இந்திய மக்களின் கண்களில் ரத்தக்கண்ணீர் வடியும் அளவிற்கும் கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மே மூன்றாம் தேதி குக்கி மற்றும் நாகா பழங்குடி மக்கள் தங்கள் உரிமை காக்க பேரணியாகச் சென்றனர். அப்பேரணியை மெய்தி இனவெறியர்கள் தாக்கி பெரும் கலவரத்தை உருவாக்கினர்.
இந்த தீ சற்றும் அணைவதற்குள் இந்திய மக்களை ரத்தமும் சதையுமாகக் கிழித்து ரத்த ருசி பார்க்கும் இனவெறி கும்பல் மே 4-ஆம் தேதி மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி தெருவில் தரதரவென இழுத்து சென்றனர். இந்த சம்பவம் நடைபெற்று 77 நாட்களுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகத்தையே உலுக்கி எடுத்தது. பெண்களை மெய்தி இனவெறியர்களிடம் ஒப்படைத்தது ஐந்தாம் படையாக செயல்பட்டது மணிப்பூர் போலீஸ் அதிகாரிகள் தான் என்பதை பாதிக்கப்பட்ட பெண்ணே அம்பலப்படுத்தினார். மணிப்பூரை அனுமன் போன்று பற்றி எரிய வைத்தது ஆர்.எஸ்.எஸ் தொடர்புகொண்ட அரம்பை தெங்கால் மற்றும் மேய்தி லீபன் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கையில் ஏற்பட்ட காயத்திற்கு டிவிட்டர் மூலம் நலம் விசாரித்தார். ஆனால் மணிப்பூர் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட கொடூரம் குறித்து 77 நாட்களுக்குப் பிறகுதான் மோடி தனது முதலைக் கண்ணீரை வடித்தார். இந்த முதலைக் கண்ணீரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்பதற்காகவே.
இந்தக் கொடூரத்தைக் கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் காட்டுத்தீ போல் பற்றிப் பரவியது. குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்கள் மணிப்பூர் கொடூரத்தை எதிர்த்துத் தனது போர்க் கொடியை உயர்த்தினர். ஜெயின் கல்லூரி மாணவர்கள் தொடங்கிய ரயில் மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், நந்தனம் அரசு கலை கல்லூரி, புதுக்கல்லூரி, லொயோலா மற்றும் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் என தமிழ்நாடு முழுவதும் போராட்டக் கனல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
ஜூலை 31 அன்று கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி மாணவர்கள் ஓவியங்கள் மூலம் மணிப்பூர் கொடூரத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்தி உள்ளனர். இதைத்தொடர்ந்து சென்னை அரசு கவின் கல்லூரி மாணவர்கள் நேற்று (ஆகஸ்ட் 1) “தூரிகைகள் சிவக்கட்டும் காவிகள் ஒழியட்டும்” என்று 50-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் மூலம் மணிப்பூரில் நடந்த கொடூர பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களின் தூரிகைகளை காவி கும்பலுக்கு எதிராகத் தீட்டி உள்ளனர்.
