‘தேசபக்தர்கள்’ கவனத்திற்கு: இரவு பகலாக நடைபெறும் மல்யுத்த வீரர்கள் போராட்டம்!

மல்யுத்த வீரர்கள் இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்ததில் இருந்து இது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க சங்க பரிவார கும்பலுக்கு எதிரான போராட்டமாக அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

டந்த பத்து நாட்களுக்கும் மேலாக (ஏப்ரல் 23-இல் இருந்து) டெல்லி ஜந்தர் மந்தரில் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் கைசர்கஞ்ச் தொகுதி பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்து 30-க்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தினர். அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை ஜனவரி 23-அன்று அமைத்தது மத்திய விளையாட்டு அமைச்சகம். ஆனால், பாலியல் புகார் அளித்து 3 மாதங்களாகியும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மல்யுத்த வீராங்கனைகள் தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனவரி மாத போராட்டத்தின்போது எதிர்க்கட்சியினர், அரசியல் தலைவர்கள் யாரும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவித்த வீரர்கள், தற்போது அனைவரும் பங்கேற்கலாம் என்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அழைப்பை ஏற்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டக் களத்துக்கு நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நீண்ட நெடிய போராட்டத்திற்கு தற்போது பாலியல் பொறுக்கி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசு வழக்குப்பதிவு செய்துள்ளது.


படிக்க: பாலியல் துன்புறுத்தல்: பாஜக எம்.பி.க்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போராட்டம்!


மல்யுத்த வீரர்களின் போராட்டம் இந்திய மக்களின் பல தரப்பினரின் பேராதரவை பெற்றுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக், இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் அபினவ் பிந்த்ரா, மூத்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ், டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா ஆகியோர் வீராங்கனைகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இது குறித்து நீரஜ் சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில், “நமது வீரர், வீராங்கனைகள் நியாயத்துக்காக வீதியில் இறங்கிப் போராடுவது என்னை மிகவும் வேதனையடையச் செய்கிறது. நமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் அவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். ஒவ்வொரு தனிநபரின் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த நாட்டுக்கு உள்ளது. இனி, இம்மாதிரி சம்பவம் நடக்கவே கூடாது. இது ஓர் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. இது பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான முறையில் கையாளப்பட வேண்டும். சரியான நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பல மல்யுத்த வீரர்கள் குறிப்பாக ஹரியானாவைச் சேர்ந்த சத்யவ்ரத், அன்ஷு மாலிக், மஹாவீர் போகத் போன்றோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ள வினேஷ் மற்றும் பிறருக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

பல்வேறு விவசாயிகள் மற்றும் மாணவர் அமைப்புகளும் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். ஹரியானாவிலிருந்து பல காப் பஞ்சாயத்து உறுப்பினர்களும் போராட்டக் களத்திற்கு வந்தனர். பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் டிகாயித்தும் போராட்டத்தில் பங்கேற்றார்.

“கடந்த முறை விவசாயிகள் போராடியபோது அரசு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டியிருந்தது. இந்த முறையும் நீதி கிடைக்காவிட்டால், நாங்கள் இங்கேயே உட்காருவோம்,” என்று பாரதிய கிசான் யூனியனின் டெல்லி மாநிலத் தலைவர் பிரேந்திர தாகர் பி.பி.சி-யிடம் தெரிவித்தார். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் 11-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் பங்கேற்கும் என அவர் தெரிவித்தார்.


படிக்க: கர்நாடக பாஜக – ஒரு பாலியல் குற்றக் கும்பல் !


இந்தியா முழுவதும் பலத்த ஆதரவு பெற்றுள்ள பிறகும் பாலியல் பொறுக்கி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளான். “கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, அசாம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வீரர்கள் யாரும் இல்லை. ஏன் அரியானாவினர் மட்டும் பங்கேற்கின்றனர்? 12 ஆண்டுகளாக அவர்கள் மட்டும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனரா?” என்று தனது வக்கிரமாக பேசியுள்ளான்.

இவனுக்கு செருப்படி கொடுக்கும் விதமாக பேசிய நெதர்லாந்தில் இருந்து வந்து போராட்டத்தில் பங்கேற்ற ரேகா வோரா பல்லா என்ற பெண்மணி, “ஹரியானாவை சார்ந்தவர்கள் மட்டும் போராடினால் என்ன? ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் போராடுகின்றனர் என்றால் அதனால் என்ன? இந்த விவகாரத்தில் பொதுமக்களை தவறாக வழிநடத்த பார்க்கிறார்கள்” என்று கூறினார். மேலும், “ஏன் ஒரே குடும்பம், ஏன் ஹரியானாவில் இருந்து மட்டும், ஏன் மற்ற மாநிலத்தில் இருந்து வரவில்லை என்பது இங்கு விவாதமாக்கப்படுகிறது. நான் இந்த குற்றச்சாட்டை ஏற்கவில்லை. ஏன் முன்பே சொல்லவில்லை என்றால் அவர்கள் பெண்கள், அவர்கள் வெட்கப்படுபவர்கள். அவர்கள் மெதுவாக தைரியம் பெற்றுள்ளனர். இப்பொழுது அவர்கள் பேசுகின்றார்கள்” என்று செருப்பால் அறைந்தது போல் பேசினார்.

முதல் முறை போராடி ஒன்றும் ஆகவில்லையே என்று எண்ணாமல் மல்யுத்த வீரர்கள் மீண்டும் வந்து போராட்டத்தில் அமர்ந்தது என்பது முன்னுதாரனமான விசயம். பாசிஸ்டுகளை ஒரு மூச்சிலேயே பணிய வைக்க முடியாது என்பதை உணர்ந்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் களத்திற்கு வந்துள்ளனர். மேலும், பல்வேறு மிரட்டல்கள், பின்விளைவுகள், வீரர்கள் மீதான போலிசின் தாக்குதல்கள் உள்ளிட்டு அனைத்து நெருக்கடிகளையும் கடந்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக மல்யுத்த வீரர்கள் இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்ததில் இருந்து இது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்க பரிவார கும்பலுக்கு எதிரான போராட்டமாக அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. இந்துராஷ்டிரத்தை அமைக்க பாசிச கூட்டம் மூர்க்கமாக வேலை செய்துவரும் இத்தகைய சூழலில், பாசிஸ்டுகளுக்கு எதிராக ஆங்காங்கே நடக்கும் இப்போராட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கை அளிக்ககூடியவை. இதுபோன்ற போராட்டங்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

சுஜி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க