்பட்டு கைகளில் பயங்கிர ஆயுதங்களுடன் தடைகளை மீறி ஊர்வலம் நடத்துகின்றனர்.

குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கங்கள் போடுவது, ஜே.சி.பி வாகனங்களை எடுத்து சென்று இஸ்லாமிய பகுதிகளின் மசூதி, கடைகளை இடிப்பது போன்று ஓட்டிச்செல்வது என வேண்டுமென்றே தொடர் கலவரங்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்று கூறினார். ஆனால், சி.பி.எம், காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வை எதிக்காமல், மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த மம்தா பானர்ஜி தவறிவிட்டார் என்று பா.ஜ.க-வோடு இணைந்து பேசி வருகிறார்கள்.


படிக்க: ராஜஸ்தான் : ரம்சான் அன்று கலவரத்தை நடத்திய காவி பாசிஸ்டுகள் !


தொடர்ச்சியாக  இஸ்லாமியர்களுக்கும் இந்து மக்களுக்குமிடையே கலவரங்கள் மோதல்களை மாநிலம் முழுவதும் திட்டமிட்டு உருவாக்குகின்றன. அந்த அளவிற்கு நேரடியாக களத்தில் இறங்கி ஆளும் கட்சிகளின் தடைகளை மீறி தீவிரமாக செயல்பட்டு தங்களுடைய திட்டத்தின்படி மதக்கலவரங்களை நிறைவேற்றுகிறார்கள்.

இப்படி ஒரே நாளில் இந்தியா முழுவதும் திட்டமிட்டு பல்வேறு சாதி, மதக்கலவரங்களை நடத்திவரும் காவி பாசிச கும்பல், மாநிலங்கள் அமைதியாக கலவரமின்றி பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் பா.ஜ.க ஆட்சிக்கு வர வேண்டும் என்கின்றனர்.

தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ளவும் ஆட்சியில் அமர்வதற்காக காவி பாசிச கும்பல் செய்த மதக் கலவரங்கள் எண்ணிலடங்காதவை. கலவரங்களை அரங்கேற்றும் இவர்களே கலவரங்களை தடுக்கும் காவலனாக பேசிவருவது அயோக்கியத்தனமானது. இதன்மூலம் பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள்.

டேவிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க