உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ABES என்ற பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விழாவின்போது ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்துடன் பார்வையாளர்களை வரவேற்ற மாணவியை மேடையில் இருந்து கீழே இறங்கச் சொன்ன இரண்டு ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிற இந்துத்துவா அமைப்புகள் தங்கள் நிகழ்வுகள் மற்றும் பேரணிகளில் ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை எழுப்புவதன் மூலம் அதற்கு அரசியல் அர்த்தத்தை உருவாக்கியுள்ளனர். இந்துத்துவ வெறியைப் பரப்புவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்கள் மத்தியில் இந்துத்துவ வெறியூட்ட இம்முழக்கத்தை பயன்படுத்தி வருகிறது.
அக்டோபர் 20 ஆம் தேதி ஆசிரியர் ஒருவர் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்ட மாணவரை மேடையில் இருந்து கீழே இறங்கச் சொன்ன வீடியோவும், மற்றொரு ஆசிரியர் “ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டால் எந்த நிகழ்ச்சியும் அனுமதிக்கப்படாது” என்று மாணவர்களை எச்சரிக்கும் மற்றொரு வீடியோவும் வலைதளங்களில் வைரலானது.
உடனே இந்துத்துவ அமைப்புகள் இதை கையிலெடுக்கத் தொடங்கின. இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு ஆசிரியர்களான மம்தா கௌதம் மற்றும் ஸ்வேதா சர்மா ஆகியோருக்கு எதிராக கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டது.
படிக்க: நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்: காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!
இதன் காரணமாக ABES பொறியியல் கல்லூரியின் இயக்குநர் சஞ்சய் குமார், மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும், ஆசிரியர்கள் இருவரின் நடத்தை பொருத்தமற்றது எனவும் கண்டித்தது மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் இருவரையும் இடைநீக்கம் செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
பிஜேபி ஆளும் மாநிலங்களில் தனது இந்துராஷ்டிரக் கனவை நடைமுறைப்படுத்தி வருவதன் ஒரு நிகழ்வே மேற்கண்ட சம்பவம். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்துத்துவ வெறி எந்தவிதத் தடையுமின்றி பரப்பப்படுகிறது. இதை எதிர்க்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் குறிவைக்கப்படுகின்றனர். முற்போக்கு மாணவர் அமைப்புகளின் செல்வாக்கான இடமாக கருதப்பட்ட ஜேஎன்யூ பல்கலைக்கழகம் இந்துத்துவ பாசிஸ்டுளால் மோசமான சூழலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதிலிருந்து, நாம் இதன் பரிணாமத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
மாணவர்கள் மத்தியில் மத முரண்பாடுகளை கூர்மைப்படுத்துவதன் மூலம், இந்துத்துவ வெறியை ஊட்டுவதன் மூலம் நாட்டை அழிவுப் பாதைக்கு பாசிச கும்பல் விரைவாக அழைத்துச் செல்கிறது.
எனவே, ஜனநாயகத்துக்கான போராட்டத்திற்கு மாணவர்களை அணிதிரட்டுவதன் மூலம் பாசிச கும்பலுக்கு முடிவு கட்டும் வேலையை நாம் செய்ய வேண்டியுள்ளது.
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube