கருப்புப் பண ஒழிப்பு 2.0: மக்கள் சேமிப்பை சூறையாடும் சதித்திட்டம்!

இரு பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர், முட்டாள்தனமான நடவடிக்கை என்ற விமர்சனத்தையே முன்வைக்கின்றனர். பாசிசக் கும்பலை குறைந்து மதிப்பிடுகின்றனர்.

டந்த மே 19-ஆம் தேதி, ரிசர்வ் வங்கி புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள், வங்கிகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசமும் வழங்கியுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பணமதிப்பழிப்பு என்ற நடவடிக்கையின் மூலம் மீண்டும் “கருப்புப் பண ஒழிப்பு” நாடகத்தை கையிலெடுத்துள்ளது மோடி அரசு.

நாள் ஒன்றுக்கு ஒரு நபர் 20,000 ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக மாற்றிக்கொள்ளலாம்; எந்த ஆவணமும் தேவையில்லை; எந்த வங்கிக் கிளையிலும் மாற்றிக் கொள்ளலாம்; 20,000 ரூபாய்க்கு மேல் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்திக் கொள்ளலாம் என வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

0-0-0

சங்கிகளும், நடுநிலை என்ற போர்வையில் செயல்பட்டுக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை பிரச்சாரம் செய்யும் “தமிழ் பொக்கிஷம்” போன்ற யூடியூப் சேனல்களும் ஆர்.பி.ஐ.யின் நடவடிக்கையை கருப்புப் பண ஒழிப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ற கருத்தை பிரச்சாரம் செய்துவருகின்றன.

படிக்க : பற்றி எரிகிறது மணிப்பூர் | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் – நேரலை!

ஆர்.பி.ஐ.யின் வழிகாட்டு நெறிமுறைகளை, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கருப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளவர்கள் பின்பற்ற முடியாது. எனவே, இந்நடவடிக்கை மூலம் கணக்கில் காட்டாமல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை ஒழிக்க முடியும் என்று ஊடகங்களில் கதையளந்துவருகிறது காவிக் கும்பல்.

மேலும், தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக 2,000 ரூபாய் நோட்டுகளை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்றும், 2,000 ரூபாய் நோட்டுகளை தற்போது திரும்பப் பெறுவதன் மூலம் இத்தகைய சட்டவிரோத பணப் பரிமாற்றத்தைத் தடுத்துவிடுவதுதான் மோடியின் திட்டம் என்றும் புல்லரிக்கும் வகையிலான கதைகளையும் சங்கிகள் கூறிவருகிறார்கள்.

தமிழ்நாட்டு பா.ஜ.க கும்பல் கருப்புப் பண ஒழிப்பு என்பதை வைத்து, தி.மு.க.வினரை தாக்கிப் பிரச்சாரம் செய்துவருகிறது. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “2024 தேர்தலுக்காக மூட்டை மூட்டையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தி.மு.க.வினர் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆர்.பி.ஐ. அறிவிப்பு அவர்களுக்கு பாதிப்பு என்பதால்தான் தமிழக முதல்வர் கோபப்படுகிறார்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதை ஒட்டி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், சங்கிகளின் கதைகளெல்லாம் சொல்லப்படவில்லை. மாறாக, ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டபோது பொருளாதாரத்தின் நாணயத் தேவையை பூர்த்தி செய்யவே இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. மற்ற நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டன என மட்டுமே கூறப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கெனவே ரிசர்வ் வங்கியால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வந்துள்ளன. 2018 மார்ச் 31 அன்று புழக்கத்தில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பானது 6.73 லட்சம் கோடி ரூபாய். இது புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுகளில் 37.3 சதவிகிதம். இது 2023 மார்ச் அன்று 3.62 லட்சம் கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. இது புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுகளில் 10.8 சதவிகிதம் மட்டுமே ஆகும்.

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி பார்த்தால், 2016-ஆம் ஆண்டில் புதிய ரூபாய் நோட்டுகளை முழுமையாக அச்சடித்துவிட்டு பழைய ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து இருக்கலாம் அல்லவா? இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை நாணயத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அச்சடித்து விநியோகித்துவிட்டு அதை மீண்டும் ஏன் திரும்ப பெற வேண்டும்? இதில்தான் காவி-கார்ப்பரேட் கும்பலின் சதித்தனம் அடங்கியிருக்கிறது

இரண்டாவது “சர்ஜ்ஜிகல் ஸ்டிரைக்”!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, மக்கள் மத்தியில் மோடியின் பிம்பத்தை ஊதிப்பெருக்கும் முயற்சிதான் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கை. சங்கிகளின் மொழியில் கூறினால், இது “இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக்”.

2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் மோடி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 இராணுவ வீரர்களின் புகைப்படங்களை வைத்து மக்களிடையே தேசவெறியைத் தூண்டி, தேசத்திற்கு பாதுகாவலனாக தன்னை முன்னிறுத்திக் கொண்டதைப் போல, தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கருப்புப் பண முதலைகளை ஒழித்துக் கட்டுபவராக மீண்டும் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.

ஆனால், 2016இல் மேற்கொள்ளப்பட்ட “முதலாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக்கே” ஊத்திக் கொண்டது என்பதுதான் வரலாறு. இதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  2017-18 ஆம் ஆண்டிற்கான ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில், பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட 15.41 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில், ஜூன் 30, 2017க்குள் 15.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் திரும்பி வந்ததாக தெரிவித்துள்ளது. அதாவது, 99 சதவிகிதம் திரும்பி வந்துவிட்டன. 100 சதவிகிதம் நோட்டுக்கள் திரும்பி வந்துவிட்டதாக தெரிவிக்கிறார், முதலாளித்துவ பொருளாதார அறிஞர் ஆனந்த் சீனிவாசன். இவையெல்லாம் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப் பட்டவைதான்.

மேலோட்டமாக பார்த்தால் மீண்டும் ஒரு பணமதிப்பழிப்பு என்பது கோமாளித்தனமாகத் தெரியும். ஆனால், தங்களது இணைய வானரப்படைகள் மூலம் எதையும் நம்பவைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் மோடி அரசு களமிறங்கியுள்ளது. மேலும், சாதாரண மக்களிடம் இன்றளவும் கருப்புப் பணத்தை பற்றி உள்ள தவறான புரிதல்கள் சங்கிகளின் பிரச்சாரத்திற்கு அடிப்படையாக உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு கருப்புப் பணம் தடையாக இருக்கிறது என்றும், அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கட்டுக்கட்டாக கருப்புப் பணத்தை மூட்டையாக கட்டியும், சூட்கேசில் அடைத்தும் மர்மமாக மறைத்து வைத்திருப்பதாகவும் நம்புகின்றனர். அந்த கருத்துகளையே ஊடகங்கள் விதைக்கின்றன.

கார்ப்பரேட்டுகள்தான் பெரும் கருப்புப் பண முதலைகள்!

அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் கருப்பு பணம் இல்லை என்று நாம் கூறவில்லை. இவர்கள் தங்களிடம் உள்ள பெரும்பாலான கருப்புப் பணத்தை முதலீடுகளாகவும் சொத்துகளாகவும் மாற்றி வைத்துள்ளனர். விதிவிலக்காக சிலர் ரொக்கமாக வைத்து இருக்கலாம். அது ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த அளவு. இவையே சில இடங்களில் போலீசில் பிடிபடுகின்றன. சமீபத்தில்கூட, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யோஜனா பவன் என்ற அரசு அலுவலகத்தில் சூட்கேசில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்த கருப்புப் பணத்தில், அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் இருக்கும் பணம் மிகக் குறைவான அளவுதான். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் 120 இலட்சம் கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இவ்வளவு பணத்தை பதுக்கி வைத்திருப்பர்களா? சிலர் இருக்கலாம். பெரும் அளவிலான கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பது அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள்தான்.

கார்ப்பரேட் முதலாளிகள் இலட்சக்கணக்கான கோடிகள் கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்து, அவற்றை தங்களுடைய பினாமி நிறுவனங்கள் மூலம் அந்நிய முதலீடுகளாக இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர். மிகப்பெரும் அளவிலான கருப்புப் பணம் சுழன்று கொண்டே இருக்கிறதே தவிர, எங்கும் நிலையாக பதுக்கி வைக்கப்படவில்லை.

கோமாளித்தனமல்ல, கார்ப்பரேட்டுகளுக்கு விருந்து!

இரு பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர், முட்டாள்தனமான நடவடிக்கை என்ற விமர்சனத்தையே முன்வைக்கின்றனர். பாசிசக் கும்பலை குறைத்து மதிப்பீடுகின்றனர்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “அதிக அளவில் பரிமாற்றத்திலிருந்த ரூ.500, ரூ.1,000 பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவை மூடி மறைக்க ரூ.2,000 நோட்டு கட்டுக்கட்டாக அறிமுகம் செய்யப்பட்டது” என்றும்; மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரரான துஷார் காந்தி, “நவீன துக்ளக்கின் உச்சகட்ட முட்டாள்தனம்” என்றும் கூறியுள்ளனர்.

இது முட்டாள்தனமான நடவடிக்கை அல்ல. காவிக் கும்பலின் மிகப்பெரிய சதித்திட்டமாகும். கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு, யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக் கண்களோ அவர்களிடம் (அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடம்) மக்களின் சேமிப்பை ஒட்ட சுரண்டி ஒப்படைப்பதாகும். மேலும் இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் அல்ல. மக்களின் மீதான பாசிசத் தாக்குதலாகும்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படுத்தாமல் கிளீன் நோட் பாலிசியில் உயர்ந்த மதிப்பு கொண்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுகிறார்கள். இன்னும் 10 வருடங்களில் 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று விடுவார்கள். உயர்ந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும்போது, மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனையை நோக்கி செல்ல ஆரம்பிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

2016 பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது மோடி தன் உரையில், பணப்பொருளாதாரத்தை அழித்து அனைவரையும் வங்கிப் பொருளாதாரத்துக்குள் கொண்டு வரப்போகிறேன் என்று கூறியிருந்தார்.

அதாவது, மோடி அரசு பணப் பரிவர்த்தனைகளை படிப்படியாக ஒழித்து, டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் மக்களை நெட்டித் தள்ளி வருகிறது. 2016 பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2017 ஜனவரியில் 0.45 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், 2023 ஜனவரியில் 804 கோடியாக மிகப்பெருமளவு அதிகரித்துள்ளது.

இதன் மூலம் மக்களின் பணம் வங்கிகளில் குவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள வங்கிகளில் 50 லட்சம் கோடி ரூபாயாக இருந்த டெபாசிட்டுகள், 2021 மார்ச் இறுதிக்குள் 150 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. டெபாசிட்டுகள் 5 ஆண்டுகளுக்கு 50 லட்சம் கோடி ரூபாய் என்ற விகிதத்தில் அதிகரிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

படிக்க : செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடி! | மக்கள் அதிகாரம்

ஒருபுறம், மக்களின் சுருக்கு பையிலும் சேமிப்பு உண்டியல்களிலும் இருக்கும் பணம் உட்பட வங்கிகளில் மலை போல குவிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான முயற்சிகள் மோடி அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது, அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் மக்களின் சேமிப்பை சூறையாடுவதற்கு மோடி அரசே வழியேற்படுத்திக் கொடுக்கிறது.

“கருப்புப் பணம்”, “கள்ளப் பணம்”, “ஊழல் ஒழிப்பு” போன்ற பெயரில் மக்கள் முன் தங்கள் பிம்பத்தை நிறுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் நெட்டித் தள்ளி கார்ப்பரேட் கும்பல்கள் மக்களின் பணத்தை சூறையாட வழியேற்படுத்திக் கொடுக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள்.

எனவே, காவி பாசிஸ்டுகளின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தையும், அதற்கு பின்னால் திரைமறைவில் மக்களின் சேமிப்பை சூறையாடுவதற்காக உள்ள சதித்திட்டத்தையும் அம்பலப்படுத்தி பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் கட்டியமைக்க வேண்டியது சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கடமையாகும்.

– சிவராமன்
புதியஜனநாயகம்
ஜூன் 2023

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க