செந்தில் பாலாஜி கைது! THE UNCONDITIONAL SUPPORT அரசியல்!

நிபந்தனை விதிப்பதே பாசிசத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள். மாநில சுயாட்சி உரிமை, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தடை, அம்பானி- அதானி பாசிச கும்பல் மீது நடவடிக்கை ஆகிய எவ்வித நிபந்தனையுமின்றி காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்கள்.

மலாக்கத்துறை ரெய்டு –  அடிதடி –  செந்தில் பாலாஜி-  கைது  – நெஞ்சு வலி – பைபாஸ் அறுவை சிகிச்சை – உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் திமுகவும் அமலாக்கத்துறையும் மாறி மாறி வழக்குகள் எனத் தினமும் பரபரப்பூட்டும்  சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

செந்தில் பாலாஜி மீதான கைது,  அது தொடர்பான நடவடிக்கைகள் பாசிச நடவடிக்கைகள் என்றே நாம் கூறுகிறோம். ஏனெனில் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் திமுகவை மிரட்டிப் பணிய வைப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி அதன் வழியே தேர்தல் நடத்துவது திட்டம்  என்பதால் அவ்வாறு கூறுகிறோம் .அதனாலேயே செந்தில் பாலாஜி நல்லவர் என்றோ தூய்மையின், நேர்மையின் உரு என்றோ நாம்  கூறவில்லை. ஆனால் இப்போது உள்ள சூழலில் செந்தில் பாலாஜி மீதான தவறுகளையோ ஊழலைப் பற்றியோ யாரும் பேசக்கூடாது அப்படிப் பேசுபவர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் அஜெண்டாவின் கீழ் வேலை செய்கிறார்கள்  என்கிறார்கள் கிரியா ஊக்கிகள்.

செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை என்பது திமுகவுக்கு பாசிச ஆர் .எஸ். எஸ் மற்றும் பாஜக வைத்திருக்கும் பலமான புதைகுழி. இந்த புதைகுழியில் இருந்து திமுக தப்பிக்க வழி இருக்கிறதா என்பது கேள்விக்குறியே.

ஏனென்றால் செந்தில் பாலாஜிக்கு வைக்கப்பட்ட புதைகுழியிலிருந்து தப்பிக்கும் பொழுது அருகில் இன்னொரு அமைச்சர் சிக்க வைக்கப்படுவார்.


படிக்க: செந்தில் பாலாஜி கைது! – மக்கள் அதிகாரம் கண்டனம்


எதிரியின் உடனான  மோதலின் போது எதிரியின் பலவீனமான கண்ணியின் மீது தான் முதலில் தாக்குதல் நடத்தப்படும். மேலும் அந்த கண்ணியானது மொத்த சங்கிலியை உடைப்பதாகவும்  இருக்கும்.

எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தின்படி திமுக என்ற சங்கிலியைப் பலவீனப்படுத்தவும் உடைக்கவும் செந்தில்  பாலாஜி என்ற பலவீனமான கண்ணியைப் பிடித்திருக்கிறது பாஜக.

யார் இந்த செந்தில் பாலாஜி?

மதிமுக, அதிமுக, அமமுக என இறுதியில் தற்பொழுது திமுகவில் அமைச்சராக இருப்பவர். கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்தார். இந்த மோசடி தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் பேசி வழக்கை முடிக்க முயன்றார் செந்தில் பாலாஜி. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் ஆனது இந்த வழக்கை 40 நாட்களுக்குள் அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். இல்லை என்றால் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தது.

அதற்குப் பிறகு அவசர அவசரமாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் திடீரென்று சோதனை செய்தது. சோதனையின் போது வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் திமுக தொண்டர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தத் தள்ளுமுள்ளை மிகப்பெரிய வீர தீரமிக்க நடவடிக்கையாகப் பலரும் புகழ்ந்து கூறினர். அதற்கு எதிர் நடவடிக்கையாக திடீரென்று அதிகாலையில் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை செய்த அமலாக்கத்துறை ஒரு நாள் முழுவதும் சோதனை செய்து இறுதியில்  கைது செய்தது. செந்தில் பாலாஜியின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து இப்போதைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜியை  வைத்து கொங்கு மண்டலத்தைக்  கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது திமுகவின் திட்டம். கொங்கு மண்டலத்தில் தான் அதிமுகவும் பாஜகவும் வலுவாக இருக்கின்றன. அந்த இடத்தில் திமுகவின் அமைப்புகளை உருவாக்குவதும் திமுகவின் கட்டுப்பாட்டிற்குள் கொங்கு  மண்டலத்தைக் கொண்டு வருவதும் தங்களது இருப்புக்கு ஆபத்து என்பதைப் பாசிச பாஜக நன்கு அறியும்.

ஒரே கல்லிலேயே பல மாங்காய் என்பது போல செந்தில் பாலாஜியைக் கைது செய்ததன் மூலம் கொங்கு மண்டலத்திலிருந்து திமுகவை அகற்றுவதும் திமுகவுக்கு மிகப்பெரிய எச்சரிக்கையைக் கொடுப்பதுமாக  இந்த வேலையைச் செய்திருக்கிறது.

கொள்கைகளைத் தூக்கிப்போடு
‘திறமைக்கு’ இடம் கொடு!

செந்தில் பாலாஜிக்கு  எந்த திறமையின் அடிப்படையில் கொங்கு மண்டலத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலை கொடுக்கப்படுகிறது? செந்தில் பாலாஜி திராவிட கொள்கையில் ஊறித் திளைத்தவரா? சுயமரியாதை உணர்வில் ஊன்றி நிற்பவரா ?இல்லை. அதிமுக எந்தெந்த வகையில் எல்லாம் தன்னுடைய அமைப்புகளை உருவாக்கி இருக்கிறதோ அது போன்ற வகையில் ஓட்டு பெறுவதும் ஆட்களை வளைப்பதிலும் கில்லாடி அவர். பணபலம் மற்றும் அதிகார பலம்  மூலம் முறைகேடுகளை அவிழ்த்துவிட்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை திமுகவின் தலைமைக்குச் சமர்ப்பித்தவர். இது போன்ற செயல்களால் குறுகிய காலத்திலேயே தலைமைக்கு நெருக்கமான நபராகவும் திமுகவில் அசைக்க முடியாத நபராகவும் மாறிப் போனார். இனி கொள்கை, கோட்பாடு, சுயமரியாதை என்று பேசிக்கொண்டு இருப்போரை எல்லாம் மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிட்டு திமுகவெங்கும் செந்தில் பாலாஜிக்களை நிறைத்திருப்பதன் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும், நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல முடியும் என்று கணக்குப் போடுகிறது திமுக. செந்தில் பாலாஜிக்கள் நிறைந்திருக்கும் போது தான் திமுக அரசையும் கட்சியும் காப்பாற்ற முடியும் என்ற நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைத்து எதிர்க்கட்சிகளை அச்சத்தில் வைத்திருக்கும் போது தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது ஆர்.எஸ்.எஸ் –  பா.ஜ.கவின் தேவை. மோடியின் கடந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் மக்கள் பட்ட துயரங்கள் சொல்லி மாளாதவை. இந்து ராஷ்டித்தை அமைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஒருபுறம் மக்களின் மத்தியிலும் அரசு உறுப்புகளிலும் ஊடுருவி முன்னேறிக் கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் காவி பாசிச மற்றும் கார்ப்பரேட் பாசிச திட்டங்களினால் மக்கள் அடைந்துள்ள இன்னல்களும் ஏராளமானவை. அதன் விளைவைப் போராட்டக் களங்களிலும் தேர்தலிலும் பாசிச பாஜக – ஆர் எஸ் எஸ் கும்பல் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.


படிக்க: சி.பி.ஐ – அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலம் நீட்டிப்பு அவசரச்சட்டம் !


மொத்த நாட்டையும் அதானி, அம்பானி பாசிச கும்பலுக்குத் தாரை வார்த்த நடவடிக்கைகள் பெட்ரோல் –  டீசல்  – சிலிண்டர் விலை  உயர்வு, சிஏஏ, மணிப்பூர் கலவரம் எனச் சுற்றிச் சுற்றி சுழன்று திருப்பி அடிக்கிறது.

கர்நாடகத் தேர்தல் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தென்னிந்தியாவில் இந்து ராஷ்டிரத்தின் சோதனை சாலையாகக் கர்நாடகாவை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளான புர்கா தடை,  மத மாற்றத் தடை சட்டம் எனப் பல  கொண்டுவரப்பட்ட போதும் பாஜக கட்சியிலிருந்த உள்ளடி சண்டை, லிங்காயத்துகளின் எதிர்ப்பு, 40% கமிஷன், கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பு, எழு கர்நாடகா என்ற பாசிச எதிர்ப்பு அமைப்புகளின் இயக்கம் ஆகியவை பாஜகவைத் தேர்தலில் தோற்கடிக்க வைத்திருந்தாலும் அவற்றின் அடித்தளத்தை இழக்கச் செய்யவில்லை. பாசிச கும்பல் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற இன்னும் பல்வேறு சித்து வேலைகளைக் கண்டிப்பாக மேற்கொள்வர்.

திமுகவைக் குழியில் தள்ளும் கண்ணி வெடிகள் !

தமிழ்நாட்டின் திமுகவின் செல்வாக்கைக் குறைத்து திமுக ஆட்சியின் மீது அதிருப்தியை உருவாக்கி படிப்படியாக எதிர்ப்பலையைத் தோற்றுவித்து அதன் இறுதியில் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் திட்டம் .உடனடியாக ,அதிரடியாக திமுக அரசு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டால் அது பூமராங்காக திருப்பி மாறும் என்பதைப் பாசிச கும்பல் நன்கு அறியும்.

தற்போது திமுகவின் தூண்களாக இருக்கக்கூடிய பலரும் அதிமுகவிலிருந்து வந்தவர்களாகவே உள்ளனர். அவர்கள் மீது பல ஊழல் புகார்களை ஏற்கனவே திமுக எழுப்பி இருக்கிறது. அவர்கள் திமுகவின் கொள்கையாலும் கோட்பாட்டு நடைமுறைகளாலும் முன்னேறி தங்களுடைய இடத்தை பிடித்தவர்கள் அல்ல. அதிமுகவில் இருக்கும் பொழுது என்னென்ன வேலைகளைச் சிறப்பாகச் செய்தார்களோ அதையே சிறப்பாகவும் சீராகவும் திமுக கட்சியிலும் அரசிலும் மேற் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தங்கள் தலைமைக்கு விசுவாசமாக இருப்பார்கள். அதற்காக எப்படிப்பட்ட தகிடு தத்தங்களை  மேற்கொண்டு கொடுக்கப்பட்ட வேலைகளை நிறைவேற்றுவர்.

இவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள் அல்ல. அவர்களின் ஊழல் காரணமாக மக்களிடம் நாறிப்போனவர்களாக இருப்பார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்களே திமுக கட்சியிலும் அரசிலும் முக்கிய தூண்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் இருப்பையும் செயல்பாட்டையும் முடக்குவதன் மூலம் பாஜக தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயல்வது மட்டுமின்றி திமுகவில் ஓட்டையைப் போட்டு அதன் மூலம் கட்சியில் உள்ள மேல்மட்ட தலைவர்களிடம் அச்சத்தையும் அரசியல் ஒரு ஆட்டத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று செயல்படுகிறது.

செந்தில் பாலாஜியின் மீது மக்களுக்கு எவ்விதமான நற்பெயர் இல்லை. தான் செய்த ஊழலை மறைக்க அவர் மேற்கொண்ட முயற்சியில் சிக்கிக்கொண்டார். இதிலிருந்து அவர் வெளியே வரவே முடியாது. செந்தில் பாலாஜி என்ன முயன்றாலும் திமுகவால் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் பாஜக இப்படிப்பட்ட முறைகேடுகளிலும் ஒட்டுமொத்த அரசை கைக்குள் வைத்திருப்பதிலும் பழம் தின்று கொட்டை போட்டது. வேறு வழியின்றி திமுக செந்தில் பாலாஜியைக் கழற்றி விட்டால் திமுகவில் உள்ள மேல்மட்டத் தலைவர்கள் ஆடிப் போய் விடுவார்கள். செந்தில் பாலாஜியைக் காப்பாற்றச் சென்றால் இப்படிப்பட்ட வழக்குப் புயல்களில் சிக்கிக் கொள்ள வேண்டும். செந்தில் பாலாஜி நல்லவர், வல்லவர் என்று திமுகவினர் செல்லும் பிரச்சாரங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் எவ்வித நற்மதிப்பையும் பெறப்போவதில்லை.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி டிசைனில் ஆப்புகள் தயார்!

பாசிசத்தின் தடையரண் என்று சொல்லப்பட்ட எதிர்க்கட்சிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டிசைனில் பாசிச ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க ஆப்பு வைத்திருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகப் பேசினால் மக்கள் சிரிப்பார்கள். எதிராகப் பேசினால் பாஜகவுக்குச் சாதகமாகப் போய்விடும் இன்று கிரியா ஊக்கிகளும் மிரட்டுகிறார்கள். செந்தில் பாலாஜி போல இன்னும் நான்கு அமைச்சர்களுக்கு பாஜக குறி வைத்து விட்டால் நிலைமை என்னவாகும் என்று யோசியுங்கள். ஒரு அமைச்சரைக் காப்பாற்றவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் திமுக நிலைமை என்னவாகும்?

செந்தில் பாலாஜிக்குப் பதில் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின், பழனிவேல் தியாகராஜன் மீது பாஜக ரைடு நடவடிக்கை ஏவி விட்டிருந்தால் தமிழ்நாடு தனக்கு எதிராக மாறும் என்பதை பாஜக நன்கு அறியும். அதனால் தான் ஊழல்வாதிகளையும் மக்களிடம் அவப்பெயர் உள்ளவர்களையும் முதலில் தூக்குவார்கள்.

இப்படி ஊழல்வாதிகளை பாஜக குறி வைத்து இயங்கும்போது நாம் ஊழல்வாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் தான் பாஜக பாசிசத்தை ஒழிக்க முடியும் என்று சிலர் கனவு காண்கிறார்கள். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டால் கண்டிப்பாக நம்முடைய இருப்பையும் இழப்போம்.

ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க பாசிச கும்பலை வீழ்த்த வேண்டும் என்றால் நாம் ஆர்.எஸ்.எஸ்-  பா.ஜ.க-வைப் போன்று மக்கள் மத்தியில் கிளை வேர்களைப் பரப்பிச் செயல்படக்கூடிய  அமைப்புக்களை உருவாக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.கவின் காவி  – கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான மாபெரும் இயக்கங்களைக் கட்டியமைப்பதே  தமிழ்நாட்டை பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் கும்பல் நெருங்குவதற்கான தடையரண்.

மதவெறியா? ஊழலா?

கோ பேக் மோடி என்ற இயக்கம் திட்டமிடாமல் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதன் விளைவு திட்டமிட்ட அளவில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ் –  பா.ஜ.க – அ.தி.மு.க கும்பலைத் தோற்கடித்தது. கோ பேக் மோடி போன்ற இயக்கங்களை அமைப்புக்களாக உருவாக்கி பாசிஸ்டுகளுக்கு எதிரான களத்தில் நாம் நிற்க வேண்டும். அதை விட்டுவிட்டு செந்தில் பாலாஜிக்களை நியாயப்படுத்திக் கொண்டிருந்தால் வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. செந்தில் பாலாஜி போன்ற பலவீனமான கண்ணிகளை உற்பத்தி செய்வது முறைகேடுகளும் ஊழலும் என்றால் அதற்கெதிராகப்போராடுவதும் தானே பாசிச எதிர்ப்பின் கடமைகளுள் ஒன்றாக இருக்க முடியும்.

மதவெறியா? ஊழலா என்றால் நான் முதலில் மதவெறியைத்தான் ஒழிக்க வேண்டும் என்று கூறுவேன் என்று பலரும் தற்போது கூறிக்கொண்டு வருகிறார்கள். ஊழல் முக்கியமல்ல என்று கூறுவோர் கடந்த காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததில் ஊழலும் நிர்வாக சீர்கேடு தொடர்பான பிரச்சாரங்களும் என்பதையும்  அறிந்தேதான் இருக்கின்றனர்.

கர்நாடகத்தேர்தலில் பாஜக தோற்றதற்கு 40 % கமிசன் என்பது முக்கிய காரணமல்லவா? மக்களிடம் சென்று ஊழல் முக்கியமல்ல மதவெறியைத்தான் முதலில் வீழ்த்த வேண்டும் என்று கூறினால்  என்ன ஆகியிருக்கும்? ஒரு வேளை கூட்டணி அரசாங்கம் 2024 தேர்தல் மூலம் அமைந்தாலும் கூட அந்த அரசாங்கம் ஊழல் அற்றதாக இருந்தால் தானே பாசிச பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றாமல் இருக்க முடியும்?

ஊழலில் ஊற்றுக்கண்ணான பாசிசம் எதைப் பயன்படுத்திக்கொண்டு நுழைகிறது? அய்யோ ஊழல், அய்யோ ஊழல் என்று கத்திக்கதறிக்கொண்டு தான் தன்னுடைய மூக்கை நீட்டுகிறது. அப்படித்தான் அன்னா ஹசாரே, கிரண்பேடி, அர்விந்த் கெஜ்ரிவால், யோகேந்திர யாதவ் உள்ளிட்டவர்கள் கிளம்பினார்கள். அதன் பலனை பாஜகவே அறுவடை செய்தது என்பதுதான் உண்மை. பாசிச எதிர்ப்பு கூட்டணியில் ஊழல் எதிர்ப்பும் முக்கிய அம்சம்தான். நிபந்தனையின்றி பாசிசத்திடம் சரணடைவது ஒருபுறம் என்றால் நிபந்தனையின்றி பாசிச எதிர்ப்பில் ஆளும் வர்க்கக் கட்சிகளிடம் சரணடைய வேண்டும் என்றால் அக்கட்சிகளும் அடுத்து ஆட்சிக்கு வந்து பாசிச நடவடிக்கைகள் மேற்கொள்ளாது என்பதில் என்ன உத்தரவாதம் உள்ளது.

UNCONDITIONAL LOVE & UNCONDITIONAL SUPPORT

கணவன் அடித்தாலும் உதைத்தாலும் அவனோடுதான் வாழவேண்டும் . ஏனென்றால் ஒரு பெண் தனியாக வாழமுடியாது. குடும்பத்தை விட்டு வெளியே சென்றால் ரவுடிகளும் பெண் பித்தர்களும் இருக்கிறார்கள் அது மட்டுமல்ல; நீ வீட்டை விட்டு வெளியேறினால் எதிரிகள் உன் கணவனை நிர்மூலமாக்கிவிடுவார்கள் என்ற நிலையில் ஒரு பெண் எதைத் தெரிவு செய்ய வேண்டும்? உன்னோடு நான் சேர்ந்து வாழ வேண்டுமென்றால் எனக்குச் சுயமரியாதையான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கேட்பது சரியா?

அப்படியெல்லாம் கேட்கக்கூடாது. மொத்த வீடும் அழிந்து போனால் உன் குழந்தைகள் சாப்பாட்டுக்கு என்ன செய்வர் என்ற வாதத்தை முன்வைப்பது தவறல்லவா? சேர்ந்து வாழ்தல் என்பதில் பிரிந்து போவதற்கான உரிமையுமல்லவா இருக்க வேண்டும். இந்த உரிமைகளைப் பற்றிப் பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பேசப்படுகின்ற வார்த்தை UNCONDITIONAL LOVE.

CONDITIONAL LOVE என்பது என்ன? என்னுடைய சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்காத வரை உன்னோடு வாழ்வேன் என்பது தானே.

அது போல UNCONDITIONAL SUPPORT  என்பதே தவறு. உன்னுடன் கூட்டுச் சேர வேண்டுமென்றால் நீ என்னுடைய குறைந்த பட்ச உரிமைகளைக்கூட அங்கீகரிக்க மாட்டாய் என்றால் என்ன பயன் என்ற கேள்வியைக் கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது.

பொது எதிரிக்கு எதிராக நாம் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக இயக்கங்கள், அமைப்புகள், சிறிய கட்சிகள் எல்லாம் எவ்விதமான நிபந்தனையும் விதிக்கக்கூடாது என்பது தானே. அப்படி நிபந்தனை விதிப்பதே பாசிசத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார்கள். மாநில சுயாட்சி உரிமை, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தடை, அம்பானி- அதானி பாசிச கும்பல் மீது நடவடிக்கை ஆகிய எவ்வித நிபந்தனையுமின்றி காங்கிரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறார்கள்.

இப்படிப்பட்ட UN CONDITIONAL SUPPORT கும்பல்தான் இப்போது செந்தில்பாலாஜிக்களை நிபந்தனை இன்றி ஆதரிக்க வேண்டும் என்கிறது. அப்படி ஆதரிக்காதவர்கள் ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவில் செயல்படுவோர் அல்லது அடி முட்டாளாக மட்டுமே வரையறுக்கிறது. ஆனால் வரலாறு இந்த UN CONDITIONAL SUPPORT கும்பலைக் கைக்கூலிகளாக மட்டுமே பதிவு செய்திருக்கிறது என்பதுதான் உண்மை.


மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க