புள்ளிவிவரங்களைத் திரிக்க மறுத்தால் இடைநீக்கம்!

மோடிக்கு ’வளர்ச்சி நாயகன்’ என்ற பிம்பத்தைக் கட்டமைத்து, அதனைத் தனது தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வியூகம் வகுத்திருந்தது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல். ஆனால், ஐ.ஐ.பி.எஸ் வெளியிட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 (என்.எஃப்.எச்.எஸ் -5) அதற்கு ஏதுவாக இல்லை.

0

மும்பையில் அமைந்துள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தின் (International Institute for Population Sciences – IIPS) இயக்குநரான பேராசிரியர் கே.எஸ்.ஜேம்ஸ் அவர்களை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஜேம்ஸ், 2018-ஆம் ஆண்டில் ஐ.ஐ.பி.எஸ் (IIPS) நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஐ.பி.எஸ் இந்திய அரசாங்கத்தின் சார்பாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (National Family Health Survey – NFHS) மற்றும் இதுபோன்ற பிற முக்கியமான கணக்கெடுப்புகளை மேற்கொள்ளும் நிறுவனமாகும். ஐ.ஐ.பி.எஸ் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

முன்னதாக, ஐ.ஐ.பி.எஸ் நடத்திய சில கணக்கெடுப்புகளின் தரவுத் தொகுப்புகள் மத்திய அரசாங்கத்திற்கு திருப்தியளிக்காததால் ஜேம்ஸை ராஜினாமா செய்யுமாறு அரசாங்கத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அரசாங்கம் கூறும் காரணத்தை ஏற்றுப் பதவி விலக அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

‘அரசாங்கத்திற்குத் திருப்தியளிக்கவில்லை’ என்பதன் பொருள் என்ன? பாசிச மோடி அரசாங்கத்திற்கு ஏற்றவாறு புள்ளிவிவரங்களைத் திரித்து வெளியிட ஜேம்ஸ் ஒத்துழைக்கவில்லை என்பதுதான் அதன் பொருள்.

இதனையடுத்து, ஜூலை 28-ஆம் தேதியன்று ஜேம்ஸுக்கு இடைநீக்கக் கடிதம் அரசாங்கத்தால் அனுப்பப்பட்டது.


படிக்க: டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!


பேராசிரியர் கே.எஸ்.ஜேம்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டு ஒரு நாள் கழித்து, அதாவது ஜூலை 29 அன்று, மத்திய சுகாதார அமைச்சகம் இடைநீக்கம் குறித்து ஒரு சிறு குறிப்பை (Brief Note on Suspension of Prof James, Director and Senior Professor, IIPS) வெளியிட்டது. அதில் தேதி கையொப்பம் அதிகாரப்பூர்வ லெட்டர்ஹெட் (letterhead) என எதுவுமே இல்லை. அதில் ”(ஜேம்ஸுக்கு எதிராக) உண்மை கண்டறியும் குழு சில முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளது. எனவே, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, ஜேம்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மே 8 அன்று உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டதாக அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 35 புகார்களில் 11 புகார்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசின் உண்மை கண்டறியும் குழு கூறுவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், புகார்கள் எப்போது பெறப்பட்டன என்பது குறித்தோ புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் எப்போது நிகழ்ந்தன என்பது குறித்தோ அது தெளிவுபடுத்தவில்லை.

மோடிக்கு ’வளர்ச்சி நாயகன்’ என்ற பிம்பத்தைக் கட்டமைத்து, அதனைத் தனது தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வியூகம் வகுத்திருந்தது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல். ஆனால், ஐ.ஐ.பி.எஸ் வெளியிட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 (என்.எஃப்.எச்.எஸ் -5) அதற்கு ஏதுவாக இல்லை.

அதற்கு சில எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். ”திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இல்லாத நாடாக இந்தியா இருக்கிறது” என்பது பிரதமர் மோடி உட்பட பா.ஜ.க-வினர் பலரால் அடிக்கடி முன்வைக்கப்படும் கூற்று. ஆனால், 19 சதவிகித வீடுகளில் எவ்வித கழிப்பறை வசதியும் இல்லை; அதாவது அவர்கள் திறந்தவெளியில் தான் மலம் கழிக்கிறார்கள் என்று என்.எஃப்.எச்.எஸ் -5 கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியது. லட்சத்தீவுகளைத் தவிர வேறு எந்த ஒரு மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ கழிப்பறையைப் பயன்படுத்தும் மக்கள் 100 சதவிகிதம் இல்லை என்பதை அது வெளிப்படுத்தியது.


படிக்க: மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!


அதேபோல், 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்கவில்லை என்பதை என்.எஃப்.எச்.எஸ் -5  சுட்டிக்காட்டியது. இது ”உஜ்வாலா யோஜனா பெரும் வெற்றி” என்ற மோடி – அமித்ஷா கும்பலின் கூற்றுக்களை கேள்விக்குள்ளாக்கியது. கிராமப்புறங்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள், அதாவது 57 சதவிகிதம் பேருக்கு, எல்.பி.ஜி (LPG) / இயற்கை எரிவாயு கிடைப்பதில்லை என்பதை இது வெளிப்படுத்தியது.

மேலும், இந்தியாவில் இரத்த சோகை அதிகரித்து வருவதாக என்.எஃப்.எச்.எஸ் -5 தெரிவித்தது. சத்தான உணவு உண்ணும் நிலையில் மக்கள் இல்லை என்பது இதன் பொருள். தனது பெயருக்குக் கலக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, மோடி அரசாங்கம் என்.எஃப்.எச்.எஸ் -6 இல் இரத்த சோகையை அளவிடுவதையே கைவிடுவது குறித்துப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஷமிகா ரவி (Shamika Ravi), இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ”என்.எஃப்.எச்.எஸ் மற்றும் பிற கணக்கெடுப்புகளுக்கான தரவுகளைச் சேகரிப்பதில் குறைபாடுகள் உள்ளது” என்று ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அமிதாப் குண்டு (Amitabh Kundu) மற்றும் பி.சி.மோகனன் (P.C. Mohanan) ஆகியோர் இந்தியன் எக்ஸ்பிரஸின் மற்றொரு கட்டுரையில் ஷமிகாவின் கட்டுரையை விமர்சித்திருந்தனர்.

தரவுகள் என்றாலே மோடி கும்பலுக்கு எப்போதும் ஒவ்வாமை தான்.

மோடி அரசாங்கம் தனது முதல் பதவிக்காலத்தில் நடத்திய நுகர்வோர் செலவின கணக்கெடுப்பை (Consumer Expenditure Survey – CES) குப்பையில் போட்டுவிட்டது. சி.இ.எஸ் (CES) என்பது அரசாங்கத்தின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தால் (என்.எஸ்.எஸ்.ஓ) ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமாக நடத்தப்படும் கணக்கெடுப்பு ஆகும். அதில் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் நுகர்வு செலவு முறைகள் (consumption spending patterns) குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். ஆனால், மோடி அரசாங்கமோ தரவுகள் தரமானவையாக இல்லை என்று கூறி அதை வெளியிட மறுத்துவிட்டது.

அதேபோல், 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் வேலையின்மை குறித்த தரவுகளை வெளியிட மறுத்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் அதை வெளியிட்டது. இதனால் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் (National Statistical Commission) செயல் தலைவர் (acting chairman) பி.சி.மோகனன் உள்ளிட்ட தேசிய புள்ளியியல் ஆணைய உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர்.


படிக்க: பி. சி. மோகனன் : மோடி அரசைக் கலங்கடித்த புள்ளியியல் நிபுணர் இவர்தான் !


”(தேசிய புள்ளியியல்) ஆணையத்தை அரசாங்கம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆணையத்தின் சில முடிவுகளும் பரிசீலிக்கப்படவில்லை. நாங்கள் ஓரங்கட்டப்படுகிறோம் என்று நினைக்கிறோம். எனவே, எங்கள் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு திங்கள்கிழமை (ஜனவரி 28, 2019) அனுப்பியுள்ளோம்” என்று பி.சி.மோகனன் அப்போது கூறியிருந்தார்.

2021-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பையும் இந்த அரசாங்கம் இன்னும் மேற்கொள்ளவில்லை. வழக்கமாக பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். கடந்த 150 ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் வழக்கமாக மக்களிடையே நிலவும் அவலங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் குறைமதிப்பீடு செய்துதான் காட்டும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், பாசிச மோடியால் அதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது ’வளர்ச்சி நாயகன்’ பிம்பம் உடைபடுவதற்குப் புள்ளிவிவரங்கள் காரணமாக இருப்பதை அவர் விரும்பவில்லை.

இதன் வெளிப்பாடாகத்தான் பேராசிரியர் கே.எஸ்.ஜேம்ஸ் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை நாம் பார்க்க வேண்டும்.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க