நவம்பர் தின விழா | அரங்கக் கூட்டம் | வேலூர் – காஞ்சிபுரம்

107-வது ரஷ்ய புரட்சி நாள் நல்வாழ்த்துகள்

நவம்பர் 7: ரஷ்யா சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!!

ன்று காலை 10:30 மணி அளவில் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நவம்பர் தின விழா கொண்டாடப்பட்டது. தோழர் சுந்தர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர், அவர்கள் தலைமையேற்று நடத்தினார்  முதலில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அவர் தனது தலைமை உரையில் ”107-வது ரஷ்ய புரட்சி நாள் இன்று உலகம் முழுவதும் புரட்சிகர அமைப்புகளால் நடத்தப்படுகிறது. காரணம், மனிதன் தனது உரிமை என்ன என்பதை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய நாள் தான் இந்த நவம்பர் புரட்சி” என்று பேசினார். அதைச் சுட்டிக்காட்டி, இன்றைய இந்திய நிலைமையில் பாசிசம் எப்படிச் சூழ்ந்துள்ளது, அதை எப்படி வேரறுக்க வேண்டும் என்பதையும் ரஷ்யாவைப் போன்றதொரு புரட்சி தேவை என்பதையும் தனது தலைமை உரையில் பதிவு செய்தார்.

அடுத்த நிகழ்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் மக்கள் அதிகாரம் இணைச் செயலாளர் சரவணன் அவர்கள் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து பாடலை எழுதிப் பாடினார். அடுத்த பாடல் சாதிய வன்கொடுமை, நாங்குநேரி சாதிவெறித் தாக்குதல் சம்பவம், தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரே சமூகத்தைச் சார்ந்த படுகொலை, வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடிநீரில் மலத்தைக் கலந்தது போன்ற கொடுமைகளைக் கண்டித்துப் பாடல் இயற்றிப் பாடினார்.

மக்கள் அதிகாரம் உறுப்பினர் காஞ்சிபுரம் தோழர் ஜோதி அவர்களால் ”வந்திடும் வந்திடும் நவம்பர் 7 வந்திடும்” என்ற பாடல் நிகழ்ச்சியில் பாடப்பட்டது. கருத்துரை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆக்சிஸ் இந்தியா கிளை செயற்குழு உறுப்பினர் சங்கர் அவர்கள் தொழிலாளி வர்க்கத்தின் மீதான பாசிச தாக்குதலையும் அதை முறியடிப்பதைப் பற்றியும் உரை நிகழ்த்தினார்.

மக்கள் அதிகார உறுப்பினர் தோழர் திலகவதி அவர்கள் குழந்தைகளை வைத்து ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அதாவது கேள்வி – பதில், கவிதை வாசிப்பது, விவாதம் நடத்துவது, ஆடல் ஆகியவை நடைபெற்றன. இந்தியாவில் நீட், வேளாண் சட்டத் திருத்தம், தொழிலாளர் சட்டத் திருத்தம் – போன்ற பல்வேறு பாசிச தாக்குதல்களால் இன்று சமூகம் எப்படி பாதிப்படைந்துள்ளது என்பது தனது நடிப்பின் மூலம் குழந்தைகள் செல்வகுமார், சரண் ஆகியோர் செய்து காட்டினர்.

மக்கள் அதிகாரம் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். ”இன்று ஏகாதிபத்தியத்தின் தாக்குதலின் ஒரு அங்கம்தான் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல். இது ஏதோ தன்னெழுச்சியான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு என்பதல்ல; இது அமெரிக்காவின் தூண்டுதலால் நடத்தப்படுகிறது. காரணம், தன்னுடைய ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிறுவுவதற்கும் உலக நாடுகளை தன் கைப்பாவையாக பயன்படுத்துவதற்கும் அங்குள்ள கனிம வளங்களை தான் சூறையாடுவதற்குமான ஒரு தாக்குதல் தான். இது இத்தோடு நிறைவடையப் போவதில்லை. அமெரிக்காவால் பல நாடுகளில் – ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் – நடத்தப்பட்டது. ஏகாதிபத்திய நிதி ஆதிக்க கும்பலால் நடத்தப்படும் ஒரு பேரழிவு தான் இந்த போர். நிதி ஆதிக்க கும்பலாலின் இலாப நோக்கம் தான் இதில் உள்ளடங்கி உள்ளதே தவிர, இது இஸ்ரேல் மக்களுக்கோ அல்லது அமெரிக்கா மக்களுக்கோ எந்த ஒரு நன்மையையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதுதான் உண்மை” என்று அவர் பேசினார்.

மேலும், ” இந்தியாவில் கார்ப்பரேட் கும்பலின் கையில் நாட்டை ஒப்படைப்பது; அனைத்து துறைகளிலும் காண்ட்ராக்ட் மையமாக்குவது; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் செல்லாக் காகிதமாக நிற்பது; மாநில உரிமையைப் பறித்து இன்றைக்கு சட்டமன்றத்தில் எந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் ஆளுநர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவது என பாசிசம் பல வழிகளில் தாக்குகிறது. இந்த இரட்டை ஆட்சி முறையில் தீர்வு எதையும் காண முடிவதில்லை. பல்கலைக்கழக நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் இல்லாமலேயே ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் என்ற விதத்தில் நிகழ்ச்சியை நடத்துகிறார். மாணவருக்கு மனுதர்மம் சனாதனம் இந்துராஷ்டிரத்தை பற்றி விளக்கிப் பேசுகிறார். அவருடைய நோக்கம் இந்துராஷ்டிரத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கும் தமிழ்நாட்டை போர்க்களமாக்குவது; அழிப்பது; இன்னும் சொல்லப்போனால் இன்னொரு பாலஸ்தீனமாக மாற்றுவதாகக் கூட இருக்கலாம். இப்படியான ஒரு செயலை தான் தமிழ்நாட்டின் ஆளுநர் செய்கிறார் இதை மக்கள் பிரதிநிதிகள் எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லை; இதுதான் இன்றைய நிலைமை. இந்த பாசிசத்தை எதிர்க்க வேண்டும் என்றால் நமக்கான அரசை நிறுவ வேண்டும். இது ஏதோ தன்னெழிச்சியாக ஒரு அமைப்புகள் மட்டும் சேர்ந்து செய்ய முடியாது. உழைக்கும் மக்கள், பாதிக்கப்படக்கூடிய மக்கள், குறு – சிறு வியாபாரிகள், ஜிஎஸ்டி-யால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டு இயக்கத்தை நிறுவும்போது தான் இதற்கு மாற்றை ஏற்படுத்த முடியும். அப்போதுதான் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைத்து இந்துராஷ்டிரக் கனவையும் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ்-யையும் வீழ்த்த முடியும்” என்று தனது சிறப்பு உரையில் பேசினார்.

இறுதி நிகழ்ச்சியாக நாடகம், கவிதை வாசிப்பு, ஓவியம் வரைந்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மக்கள் அதிகாரத்தின் இணைச் செயலாளர் சரவணன் நன்றி உரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.


தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மக்கள் அதிகாரம் – காஞ்சிபுரம், வேலூர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க