குருநானக் கல்லூரி: கல்வி கட்டணக் கொள்ளையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசின் வழிக்காட்டுதலின்படி இக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் ரூ.48 தான் சேர்க்கை விண்ணப்பப் படிவத்திற்கு வசூலிக்க வேண்டும். பட்டியலின மாணவர்களிடம் அந்த கட்டணத்தையும் வசூலிக்க கூடாது. ஆனால் இக்கலூரியில் ஒரு விண்ணப்ப படிவத்திற்கு ரூ.300 வசூலிக்கப்படுகிறது.

நேற்று (04/08/2023) சென்னை குருநானக் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலித்து வரும் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை வேளச்சேரியில் அமைந்திருக்கும் அரசு உதவி பெரும் கல்லூரியான குருநானக் கல்லூரி சமீப ஆண்டுகளாக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாக வசூலித்து வருகிறது. ஆரம்ப காலங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே கல்லூரி வசூலித்து வந்ததாகவும் 2009 ஆம் ஆண்டு மஞ்சித் சிங் என்பவர் கல்லூரி செயலாளர் ஆன பிறகு கல்லூரியை தனியார் கல்லூரி போல் நடத்தி கல்வி கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இதன் விளைவாக ஆண்டு கட்டணத்திலிருந்து கல்லூரி சேர்வதற்கான விண்ணப்ப படிவம் வரை அனைத்திற்கும் அநியாய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் வழிக்காட்டுதலின்படி இக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் ரூ.48 தான் சேர்க்கை விண்ணப்பப் படிவத்திற்கு வசூலிக்க வேண்டும். பட்டியலின மாணவர்களிடம் அந்த கட்டணத்தையும் வசூலிக்க கூடாது. ஆனால் இக்கலூரியில் ஒரு விண்ணப்ப படிவத்திற்கு ரூ.300 வசூலிக்கப்படுகிறது. அதிலும் கொரோனா பெருந்தொற்று பரவியதன் காரணமாக, 2019-க்கு பிறகு அனைத்து கல்லூரிகளிலும் நேரடி சேர்க்கை விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டு இணைய வழியில் வழங்கப்பட்டது. அவ்வாறு அச்சடிக்காமல் வழங்கப்படும் இணையவழி விண்ணப்பதிற்கும் அதே ரூ.300 வசூலித்து வந்தது கல்லூரி நிர்வாகம். இதனையடுத்து உயர்நீதிமன்றம் கண்டித்த பிறகு இந்த முறை திரும்பபெறப்பட்டது.


படிக்க: “தூரிகைகள் சிவக்கட்டும் காவிகள் ஒழியட்டும்”!


அதே போல் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கல்வி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.800 முதல் ரூ.1250 வரை மட்டுமே வாங்க வேண்டும். ஆனால் குருநானக் கல்லூரியில் ரூ.15,000 வரை வசூலிக்கப்படுகிறது. அதிலும் தற்போது இந்த வருட கட்டணத்தை பருவத்திற்கான கட்டணமாக மாற்றி ஆண்டுக்கு இரண்டு முறை ரூ.15,000 வசூலிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்த கல்வி கொள்ளையை எதிர்த்தே நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட குருநானக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஒரு காலத்தில் மாணவர்களுக்கும் கல்விக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று தொடங்கப்பட்ட குருநானக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி போன்ற கல்லூரிகள் தற்போது கொள்ளையடிப்பதற்கான நிறுவனமாக மாறியுள்ளது. இதன் காரணமாக ஏழை எளிய மாணவர்கள் பயின்று வந்த  இக்கல்லூரிகள் தற்போது மேட்டுக்குடிகளுக்கானதாக மாறி வருகிறது. கல்வி தனியார்மயத்தை தீவிரமாக அமல்படுத்தும் அரசுகளும் மேற்கண்ட விஷயங்கள் தெரிந்தும் வேண்டுமென்றே கண்டும் காணாதது போல் உள்ளது. இத்தகைய கொள்ளைக்காரர்களுக்கு எதிராக மாணவர்கள் தன்னெழுச்சியாக நடத்தியுள்ள போராட்டம் என்பது முதல் அடியாகும். இத்தகைய போராட்டத்தை “கல்லூரியை அரசுடமையாக்கு” என்ற முழக்கத்திற்கு கீழ் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டமாகவும் மாற்ற வேண்டும்.


சோபியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க