மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளித்தால் தொழிற்சங்க உரிமம் பறிக்கப்படும்!

NFPE மற்றும் AIPEU தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை பரித்திருக்கும் மோடி அரசின் இந்நடவடிக்கையானது, உரிமைக்காக போராடும் இயக்கங்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்ற அச்சத்தை தொழிற்சங்களுக்கு உருவாக்கும் நடவடிக்கை.

டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக நிதியுதவி செய்தது, கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்து புத்தகங்கள் வாங்கியது என அற்ப காரணங்களை முன் வைத்து, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் (AIPEU) மற்றும் தபால் ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு (NFPE) ஆகிய இரண்டு பெரிய அஞ்சல் சங்கங்களின் அங்கீகாரத்தை பறித்திருக்கிறது மோடி அரசு.

1920-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நிறுவப்பட்ட AIPEU சங்கமானது இந்தியாவின் மிகப்பழமையான தொழிற்சங்கங்களில் ஒன்றாகும்.NFPE என்பது அஞ்சல் துறை சங்கங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும்.மேலும் தபால் ஊழியர்களின் 75% பெரும்பான்மை வாக்குகளை பெற்று இயங்கும் இச்சங்கத்தில் AIPEU உட்பட 8 அஞ்சல் ஊழியர் சங்கங்கள் இணைந்து செயல்படுகின்றன.

இந்நிலையில், NFPE மற்றும் AIPEU ஆகிய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு நிதியளிப்பதாகவும், CPI(M) மற்றும் CITU சங்கங்களுக்கு நிதியளிப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் தபால் ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு போன்ற சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் அஞ்சல் துறையின் உதவி இயக்குநர் நஹர் சிங் மீனா.


படிக்க: தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம்: கார்ப்பரேட் சேவையில் தி.மு.க அரசு!


மேலும் “அரசியல் கட்சிகள், சங்கங்கள் மற்றும் மக்கள் போராட்டங்களுக்கு நன்கொடை வழங்குவது என்பது பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் விதிகளுக்கு முரணானது நடவடிக்கைக்கு உரியது” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

“இவ்வாறு தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கையானது தொழிற்சங்கங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று NFPE உதவிப் பொதுச் செயலாளர் பி.கே.முரளீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் NFPE தொழிற்சங்கமானது அஞ்சல்துறை சேவைகளை தனியார்மயமாக்குவதற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. குறிப்பாக ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரியது என இவர்கள் கொண்டுவரும் கார்ப்பரேட் நலச் சட்டங்களுக்கு எதிராக நின்று போராடி அவற்றை அமல்படுத்தவிடாமல் தடுக்கும் வேலைகளை இச்சங்கங்கள் செய்து வருவதால், இம்மாதிரியான பாசிச நடவடிக்கைகளை அஞ்சல் சங்கங்கள் மீது ஏவிவிட்டிருக்கிறது மோடி அரசு.


படிக்க: நவ 19: தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் மத்திய அரசிற்கு எதிராக வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்!


இதில், நாம் கவனிக்க வேண்டியது AIPUE மற்றும் NFPE போன்ற தொழிற்சங்கங்களின் மீது அவ்வாறான புகார்கள் அளித்தது ஆர்.எஸ்.எஸ்-இன் பாரதிய மஸ்தூர் சங்கத்துடன் (BMS) இணைந்த பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் (BPEA). இவர்கள் கொடுத்த பல்வேறு புகார்கள் நெருக்கடிகளின் பெயரில்தான் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தி இந்து நாளிதழில் வெளிவந்த செய்திகள் தெரிவிக்கிறது.

NFPE மற்றும் AIPEU தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை பரித்திருக்கும் மோடி அரசின் இந்நடவடிக்கையானது, உரிமைக்காக போராடும் இயக்கங்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்ற அச்சத்தை தொழிற்சங்களுக்கு உருவாக்கும் நடவடிக்கை. மக்கள் போராட்டத்தை ஆதரித்தால் நாளை உங்களுக்கும் இதே நிலை தான் என்று தொழிற்சங்கங்களை பார்த்து கொக்கரிக்கிறது பாசிச கும்பல்.

டேவிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க