பாலியல் துன்புறுத்தல்: பாஜக எம்.பி.க்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போராட்டம்!

தனது சொந்த கட்சியின் பெண்கள் முதல் மல்யுத்த வீராங்கனைகள் வரை பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் பாஜக தலைவர்கள்.

0

ந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், அன்ஷு மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பலர் கைசர்கஞ்ச் தொகுதி எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றம் சாட்டியுள்ளனர்.

எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்(WFI) தலைவர். பிரிஜ் பூஷன் சரண்-ஐ கண்டித்து மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்யுத்த வீரர்களை பல ஆண்டுகளாக சரண் தவறாக நடத்துவதாக குற்றம் சாட்டினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 30 வீரர்களின் சரிதா மோர், சங்கீதா போகத், சத்யவர்த் மாலிக், ஜிதேந்தர் கின்ஹா மற்றும் காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற சுமித் மாலிக் ஆகியோரும் அடங்குவர்.

படிக்க : உ.பி.யும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் பாலியல் வன்கொடுமைக் கூடாரங்கள்!

ஹரியானாவின் போகட் மல்யுத்தக் குடும்பத்தைச் சேர்ந்த வினேஷ், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை ஆவார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல தங்கங்களை வென்றுள்ளார்.

“பெண்கள், மல்யுத்த வீரர்கள், தேசிய முகாம்களில் பயிற்சியாளர்கள் ஆகியோர் WFI தலைவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்” என்று வினேஷ் போகட் கூறினார். கூட்டமைப்பிற்கு நெருக்கமானவர்கள் என்று கருதும் சில பெண் பயிற்சியாளர்களிடமும் தவறாக நடந்து கொள்கிறார்கள்” என்று வினேஷ் கூறினார். “இன்று நான் இதைச் சொன்னேன், நாளை நான் உயிருடன் இருப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை” என்று வினேஷ் கூறியுள்ளார்.

ஒலிம்பிக் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, “இது நியாயமானது அல்ல, நாங்கள் இதை அமைதியாக சகித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இனி இல்லை” என்று கூறினார். “மல்யுத்த வீரர்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் துன்புறுத்தப்படுகிறார்கள். WFI-இன் ஒரு பகுதியாக இருப்பவர்களுக்கு விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாது” என்று புனியா கூறினார்.

மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், “ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், போகாட்ஸுடன் தொடர்புடையவருமான, மல்யுத்த வீரர்கள், புதிய மல்யுத்த வீரர்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க, ஒட்டுமொத்த கூட்டமைப்பும் அகற்றப்பட வேண்டும். புதிய கூட்டமைப்பு உருவாக வேண்டும்” என்றார்.

படிக்க : விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வீழ்ந்து கிடப்பது ஏன் ?

எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர். அவர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த எம்.பி. சிங், ஒலிம்பிக்கில் “ஒரு நிறுவனத்தின் லோகோவுடன் கூடிய ஆடையை” ஏன் அணிந்தார் என்று வினேஷ் போகட்டிடம் கேட்டுள்ளார். “எந்தவொரு விளையாட்டு வீரரையும் கூட்டமைப்பு துன்புறுத்தியது என்று சொல்லக்கூடிய நபர் யாராவது இருக்கிறார்களா? பாலியல் துன்புறுத்தல் சம்பவம் எதுவும் இல்லை” என்றும், அப்படி நடந்தால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறினார். 2021-இல், ராஞ்சியில் நடந்த 15 வயதுக்குட்பட்ட தேசியப் போட்டியில் மல்யுத்த வீரரை அறைந்தவர் இவர்தான். மேலும் 2019-ல் இவரின் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரமானப்பத்திரத்தில் கொலை முயற்சி வழக்கு, அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

பாஜக கட்சிக்குள் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று, அப்பெண்களே பொதுவெளியில் கூறிவருகிறார்கள். புகார் கூறும் பெண்களை ட்ரோல் செய்யும் யோக்கியவான்களே அக்கட்சியில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யோக்கியவான்கள் நிறைந்த பாஜக அரசிடமே, போராடும் மல்யுத்த வீராங்கனைகள் புகார் அளிப்பதினால் என்ன ஆகிவிடும் என்பதுதான் கேள்வியாக உள்ளது. பாஜக குற்றவாளிகளின் கூடாரம் என்பதை மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் மீண்டும் நிரூபனமாக்கியுள்ளது.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க