இந்திய தண்டனைச் சட்டம்: இனி இந்துராஷ்டிர தண்டனைச் சட்டம்!

நிலவுகின்ற போலி ஜனநயாகக் கட்டமைப்பை தனது பாசிச சர்வாதிகாரத்தை நிறுவும் வகையில் மறு ஒழுங்கமைப்பு செய்துவரும் பாசிச கும்பல் அடுத்தக்கட்டமாக, தாம் அமைக்கவிருக்கும் இந்துராஷ்டிரத்திற்கான குற்றவியல் தண்டனைச் சட்டங்களையும் வகுத்து விட்டது.

டந்துமுடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரம் குறித்து மோடியை வாய்திறக்கச் சொல்லி எதிர்க்கட்சிகள் ‘போராடிக்’ கொண்டிருந்தன. அந்த நேரத்தில் விவாதங்கள் ஏதுமின்றி மக்கள் விரோத சட்டங்களையும், புதிதாக பல மசோதாக்களையும் அறிமுகப்படுத்தியும் நிறைவேற்றியுமுள்ளது மோடி அரசு. அவற்றில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த மூன்று மசோதாக்கள் முக்கியமானவை.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும், “இந்திய தண்டனைச் சட்டத்திற்கு (1860) (ஐ.பி.சி.)” பதிலாக “பாரதிய நியாய சன்ஹிதா (2023)”, “குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு (1973) (சி.ஆர்.பி.சி.)” பதிலாக  “ பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா”, “இந்திய சாட்சிய சட்டத்திற்கு (1872) (ஐ.இ.சி)” பதிலாக “பாரதிய சாக்ஷிய விதேயக் (2023)” ஆகியவையே அந்த மூன்று புதிய மசோதாக்கள்.

இந்த புதிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அமித்ஷா, “இந்த மூன்று ஆங்கிலேய கால சட்டங்களும், ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்காக, பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டவை. அதன் நோக்கம் தண்டனைகள் வழங்குவது மட்டுமே, நீதி வழங்குவதல்ல, தற்போது கொண்டுவரப்பட்ட மூன்று புதிய மசோதாக்கள் காலனித்துவச் சட்டங்களை முடிவுக்குக் கொண்டுவந்து இந்தியர்களுக்கான இந்தியர்களால் வழங்கப்படும் சட்டங்களாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

ஊடகங்களில் விவாதிக்கப்படுவது போல, மூன்று சட்டங்களின் பெயர்களை ஹிந்தி மொழியில் குறிப்பிட்டுள்ளார்கள், அதன் மூலம் மொழித்திணிப்பு செய்கிறார்கள் என்பது மட்டும் பிரச்சனையல்ல. இந்த சட்டங்களின் ஒவ்வொரு அடிப்படை கூறுகளும் மாற்றப்பட்டிருக்கின்றன. மசோதாக்களில் சில புதிய பிரிவுகள் (சட்டங்கள், விதிகள்) இணைக்கப்பட்டிருக்கின்றன.

காலனியச் சட்டத்திற்கு மாற்றாக இந்துராஷ்டிர சட்டம்

குற்றவியல் சட்டங்களை மாற்றியமைப்பதற்காக கடந்த 2020-ஆம் ஆண்டே உள்துறை அமைச்சகத்தால் சட்ட நிபுணர்களைக் கொண்ட சிறப்பு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது மறுசீரமைக்கப்பட்ட புதிய மசோதாக்களில், ஐ.பி.சி. சட்டத்தில் 22 பிரிவுகள் நீக்கப்பட்டு, 175 பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக 9 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சி.ஆர்.பி.சி. சட்டத்தில் 107 பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக 9 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல ஐ.இ.சி. சட்டத்தில் 23 பிரிவுகள் திருத்தம் செய்யப்பட்டு, புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய குற்றவியல் நீதி முறையில் மிகப் பெரிய சீர்த்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த அமித் ஷா, “இந்த மசோதாக்கள் சட்டமாக ஆகும்போது, தேசத் துரோகச் சட்டம் ரத்தாகும்” என்று கூறியிருந்தார்.

தேசத் துரோக குற்றம் குறித்தும், அதற்கான தண்டனை குறித்தும் விவரிக்கும் இந்திய தண்டனைச் சட்ட பிரிவான “124 (ஏ)”-வை நீக்கப்போவதாக ஷா கூறுகிறார். ஆனால், “தேசத் துரோகம்” என்ற வார்த்தைக்கு முன்பிருந்த வரையறையை மாற்றி புதிய வரையறை கொண்டுவரப்பட்டுள்ளதே உண்மை.


படிக்க: புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


புதிய மாசோதாவில் முதல்முறையாக பயங்கரவாதம் தனி குற்றமாக வரையறுக்கப்படுகிறது. மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள “பாரதிய நியாய சன்ஹிதா” மசோதாவில் தேசத் துரோகத்துக்கான தண்டனை குறித்து பிரிவு 150-இல் விளக்கப்பட்டுள்ளது. அதில் தேசத் துரோகம் என்ற வார்த்தைக்கு பதிலாக, “நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு எதிராக செயல்படுவது” என்ற வரி இடம்பெற்றுள்ளது. காவிக்கும்பலின் அகராதியில் தேசம் என்பதற்கான அர்த்தம் அதானி, அம்பானிக்களுக்கானது என்பதே. அதை எதிர்ப்பவர்கள் அனைவருமே தேசவிரோதிகள்தான்.

மேலும், பிரிவு 150-இல், “வேண்டுமென்றோ, தெரிந்தோ, பேச்சின் மூலமாகவோ, எழுத்தின் மூலமாகவோ, அறிகுறிகள் மூலமாகவோ, மின்னணு தகவல் தொடர்பு மூலமாகவோ, வேறுவிதமாகவோ பிரிவினை பேசுவது, ஆயுதமேந்தி கிளர்ச்சியில் ஈடுபடுவது, பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவிப்பது ஆகியவை இந்திய இறையாண்மைக்கு, ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல். இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சட்டம் அமலாக்கப்பட்டால், காவிக்கும்பலுக்கு எதிராக மூச்சு கூட விட முடியாது என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது.

கூடுதலாக மறுசீரமைக்கப்பட்ட மசோதாக்களில், எந்தவொரு நபரையும் தீவிரவாதி என்று சந்தேகித்தால் அவர்மீது மூத்த அதிகாரியின் ஒப்புதல் இல்லாமலேயே ஒரு சாதராண போலீஸ் அதிகாரி கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம் என்கிறார், பயங்கரவாத வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் எம்.எஸ்.கான். மேலும் அவர், “ஏற்கனவே நடைமுறையில் இருந்த சட்டத்தில், ஊபா-வின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஒரு மூத்த அதிகாரியின் ஒப்புதல் வேண்டும் என்று விதி கூறுகிறது. இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட தகுதியில் இருக்கும் அதிகாரிகளால் மட்டுமே விசாரணையை மேற்கொள்ள முடியும். ஆனால், இத்தகைய விதிகள் எதுவும் தற்போது முன்மொழியப்பட்ட மசோதாக்களில் இல்லை” என்கிறார். இதுவரை இருந்த முறைபடி, ஒருவர்மீது குற்றச்சாட்டை வைக்காமல் தடுப்பு காவலில் 60 நாட்கள் வரை விசாரிக்கலாம். இப்போது புதிய மசோதாவில் 90 நாட்கள் வரை தடுப்பு காவலில் விசாரிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத, கைவிலங்கைக் கொண்டு கைது செய்யும் உரிமையை (எதார்த்தத்தில் அப்படியில்லை) புதிய மசோதாவின் ஷரத்து 43(3) போலிசுக்கு வழங்குகிறது. அதேபோல், ஒரு நபரை கைது செய்யும்போது தேவையான எந்த சக்தியையும் வழிமுறையையும் பயன்படுத்துவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, போலி மோதல் கொலைகளை நடத்தி சுட்டுக்கொல்லவும் அதிகாரமளிக்கிறது.


படிக்க: குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022 : பாசிசத்தை நோக்கிய அடுத்த அடி!


“அனைவருக்கும் பேச உரிமை உள்ளது. நாங்கள் தேசத்துரோகச் சட்டத்தை முற்றிலும் ஒழிக்கிறோம்,” என கதையளந்த அமித்ஷா அதனை மேலும் விரிவுப்படுத்தி பாசிச பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ பயங்கரவாதத்தையும் எவரொருவர், எந்தவகையில் எதிர்க்க முற்பட்டாலும் அவர்களை விசாரணை ஏதுமின்றி கைது செய்து ஒடுக்கும் வகையில் சட்டத்தைத் திருத்தி அமைத்துள்ளார்.

அடுத்து, “கும்பல் படுகொலைகள் பற்றி நிறைய கவலைகள் உள்ளன, நாங்கள் அதை மிக கவனமாகப் பார்த்தோம். இச்சட்டத்தில் கும்பல் படுகொலை செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன” என்று அமித் ஷா கூறுகிறார்.

ஒருவேளை, இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் முதலில் கூண்டோடு பிடிப்படுபவர்களாக இந்துத்துவ குண்டர்களாக தானே இருப்பார்கள் என்று நமக்கு சந்தேகம் எழலாம். இங்கு ஷா தனது சூட்சுமத்தைக் காட்டியுள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி, கும்பல் படுகொலைகளில் ஈடுபடுபவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்குவதற்கு மட்டுமே வாய்ப்புள்ளது. ஆனால், புதிய மசோதாவில் 7 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது, அதாவது தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

000

முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை மசோதாவில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தில், குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தலைமுடி, உள்ளங்கை ரேகைகள், பாத ரேகைகள், கண் விழித்திரை, கருவிழிப்படலம், விந்தணு, சளி-எச்சில், மரபணு (டி.என்.ஏ) ஆகிய உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இப்போது கொண்டுவரப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட மசோதாக்களின்படி, ஒவ்வொரு போலிசு நிலையமும், மாவட்ட போலிசு கண்காணிப்பாளர் அலுவலகங்களில் பழைய வழக்குகளில் கைது செய்யப்பட்டோரின் முழுவிவரங்கள் அடங்கிய டிஜிட்டல் தொகுப்பை உருவாக்க வேண்டும். அனைத்து நீதிமன்றங்களும் வரும் 2027-க்குள் டிஜிட்டல்மயமாக்கப்படும். இதன்மூலம் வழக்குகளை சில நொடிகளில் கண்டுபிடிக்க முடியும் என்கிறது.

ஒரு வழக்கில் புகார் முதல் தீர்ப்பு வரை அனைத்தும் டிஜிட்டலில் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் கையெழுத்து, குரல் பதிவு, விரல் ரேகை பதிவை போலிசு பெறலாம். வழக்கில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆதாரங்களாகப் பயன்படுத்தலாம். 2018-ஆம் ஆண்டு பீமா கோரேகான் வழக்கில் ரோனா வில்சன், ஸ்டான் சுவாமி போன்றோரின் மடிக்கணினிகளை புனே போலிசு ஹாக் செய்து கோப்புகளை நுழைத்தது. அதை ஆதாரமாக கொண்டு ஊபா சட்டத்தில் 16 செயற்பாட்டாளர்களை கைது செய்து சிறையில் அடைத்து ஐந்து ஆண்டுகளாக சித்தரவதை செய்து வருகிறது, மோடி அரசு. இனி தகவல் தொடர்பு சாதனங்களை ஆதாரங்களாக பயன்படுத்தலாம் என்ற திருத்தத்தின் மூலம் மோடி அரசை விமர்சிக்கும் ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் இந்த ஒடுக்குமுறை நடக்கும்.

குற்றவாளியாக பிடிக்கப்பட்ட ஒருவரின் தகவல் தொடர்பு சாதனங்களை வைத்தே அவரது குடும்பப் பின்னணியையும், நண்பர்கள் பின்னணியையும் எளிதாக கண்டறிய முடியும். இதன் மூலம், குற்றவாளியாக பிடிபடுபவர் இஸ்லாமியராக இருப்பாரேயானால், அவரது குடும்ப உறவினர்கள் அனைவருமே குற்றவாளியாக சித்தரிக்கப்படுவர். ஏற்கனவே, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எந்த குற்றமும் செய்யாத இஸ்லாமியர்களின் வீடுகளும் அவர்களின் குடும்பத்தினரின் வீடுகளும் புல்டோசர் கொண்டு இடித்து நிர்கதியாக்கப்பட்டு வருவதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

இஸ்லாமியர்களை ஒடுக்குவதற்கான சட்டங்கள்

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மசோதாவில் “வெள்ளத்தை” ஏற்படுத்துவது ஒரு பயங்கரவாத செயலாக வரையறுக்கப்பட்டுள்ளது. “பயங்கரவாதி” என்பதை மசோதாவின் பிரிவு 111 (6) (ஏ), “ஆயுதங்கள், வெடிபொருட்கள், அணு – கதிரியக்க அல்லது பிற ஆபத்தான பொருட்களை உருவாக்குவது, உற்பத்தி செய்வது, வைத்திருப்பது, வாங்குவது, கொண்டு செல்வது, வழங்குவது அல்லது பயன்படுத்துவது அல்லது தீ, வெள்ளம் அல்லது வெடிப்புகளை ஏற்படுத்துவது ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்” என்று வரையறுக்கிறது. இந்த குற்றத்திற்கு குறைந்தபட்ச தண்டனையாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டைனையும் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையும் வழங்கப்படும்.

வெள்ளத்திற்கு ஒரு நபரைக் குற்றம் சாட்ட முடியுமா? என்று தோன்றலாம். பா.ஜ.க ஆளும் அசாம் மாநிலத்தில் ஏற்கனவே இதுபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு மே, ஜுன் மாதங்களில் அசாமில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் 192 பேர் உயிரிழந்தனர். இதற்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என கூறி ‘வெள்ள ஜிகாத்’ என்ற பெயரில் காவிக் கும்பல் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டியமைத்தது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக அம்மாநில அரசு எந்தவித ஆதாரமுமின்றி ஐந்து இஸ்லாமியர்களை கைது செய்து சிறையிலடைத்தது. தற்போது, காவிகளின் வெறுப்புப் பிராச்சாரத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்துள்ளது இப்புதிய மசோதா.

இதைப்போல, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், இஸ்லாமிய ஆண்கள் இந்து பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதை காவிக் கும்பல் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறது. அதற்கு இப்புதிய மசோதாவில் சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் நேர்மையற்ற முறையில் அல்லது திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொள்ளமுயன்றால் அது குற்றமாகும். ஆனால், இப்புதிய மசோதாவில் “உண்மையான அடையாளத்தை மறைத்தோ, திருமணம், பணிவாய்ப்பு குறித்து போலி வாக்குறுதி அளித்தோ பாலியல் உறவில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த உண்மையான அடையாளத்தை மறைத்தல் என்பதில், மதம் ஒரு அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ‘லவ்ஜிகாத்’ என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

000

இச்சட்டங்களில் உள்ள அம்சங்களை பார்த்தாலே இது காலனியச் சட்டங்களை ஒழிப்பதற்காக கொண்டுவரப்படவில்லை என்பது அப்பட்டமாக தெரியும். நிலவுகின்ற போலி ஜனநயாகக் கட்டமைப்பை தனது பாசிச சர்வாதிகாரத்தை நிறுவும் வகையில் மறு ஒழுங்கமைப்பு செய்துவரும் பாசிச கும்பல் அடுத்தக்கட்டமாக, தாம் அமைக்கவிருக்கும் இந்துராஷ்டிரத்திற்கான குற்றவியல் தண்டனைச் சட்டங்களையும் வகுத்து விட்டது என்பதையே அமித்ஷாவின் இப்புதிய மசோதாக்கள் நமக்கு உணர்த்துகின்றன. தனது பாசிச சர்வாதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள தடையாக இருக்கும் ஜனநாயக சக்திகளை ஒழித்துக்கட்டுவது, இஸ்லாமியர்கள், சிறுபான்மையினரை ஒடுக்குவது, ஆர்.எஸ்.எஸ்.-பஜ்ரங்தள் போன்ற சட்டவிரோத கும்பல்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்குவது என பல பாசிச அம்சங்களை அமித்ஷாவின் புதிய மசோதாக்கள் கொண்டிருக்கின்றன.


வெண்பா

(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க