“சுற்றி வளைக்குது பாசிசப்படை; வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!” என்ற தலைப்பின் கீழ் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ”வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்” என்று ஆறு இடங்களில் அரங்கக் கூட்டங்கள் நடைபெற்றன.
அக்டோபர் 1, 2023 மதியம் 2.00 மணி அளவில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பாக அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
அரங்கக்கூட்டத்திற்கு பு. ஜ. தொ. மு தோழர் சங்கர் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த ஆர்.எஸ்.எஸ் பிஜேபியை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து மக்கள் அதிகாரம் தோழர் திலகவதி அவர்கள் வரவேற்புறையாற்றினார்.
இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாநில செயலாளர், வி.சி.க அமைப்பை சேர்ந்த தோழர் மா.சங்கத்தமிழன் உரையாற்றினர். “எந்த கட்சியும் எந்த அமைப்புகளும் இது போன்ற முழக்கத்தை முன்வைத்து நேரடியாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி யை எதிர்க்க மாட்டார்கள் நீங்கள் சரியான நேரத்தில் சரியான முழக்கத்துடன் இந்த 2024 தேர்தலையொட்டி இந்த முழக்கத்தை முன்வைத்திருக்கிறீர்கள்” என்றார். மேலும் ”ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் பரவி மக்களை அழிக்கிறது , அந்த அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும்” என்பதையும் வலியுறுத்தினார்.
இடது தொழிற்சங்க மையத்தின் துணை பொதுச் செயலாளர் தோழர் கு.பாரதி வழக்குரைஞர் அவர்கள் அடுத்ததாக உரையாற்றினார். கடந்த 9 ஆண்டு ஆட்சி காலத்தில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டம் என்ற கூறி மாற்றுகிறார்கள். பாரதிய நியாய சங்கிதா, என சமஸ்கிருதமும் இந்தியும் கலந்து பெயர்களை வைத்துள்ளார்கள். இந்தியா கூட்டணி என்ற எதிர்க்கட்சிகள் பெயர் வைத்ததால், பாரத் என எல்லாவற்றையும் மாற்றுகிறார்கள். போலீஸ் 90 நாட்கள் கைது செய்து சித்தரவதை செய்ய முடியும். இந்த சட்டங்கள் எதுவும் மக்களுக்கு எதிரானது, சர்வாதிகாரத்தை செய்கிறார்கள். வீழ்த்தப்பட வேண்டிய சக்தி ஒன்றிய அரசு பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் கார்ப்பரேட் ஆதரவையும் எதிர்க்க வேண்டும்” என்று பேசினார்.
தோழர். அமிர்தா மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் உரையாற்றினார். அவர், ”மோடி கும்பல் தேர்தல் களத்தில் ஒழிக்கப்பட வேண்டும், ஆனால் தேர்தலில் மட்டும் முறியடிப்பது அல்ல எங்கள் நோக்கம், அது ஒரு பகுதி மட்டுமே. ஆனால் வேண்டாம் பிஜேபி என்றால் வேண்டாம் ஆர்.எஸ். எஸ், வேண்டாம் இந்துராஷ்டிரம் என்று பொருள். பிஜேபி என்பது மற்ற கட்சிகளை போல ஒரு கட்சி அல்ல. அது ஆர்.எஸ். எஸ் யின் பல கிளைகளில் ஒரு கிளை. ஆர்.எஸ்.எஸ் யின் அரசியல் பிரிவு. ஆர்.எஸ்.எஸ் ஆணி வேர் பிடுங்கப்படனும். ஆர்.எஸ். எஸ், பிஜேபி தடை செய்ய பட வேண்டும். கடந்த ஒன்பதரை ஆண்டு கால மோடி ஆட்சியை மக்கள் அனைவரும் கொடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாசிச ஆட்சி எப்போது ஒழியும் என குமுறுகின்றனர். இந்த ஒன்பதரை ஆண்டு காலத்தின் மோடி கும்பல் கொண்டு வந்த சட்டங்கள், திட்டங்கள், ஜனநாயக விரோத மக்கள் விரோத கொள்கைகள் அனைத்தும் வீழ்த்தப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒட்டு போடுங்கள் மோடி வீழ்த்த வேண்டும் என்கின்றனர். எங்கள் கேள்வி மோடி கொண்டு வந்த திட்டங்கள், சட்டங்கள் நீட், குயிட், புதிய கல்வி கொள்கை, EWS, சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி, போன்றவை நீடிக்குமா? நீக்கப்படுமா? அப்படியே நீடித்தால் மோடி ஆள்வதாகதானே பொருள். அப்படி எல்லாமும் நீடிக்கும் என்றால் மக்களுக்கு என்ன பயன்? அதனால் எதிர்க்கட்சிகள் ஓட்டு கேட்டு வந்தால் மக்கள் கோரிக்கைகள் குறித்து பதில் சொல்ல வேண்டும். இந்த கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தான் மக்களுக்கான உண்மையான சுவாசிக்கும் அவகாசத்தை கொடுக்கும்” என்று உரையாற்றினார்.
தோழர் ஆ. கா. சிவா, பு.ஜ.தொ.மு வின் மாநில ஒருங்கிணைப்பாளர், இந்தியாவின் அரசமைப்பு முறை உருவாக்கப்பட்டதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் உழைக்கும் மக்களுக்கு எதிராக உள்ளதை சுட்டிக்காட்டி பேசினார். ”இரட்டை ஆட்சி முறை என்பது ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு அதிகாரம் கிடையாது, தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளிடம் உண்மையான அதிகாரம் உள்ளது என்பதை உதாரணங்களுடன் விளக்கி பேசினார். காலனியாதிக்க எஜமானர்களுக்கு சேவை செய்வது போலவே, இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கிறது. இன்று ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி; அம்பானி – அதானி பாசிசமாக மக்களை ஒடுக்கி வருகிறது. இதே ஒழிக்க வேண்டும் என்றால் பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டி அமைக்க வேண்டும்” என்றார்.
”தேவை பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” என்ற தலைப்பில் இயக்கத்தின் வெளியீட்டை தோழர். து. லெட்சுமணன் பு.ஜ.தொ.மு தோழர் வெளியிட ம.சங்கத்தமிழன், கு.பாரதி, கோ. இளங்கோ வி.சி. க. ஆகிய தோழர்கள் பெற்றுக் கொண்டனர். தோழர் யுவராஜ் பு.மா.இ.மு. அவர்கள் நன்றியுரை
கூட்டத்திற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகளும், தொழிலாளர்களும், பெண்களும், தோழர்கள் என சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டார்கள். ஆர்வமாக கூட்டத்தை கவனித்தனர்.
ம.க.இ.க வின் சிவப்பு அலை கலைக்குழுவின் பாடல்கள் இயக்கத்தை மேலும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதத்தில் சிறப்பாக அமைந்தது. அனைவரும் அரசியலை புரிய வைக்கும் விதத்தில் பாடல்கள் அமைந்திருந்தது.
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்பு குழு),
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.