கார்ப்பரேட் ஃபாக்ஸ்கானுக்கு ஒரு நீதி! குல்பி ஐஸ் விற்ற கண்ணனுக்கு ஒரு நீதி!

ஆகஸ்ட் 17 அன்று ஃபாக்ஸ்கான் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸில் (FIH) பணிபுரியும் தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் ஃபாக்ஸ்கான் விடுதியின் உணவகத்தில் கொடுத்த தரமற்ற உணவை உண்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கார்ப்பரேட் ஃபாக்ஸ்கானுக்கு ஒரு நீதி!
குல்பி ஐஸ் விற்ற கண்ணனுக்கு ஒரு நீதி!
எங்கே இருக்கிறது சமூக நீதி?

திருபெரும்புதூர் சிறுநகரத்தின் இடது புறம் பரந்து விரிந்து இருக்கும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால், இரண்டு அல்லது மூன்று கீ.மீ துரத்தில் சுங்குவார்சத்திரம் வந்தடையும். இங்கு, பல சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) மற்றும் ஹைடெக் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இதற்குள் அமெரிக்காவின் டெல் கம்பெனி, ஜப்பானின் சாம்சங் ஆகிய நிறுவனங்களோடு தைவானின் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் செயல்படுகிறது.

சிட்கோ மற்றும் சிப்காட் போன்ற கம்பெனிகளிலாவது தொழிலாளர்கள் தங்களுக்கான பெயரளவிலான தொழிற்சங்கத்தையேனும் அமைத்துக்கொள்ள முடியும். ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் செயல்படும் மேற்சொன்ன  நிறுவனங்களில் மூச்சுகூட விடமுடியாது. இதைப் படிப்பதற்கு மிகையாகச் சொல்வது போல் தோன்றலாம். ஆனால், இது தான் உண்மை.

சான்றாக அண்மையில் ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸில் (FIH) பணிபுரியும் தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் ஃபாக்ஸ்கான் விடுதியின் உணவகத்தில் கொடுத்த தரமற்ற உணவை உண்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் நாள் (17.08.2023) நடந்தது. ஆனால், பேசுபொருளாகவில்லை. குறைந்தபட்சம் குறிப்பிட்ட அளவிலான ஊடகங்கள் கூட இதைப்பற்றி செய்தி வெளியிடவில்லை.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் உரிய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பான உணவு இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. தரமான உணவுப் பொருட்களை வாங்காமல் தனது லாப நோக்கத்திற்காக, தொழிலாளர்களின் உடல் நலனிற்கு எதிராக செயல்படும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் இது போன்ற அவலங்கள் புதிதல்ல; வாடிக்கையாக நடப்பதுதான்.


படிக்க: ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் அடக்குமுறையை முறியடிப்போம் | புஜதொமு


கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் விழுந்த உணவை சாப்பிட்டதால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலர் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டுவந்தனர். இந்த அநீதிக்கு எதிராக அன்றைக்கு 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போர்க்குணத்துடன் போராடினார்கள்.‌ அன்றைக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் போராடும் தொழிலாளர்களை சூழ்ந்துகொண்டு அச்சுறுத்தினார்கள். இதனையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், தரமற்ற உணவைக் கொடுத்த கேன்டீன் உரிமையாளர் மற்றும் ஃபாக்ஸ்கான் நிர்வாக அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. மாறாக நியாயத்திற்காகப் போராடிய சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் முத்துக்குமார் உள்ளிட்ட முன்னணி தொழிலாளர்கள் பலரை கைதுசெய்து சிறையில் அடைத்தது சமூக நீதி பேசும் தி.மு.க. அரசு.

அன்றைக்கு, “இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது” என  மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தது கார்ப்பரேட் நிறுவனமான ஃபாக்ஸ்கானை பாதுகாக்கத்தானே ஒழிய தொழிலாளர்களின் நலனை உத்தரவாதம் செய்வதற்காக அல்ல என்பது இப்போது உறுதியாகுகிறது. தொழிலாளர் ஆணையர், இணை ஆணையர் இதர அதிகார வர்க்க அரசின் உறுப்புகள், தொழிற்சாலைகள் ஆய்வாளர் என அனைவருமே “முதலாளிகளைக் காப்பது தான் அரசின் கொள்கை” என்ற கொள்கை அடிப்படையில் இயங்குகின்றனர். பிறகு எதற்காக  “தொழிலாளர் துறை” எனப் பெயரிட வேண்டும் என்று தோன்றலாம். இது போன்ற பெயரிலான துறைகள்தான் தொழிலாளர்களை ஏமாற்ற ஏதுவாக உள்ளது என்பதால் அரசு  மேற்படி பெயரை வைத்துக்கொள்கிறது.

இதனை இன்னொரு சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மால் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் தரமற்ற உணவை உண்டதன் காரணமாக வாந்தி, மயக்கமடைந்த இரண்டே நாட்களில், விழுப்புரம் அருகே குல்பி  ஐஸ் வாங்கி சாப்பிட்ட 85 பேர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


படிக்க: ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் – நேரடி ரிப்போர்ட்


உடனடியாக மாவட்ட ஆட்சியர்  மற்றும் வருவாய் கோட்ட அதிகாரி (RDO) மூலம்  விசாரணை ‌மேற்கொள்ளப்பட்டு ஐஸ் விற்பனை செய்த கண்ணன் என்பவரை காவல்துறை கைது செய்கிறது. கூலி வேலைக்கு  ஒப்பான  ஐஸ்  வியாபாரியைக் கைது செய்து பிரச்சினையைக் கண்டறியும் அரசு-அதிகார வர்க்கம், ஃபாக்ஸ்கான் விவகாரத்தில் மட்டும் தனது அதிகாரத்தின் சிறு அதிர்வைக் கூட காட்ட மறுப்பது ஏன்?

கார்ப்பரேட்டுகளின் மூலதன ஆதிக்கத்திற்கு எல்லா அதிகாரமும் கட்டுப்பட வேண்டும் என்பதுதான் எழுதப்படாத சட்டம். இந்த மூலதன விதி “அநீதியை” அடிப்படையாகக் கொண்டிருப்பதை  மூடி மறைக்கத்தான் தொழில்  வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்று வாய்ப்பந்தல் போட்டு தொழிலாளர்களை ஏமாற்றுகின்றனர்,

சமூக நீதி அல்லது தேசிய நீதி என எந்த நீதி என்றாலும் கார்ப்பரேட் முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டலை எதிர்க்காமல் இருப்பதோடு அந்த எதிர்ப்பு உணர்வு  தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கும்  வராது  பார்த்துக் கொள்ள அரசு  உத்தரவாதம் அளித்துள்ளதை தொழிலாளி வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும். அரசு-முதலாளி வர்க்கத்தின் கள்ளக்கூட்டை உழைக்கும் வர்க்கம் அரசியல் சித்தாந்த ரீதியில் உணரும் அந்த தருணத்தில் அரசின் நயவஞ்சக வாக்குறுதி, மூலதனத்தின்  ஆதிக்க விதி என எதுவும் எடுபடாது. மார்க்சியத்தின்  புரட்சிகர போராட்ட விதி ஒன்றே  தொழிலாளி வர்க்கத்தைக் கட்டிக்காத்து விடுதலைக்கான வழி காட்டும்.


ஆ.கா.சிவா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க