மதுரை: தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களின் கொலைவெறி தாக்குதல்! | புரட்சிகர அமைப்புகள் கண்டன அறிக்கை

போலீஸ் ஸ்டேஷன் என்பது ஆதிக்கச் சாதி வெறியர்களின் கூடாரமாகவே உள்ளது என்பதை திருமோகூர் சம்பவமும் நமக்கு பொட்டில் அறைந்தார்போல் உணர்த்துகிறது.

05.06.2023

மதுரை திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அகமுடையார் ஆதிக்க சாதி வெறியர்களின் கொலைவெறி தாக்குதல்! பொருட்கள் சூறையாடல்!

புரட்சிகர அமைப்புகள் கண்டன அறிக்கை

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே திருமோகூர் கிராமத்தில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி அன்று கோவில் திருவிழா என்பதால் இரவு ஆடலுடன் பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த நிகழ்வில் தாழ்த்தப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். வருடா வருடம் நடக்கும் திருவிழாவின்போதும் இதுபோன்ற நிகழ்வுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் கலந்து கொள்வது வழக்கம்தான். இந்த முறை வெளியூரிலிருந்து வருகை தந்திருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் உறவினர் ஒருவரை ஆடலுடன் பாடல் நிகழ்ச்சி நடக்கும்போது தாக்கியுள்ளனர். “மொறைச்சு பாக்குறியா, நீ எதுக்கு இங்க எல்லாம் வர்ற டா” என்ற கேள்விகளுடன் சட்டையைக் கசக்கித் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்.

போலீசு வந்ததால் தற்காலிகமாக பிரச்சினையை முடித்துக் கொண்டதுபோல் சென்றுவிட்டனர். அதன் பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் கிளம்பி தங்களின் வீடுகளுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருக்கும்போது இரவு 11:30 மணிக்குமேல் மின்விளக்குகள் அனைத்தையும் நிறுத்தி விட்டு 50 பேர் கொண்ட ஆதிக்க சாதிவெறி கும்பல் திடீரென தாக்குதல் தொடுத்து பெரிய கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளில் நிற்கும் ஒவ்வொரு இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கி தங்களின் சாதிய வன்மத்தை கக்கியுள்ளனர். இப்படி 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ஒரு நான்கு சக்கர வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

படிக்க : மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அகமுடையார் சாதி வெறியர்களின் தாக்குதல்! || சுவரொட்டி

வாகனங்களை தாக்கிக் கொண்டு வரும்போது ஒரு வீட்டில் இருந்த தாழ்த்தப்பட்ட இளைஞரை கொலை வெறியோடு 50 பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர். தலையில் அறிவாளால் இரண்டு இடத்தில் பலமான வெட்டுகள் வெட்டப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோக இவர்களை தட்டிக் கேட்க சென்ற இரண்டு நடுத்தரவயதினரையும் ஒரு ஊனமுற்ற இளைஞரையும் கொடூரமாக தாக்கி அறிவாளால் வெட்டியுள்ளனர். அவர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு நடைபெறும் திருவிழா 10 நாள் நடைபெறும் திருவிழா என்பதால் எப்போதுமே பாதுகாப்புக்கு போலீஸ் இருப்பது வழக்கம். அதுபோக, ஏற்கனவே இங்கு தொடர்ந்து சாதிய முரண்பாடுகள் ஒவ்வொரு திருவிழாவின்போதும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படும். இது எல்லாம் போலீசுக்கு நன்றாகவே தெரியும். தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்கச் சாதி வெறி கும்பலின் முக்கியமான குற்றவாளி பிரபாகரனை தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பிடித்து வைத்துள்ளனர்.

அப்போதுதான் போலீஸ் ஊருக்குள் வந்துள்ளது. போலீஸ் துணை ஆய்வாளர் சேது என்பவரிடம் அந்த குற்றவாளியை ஒப்படைத்துள்ளனர். அந்த குற்றவாளியையும் சற்று தொலைவு கொண்டுபோய் தப்பித்து ஓட வைத்துள்ளனர். கேட்டால் என்னை அறிவாளால் கையை கிழித்துவிட்டு ஓடிப்போய் விட்டான் என போலீசு தரப்பு விளக்கம் கொடுக்கிறது.

ஆனால், இதுவரை போலீசின் கை அறுக்கப்பட்டதாக அந்த பிரபாகரன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில்தான் குற்றவாளிகளை தப்பிக்க வைத்துள்ளனர். இதுபற்றி பேசும்போது தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள், “இதுவரை நான்கு பேரை மட்டுமே பிடித்துள்ளதாக சொல்கின்றனர். அதுவும் தாக்குதலில் ஈடுபட்ட 50 பேரில் வருவார்களா என தெரியவில்லை” என்று போலீசின் முகத்திரையை கிழித்தார்.

ஆடலுடன் பாடல் நிகழ்ச்சி நடக்கும்போதே ஏற்பட்ட பிரச்சினை, போலீசுக்கும் தெரியும் உளவுத்துறைக்கும் தெரியும். இப்படி ஒரு மோதல் நடக்கப்போகிறது என்பது உளவுத்துறைக்கு தெரியாதா? அதன் பின்பும் இவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றால் இவர்கள் தெரிந்தே தான் ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார்கள் எனவும் அம்பலப்படுத்தினார்.

ஜூன் நான்காம் தேதி காலையிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அந்த பகுதியில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், பல்வேறு ஜனநாயக சக்திகளும் முற்போக்கு இயக்கங்களும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் சென்று மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ் தேசிய குடியரசு இயக்கம் தோழர்கள் பாதிக்கப்பட்ட பகுதியை சென்று பார்வையிட்டோம்.

அதில், மக்கள் தங்கள் பாதிப்புகளையும் தங்கள் தரப்பு நியாயங்களையும் ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினர்.

ஒரு வயதான அம்மா என்னையையும் என் குடும்பத்தையும் விட்டுருங்கப்பா ஒன்னும் செய்யாதீங்கப்பா என கெஞ்சிய போதும் அவர் கண் முன்னே இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர் ஆதிக்கச் சாதி வெறியர்கள்.

வீடுகளுக்குள் இருந்த பெண்களை வெளிய வாங்கடி என சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி வன்முறை வெறியாட்டம் போட்டுள்ளனர்.

ஒரு பெண் தன்னுடைய கருத்தை சொல்லும்போது “இனிமேல் எந்த வேலைக்கும் எங்களை கூப்பிடாதீர்கள், சாவுக்கு வர சொல்வது அடிமை வேலைக்கு வர சொல்வது என அனைத்தையும் நிறுத்திக் கொள்ளுங்கள், நாங்க எங்க சொந்த உழைப்பில் ஏதோ கொத்தனார் வேலையோ சித்தாள் வேலையோ பார்த்து பிழைத்துக் கொண்டுதான் உள்ளோம். உங்களைப் போலவா தாத்தன் விட்டு சொத்தில் உட்கார்ந்து தின்று கொண்டு உள்ளோம், எங்கள் சொந்த உழைப்பில் நாங்கள் வண்டி வாங்குகிறோம் அது ஏன் உங்களுக்கு எரியுது” என ஆதிக்கச் சாதி வன்மத்தை தோலுரித்தார்.

சாதி ஒழிக்கப்பட வேண்டும். நாங்க என்ன மனுசங்க இல்லையா? சாதினு ஒன்னு இருக்கவேக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

இந்த பகுதியில் உள்ள ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு இன்னும் அந்த பண்ணையார் மனோபாவம் மாறவில்லை. சாதி ஒழிப்பிற்கு எதிரான பாடல்களையும் அம்பேத்கர் பெரியார் பாடல்களையும் போட்டால் கூட சண்டைக்கு வருவார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் உழைத்து குறைந்தபட்சம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதைக் கூட இந்த கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்ற எதார்த்தம் கண் முன்னால் விரிகிறது.

ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷன் கீழ் தான் காயாம்பட்டி கிராமமும் வருகிறது. அங்கும் கடந்த பொங்கல் தினத்தில் ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்தபோதும், தாழ்த்தப்பட்ட மக்கள் தொடுத்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக -ஆதிக்கச் சாதி வெறியினருக்கு ஆதரவாக- இதே ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷனும் இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் தான் நின்றார்கள்.

படிக்க : பாலியல் குற்றவாளிக்கு ஜாதகம் பார்க்க சொன்ன ‘கூமுட்டை’ நீதிமன்றம்!

போலீஸ் ஸ்டேஷன் என்பது ஆதிக்கச் சாதி வெறியர்களின் கூடாரமாகவே உள்ளது என்பதை திருமோகூர் சம்பவமும் நமக்கு பொட்டில் அறைந்தார்போல் உணர்த்துகிறது.

இத்தகைய ஜனநாயக விரோத கூடாரத்தை கலைக்காமல் சாதி ஒழிப்பு ஏது என்ற கேள்வி தான் எழுகிறது.

அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குறிப்பாக, முக்கிய குற்றவாளியான பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டும். பிரபாகரனுக்கு ஆதரவாக உள்ள போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.

இதுபோக, ஆதிக்கச் சாதி வெறியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்! அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கு! ஆதிக்கச் சாதி சங்கங்களையும் மதவெறி சங்கங்களையும் தடை செய்! என்ற முழக்கங்களுடன் ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு ஆதிக்கச் சாதி வெறியையும், மதவெறியையும் ஒழித்துக் கட்ட போராட வேண்டிய கடமை நம் அனைவரின் முன் உள்ளது.

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.
தொடர்புக்கு :- 97916 53200, 78268 47268

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க