பாசிசம் தனது நடவடிக்கைகளை, சங் பரிவார அமைப்புகளையும், அரசு எந்திரத்தை ஒருங்கிணைத்து கொண்டு தனது அரசியல் – சித்தாந்த கொள்கைக்களை நிலைநாட்டுகின்றது.
மத்தியப்பிரதேசம், குஜராத், டெல்லி, ராஜாஸ்தான், ஜார்க்கண்ட், கர்நாடகா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பீகார், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், இந்து புத்தாண்டு தினம், ராம நவமி, அனுமன் ஜெயந்தி இந்து பண்டிகை நாளை ஒட்டி, முஸ்லீம்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதியில், மதவெறி ஊர்வலங்களை நடத்தி, திட்டமிட்ட வன்முறை கலவரவங்களை நிகழ்த்தியுள்ளனர் காவி பாசிஸ்டுகள்.
***
ஏப்ரல் 2-ம் தேதி, இந்து புத்தாண்டு பண்டிகையை ஒட்டி, ராஜஸ்தானின், கரௌலி நகரில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தி, முஸ்லீம்கள் கல் வீசினார்கள் என்றுகூறி, அப்பகுதியில் உள்ள கடைகள், வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
படிக்க :
♦ ஜிக்னேஷ் மேவானி கைது ! பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போருக்கு ஒரு எச்சரிக்கை !
♦ டெல்லி ஜஹாங்கீர்புரி : முஸ்லீம் மக்களின் வீடுகள் காவி அரசால் இடிப்பு | கேலிச்சித்திரங்கள்
ஏப்ரல் 10-ம் தேதி ராம நவமி நாளன்று நடத்திய ஷோபா யாத்திரையின்போது பல்வேறு மாநிலங்களில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை தேர்வு செய்து, மசூதிகளின் முன் ஊர்வலங்கள் நடத்த திட்டமிட்டார்கள் உள்ளூர் சங் பரிவார அமைப்புகள். அதற்குமுன் முஸ்லீம்கள் மீதான வெறுப்பு கோஷங்களை பரப்புவது, பெருந்திரளான மக்களை அழைப்பு விடுக்கும் வகையில் அப்பகுதி முழுக்க ஒலிபெருக்கி மூலம் பிராச்சாரம் செய்து என முஸ்லீம் ஏதிர்ப்பு உணர்வை விதைத்தார்கள். முஸ்லீம் எதிர்ப்பு பாடல்களை பாடினார்கள். பிறகு, ஆயிரக்கணக்கான காவி குண்டர்கள், கைகளில் தடியுடனும், வாள்கள், கோடாரிகள், கைத்துப் பாக்கிகளை ஏந்திகொண்டு, மசூதிகள் உள்ள பகுதியை நோக்கி ஊர்வலம் சென்றார்கள். மசூதியை நெருங்கி செல்லும்போது, மசூதிகளின் மீது காவிக் கொடிகளை ஏற்றி முஸ்லீம்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். பிறகு முஸ்லீம்கள் கல் எறிந்தார்கள் என கூறி அப்பகுதி முழுக்க உள்ள கடைகள், வீடுகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார்கள் காவி பாசிஸ்டுகள்.
மத்தியப்பிரதேசம், கார்கோன் பகுதியில், ராம நவமி ஊர்வலத்தின் போதான வன்முறை தாக்குதலில் 20 வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன. மேற்குவங்கத்தில் பல்வேறு நகரங்களில் முஸ்லீம்கள் மீதும், அவர்களது கடைகள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜார்க்கண்டில் நடந்த வன்முறையில் 12 பேர் காயமுற்றனர் ஒருவர் உயிரிழந்தார். பிகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மசூதியின்மீது காவிக்கொடி ஏற்றி, இந்து மதவெறி குண்டர்களால் ஏராளமான கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. குஜராத்தின், ஹிம்மந்த்பூர், காம்பாத் நகரத்தில் பதிமூன்றுக்கும் மேற்பட்ட மசூதிகள், முஸ்லீம்களின் உடைமைகள், கடைகள், வாகனங்களை தீயிட்டு கொளுத்தினார்கள்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் அசைவ உணவு உண்ண கூடாது என்று கூறி அங்குள்ள சமையலர்கள், ஊழியர்கள் மாணவர்கள் மீதும் கம்புகள், ஆயுதம் கொண்டு தாக்கினார்கள். இப்பயங்கரவாத செயலை முன்னின்று நடத்தியது ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.
இவ்வன்முறைச் செயல்கள் பல்வேறு மாநிலங்களில் சங் பரிவார அமைப்புகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட, ஒத்த தன்மையிலான நடவடிக்கையாகவே உள்ளது. முஸ்லீம்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலாகவே நடந்தேறியுள்ளது.
அதிகார வர்க்கத்தின் புல்டோசர் கரசேவை:
உத்தரப்பிரதேசம் தேர்தல் வெற்றிக்கு பிறகு யோகி ஆதியத்தியநாத், தனக்கெதிரான போரட்டக்காரர்களை ஒடுக்க “ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை” என்று கூறி புல்டோசர் கலாச்சரத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ராம நவமி ஊர்வலத்தில் கலவரக்காரர்கள் மீது விசாரனை குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அடுத்த இடிப்பு சம்பங்களை தொடங்கி வைத்தார். அவரின் அறிவிப்பிற்கு பிறகு, உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, “கற்கள் வீசப்பட்டவர்களின் வீடுகளை கற்குவியல்களாக மாற்றுவோம்” என்றும் கலவரக்காரர்களை அப்புறப்படுத்துவோம் என்று கூறினார்.
டெல்லியில் இடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களின் கடைகள்
அதன் பிறகு, அப்பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசை குவித்து இந்துமதவெறியர்கள் கைநீட்டிய இடமெல்லாம் வீடுகளை இடிக்க உத்தரவிட்டது கார்கோன் மாவட்ட நிர்வாகம். புல்டோசர் இயந்திரங்களை கொண்டு 50-க்கும் மேற்பட்ட வீடுகளை இதுவரை இடித்துள்ளனர். இந்நடவடிக்கை குறித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர் அனுக்கிரகா சாலையோரங்களில் உள்ள வீடுகள் கடைகள் “ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை” என கூறி பதிலளித்தார். மேலும் இடிக்கப்பட்ட சிலவீடுகள் பிரதம மந்திரி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டவை என்பது குறிப்பித்தக்கவை.
குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்ட நிர்வாக ஆட்சியர் மனோஜ் தக்ஷினி, சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றுபடுவதாக கூறி, ராம நவமி ஊர்வலம் நடத்த பகுதிகளில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும், இருப்பிடங்கள், கடைகள் குறிவைத்து இடிக்கப்பட்டன. பாஜக செய்தி தொடர்பாளர் ரூத்விஜ் பட்டேல் இது சட்டபூர்வமான நடவடிக்கைதான் என்று இடிப்பு சம்பங்களை நியாப்படுத்தி பேசினார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றினோம் என்று அதிகாரிகள் விளக்கமளிக்கிறார்கள். கலவரக்காரர்களை அப்புறப்படுத்தினோம் என்று அமைச்சர் சொல்கிறார் இரண்டும் உண்மை அல்ல. இருவரும் இணைந்து மூஸ்லீம்கள் மீதும், அவர்களின் குடியிருப்புகள் மீதும் கரசேவையை நடத்தியுள்ளார்கள் என்பதுதான் உண்மை.
அரசியல் சாசனம் சட்டம், மனுவாதிகளுக்கு அல்ல :
ஏப்ரல் 16 அன்று, வடமேற்கு டெல்லி மாநாகராட்சியில் உள்ள ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் சங்பரிவார அமைப்புகளால் நடத்தப்பட்டது. பிறகு முஸ்லீம்கள் மீதான தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்நடவடிக்கைக்கு பிறகு ஏப்ரல் 20 அன்று பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா, வன்முறையில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகள், ஆக்கிரமிப்பாளார்கள் என்று கூறி புல்டோசர் கொண்டு இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாநாகராட்சி அதிகாரிகளிடம் கடிதம் கொடுக்கிறார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் டெல்லி மாநாகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை என்ற பெயரில், ஆயிரக்கணக்கான போலீசை குவித்து, மசூதியை சுற்றியுள்ள முஸ்லீம்களின் வீடுகளையும், கடைகளையும் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கினார்கள். 20-க்கும் மேற்பட்ட வீடுகளையும் கடைகளையும் இடித்து தள்ளினார்கள்.
வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, இந்நடவடிக்கையை உடனே நிறுத்த உச்சநீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை வாங்கினார். உச்சநீதிமன்றம் தடை விதித்த பின்பும் தடை ஆணை இன்னும் வந்து சேரவில்லை எனக்கூறி இடிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. அரசால், ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறியவர்கள் நீண்ட காலமாக அப்பகுதியில் வசித்து வருபவர்கள். அவர்கள் முறையான ஆவணங்களை காட்டிய பிறகும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பா.ஜ.க எழுதிய சட்டத்தைத்தான் அன்று அதிகாரிகள் அமுல்படுத்தினார்கள். மதவெறியர்களால் திட்டமிட்டு நடத்தபடுகின்ற கலவரங்கள், எப்போதும் அரசியல் சாசன சட்டத்தால், அதன் உத்தரவுகளால் தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கு இந்நிகழ்வு கூடுதல் ஆதாராமாக உள்ளது.
போலீசு சட்டப்பூர்வ பாசிச குண்டர் படை:
இந்து மதவெறியர்கள், வாள், கோடாரி ஆயுதங்களை வைத்து கொண்டு ஊர்வலம் நடத்தினார்கள். ஊருக்கு ஊர் மேடை போட்டு முஸ்லீம்களை கொலைசெய்யவேண்டும் என அறைகூவல் விடுத்தார்கள். இவை அனைத்தையும் போலீசுத்துறை அனுமதித்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. இந்து மதவெறியர்களின்மீது பெயரளவிலான வழக்குகளை போட்டு எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் பாதுகாத்து வருகிறது.
மாறாக, முஸ்லீம்கள் கல் எறிந்தார்கள் எனக்கூறி இதுவரை மத்தியப் பிரதேசத்தில் 168 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரண்டுபேர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். டெல்லி, ஜஹாங்கீர்புரியில் முதல் தகவல் அறிக்கையில் பலபேர் முஸ்லீம்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதுவரை 14 பேரை விசாரணை என்ற பெயரில் கைது செய்துள்ளனர்.
ஜிக்னேஷ் மேவானி
உத்தரகாண்ட் மாநிலத்தில், வன்முறையில் ஈடுப்பட்ட, இந்து மதவெறியர்கள்மீது எவ்வித வழக்கும் பதிவும் செய்யாமல் முஸ்லீம்கள் 40 பேர் மீது வழக்கு பதிவுசெய்து 11 பேரை கைது செய்துள்ளது அம்மாநில போலீசு. மேலும் நான்கு புல்டோசர் இயந்திரங்களை அப்பகுயில் கொண்டு நிறுத்தி, கல் எறிந்தவர்கள் சரணாடையாவிட்டால் வீடுகளை இடித்து தகர்ப்போம் என்று கூறி மிரட்டியுள்ளது.
இந்நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து கூறிய, குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது அசாம் போலீசு. முஸ்லீம்கள் மீதான ஒடுக்குமுறை சட்டவிரோத குண்டர்களாலும், சட்டப்பூர்வ குண்டர்களாலும் இணைந்தே நடத்தப்பட்ட நிகழ்வுகளாகும்.
ராம நவமி முதல் அனுமன் ஜெயந்தி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், மோடி அரசாங்கமும், அதிகார வர்க்கமும் முஸ்லீம்கள் மீது இணைந்து நடத்திய பகிரங்கமான பயங்கரவாத செயல்களாவே பார்க்க வேண்டியுள்ளது.
பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது :
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஆட்சி பொறுப்பெடுத்து கொண்ட 2014 ஆண்டிலிருந்தே, தனது சங் பரிவார துணை அமைப்புகளை கொண்டு தனது அரசியல் சித்தாந்தக் கொள்களை தீவிரமாக அரங்கேற்ற முயற்சித்து வருகின்றன. தற்போது தனது பாசிச ஆதரவு தளத்தை விரிவுபடுத்த முயற்சித்து வருகின்றது. சமீபத்தில் நடந்த பாசிச நடவடிக்கைகளே இதற்கு சான்றாகும்.
கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய தடை, பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடைச்சட்டம், ஹாலால் ஜிகாத், ஒலிபெருக்கி வைக்க தடை, லவ் ஜிகாத், பெண்களைப் பாதுகாக்க ரோமியோ படை, சைனிக் ராணுவ பள்ளி, முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு, கிறிஸ்துவர்களின் மீதான தாக்குதல், முஸ்லீம்கள் கோவில்களுக்குமுன் வியாபரம் செய்ய தடை, தற்போது புல்டோசர் காலாச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளனர். தங்களது தொடர்ச்சியான நடவடிக்கை மூலம் அடுத்த சில ஆண்டுகளில் அமையவிருக்கும், இந்துராஷ்டிர கொடுங்கோன்மை அரசு எப்படி அமையும் என்பதையும் நம் கண்முன்னால் நிகழ்த்தி காட்டுகிறார்கள்.
படிக்க :
♦ மோடியை விமர்சித்து ட்விட் செய்த ஜிக்னேஷ் மேவானி கைது !
♦ டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு : இந்துராஷ்டிரத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது !
எதிர் தாக்குதலுக்கு தாயாரிப்பு செய்வோம்:
இந்நிகழ்வு முஸ்லீம்கள் மீதான வன்முறை மட்டும் அல்ல, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தனது சித்தாந்தாத்தை மக்கள் மத்தியில் அமல்படுத்தி கொண்டு இருக்கிறது. இதற்கு குறுக்கே யார் வந்தாலும், கைது நடவடிக்கைகளும், புல்டோசரும் பாயும் என்று இந்துவவாதிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
பாசிஸ்டுகளின் நடவடிக்கையை முறியடிக்க வேண்டுமானல், சொல்லளவில் மட்டும் இல்லாமல், பாசிசத்தின் ஒவ்வொரு மக்கள் விரோத நடவடிக்கைகளையும் பரந்துபட்ட மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.
தொழிலாளர்கள் – விவாசாயிகள் – மாணவர்கள் மற்றும் பிற ஜனநாயக சக்திகளை பாசிச எதிர்ப்பு அடிப்படையில் ஒருங்கிணைத்து, பாசிச தாக்குதல்களுக்கு எதிராக, எதிர்தாக்குதல் தொடுக்க வேண்டியது அவசியமான கடமையாகும்.

தங்கபாலு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க