மணிப்பூரில் காவிகள் பற்றவைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை!

நவம்பர் 7 அன்று காலை காங்சுப் சிங்கோங் (Kangchup Chingkhong) கிராம சோதனைச் சாவடிக்கு அருகே இரண்டு பெண்கள் உட்பட ஐந்து குக்கி-சோ மக்களை போலீசு மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கண் முன்னரே மெய்தி கும்பல் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது.

0

ணிப்பூரின் காங்போக்பி (Kangpokpi) மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியிலிருந்து மெய்தி கும்பலால் குக்கி-சோ இனத்தைச் சேர்ந்த ராணுவத்தில் பணிபுரியும் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கடத்தப்பட்டனர். அதில் இருவர் இறந்து கிடந்ததாக நவம்பர் 9 அன்று போலீசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவம்பர் 7 அன்று காலை காங்சுப் சிங்கோங் (Kangchup Chingkhong) கிராம சோதனைச் சாவடிக்கு அருகே இரண்டு பெண்கள் உட்பட ஐந்து குக்கி-சோ மக்களை போலீசு மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கண் முன்னரே மெய்தி கும்பல் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது. அவர்கள் திருமண நிகழ்ச்சிக்காக எல் பைஜாங் (L Phaijang) கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர்கள் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் புதிய போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

மணிப்பூரில் குக்கி மக்கள் மீதான மெய்திகளின் இனக்கலவரம் அரங்கேறி வருகிறது. இவ்வாண்டு மே மாதத்தில் தொடங்கிய வன்முறையில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 60,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 7 அன்று மாலை ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசுத்துறை தலைவர் தெம்திங் நங்கசங்வா தெரிவித்தார். மேலும் 2 பேரை காணவில்லை. ஐந்தாவது நபரான, இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ஒருவரின் 65 வயது தந்தை நவம்பர் 7 அன்று பாதுகாப்புப் படையினரால் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் நவம்பர் 8 அன்று குவஹாத்தியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.


படிக்க: மணிப்பூர்: ஐந்து மாதங்களாகியும் அணையாத நெருப்பு! | நேர்காணல்


காங்சுப் சிங்கோங்கிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள ஆட்டம் குமான் (Atom Khuman) கிராமத்தில் இருந்து கடத்தப்பட்ட குக்கி-சோ பெண்ணின் உடல் நவம்பர் 7 அன்று இம்பால் மேற்கு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் தலையில் குண்டுக் காயம் இருந்தது.

நவம்பர் 7 அன்று இரவில் இம்பால் கிழக்கில் உள்ள தகோக் மபல் மகா புருக்சூபி லுக்கோன் பள்ளி (Takhok Mapal Makha Puruksoubi Loukon Palli) பகுதியில் குக்கி ஆண் நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது மார்பில் மூன்று குண்டுக் காயங்களும், தலையில் ஒரு குண்டுக் காயமும் இருந்தன.

அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை வழக்கு) மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்திலிருந்து மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. பாசிஸ்டு மோடியும் சரி, இந்தியாவின் பிரதான ஊடகங்களும் சரி, குக்கி பெண்கள் நிர்வாணமாக மெய்தி இனவெறியர்களால் இழுத்துச் செல்லப்படும் காணொளி வெளியாகும் வரை தங்களின் வாய்களைத் திறக்கவில்லை. ”மணிப்பூர் மாநிலம் இந்தியாவிலா இருக்கிறது” என்று கேட்பதைப் போல அவர்கள் நடந்துகொண்டனர்.

மணிப்பூரில் தற்போது வரை அமைதி திரும்பவில்லை. ஆனால் இவர்களின் கவனமோ பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேலின் தரப்பை வலுவூட்டுவதில் குவிந்துள்ளது. மணிப்பூர் குறித்த செய்திகள் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலுக்கு எட்டிக்காயாய் கசப்பதாலும், இக்கும்பலின் தோல்வி முகத்தை வெளிக்காட்டுவதாலும் அவை புறக்கணிக்கப்படுகின்றன.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க