பிரெஞ்சு ‌புரட்சி‌ தின விழாவில் பாசிஸ்டு மோடி!

தங்களின் போலித்தனங்களை மறைத்துக் கொள்ள காலாவதியான நாடாளுமன்ற அமைப்பு முறையை தேசிய தினமாக கொண்டாடும் இவர்களை பிரான்ஸ் – இந்திய பாட்டாளி வர்க்கம் புயலுக்கு முன் அமைதியைப்போல பார்த்துக் கொண்டிருக்கிறது.

மகத்தான‌‌ பிரெஞ்சு ‌புரட்சி‌ தின விழாவில், பாசிஸ்டு மோடி!
அழுகி நாறும்‌ முதலாளித்துவ ஜனநாயகம்!!

ஜூலை 14, 1789-ஆம் ஆண்டு நடந்தேறிய மகத்தான பிரெஞ்சு புரட்சி, பிரபுத்துவ கோமான்களை வீழ்த்தி நாடாளுமன்ற அமைப்பையும், தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை, பத்திரிகை சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை போன்ற உரிமைகளையும் பெற்றுத்தந்தது. அந்த பெருமை மிக்க புரட்சி நாளை, பிரான்ஸ் அரசு தேசிய தினமாக கொண்டாடி வருகிறது.

மேற்கண்ட நாளில் இந்தாண்டு சிறப்பு விருந்தினராக பாசிஸ்ட், கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி மோடி பங்கேற்பார் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதைக் கேட்கும்போது அரசியல் – சமூக வரலாறு அறிந்தவர்கள் அதிர்ச்சியடையலாம். உண்மையில் இப்படி அதிர்ச்சியடைய வேண்டியதில்லை என்பதைத்தான் உலகின் அரசியல் போக்கு நமக்கு உணர்த்துகிறது.

உலக நாடுகளில் உள்ள கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது கொள்ளையை தங்கு தடையின்றி நடத்துவதற்கும், உலகமயமாக்கப்பட்ட இன்றைய ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளுற்பத்தியை பேணி பாதுகாப்பதற்கும் ஏதுவான பாசிச அரசுகளும் கருத்துகளும் உலகம் முழுவதும் வலுப்பெற்று வருகிறது. பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் இந்த போக்கு உள்ளது. இந்தியாவிலும் நாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தின் அடக்குமுறையை எதிர் கொண்டு வருகிறோம்.

தேசிய விடுதலை இயக்கங்கள், பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கங்கள், சீர்த்திருத்த இயக்கங்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு நாடுகளிலும் உணர்வுப் பூர்வமான பங்களிப்பால் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து வாழும்  தலைவர்கள், கருத்துக்களை வெற்று  அடையாளமாக   மாற்றி அதன் அடிப்படை  கருத்துக்களை  இருட்டடிப்புச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது ஆளும் வர்க்கம்.


படிக்க: பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’


இப்படித்தான், இந்தியாவில் காலனியாதிக்க காலத்தில் ரத்தம் தோய்ந்த அநீதியும் அடக்குமுறையும் ஏவப்பட்ட பஞ்சாபின் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தை கண் கவரும் சுற்றுலா தளமாகவும், பகத்சிங் உள்ளிட்ட தோழர்களை, வெறும் அடையாளமாகவும் மாற்றியுள்ளது பாசிச கும்பல். அதன் தொடர்ச்சியாக தற்போது அம்பேத்கரை உள் இழுக்க பார்க்கின்றனர் பாசிசஸ்டுகள். இந்த வரிசையில் பிரான்சின் தேசிய தினமும் அடங்கும்.

பதினேழாம் நூற்றாண்டின் அன்றைய பிரான்ஸ் பிரபுத்துவ கோமான்களின் அடக்குமுறை-அநீதி நாணயத்தின் இரண்டு பக்கங்களாக மக்களின் வாழ்வை பறித்து வந்தது. இதற்கெதிராக ரூசோ-வின் சமுதாய ஒப்பந்தம் மற்றும் பிரான்சின் அறிவொளி இயக்கத்தின் பிரதிநிதிகளான தீதரே உள்ளிட்ட மாபெரும் சிந்தனையாளர்களின் கருத்தாக்கங்கள், மேற்கண்ட சமூக அவலத்தின் மீது வினையாற்றி மக்களின் சிந்தனையை  பற்றிக்கொண்டதன் தொடர்ச்சியாக பாஸ்டில் சிறை மக்களால் தகர்க்கப்பட்டு புரட்சி வெற்றி வாகை சூடியது. பிரபுத்துவ கோமான்கள், மதகுருமார்கள், மன்னர்கள் ஆகியோரின் தலைகள் கில்லெட்டில் துண்டிக்கப்பட்டு ரத்தத்தில் வெற்றி பொறிக்கப்பட்டது.

இது பற்றி மார்க்சிய மூலவர்களில் ஒருவரான, எங்கெல்ஸ் கூறுகையில், “பிரெஞ்சு புரட்சி பதினெட்டாம் நூற்றாண்டின் குடிமகனது உணர்வின் கருத்துருவாக்கமே அன்றி வேறல்ல” என்றார்.

மேலும், “அறிவின் வெற்றியால் உருவாகிய சமுதாய அரசியல் நிறுவன அமைப்புகள், தத்துவவியலாளர்களது மகோன்னத வாக்குறுதிகளுடன் ஒப்பிடுகையில் கொடிய ஏமாற்றத்துக்குரிய கேலிக்கூத்துகளாகிவிட்டன. லட்சிய முழக்கமான சகோதரத்துவம், போட்டாபோட்டியின் சூழ்ச்சியிலும், சூதிலும் மெய்யாக்கம் கண்டது. சுதந்திரம் என்ற முழக்கமானது, உண்மையில் வெட்கங்கெட்ட வாணிப சுதந்திரத்தையே, நோக்கமாகக் கொண்டிருந்தது. மொத்தத்தில் பதினேழாம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களால் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பைத்தான் யோசிக்க முடிந்தது” என்றார்.


படிக்க: இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!


மேற்கண்ட பிரெஞ்சு புரட்சியின் தத்துவவியலாளர்கள் கருத்துக்கள் அன்றைய சமூக அமைப்பை முன்னோக்கி நகர்த்துவதை இலக்காக கொண்டிருந்தது. அவர்கள் முதலாளித்துவம் குறித்து அறிய இயலாதது காலம் இட்ட வரம்பு. உண்மையில் ரூசோ உள்ளிட்ட தத்துவியலாளர்கள் இன்னும் சில பத்தாண்டுகள் வாழ்ந்திருந்தால் அவர்களே கூட முதலாளித்துவ உற்பத்தி முறையை காரி உமிழ்ந்திருப்பார்கள். அந்த காலத்தில் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையும் பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையேயான முரணும் பிரான்சில் அறை குறையாகவே வளர்ந்திருந்தது.

இந்த பிரெஞ்சு புரட்சிக்கு பின்பு ஆளும் வர்க்கமாக தன்னை அமர்த்திக் கொண்ட முதலாளி வர்க்கம் மேலே விவரித்த அநீதி – அடக்குமுறைகளை தொடர்ந்து வருகிறது. வேலையின்மை, ஓய்வூதிய வயது வரம்பு உயர்வு, விலைவாசி உயர்வு, தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமை பறிப்பு ஆகிய காரணங்களால் மக்கள் வாழ முடியவில்லை. ஆகப் பெரும்பான்மையான மக்களின் நல வாழ்விற்கு தொடர்பு இல்லாத நாடாளுமன்றமும் இதர அதிகார வர்க்க அமைப்புக்களும் யாருக்கு வேண்டும்?

மேற்படி, மக்களை ஏய்க்கவும் பாசிச அடக்குமுறையை கொண்டு வருவதற்கும் வாய்ப்பாக இருக்கும் இந்நிறுவனங்களை பயன்படுத்துவதில் தான் இந்தியாவின் மோடியும் பிரான்சின் இமானுவேல் மேக்கரனும் ஒன்றுபடுகின்றனர். எனவே, புரட்சி தின விழாவை கொண்டாட்ட நாளாக அனுசரிப்பதின் மூலம் தங்களது கொலை முகத்தை மறைத்துக் கொள்கின்றனர்.

நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் பேச்சு உரிமை, கூட்டம் கூடும் உரிமைகளை பெற்றெடுத்த புரட்சி தின விழாவை கொண்டாடும் நேரத்தில் ஆகப்பெரும்பான்மையான நாடுகளில் அவர்கள் கூறிய ‘ஜனநாயக’ உரிமைகள் காகிதத்தில் இருப்பதைத்தான் பார்க்கிறோம்.

தங்களின் போலித்தனங்களை மறைத்துக் கொள்ள காலாவதியான நாடாளுமன்ற அமைப்பு முறையை தேசிய தினமாக கொண்டாடும் இவர்களை பிரான்ஸ் – இந்திய பாட்டாளி வர்க்கம் புயலுக்கு முன் அமைதியைப்போல பார்த்துக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தை அப்புறப்படுத்துவதுதான் உண்மையான மக்களுக்குரிய தேசிய தினமாக இருக்கும். அதற்கான வேலையை நாம் செய்து முடிப்போம்.

ஆ.கா.சிவா