சர்வதேசச் சட்டங்கள் அனுமதி : பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுரண்டலுக்கான திறவுகோல்!

நமது நாட்டின் இயற்கை வளங்களையும், நமது தொழிலாளர்களின் உழைப்பையும் எவ்வித நெறிமுறையுமின்றி உறிஞ்ச பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நமது நாட்டை திறந்துவிடுவதுதான் பார் கவுன்சில் கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளின் நோக்கமாகும்.

வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் பதிவுசெய்துகொண்டு, ‘பரஸ்பர அடிப்படையில்’ சட்ட பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், “வெளிநாட்டு வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறைக்கான விதிகள் 2022”-ன் கீழ், புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது இந்திய பார் கவுன்சில். இவ்விதிகளின் மூலம் சர்வதேசச் சட்டங்கள் மற்றும் சர்வதேச நீதிமன்ற அமர்வுகளின் தீர்ப்புகளை இந்தியாவில் தொழில் துறை சார்ந்த வழக்குகளில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெருநிறுவனங்கள் தொடர்பான விஷயங்களிலும்; கையகப்படுத்துதல், அறிவுசார் சொத்து விவகாரங்கள், ஒப்பந்த வரைவு மற்றும் பரிவர்த்தனை சம்பந்தமான விவகாரங்களிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் சட்டப் பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று இவ்விதிகள் கூறுகிறது.

பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டே வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்படும் என்று பார் கவுன்சில் கூறுகிறது. சான்றாக, இந்திய வழக்கறிஞர்களின் தொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் நேரடியாக வழக்குகளில் ஆஜராக முடியாது என்றும், இந்திய வழக்கறிஞர்களுக்கு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்திய சட்டத்துறையில் வெளிநாட்டு வழக்கறிஞர்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான விவாதம் 2007ஆம் ஆண்டு முதலே எழுப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்குகளில், 2009ஆம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்றமும், 2012ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றமும், இந்தியாவில் சட்டப்படிப்பு முடித்த வழக்கறிஞர்கள் மட்டுமே இந்திய நீதிமன்றங்களில் வழக்காட முடியும் என்று தீர்ப்பளித்தது. 2018ஆம் ஆண்டில், மும்பை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. எனவே தற்போது பார் கவுன்சிலால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகள் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக பார்க்கப்படுகிறது.


படிக்க: ஏகாதிபத்திய சுரண்டலுக்கு துணைபுரியும் இந்திய பார் கவுன்சில்!


“இச்சீர்திருத்தம் மூலம் நாடு வளர்ச்சி அடையும்” என்றும், “சர்வதேசச் சட்டங்களைக் கொண்டு ஆலோசனைகள் வழங்கும்போது நமது வழக்கறிஞர்களின் திறன் மேம்படும்” என்றும் கூறுகிறது பார் கவுன்சில். மேலும், “நாட்டில் அந்நிய நேரடி முதலீட்டின் பாய்ச்சலில் உள்ள சிக்கல்களையும், இந்தியாவை சர்வதேச வர்த்தக நடுவர் மையமாக மாற்றுவதில் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் தீர்க்க இவ்விதிகள் உதவும்” என்கிறது. இவற்றை செயல்படுத்தாவிட்டால், “சட்ட தொழில்முறை நிபுணத்துவத்தை வழங்குவதில் இந்தியாவின் சட்ட சகோதரத்துவம் பின் தங்கிவிடும்” என்கிறது.

ஒவ்வொரு நாட்டின் சட்டங்களும், குறிப்பாக தொழில்துறை சட்டங்கள் அந்நாட்டின் தனிச் சிறப்பான சூழல், சமூக நிலைமை, சூழலியல் அமைப்புக்கு ஏற்ப வகுக்கப்பட்டிருக்கும். அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, எல்லா நாடுகளிலும் பொதுவான சர்வதேச வர்த்தகச் சட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதற்கு சேவைசெய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த விதிகளைத்தான் “அந்நிய முதலீட்டின் பாய்ச்சலில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்” என்கிறது பார் கவுன்சில்.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியாவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப் போடுவது குறித்து நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையில், இந்திய சட்டத் துறையில் சர்வதேசச் சட்டங்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது இங்கிலாந்து. பார் கவுன்சில் தனது புதிய விதிகளை அறிவித்ததும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் (Wales) நாடுகளின் சட்டச் சங்கங்கள் வரவேற்றன. இப்போது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு இங்கிலாந்து இணங்கி வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.

90-களில் கொண்டுவரப்பட்ட தனியார்மய – தாராளமய – உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளின் ஒருபகுதியாக நாடுகளுக்கிடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) போடப்படுகிறது. பின் தங்கிய மூன்றாம் உலக நாடுகளுடன் ஏகாதிபத்திய நாடுகள் போட்டுக் கொள்ளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், அந்நாட்டை கொள்ளையடுவதற்கான பல்வேறு வடிவங்களுள் ஒன்றாகும்.

நமது நாட்டின் இயற்கை வளங்களையும், நமது தொழிலாளர்களின் உழைப்பையும் எவ்வித நெறிமுறையுமின்றி உறிஞ்ச பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நமது நாட்டை திறந்துவிடுவதுதான் பார் கவுன்சில் கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளின் நோக்கமாகும்.


படிக்க: நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!


ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்தது முதல் இன்றுவரை தொழில்துறை, தொழிலாளர்நலச் சட்டங்கள், சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை உள்ளிட்ட பல்வேறு சட்டத்திருத்தங்களை வரைமுறையின்றி கார்ப்பரேட் நலனுக்காக கொண்டுவந்துள்ளது மோடி அரசு.

மறுகாலனியாக்க கொள்கைகளான தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் 90களில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நம் நாட்டின் சட்டங்களே, கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு ஏற்றவகையில் தளர்த்தப்பட்டு வந்துள்ளது. என்றாலும், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகையான சட்டங்களும் கட்டுப்பாடுகளும் இருப்பதை பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்கள் தொல்லையாகக் கருதுகின்றன. அந்த ‘சிக்கலை’ தீர்ப்பதற்குத்தான், இந்த ‘சீர்த்திருத்தம்’.

போபாலில் மிகப்பெரிய இனப்படுகொலை செய்த யூனியன் கார்பைட் ஆலை, ஸ்டெர்லைட் ஆலை போன்ற நச்சு ஆலைகளுக்கு, சர்வதேச சட்டவிதிகளை மேற்கோள் காட்டி எவ்வித இடையூறும் இன்றி அனுமதி வாங்குவதற்கும் சூறையாடலை நடத்துவதற்கும்தான் இந்த புதிய விதிகள் பயன்படும்.

வெளிநாட்டு வழக்கறிஞர்களால் மேற்கொள்ளப்படும் சட்ட பயிற்சிகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இருந்தால், இந்தியாவில் உள்ள சட்ட சகோதரத்துவத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிற பார் கவுன்சில், நாட்டு வளங்களும் உழைக்கும் மக்களும் சுரண்டப்பட மாட்டார்கள் என்ற எவ்வித உத்தரவாதமும் கொடுக்கவில்லை; கொடுக்கவும் முடியாது.

மொத்தத்தில், பார் கவுன்சிலின் இந்த புதிய விதிகள் தேசத்துரோகமனாதாகும். தேசப் பற்றுள்ள, உழைக்கும் மக்களின் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு வழக்கறிஞரும், வழக்கறிஞர் அமைப்புகளும் பார் கவுன்சிலின் இந்த புதிய விதிமுறைகளை எதிர்க்க வேண்டும்.

வெண்பா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க