ஸ்டெர்லைட்டை திறக்கச் சதி: மீண்டும் ’வேதாந்தாவின் தோட்டாக்கள்’!

அன்று ஏவப்பட்ட வேதாந்தாவின் தோட்டங்கள் போராளிகளின் உடல்களைச் சாய்த்தன. இன்று ஏவப்படும் ‘வேதாந்தாவின் தோட்டக்கள்’ அவதூறுகளாலும் சதிகளாலும் நமது போராட்டத்தை சிதைக்கப் பார்க்கின்றன.

மிழ்நாட்டில் கார்ப்பரேட்டுக்கு எதிரான குறிப்பிடத்தக்க மக்கள்திரள் போராட்டம், தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம். 2018 ஆம் ஆண்டு, மே 22 ஆம் நாள் சுற்றுச்சூழலை கேடாக்கி, சுவாசிக்கும் காற்றையும் நஞ்சாக்கி, புற்றுநோயை பரப்பிய கொலைகார ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் நூறாவது நாளில் லட்சம் மக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்தனர். மக்கள் பெருந்திரளைப் பார்த்து பீதியுற்ற வேதாந்தாவின் கைக்கூலி அரசு, எதிரிகளை சுட்டு வீழ்த்துவதைப் போல மக்களை சுட்டு வீழ்த்தியது. 17 வயது சிறுமியான ஸ்னோலின் உட்பட 15 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் குண்டுதுளைக்கப்பட்டதால், கடுமையாக காயமுற்றனர்.

மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்தாலும் உயிர்த்தியாகத்தாலும் ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டு, வரும் மே 22 ஆம் தேதியோடு ஐந்து ஆண்டு ஆகப்போகிறது. ஆலை மூடப்பட்டிருந்தாலும் வேதாந்தாவுக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நாள் முதல் மீண்டும் எப்படியாவது ஆலையைத் திறந்துவிட வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனமும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலும் மேற்கொண்டுவரும் பல்வேறு சதி நடவடிக்கைகளை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் போராடிவருகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், இவ்வழக்கில் தமக்கு சாதகமாகத் தீர்ப்பைப் பெறுவதற்காக வேதாந்தாவின் கைக்கூலிகள் மேற்கொண்டுவரும் சதிகள் ஒரு உச்சகட்ட நிலையை எட்டியிருக்கின்றன. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வீரம்செறிந்த தூத்துக்குடி மக்களின் போராட்டம் வெளிநாட்டு நிறுவனங்களால் பணம் கொடுத்து தூண்டிவிடப்பட்டது என்ற சகிக்கமுடியாத அவதூறை மேற்கொண்டுவரும் இக்கைக்கூலிகள், இந்த அவதூறுக்கான ‘ஆதாரங்களை’த் தயாரித்துவருகிறார்கள்.

கதை, திரைக்கதை – காவி!

ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்பட்டது என்ற வேதாந்தாவின் பிரச்சாரத்தை நம்பவைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் மண்டபத்தில் உட்கார்ந்து ஒரு புதிய நச்சுக் கதையை தயாரித்துள்ளது.

ஏப்ரல் 5-ஆம் தேதி மாநிலங்களவையில் உள்துறை அமைச்சகம் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு நிதிகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக “தி அதர் மீடியா” (The Other Media) என்ற அரசுசாரா தொண்டு நிறுவனத்தை விசாரித்து வருவதாக தெரிவித்தது. இந்நிறுவனம் ஜெர்மனி, நெதர்லாந்து, ஐரிஷ், கனடா போன்ற நாடுகளில் இயங்கும் கத்தோலிக்க கிறித்துவ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் வாங்கியதாகவும், அந்த பணத்தை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறியது. தனது கூற்று தொடர்பாக எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்காமல், கதையை அவிழ்த்துவிட்டு பொதுவிவாதத்தை கட்டமைத்தது காவிக் கும்பல்.


படிக்க: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள்மீது போலீசு அடக்குமுறை! | மக்கள் அதிகாரம் கண்டனம்


“ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டம்! பின்னணியில் என்ஜிஓ சதி?” போன்ற தலைப்புகளில் இவை ஊடகங்களில் செய்திகளாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

குடிமையியல் பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் “எண்ணித் துணிக” என்ற தலைப்பில் உரையாடிய ஆர்.என்.ரவி, “நாட்டின் மொத்த தாமிர உற்பத்தியில் 40 சதவிகிதத்தைப் பூர்த்திசெய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர். போராட்டத்திற்கு காரணமான அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றது தெரியவந்துள்ளது. விழிஞ்சம் துறைமுகம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிவற்றிற்கு எதிராக நடந்த போராட்டங்களும் வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்பட்டவை” என மண்டபத்துக் கதையை பிரச்சாரம் செய்தார்.

ஆளுநரின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். வாயிலும் மார்பிலும் குண்டுதுளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தம் மக்களை காசு வாங்கிக் கொண்டு போராடியவர்கள் என்று கொழுப்பெடுத்துப் பேசிய ஆர்.என்.ரவியின் பேச்சு தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு பிறகு, ஒட்டுமொத்த சங்கிக் கூட்டமும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் தீவிரமாக குதித்தது. வட இந்தியாவில் #sterlitethetruthrevealed (ஸ்டெர்லைட் உண்மைகள் வெளியானது) #supportsterlite (ஸ்டெர்லைட்டை ஆதரிப்போம்) போன்ற ஹேஷ்டேக்குகள் திட்டமிட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டன. பத்திரிகையாளர் என்ற போர்வையில் இருக்கும் சந்தியா ரவிசங்கர் போன்ற சங்கி “மீனவக் குப்பங்களுக்கு பணம் கொடுத்துதான் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள், பசித்த வயிறோடு எப்படி போராட முடியும்” என பார்ப்பனக் கொழுப்பெடுத்து பேசினார்.

திட்டமிட்ட கருத்துருவாக்கம்!

ஸ்டெர்லைட் ஆலைக்குள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா தாக்கல் செய்த இடைக்கால மனு ஏப்ரல் 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தநிலையில், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக திட்டமிட்டே கட்டமைக்கப்பட்டன.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் கைக்கூலிகளால் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்படுகிறது என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மக்களில் ஒரு சிலரை ஊழல்படுத்தி, “ஆலை மூடப்பட்டதால் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறோம்” என்று பேச வைப்பது, மனு கொடுக்க வைப்பது போன்ற வேலைகளிலும் ஸ்டெர்லைட் நிறுவனம் ஈடுபட்டது. மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்டெர்லைட் ஆலையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என பெண்களை உறுதிமொழி எடுக்க வைத்துள்ளார்கள்; “ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் தூத்துக்குடி மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த இலவசக் கல்வி, மருத்துவம் முதலியவற்றை செய்து தருவோம்” எனவும் பிரச்சாரம் செய்துள்ளார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மே 22 ஆம் தேதி தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கே ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து, போலீசை குவித்து அச்சுறுத்தும் அரசு நிர்வாகம், ஸ்டெர்லைட் கைக்கூலிகளின் இத்தகைய சட்டவிரோத பிரச்சாரத்தை தொடர்ந்து அனுமதித்து வருகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் நின்று போராடிவருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா, திடீரென ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என பேசிவந்தார். விக்கிரம ராஜாவின் கருத்துக்கு தூத்துக்குடி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 18-03-2023 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற வணிகர் சங்கப் பேரமைப்பின் மண்டலக் கூட்டத்தில், விக்கிரம ராஜாவின் கருத்துக்கு தூத்துக்குடி வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, “ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்க மாட்டோம்” என்று தீர்மானமும் போட வைத்துள்ளனர்.

விழிஞ்சம் ஃபார்முலா!

சாதி மதம் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றுகூடி நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல், “கிறித்துவ மிஷனரிகளின் தூண்டுதலால் நடைபெற்றது” என பேசுவது வெறுமனே அவதூறு மட்டுமல்ல. இதன்மூலம் போராடும் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி காரியத்தை சாதித்துக் கொள்ளும் சதித்திட்டமுமாகும்.

விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிரான கேரள மீனவர்களின் போராட்டத்தை சிதைக்கவும் இதே வழிமுறையே கையாளப்பட்டது. அதானியின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக மீனவர்கள் நூறு நாட்களை கடந்து உறுதியாக போராடினார்கள். கேரள அரசால் ஒரு அடிகூட கட்டுமான வேலைகளை நகர்த்த முடியவில்லை. அதானியின் துறைமுகம் அமைந்தால் மண் அரிப்பு ஏற்பட்டு தங்கள் வீடுகள் அழிந்து போகும், வாழ்வாதாரம் பாதிக்கும் என்று போராடிய மீனவர்களின் போராட்டத்தை ‘வளர்ச்சி’க்கு எதிரான ‘கிறித்தவர்களின் சதி’ என்று பிரச்சாரம் செய்தது ஆர்.எஸ்.எஸ்.

மீனவ மக்கள் போராட அமைத்திருந்த கூடாரத்திற்கு எதிராக, “விழிஞ்சம் துறைமுகத் திட்டத்திற்கு ஆதரவாக இந்துக்களின் போராட்டம்” என்று தனது கைக்கூலிகளை திரண்டிவந்து போராடியது. இதன்மூலம் கேரளாவில் ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்காக முயற்சித்தது. இதே ஃபார்முலாவைத்தான் தற்போது ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராகவும் கையாளுகிறது பாசிசக் கும்பல்.

இந்த அடிப்படையில்தான் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டங்களில் முன்னணியில் நிறுத்தப்படுகிறார். காவிக் கும்பல் கொங்கு மண்டலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கவுண்டர் சாதிவெறியை மூலதனமாக்கிக் கொண்டு வேலைசெய்வதைப் போல, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோயில் போன்ற தென் மாவட்டங்களில் கிறித்தவ மக்களுக்கு எதிராக நேரடியாக இந்துமதவெறியை தூண்டிவிட்டு வளருகிறது. அண்மையில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அர்ஜூன் சம்பத் “கிறிப்டோ கிறித்தவர்களின் ஆதிக்கத்திலிருந்து தென்மாவட்டங்களை விடுவிக்க வேண்டும், தென் மாவட்டங்களை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்” என்றார். இந்த ஒருங்கிணைந்த கிறித்தவ எதிர்ப்பு திட்டத்தில், அவர்கள் ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்தையும் இணைத்துக் கொண்டு வேலைசெய்கிறார்கள்.

ஊடகங்களும் வேதாந்தாவின் பக்கம்!

வேதாந்தாவிடம் காசுவாங்கிய கைக்கூலிகளான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல், தூத்துக்குடி மக்களை காசு வாங்கிக் கொண்டு போராடினார்கள் என்று அவதூறு செய்கிறது. உண்மையில் பா.ஜ.க.தான் வேதாந்தாவிடம் சட்டத்திற்கு புறம்பாக கட்சிநிதி பெற்றது; இது பொதுவெளியிலேயே அம்பலமான செய்தியாகும். 2014-ஆம் ஆண்டு வெளிநாட்டு பங்களிப்புச் சட்டம் 1976-ன் விதிகளுக்குப் புறம்பாக வேதாந்தாவிடமிருந்து நிதிபெற்றதாக டெல்லி உயர்நீதிமன்றம் பா.ஜ.க.வை கண்டித்துள்ளது.

அர்ஜுன் சம்பத் முதல் ஆர்.என்.ரவி வரையிலான சங்கபரிவாரக் கும்பல், நம் மக்களை இழிவாகப் பேசுவதை இனியும் அனுமதிப்பதே தவறாகும்.

ஸ்டெர்லைட் விஷயத்தில் எது பேசு பொருளாக மாற வேண்டுமோ அது திட்டமிட்டு மறைக்கப்பட்டு காவிகளால் திசை திருப்பப்படுகிறது. கார்ப்பரேட் ஊடகங்களும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான விளம்பரங்களையும், ஸ்டெர்லைட் கைக்கூலிகளின் பொய்மூட்டைகளையுமே வெளியிட்டு வருகிறார்கள். “ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போலீசால் திட்டமிட்டே நடத்தப்பட்ட பச்சைப்படுகொலை” என்று அருணா ஜெகதீசன் அறிக்கை அம்பலப்படுத்திய பிறகும், இன்றுவரை கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது குறித்து எந்த ஊடகங்களிலும் விவாதிக்கப்படவில்லை.


படிக்க: தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!


ஸ்டெர்லைட் போராட்டம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் என்று பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு அருணா ஜெகதீசன் அறிக்கை தெரிவித்தபோது, ஸ்டெர்லைட் கைக்கூலிகள் எங்கே சென்று ஒளிந்துகொண்டிருந்தார்கள்? இந்த அரசும் ஆளும்வர்க்கமும் வேதாந்தாவின் கூலிப்படையாக செயல்பட்டுள்ளன என்று அம்பலமான சூழலில் வாயைத் திறந்து பேசினால், மக்களின் கோபாவேசத்துக்கு இரையாக வேண்டியிருக்கும் என்பதால்தானே ஒளிந்துகொண்டார்கள். இன்றோ கார்ப்பரேட் ஊடகங்களின் மூலம் தாங்கள் விதைக்க நினைக்கும் விசக் கருத்தைப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

அன்று ஏவப்பட்ட வேதாந்தாவின் தோட்டங்கள் போராளிகளின் உடல்களைச் சாய்த்தன. இன்று ஏவப்படும் ‘வேதாந்தாவின் தோட்டக்கள்’ அவதூறுகளாலும் சதிகளாலும் நமது போராட்டத்தை சிதைக்கப் பார்க்கின்றன.

வெற்றியை தக்கவைக்க போராடுவோம்!

ஏப்ரல் 10 அன்று நடந்த வழக்கு விசாரணையில், தமிழ்நாட்டு அரசின் அனுமதியில்லாமல் ஆலைக்குள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கிடையாது என்று மறுத்திருக்கிறது உச்சநீதிமன்றம். இருப்பினும் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்காததால், அக்கழிவுகளை மட்டும் அகற்றிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவதற்கு தமிழ்நாடு அரசு ஆலையை மூடும்போதே அனுமதி அளித்துவிட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளாகியும் கழிவுகளை அகற்றாத ஸ்டெர்லைட் நிறுவனம், தற்போது ‘சுத்தம் செய்யப்போகிறேன்’ என்று கூறுகிறது.

எப்படியாவது ஆலையை மீண்டும் திறந்துவிட நினைக்கும் வேதாந்தா, இந்த அனுமதியை கேடாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பே அதிகம். இந்த அனுமதியையே முகாந்திரமாக வைத்து நாளை பராமரிப்பு பணிக்கான அனுமதி கேட்கலாம். அடுத்து, போலியான ஒரு ஆய்வறிக்கையை தயாரித்து ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்று நிறுவலாம். எல்லாவற்றையும் நாம் எதிர்பார்க்க வேண்டும்.

பண பலமும் அரசின் துணையும் பெற்ற ஒரு பகாசூர பன்னாட்டு நிறுவனத்தை வீரம்செறிந்த மக்கள்திரள் போராட்டத்தின் மூலம் வீழ்த்தியிருக்கிறோம். நாம் ரத்தம் சிந்திப் பெற்ற வெற்றி இது. வெற்றிபெறுவதைவிட அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமே நெடியது. தொடர்ந்து போராடுவோம். தூத்துக்குடி தியாகிகள் நம்மை வழிநடத்துவார்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க