எந்த ஆயுதமேந்த…….. | கவிதை

ந்த ஆயுதமேந்த……..

ஈரெட்டு இட்லிகளை
எடுக்க முடியும்
ஒரு அவியலில்..

வேகும் நேரத்தில்
விருப்பமான ஓர் முழு பாடலையும்
பாடிட முடியும் என்னால்..

புத்துணர்ச்சி தரும் புரட்சி பாடலாகவும் இருக்கலாம்
அல்லது
என் மீதான கழிவிரக்கத்தினைச்
சொல்லும் சோகப்பாடலாகவும் இருக்கலாம்…

அடுக்களைவிட்டு வெளியே போய்
முகங்கழுவி புத்துணர்ச்சி பெறுவதற்கான சிறிய அளவிலான நேரமும் கிடைக்கும்..

அதனாலேயே
இட்லி எனக்கு பிடித்தமானதாக இருக்கலாம்

அதற்காக
இட்லி அவித்து கொண்டே இருக்க முடியாது
காலம் முழுவதும்…

தோசை சுடுவதென்பது வரமுமல்ல
வட்ட தோசையாய் வராவிடில்
குறைசொல்ல வரும் குடும்பமே..

திருப்பிப் போடும் முன்போ
திருப்பிப் போட்ட பின்போ கருகிவிடக் கூடாது
அப்படி கருகினால்
அடுக்களைப் பக்கமே எட்டிப் பார்க்காத எருமை
என்னை அறையலாம்..

குடும்பமே கோவில்
கணவனே தெய்வம் என்பதால்
ஆக்கவும் அழிக்கவும்
அடிக்கடி அடிக்கவும்
அவனுக்கே அதிகாரம் அதிகமாய்..

ஐவர் இருக்கும் வீட்டில்
ஐந்து வித தோசை
நெய் தோசை சாதா தோசை
பேப்பர் ரோஸ்ட் முட்டை தோசை
பொடி தோசையென
அனைத்தும்
சுட்டு முடிக்கும்முன்
சூடும் வாங்க வேண்டும்
தோசைக்கல்லில்..

கையை மடக்கியபடியே
கை வலியை பொறுத்தபடியே
கால்கடுக்க நின்று
உங்களால் எத்தனை தோசையை சுட்டுவிட முடியும்…

நீண்ட நேரத்திற்கு மட்டுமல்லாது
நீ..ண்ட காலத்திற்கு அடுக்களையிலேயே நிற்க வைத்திருக்கும் வலி என்னவென்று
எங்களுக்குத்தான் தெரியும்..

பூத்தொழுகும் வியர்வையையும்
புதைக்கப்பட்ட கனவினையும்
புழுக்கமான உடம்பையும் பிசைந்து
எண்ணெய்ப்பிசுக்கான
அடுப்படிச் சுவற்றில் ஓவியமாக தீட்டியுள்ளதை
பார்த்தும்
பார்க்காதுபோல் இருக்கும்
உங்களிடம்
கேட்க ஒரு கேள்வி இருக்கிறது

இட்லியா தோசையா என்ற கேள்வியில்லை

நாங்கள் விடுதலை பெற
எந்த ஆயுதத்தை எடுக்க
என்பது மட்டும் தான் அந்த கேள்வி….!


ஏகலைவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க