டெல்லி ஜி 20 உச்சி மாநாடு: பெருமிதம் கொள்வதற்கு ஒன்றுமில்லை!

ஜி 20 மாநாட்டின் உண்மைத் தன்மையைப் பற்றி எழுதாத ஊடகங்கள், ஜி 20 மாநாடு மோடியால்தான் வெற்றி பெற்றது, மோடி தலைமைதான் என்று நடுப்பக்கக் கட்டுரைகள் எழுதி பாசிச கும்பலுக்கு சொம்படிக்கின்றன.

சுழற்சி முறையில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது.  “ஒரே குடும்பம் – ஒரே உலகம் – ஒரே எதிர்காலம்” என்ற தலைப்பில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட ஜி 20 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு நாடுகளின்  தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் டெல்லி பிரகடனம் என அழைக்கப்படுகிறது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன், அனைவரும் ஒருமனதாக இப்பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதுதான் இம்மாநாட்டின் வெற்றி என்று பேசப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியத் தலைமை, அதாவது பிரதமர் மோடிதான் என்று  ‘நடுநிலை’ என்று சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் கூட எழுதின.

இந்த  ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் மோடியின் வளர்ச்சி முகமூடி கிழிந்து மக்களிடம் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்,  பாசிச மோடி கும்பலின் ஊழல் ஒழிப்பு அரிதாரத்தை சி.ஏ.ஜி. அறிக்கை கலைத்த நிலையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்துமதவெறி மட்டுமே ஒரே வழி என பாசிஸ்ட்டுகள் வெளிப்படையாக இந்து மதவெறியைக் கிளப்பி மணிப்பூரும், அரியானாவும்  எரிந்து கொண்டிருக்கும் சூழலில், இவை குறித்து விவாதிக்கவோ, மக்களிடம் அம்பலப்படுத்தவோ துப்பற்ற ஊடகங்கள், மோடியை உலகத் தலைவராக முன்னிறுத்துகின்றன. பாசிச மோடியை 2014-ல் இந்தியாவின்  ‘வளர்ச்சி’ நாயகன் என்று ஊதிப் பெருக்கியது போல், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக, மோடியை உலகத் தலைவராக சித்தரிக்கின்றன ஊடகங்கள்.


படிக்க: ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு: கார்ப்பரேட் கொள்ளைக்கான ஏற்பாடு!


அமெரிக்க அதிபர் ஜோ பைடனை விட இந்திய பிரதமர் மோடியே மாநாட்டில் ஆதிக்கம் செலுத்தினார்; இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகளை சர்வதேச நாடுகள் பாராட்டின; இந்தியத் தலைமையை உலகம் ஏற்றுக் கொள்கிறது என்றெல்லாம் முட்டுக் கொடுத்தன ஊடகங்கள். இந்த டெல்லி பிரகடனத்தை ஜி 20 நாடுகள் ஏற்றுக் கொண்டதன் மூலம் ஒரு வரலாற்று  நிகழ்வு நடந்துவிட்டதாக பெருமை பீற்றிக் கொள்கிறார் மோடி.

பீற்றிக் கொள்ளப்படும் சாதனைகள்:

இம்மாநாட்டின் சாதனைகளாக, குறிப்பாக மோடியின் சாதனைகளாக சிலவற்றைக் குறிப்பிடுகின்றனர். உக்ரைன் போர் விவகாரத்தில், அமெரிக்கா- ஐரோப்பிய யூனியன் ஒரு பக்கமும் ரஷ்யா – சீனா ஒரு பக்கமும் நின்று விவாதித்திருக்கின்றன. இதில் ஒரு முடிவு எட்டப்படாத நிலையில், இந்நாடுகளிடையே பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒருமித்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற மாநாட்டில் இப்படியான ஒருமித்த முடிவு எட்டப்படவில்லையாம். தற்போது ஒருமித்த முடிவு எட்டப்பட்டதே இந்தியாவின் பெரும் சாதனையாகக் கொண்டாடப்படுகிறது.

உக்ரைன்  போர் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில், ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மீண்டும் வலியுறுத்துகிறோம். உக்ரைன் போரில் ஈடுபட்டிருக்கும் நாடுகள், ஐ.நா. சபையின் விதிகளின்படி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இது போருக்கான காலம் கிடையாது. எந்தவொரு சூழ்நிலையிலும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைன் போரால் சர்வதேச அளவில் உணவு தானியங்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைத்து அங்கு நிரந்தர அமைதி திரும்ப வேண்டும். இவ்வாறு டெல்லி பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த டெல்லி பிரகடனம் புதியது ஒன்றும் கிடையாது. ரஷ்ய -உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்தே இந்தியாவின் நிலைப்பாடு என்பது இருதரப்பையும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதாகவே இருக்கிறது. போருக்கான காலம் கிடையாது என்பது ஏற்கெனவே உக்ரைன் விவகாரத்தில் மோடி கூறியதுதான்.  மேலும், ஐ.நா.வில் நடைபெற்ற உக்ரைன் போர் குறித்த தீர்மானத்தில் கூட ரஷ்யாவுக்கு எதிராக இதுவரை இந்தியா வாக்களிக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்த சாதனையாக, 55 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஆப்பிரிக்க யூனியனை ஜி 20 நாடுகள் அமைப்பில் நிரந்தர உறுப்பினராக சேர்த்துக் கொண்டதை குறிப்பிடப்படுகிறது. சமீப காலமாகவே, தங்களை ஜி 20 நாடுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆப்பிரிக்க யூனியன் கோரிக்கை வைத்து வருகிறது. குறிப்பாக, ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள நைஜர் நாட்டில் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம், அங்கு பிரான்சின் ஆதிக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. 1960-களிலிருந்து அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் நைஜரை வரன்முறையின்றி சுரண்டின. தற்போது, ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்குப் பதிலாக ரஷ்ய ஏகாதிபத்தியம் நைஜரை சுரண்ட அடித்தளம் போடப்பட்டிருக்கிறது.  இந்தச் சூழலில்,  அதாவது அமெரிக்க மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் பிடி ஆப்பிரிக்காவில் சரிந்து வரும் நிலையில், அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஏற்பாடாகவே ஜி 20 நாடுகள் அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டுள்ளது. மோடி அல்ல, வேறு யார் தலைவராக இருந்தாலும், இந்த இணைப்பு ஏற்பட்டிருக்கும் என்பதே எதார்த்த நிலைமை.


படிக்க: அரசும் – ஆளும் வர்க்கமும் கூட்டுக்கொள்ளை நடத்துவதற்கான மாநாடே ஜி20 | தோழர் ஆ.கா.சிவா


அதுமட்டுமின்றி, தெற்காசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீன ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் விருப்பம். ஒன் பெல்ட் ஒன் ரோடு என்ற பட்டுப்பாதைத் திட்டத்தை சீனா முன்னெடுத்திருக்கிறது. இதற்கு எதிராக ஒரு வணிக வழித்தடத்தை உருவாக்க அமெரிக்கா நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் விருப்பத்தைத்தான் டெல்லி பிரகனடத்தில் மோடி நிறைவேற்றியிருக்கிறார். இந்தியாவிலிருந்து  மத்தியக் கிழக்கு நாடுகள் வழியாக ஜரோப்பாவுடன் வணிக்கத் தொடர்பை ஏற்படுத்த கப்பல் மற்றும் ரயில் போக்குவரத்துத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா,  இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய யூனியன்  இணைந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தெற்காசியா மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதியில், சீன ஆதிக்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்காகத்தான் சர்வதேச குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடகங்கள் மோடியைப் பாராட்டுகின்றன, புகழ்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், தெற்காசியா மற்றும் மத்தியக் கிழக்கில் சரிந்து வரும் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு முட்டுக்கொடுத்ததும், தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிறந்த அடிமை என்று மோடி நிரூபித்துக் கொண்டதும் தான் இந்த டெல்லி உச்சி மாநாட்டின் சிறப்பு. இந்த அடிமைத்தனத்தை எண்ணி மானமுள்ள, நாட்டுப்பற்றுள்ள எவரும் பெருமை அடித்துக் கொள்ள முடியுமா?

ஒரே குடும்பம் ஒரே உலகம் ஒரே எதிர்காலம்!

ஜி 20 மாநாட்டில் “வசுவதவ குடும்பம்” என்ற அடிப்படையில் இந்தியா முழக்கம் வைத்ததும்,  மனித குலம் எப்போதும் நலம், வளம், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற இந்தியப் பாரம்பரியத்தை பறைசாற்றுவதாக அம்முழக்கம் இருந்ததாக பத்திரிக்கைகள் மெச்சுகின்றன. இந்திய தண்டனைச் சட்டத்தின் பெயர்களை இந்தி – சமஸ்கிருதமயமாக்கிய கையோடு ஜி 20 மாநாட்டிலும் இந்தியைத் திணித்திருக்கிறது பாசிச மோடி அரசு. மோடியின் பெயருக்குப் பக்கத்தில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றியிருக்கிறது. சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியில் பாரத் என்று மாற்றியிருப்பதானது இந்திய நாட்டை இந்துராஷ்டிரமாக்குவது என்பதற்கான முன்னோட்டம் என்று சர்வதேசத்திற்கு அறிவித்ததாகவே கருத வேண்டியிருக்கிறது. இது குறித்து இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும், எந்த ஊடகங்களும் பெரிதாக வாய் திறக்கவில்லை.

ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே பண்பாடு என்ற வகையில் இந்தியாவை இந்துராஷ்டிரமாக்குவதன் அடுத்தகட்ட நடவடிக்கைதான் பாரத் மண்டபத்தில் நடந்த ஜி 20 மாநாடு மற்றும் அதில் வைக்கப்பட்ட முழக்கங்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது.

கதைக்குதவாத ஜி 20:

பொருளாதார ஏற்றத்தாழ்வை, சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய காலகட்டத்தில், அதுவும்  ஏகாதிபத்தியங்கள்  (ரஷ்யா – சீனா x அமெரிக்கா – ஐரோப்பிய யூனியன் ) தங்களுக்குள் மேலாதிக்கத்திற்கான போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழலில், அனைத்து நாடுகளும்  ஒரே குடும்பமாக, ஒரே உலகமாக ஒன்றிணைந்து ஒட்டுமொத்த மனித குலத்திற்காக பணியாற்றுவது என்று பேசுவதே உலக மக்களின் காதில் பூ சுற்றுவதாகும். அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ தங்களது லாபத்தில் ஒரு துளியைக் கூட விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.  இலங்கையிலும், ஆப்கானிஸ்தானிலும் என்ன நடந்தது? அந்நாடுகளில் இந்தக் கருணை மாகான்களின் யோக்கியதை என்ன?

இலங்கையில், மக்கள் வாழ வழியின்றி போராடிக் கொண்டிருந்த போதும், தங்கள் லாபத்தைக் குறைத்துக் கொள்ள முடியாது என தனியார்மயத்தைத் தீவிரமாக அமல்படுத்தச் சொன்னவைதான் அமெரிக்க ஏகாதிபத்தியமும், சர்வதேச நிதியமும். காலம் காலமாக தன்னுடைய ஏகாதிபத்திய நலனுக்கு ஆப்கானிஸ்தானை அடிநிலமாகப் பயன்படுத்தியதோடு, அந்நாட்டு மக்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருக்கும் போதும் தாலிபான்களைக் காரணம் காட்டி அந்நாட்டுக்கு நிதி தராமல் முடக்கி வைத்திருக்கிறது அமெரிக்கா. கொள்ளை லாபத்திற்காக உலகைச் சூறையாடும் இந்தப் பிணந்தின்னிகள் தான் மனித குலம் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று சொல்கிறார்கள்.

மேலும், ஜி 20 என்பதே நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்புதான். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகள்,  தங்களுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்கிற நிகழ்வாகத்தான் நடத்துகின்றன; டெல்லி ஜி 20 யும் அவ்வாறுதான் நடந்திருக்கிறது. இத்தாலியின் அதிபர் மெலோனி சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இந்தியா விண்வெளித் தொழில்நுட்பத்தில் ஜப்பானுடன்  கூட்டு வைப்பதற்கான ஒப்பந்தங்கள் நிறைவேறியிருக்கின்றன. மற்றபடி, இந்த மாநாட்டில் தீர்மானித்தது போல், ஊழல் ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, பெண்கள் மேம்பாடு, எரிசக்தி ஒத்துழைப்பு, வறுமை ஒழிப்பு, பருவ நிலை மாற்ற ஒத்துழைப்பு ஆகிய அனைத்திலும் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவார்களா? 1999 முதல் நடைபெற்று வரும் ஜி 20 மாநாடுகளால்  எந்தப் பிரச்சினையாவது இதுவரை முடிவுக்கு வந்திருக்கிறதா என்றால் எதுவும் இல்லை. பருவ நிலை மாற்றத்திற்காக நடத்தப்படும் COP உச்சி மாநாட்டினாலும் கூட இதுவரை பெரிதாக எதுவும் மாற்றம் நடந்ததில்லை என்பதே வரலாறு.

பேசப் படவேண்டியது ஜி20யா? அல்லது 420 யா?

ஜி 20 மாநாட்டின்  இந்த உண்மைத் தன்மையைப் பற்றி எழுதாத ஊடகங்கள், ஜி 20 மாநாடு மோடியால்தான் வெற்றி பெற்றது, மோடி தலைமைதான் என்று நடுப்பக்கக் கட்டுரைகள் எழுதி பாசிச கும்பலுக்கு சொம்படிக்கின்றன. அதுமட்டுமின்றி, ஆட்சிக்கு வந்ததிலிருந்து டாம்பீகமாக மோடி அரசு அறிவித்த திட்டங்களில் நடைபெற்ற ஊழலை வெளிக்கொண்டு வந்திருக்கிறது சி.ஏ.ஜி அறிக்கை. ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க கும்பலால் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருப்பதையோ, அம்மக்கள் வாழ்வாதாரம் இழந்து அகதிகளாக்கப்பட்டிருப்பதையோ இந்த ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை. மோடியின் இந்த  420 வேலைகளை அம்பலப்படுத்தாத ஊடகங்கள்தான் மோடியைக் கொண்டாடுகின்றன. இந்தியா கூட்டணியோ வெறும் 14 ஊடகவியலாளர்களைத் தான் புறக்கணித்திருக்கிறது. இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டிய ஊடகங்களின் பட்டியல் நிறைய இருக்கிறது என்பதையே ஜி 20 புகழ் கட்டுரைகள் காட்டுகின்றன.


வாகை சூடிவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க