‘எப்படியேனும்’ பா.ஜ.க.வை வீழ்த்த, இதோ நிதிஷ் ஃபார்முலா!

என்னதான் நிதிஷூடன் உறவைப் பேண விரும்பினாலும், ஆனந்த் மோகனின் விடுதலையை கண்டிக்காவிட்டால், தலித்துகள் மத்தியில் தனக்குள்ள வாக்கு வங்கியை இழக்க நேரிடுமே என்பது மம்தாவுக்கு உள்ள தர்மசங்கடம். ஆக மொத்தம் கண்டனமும் ஆதரவும் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தில் இருந்தே பிறக்கிறது.

ரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து வலுத்துவருகிறது. காங்கிரஸை ஒழித்துக்கட்டுவதே நோக்கம் என்று செயல்பட்டுவந்த கெஜ்ரிவால், மம்தா கட்சியினரும் கூட, எதிர்க்கட்சிகளை குறிவைத்து சி.பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் வேட்டை தீவிரமானது, ராகுலின் பதவி நீக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டுப் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதாகக் கூறி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை தனித்தனியாக சந்தித்து பேசி வருகிறார். நிதிஷ் குமாரின் இந்த முயற்சிக்கு மம்தா, கெஜ்ரிவால் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். “எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சி பீகாரிலிருந்து தொடங்கட்டும்” என்று மம்தாவும் கருத்து தெரிவித்திருந்தார். ஊடகங்களிலும் “எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு நிதிஷ்தான் சரியான ஆள்” என்பது போன்ற விவாதங்கள் எழுந்தன.

ஒருவேளை எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைந்து, அது பா.ஜ.க.வை வீழ்த்துமளவிற்கு செல்வாக்கு பெறும் என்று வைத்துக் கொண்டாலும், புழுத்து நாறிக்கிடக்கும் போலி ஜனநாயகத் தேர்தல் அமைப்பில் பாசிச பா.ஜ.க.வை வீழ்த்தும் ‘ஜனநாயகத்துக்கான போர்’ எப்பேற்பட்டதாக இருக்கும் என்பதற்கு, நிதிஷ் பீகாரிலேயே ஒரு முன்னோட்டத்தைக் காட்டியிருக்கிறார்.


படிக்க : தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி | தோழர் மருது வீடியோ


அண்மையில் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு, சிறை குற்றவாளிகளில் மன்னிப்புக்கு தகுதியான 27 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் பிரபல தாதாவும் முன்னாள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.வுமான ஆனந்த் மோகன் என்பவரது பெயர் வெளியாகியுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1994 ஆம் ஆண்டு கோபால்கஞ்ச் மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் இருந்த ஜி.கிருஷ்ணய்யா என்பவரை அடியாட்படையை ஏவி படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டவர்தான் இந்த ஆனந்த் மோகன். 2007ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி கிருஷ்ணய்யாவை கொலைசெய்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைக் குறைப்பு செய்யச் சொல்லி ஆனந்த் மோகன் தொடுத்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், அவரின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

15 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர் தற்போது மன்னிப்புக்கு தகுதியானோர் பட்டியலில் இடம்பெற்றதன் மூலம் விடுதலையாகக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். பீகார் சிறைச் சட்டம் 2012-ன் படி, பணியில் இருந்த அரசு அதிகாரியைக் கொலைசெய்த குற்றவாளிகள் மன்னிப்புக்கு தகுதியானோர் கிடையாது. ஆனால், 24-04-2023 அன்று நிதிஷ் அரசு இச்சட்டத்தை தளர்த்தியது. மறுநாளே மன்னிப்புக்கு தகுதியானோர் பட்டியலில் ஆனந்த் மோகனின் பெயர் வெளிவந்துள்ளது.

ஆனந்த் மோகன் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். அச்சமூகத்தின் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கும் உள்ளது. ஆகவே, அவருக்காகவே ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்து அவர் விடுதலை செய்வதற்கு வழியேற்படுத்திக் கொடுத்ததன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குவங்கியை கவரலாம் என்பது நிதிஷ் குமாரின் திட்டமாக உள்ளது.

ஆனந்த் மோகன் விடுதலைக்குப் பிறகு சிறையில் இருக்கும் மேலும் சில ஆதிக்க சாதி கிரிமினல்களையும் விடுவிக்கக் கோரி சாதி வெறியர்கள் போஸ்டர்

இந்நிலையில்தான் இச்சட்ட திருத்தத்திற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குவங்கியை பாதிக்கும் என்பதால் நேரடியாக ஆனந்த் மோகனின் விடுதலையை எதிர்க்க முடியாவிட்டாலும், நிதிஷ் குமாரின் சட்ட திருத்த நடவடிக்கையை குற்றஞ்சாட்டி வருகிறது.

பீகாரின் முன்னாள் துணை முதல்வரும் பா.ஜ.க. தலைவருமான சுஷில் குமார், “எந்த அடிப்படையில் சிறைச் சட்டம் திருத்தப்பட்டது” என்று கேள்வியெழுப்பியுள்ளார். பா.ஜ.க.வின் ஐ.டி பிரிவு பொறுப்பாளரான அமித் மாளவியா, “ஆர்.ஜே.டி.யின் மோசமான சூழ்ச்சிகளுக்கு சரணடைந்ததற்காக நிதிஷ் குமார் வெட்கப்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் ஆட்சியைப் பிடிப்பதற்காக கிரிமினல் கூடாரத்தின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் ஒருவர் எப்படி இந்தியாவின் முகமாக முடியும்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய அமைச்சரான கிரிராஜ் சிங், “ஆனந்த் மோகன் நிதிஷ் அரசுக்கான பலிகடா” என்று தெரிவித்திருந்தார்.

தன் மீது விமர்சனங்களை முன்வைக்கும் பா.ஜ.க.வின் போலி வேடத்தை நிதிஷ் குமாரும் அம்பலப்படுத்தியுள்ளார். “இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ஒரு சமூகத்தின் மத்தியில் செல்வாக்கு பெற்ற நபராக விளங்கும் ஆனந்த் மோகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிவந்த கட்சி இன்று எதிர்க்கிறது” என்று பா.ஜ.க.வின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.

மேலும், ஆனந்த் மோகனின் மகனும் ஆர்.ஜே.டி (ராஷ்டிர ஜனதா தளம்) கட்சியின் எம்.எல்.ஏ.வாகவும் உள்ள சேத்தனின் நிச்சயதார்த்தத்திற்கு ஆனந்த் மோகன் பரோலில் வெளிவந்திருந்தபோது, பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் காட்டி அம்பலப்படுத்தியுள்ளார்.

2016-இல் ஒன்றிய அரசு கொண்டுவந்த “மாதிரி சிறைக் கையேட்டை” (model prison manual) முன்மாதிரியாகக் கொண்டுதான் பீகார் மாநில சிறைச் சட்டம் 2012-யும் திருத்தியிருக்கிறோம் என்றும் பா.ஜ.க. தேவையில்லாமல் அரசியல் செய்வதாகவும் நிதிஷ் குமார் சாடியுள்ளார்.

ஆனந்த் மோகன் விசயத்தில், நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக ஏறியடித்துப் பேசவும் முடியாமல், கண்டிக்காமல் அமைதியாக இருக்கவும் முடியாமல் தவித்துவருகிறது பா.ஜ.க. ஏற்கெனவே மகனின் திருமணத்திற்காக பரோலில் வந்திருந்த ஆனந்த மோகன், “தான் நன்னடத்தை அடிப்படையிலேயே விடுதலைக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும், என் விடுதலைக்கு நிதிஷ் குமார் அரசு அழுத்தம் கொடுத்தது என்றெல்லாம் பேசுபவர்கள், பேசுவார்கள்; அவர்கள் எல்லோரும் குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுவிக்கப்பட்டதற்கும் நிதிஷின் அழுத்தம்தான் காரணம் என்றுகூட பேசுவார்கள்” என்று மறைமுகமாக பா.ஜ.க.வை விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க.வின் எதிர்ப்பைத் தாண்டி, கொலைசெய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிருஷ்ணய்யா ஒரு தலித் என்பதால் தலித் அமைப்புகள் மற்றும் பிற அரசியல் கட்சிகளாலும் நிதிஷ்குமார் அரசின் நடவடிக்கை கண்டிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு நிதிஷ்குமார்தான் பொருத்தமானவர் என அவருடன் கூடிக் குலாவிய மம்தா, ஆனந்த் மோகனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். “பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சிறைத்துறை சட்டங்களில் திருத்தம் செய்திருப்பது கண்டனத்திற்கு உரியது. பீகார் அரசின் முடிவு நாடு முழுவதும் தலித் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. கிருஷ்ணய்யா ஒரு நேர்மையான அதிகாரி. பட்டியலினத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரியை கொலைசெய்த ஆனந்த் மோகனின் விடுதலை அதிர்ச்சியளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

என்னதான் நிதிஷூடன் உறவைப் பேண விரும்பினாலும், ஆனந்த் மோகனின் விடுதலையை கண்டிக்காவிட்டால், தலித்துகள் மத்தியில் தனக்குள்ள வாக்கு வங்கியை இழக்க நேரிடுமே என்பது மம்தாவுக்கு உள்ள தர்மசங்கடம். ஆக மொத்தம் கண்டனமும் ஆதரவும் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தில் இருந்தே பிறக்கிறது.

பீகாரின் மஹாபந்தன் கூட்டணியைப் பொறுத்தவரை, அதற்கு ஏற்கெனவே பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் கணிசமான வாக்குவங்கி உள்ளது. ஆனால் ராஜ்புத் போன்ற முன்னேறிய ஆதிக்க சாதியினரின் வாக்குவங்கியைப் பொறுத்தவரை பா.ஜ.க.விடமே உள்ளது.


படிக்க : பீகார் : பத்திரிகையாளர் புத்திநாத் ஜா படுகொலை


அரசியல் தரவுகளுக்கான திரிவேதி மையத்தின் கூற்றுப்படி, 2020 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் தேர்தல் சீட்டுகளில் 24.5 சதவிகிதம் (110) ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு கொடுத்துள்ளது. 11.8 சதவிகிதம் பார்ப்பனர்களுக்கு கொடுத்துள்ளது மற்றும் 7.3 சதவிகிதம் பூமிஹாரிகளுக்கு கொடுத்துள்ளது.

தற்போது ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குகளை மஹாபந்தன் கூட்டணியே வேட்டையாடுவதற்கு ஆனந்த் மோகன் விடுதலை வழியேற்படுத்தியிருக்கிறது. 90களில், லாலு பிரசாத் யாதவ் மண்டல் கமிஷனை ஆதரித்து பிற்படுத்தப்பட்டோரிடையே செல்வாக்குமிக்க தலைவராக உருவெடுத்தபோது, மண்டல் கமிஷனை எதிர்த்து அரசியல்செய்து ராஜ்புத் உள்ளிட்ட முற்படுத்தப்பட்ட ஆதிக்கசாதிகளிடையே செல்வாக்குமிக்க தலைவராக உயர்ந்தவர் ஆனந்த் மோகன். பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கு சமூகநீதி அரசியலை முன்னெடுப்பதாக வேடமிடும் நிதிஷ்குமாரின் லட்சணம் இது.

ஏற்கெனவே பார்ப்பன-உயர்சாதியினரின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் 10 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரித்தவர்தான் நிதிஷ்குமார். நாளை ஓட்டுவங்கிக்காக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. பறித்தெடுப்பதையும் அவர் ஆதரிக்கக் கூடும். பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டுமல்லவா!

தலையங்கம்
புதிய ஜனநாயகம் – மே 2023

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க