மணிப்பூர்: ஐந்து மாதங்களாகியும் அணையாத நெருப்பு! | நேர்காணல்

குஜராத்தை இந்துராஷ்டிரா ஆய்வுகூடமாக மாற்றினார்களோ அதேபோல் மணிப்பூரையும் மாற்றியுள்ளனர். அதில் அவர்கள் வெற்றியடைந்தும் உள்ளனர். தோல்வியடைந்தது மதச்சார்பின்மை, ஜனநாயகம், மனித உரிமை ஆகியவை தான்.

டந்த மே மாதம் 3-ஆம் தேதி மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் (குக்கிகள், குக்கி மக்கள்) மீது தொடங்கிய மெய்தி மக்களின் வன்முறைத் தாக்குதல்கள், பெரும் கலவரமாக மாறியது. தொடக்கத்தில், மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து கோரும் போராட்டமாகத் தொடங்கி, நாட்கள் செல்லச்செல்ல குக்கி மக்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களாக வளர்ந்தது.

இதுவரை நடந்த கலவரங்கள், வன்முறைத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 175-க்கும் மேற்பட்டவர்களிலும் படுகாயமுற்ற 1,100-க்கும் மேற்பட்டவர்களிலும் ஆகப் பெரும்பான்மையினர் குக்கி மக்களே. மேலும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். 70 ஆயிரம் குக்கி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். 4,786 வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. 386 வழிபாட்டு தளங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பத்தாயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கணக்கான முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்கள் இன்றுவரை கொடூரமான பாலியல் வல்லுறவுகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதே வெளியில் தெரியாத அளவிற்கு, அரசு ஆதரவுடன் கூடிய கலவரமாக குக்கி மக்கள் மீதான வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. அங்குள்ள ஊடகங்கள் அனைத்தும் மெய்தி ஆதரவு ஊடகங்களாக மாறியுள்ளன. இணையச் சேவை தடை இந்நிலையை இன்னும் மோசமாக்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள பல்வேறு முற்போக்கு-ஜனநாயக சக்திகளும் ஊடகங்களும் நேரடியாக மணிப்பூருக்குச் சென்று அங்கு நடக்கும் கொடூரங்களை அம்பலப்படுத்தி வருகின்றனர். அவர்களின் நேரடி அனுபவங்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன.

அந்த வகையில், சமீபத்தில் “சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய மருத்துவர்கள் சங்கத்தைச்” சேர்ந்த மருத்துவக் குழுவினரும் மணிப்பூருக்கு சென்று திரும்பியுள்ளனர். அக்குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த மருத்துவர் ரவீந்திரநாத்-ஐ சந்தித்து நேர்காணல் நடத்தினோம். அவை பின்வருமாறு:

மணிப்பூர் கலவரத்தின் பாதிப்புகளை நேரடியாக கள ஆய்வு செய்ய மேற்கொண்ட இப்பயணத்தில் யாரெல்லாம் சென்றீர்கள்? என்ன நோக்கத்திற்காக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது?

கடந்த செப்டம்பர் மாதம் 1-3 ஆகிய தேதிகளில், “சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான இந்திய மருத்துவர்கள் சங்கம்” சார்பாக டாக்டர் அருண் மித்ரா அவர்களின் தலைமையில், நான் உள்ளிட்ட ஐந்து பேர் ஒரு குழுவாக மணிப்பூருக்கு சென்றிருந்தோம். அங்குள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்பயணம் திட்டமிடப்பட்டது. நாங்கள் செல்லும் போதும், நிலைமை சீரடையவில்லை. நாங்கள் சென்றதற்கு முந்தைய தினம் கூட கலவரம் நடந்து கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர்.

இப்பயணத்தில் நாங்கள் மெய்தி மக்களையும் சந்தித்தோம், குக்கி பழங்குடியின மக்களையும் சந்தித்துப் பேசினோம். இரு தரப்பு மக்களின் முகாம்களையும் பார்வையிட்டோம். எங்களுக்கு பெரிதாக எந்த தடையும் விதிக்கப்படவில்லை. நாங்கள் நோபல் பரிசு பெற்ற சர்வதேச அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பதால், எங்களைத் தடுத்தால் அது மனித உரிமை பிரச்சினையாக மாறும் என்பதும் நாங்கள் மருத்துவர்கள், எங்களது உதவி அரசுக்குத் தேவைப்படும் என்பதும் எங்களை தடுக்காததற்கான காரணங்களாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு நேரம் இல்லாததால் அனைத்து முகாம்களுக்கும் செல்ல முடியவில்லை.

முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமை என்னவாக இருக்கிறது? பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் கிடைக்கின்றதா?

அரசின் புள்ளிவிவரப்படி 344-க்கு மேலான முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலர் அதைவிட கூடுதலான முகாம்கள் இருக்கும் என்று சொல்கின்றனர். பல முகாம்களை அரசு ஒன்றிணைத்துள்ளதால் முகாம்களின் எண்ணிக்கை குறைவாக காட்சியளிக்கிறது. கிட்டத்தட்ட 54 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இன்றைக்கும் முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குக்கி இனத்தைச் சார்ந்தவர்கள்.

இரண்டு இன மக்கள் தங்கியிருக்கும் முகாம்களிலும் மோசமான நிலைமையே நிலவுகிறது. அங்கு அடிப்படை வசதி கிடையாது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், சத்தான உணவு, கழிப்பறை வசதி, குளிப்பதற்கான வசதி என எதுவுமே இல்லை. மக்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வழிகாட்டுதலின் அடிப்படையில் இவ்வாறு முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, கொரோனாவை விட வேகமாக பரவக்கூடிய தட்டம்மை தடுப்பூசி போடப்பட வேண்டும். தட்டம்மையால் அதிக குழந்தைகள் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும். ஆனால், அந்த நடவடிக்கைகள் முகாம்களில் கடைப்பிடிக்கப்படவில்லை. கர்ப்பிணிப் பெண்கள், பிறந்த குழந்தைகள் என யாருக்குமே தடுப்பூசி போடப்படவில்லை.

கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்து மாத்திரை இரும்பு சத்து மாத்திரைகள் கிடைக்கவில்லை. குக்கி பகுதி முகாம்களில், முகாமிற்கு வந்த பிறகு நான்கு தாய்மார்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. நல்லவேளையாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகியுள்ளது. ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ அவர்களை காப்பாற்ற வழியில்லை.

குக்கி மக்கள் வாழும் முகாம்களுக்கு அனுப்பப்படும் தடுப்பூசிகளை மெய்தி இன மக்கள் தடுத்து நிறுத்துகின்றனர். வேறு பகுதிகளிலிருந்து வரும் மருந்துப் பொருட்களையும் குக்கி மக்களின் பகுதிக்குள் கொண்டு செல்ல முடிவதில்லை. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். மணிப்பூரில் அரசு செயலிழந்து போயுள்ளது.

மணிப்பூரில் டெங்கு காய்ச்சல், டைஃபாய்ட், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் பரவிக்கொண்டிருக்கின்றன. சிலருக்கு மூளைக் காய்ச்சல் உள்ளது. காச நோயாளிகளுக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை வழங்கப்படவில்லை. இறுதிக்கட்ட சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தரப்படவில்லை.

முகாம்களில் உள்ளவர்களுக்கு சத்தான சரிவிகித உணவு கிடைக்கப்பட வேண்டும். முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு, இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே முட்டை வழங்கப்படுகிறது. பால், இறைச்சி போன்ற எந்தவித புரதச்சத்து உணவுகளும் கிடைக்கவில்லை. அரிசி சோறு மற்றும் உருளைக்கிழங்கை வைத்து மக்கள் ஓட்டிகொண்டிருக்கின்றனர். முகாம்களுக்கு வெளியில் உள்ள மக்களுக்கும் அரசு தரப்பில் எவ்வித உதவிகளும் செய்யப்படுவதில்லை.


படிக்க: மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தான் குற்றவாளிகள்!


கடந்த மாதம் மணிப்பூரில் குக்கி-பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டபோது மாநில முதல்வர் பைரன் சிங்கே இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் தினந்தோறும் நடைபெறுகிறது என்று கூறினார். தற்போது மணிப்பூரில் பெண்களின் நிலைமை எவ்வாறு உள்ளது?

ஒரு சில சம்பவங்களில் மெய்தி இன பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குக்கி பழங்குடியின பெண்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிர்வாணப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, கூட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவது என குக்கி பெண்கள் கொடூரமாக நடத்தப்படுகின்றனர்.

குக்கி பெண்களை நிர்வாணப்படுத்தவும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யவும் சொல்லும் அளவிற்கு மெய்தி இனத்தை சேர்ந்த பெண்கள் மத்தியில் சங்கப் பரிவார அமைப்புகள் வெறுப்புணர்ச்சியை உருவாக்கியுள்ளன. இச்சம்பவங்கள் இப்போதும் கூட தொடர்வதாகவே கருதுகிறேன். ஆனால், மணிப்பூரில் நடக்கும் எந்தவித சம்பவங்களும் வெளியில் வருவதில்லை.

மணிப்பூரில் கலவரத்தை தொடங்குவதற்கு முன்பே, கலவரம் நடத்துவதற்கு ஏதுவாக துணை இராணுவப் படையை (AFSPA) திரும்பப்பெறுவது, குக்கிகளின் ஆயுதங்களை பறிப்பது, மெய்திகளுக்கு அதிக அளவில் ஆயுதம் ஏந்துவதற்கான உரிமம் வழங்குவது, ஆயுதக் கிடங்குகளை மெய்திகளுக்குத் திறந்துவிட்டது என தொடக்கத்திலிருந்தே அரசு தான் இக்கலவரத்தை முன்னின்று நடத்தி வருகிறது. இது குறித்து அம்மக்கள் என்ன கருதுகின்றனர்?

மக்களிடம் கடுமையான கோபம் உள்ளது. மணிப்பூரில் அரசும் இல்லை ஆட்சியும் இல்லை என்று இரண்டு தரப்பு மக்களும் சொல்கின்றனர். குக்கி மக்களுக்கு அங்குள்ள போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் மெய்தி பகுதி ராணுவ வீரர்களையும் ஏற்றுகொள்ளவில்லை. இன்று, இரண்டு இனங்களுக்கும் இடையில் முஸ்லிம்கள் தான் நம்பகமான தூதுவர்களாக உள்ளனர்.

போலீஸ்துறையும் பாதுகாப்பு படையும் குக்கி மக்களுக்கு எதிராக உள்ளது. மணிப்பூரில் சுமூகமான நிலைமையை கொண்டு வருகிறோம் என்று சொல்லி ராணுவத்தை குவித்துக் கொண்டிருக்கின்றனர். செல்லும் வழியெங்கும் ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அங்குள்ள சில போலீஸ் அதிகாரிகள் பேசும்போது ”G20-க்காக காத்துக் கொண்டிருக்கிறோம். G20 முடிந்த பிறகு மிகப்பெரிய ராணுவ ரீதியான நடவடிக்கை எடுப்போம். யார் யாரெல்லாம் கலவரத்தை உருவாக்குகின்றனர் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்களை எல்லாம் என்கவுண்டர் செய்வோம்” என்று சொல்கின்றனர்.

மணிப்பூர் பற்றி எரிவதன் பின்னணி என்ன?

குக்கிகளை பொறுத்தவரை அவர்கள் பழங்குடியினர் என்பதால் இழிவாக கருதும் போக்குள்ளது. மேலும், அவர்கள் கிறித்தவர்கள் என்ற வெறுப்பு அரசியலும் செய்யப்படுகிறது. குக்கிகள் மலைப்பகுதிகளில் வசித்து வருகின்றனர். இங்கு பிற மக்களால் நிலம் வாங்க முடியாது.

மெய்திகளில் பல்வேறு சாதி-மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனால், அவர்களில் பெரும்பாலும் இந்துக்கள், அவர்களில் பிராமணர்களும் உள்ளனர். பலர் பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளனர். மெய்தி இன மக்கள் மத்தியில் சிறு முதலாளிகளும் உருவாகியுள்ளனர். அவர்கள் மத்தியில் இவ்வளவு பணமிருந்தும் இம்பாலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மலைப்பகுதியில் நிலம் வாங்க முடியவில்லையே என்ற உணர்வு உள்ளது. இதனை பா.ஜ.க. தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. வசதி படைத்தவர்களின் நலனும் அம்பானி-அதானி கார்ப்பரேட் நலனும் ஒன்றாக பொருந்திப்போகும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

பார்ப்பதற்கு வளமிக்க பூமியாகவும் தாது வளங்கள் மிக்கதாகவும் உள்ள மணிப்பூரை அதானி-அம்பானி கார்ப்பரேட் போன்ற நிறுவனங்களுக்கு தாரை வார்க்க வேண்டும் என்பது பா.ஜ.க-வின் நோக்கம். அதை நேரடியாக மக்களிடம் சொல்ல முடியாது என்பதால் மெய்தி இன மக்கள் மத்தியில், “மொத்த இடமும் குக்கிகளிடம் உள்ளது, உங்களால் அங்கு இடம் வாங்க முடியாது” என்று பொறாமை-வெறுப்புணர்வை உருவாக்கியுள்ளது.

இந்துராஷ்டிரா என்றால் எல்லா பகுதிகளிலும் பிராமணர்கள் குடியேற வேண்டும். அதேபோல் கார்ப்பரேட்டுகள் அங்குள்ள செல்வாதாரங்களை தங்கள் நோக்கிற்கு பயன்படுத்த வேண்டும். மக்களை பிளவுப்படுத்துவது – கார்ப்பரேட் நலன் என்ற இவ்விரண்டு முக்கிய  நோக்கங்களும் இதில் உள்ளன. இது தான் தற்போது மணிப்பூரில் பிரச்சினை உருவாகக் காரணம்.

நீண்ட காலமாகவே ஆர்.எஸ்.எஸ் கும்பலும் மெய்தி லீபன், அரம்பை தெங்கால் போன்ற மெய்தி இனவெறி அமைப்புகளும் மெய்தி மக்கள் மத்தியில் தொடர் நச்சு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின். இப்பிரச்சாரம் எந்த அளவிற்கு அங்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

நாங்கள் காரில் சென்றுகொண்டிருக்கும்போது தட்பவெப்பம் மிகவும் சூடாக இருந்தது. “என்ன மணிப்பூரில் இவ்வளவு சூடாக உள்ளதே” என்று கேட்டோம். அண்மை காலங்களில்தான் இவ்வளவு சூடாக உள்ளது என்று எங்களை அழைத்துச் சென்றவர்கள் (மெய்திகள்) கூறினர். நான், “இது புவி வெப்பமயமாதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படுகிறதா” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “இது குளோபல் வார்மிங் அல்ல, லோக்கல் வார்மிங்” என்றனர். “அது என்ன லோக்கல் வார்மிங்” என்று கேட்டேன். அதற்கு, அவர்கள் “குக்கி மக்கள் காட்டில் உள்ள மரங்களை அழித்துவிட்டு, பாப்பி விதைகளை (போதைப் பொருளுக்கான விதை) விதைப்பதால் குளோபல் வார்மிங்கோடு சேர்த்து லோக்கல் வார்மிங்-கும் வந்துள்ளது, அதனால் மணிப்பூர் சூடாகி வருகிறது” என்றனர்.

இதனைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். இவ்வாறு எங்களிடம் கூறியவர்கள் மருத்துவர்கள். இத்தகைய கருத்துகள் அப்பட்டமாக அவர்கள் மத்தியில் பரவியுள்ளது. எப்படி ஜெர்மனியில் எல்லாவற்றிற்கும் யூதர்கள் தான் காரணம் என்று ஹிட்லர், யூதர்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தினாரோ அதே போன்ற வெறுப்புணர்வை மணிப்பூரிலும் உருவாக்கியுள்ளனர்.

குக்கிகள் மோசமானவர்கள், கொள்ளைக்காரர்கள், திருடர்கள், மாஃபியா கும்பல், பாப்பி தீவிரவாதிகள் என்ற கருத்து மெய்திகள் மத்தியில் பரவியுள்ளது. இந்த கருத்தை நீண்டகாலமாக பா.ஜ.க அரசு பிரச்சாரம் செய்துவருகிறது. ஆனால், அது உண்மையில்லை. மணிப்பூரில் பாப்பி விதைகள் வளர்க்கப்படுகின்றன. அதனை அனைத்து சாதி மற்றும் மதத்தில் உள்ள சமூக விரோதிகளும் செய்கின்றனர். ஆனால், பா.ஜ.க அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ட்ரோனை வைத்து கண்டுபிடிக்க வேண்டிய தானே? ஆகையால், அதை குக்கிகள் மட்டும் தான் தொழிலாக செய்கின்றனர் என்று சொல்வது சரியில்லை.

இந்த போதைப் பொருள் கடத்தலில் முதல்வரின் மகனும் ஈடுபட்டுள்ளான் என்பது அம்பலமாகியிருப்பது உங்களுக்கு தெரியும், அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் ஐநூறு கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கண்டறியப்பட்டது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணிப்பூரில் நடக்கும் போதை மருந்து கடத்தலில் சர்வதேச அளவிலான மாபியா கும்பல்கள் செய்கின்றன.

அதேபோல், மெய்தி மக்களிடம் தவறான வரலாற்றைக் கூறி அவர்களும் பழங்குடிகள் என்று தூண்டிவிட்டு, இட ஒதுக்கீடு பிரச்சினையை கிளப்புகின்றனர். எல்லா விதமான வளங்களையும் வசதிகளையும் அனுபவிக்கும் மெய்திகளை பழங்குடி அந்தஸ்து கேட்கச் செய்கின்றனர்.

மேலும், குக்கி மக்களை வந்தேறிகள் என்று பா.ஜ.க. குற்றஞ்சாட்டுகிறது. இந்நச்சுக் கருத்தை  அவர்கள் மெய்தி மக்கள் மத்தியில் ஆழமாக விதைத்துள்ளனர். அங்குள்ள அச்சு ஊடகம், காட்சி ஊடகம் என அனைத்து ஊடகங்களும் மெய்தி இன மக்கள் கட்டுப்பாட்டிலும் அரசு கட்டுப்பாட்டிலும் உள்ளது. அவையும் இத்தகைய கருத்துகளை மக்களிடம் பரப்புகின்றன. இதனால், குக்கி மக்கள் மீது மெய்தி மக்களுக்கு கடுமையான வெறுப்பு ஏற்பட்டுள்ளது.


படிக்க: மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!


“வந்தேறிகள்” என்ற குற்றச்சாட்டு குறித்து குக்கி மக்கள் என்ன கருதுகின்றனர்?

2019-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தேசிய குடியுரிமை பதிவேட்டை கொண்டுவந்து குக்கி மக்களை வந்தேறிகள் என குற்றஞ்சாட்டியது. இதற்கு எதிராக அவர்கள் அப்போது ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். அப்போதே இந்த பிரச்சினை தொடங்கியது.

ஆனால், குக்கி மக்கள் இந்தியாவை நேசிக்கின்றனர். அம்மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் உள்ள சிறு சிறு பெட்டிக் கடைகளில் கூட தேசியக்கொடி பறக்கிறது. அவர்கள் யாரும் தனிநாடு கோரவில்லை. “நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் எப்போது இணைந்ததோ நாங்களும் இணைந்தோம். நாங்கள் பழங்குடியின மக்கள். இந்த மலைப்பகுதிகளில் நீண்ட காலமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, எங்களை மியன்மார் வந்தேறிகள் என்று சொல்வது சரியில்லை” என்று தான் சொல்கின்றனர்.

குக்கி மக்கள் சிலர் தமிழ்நாட்டில் வசித்த தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தமிழ்நாட்டு மக்கள் மீது மிகுந்த நேசத்துடன் உள்ளனர்.

நடந்து கொண்டிருக்கும் கலவரத்தில் இரண்டு இனங்களும் மிகப்பெரிய அளவில் பிளவுப்பட்டுள்ளன. சிலர் இந்த பிளவு சரியாக சில தலைமுறைகள் ஆகலாம் என்று கூறுகின்றனர். இது குறித்து உங்களது கருத்து என்ன?

மக்கள் நூறு சதவிகிதம் பிளவுப்பட்டுள்ளனர். குக்கி மக்களும் மெய்தி மக்களும் ஒருவருக்கொருவர் பகையாகப் பார்க்கின்றனர். “குக்கிகள் சமூகவிரோதிகள், போதைபொருள் கடத்துகின்றனர், பாப்பி வளர்க்கின்றனர்” என்ற வெறியுணர்வை தூண்டி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மிகப்பெரிய கலவரம் நடத்தப்பட்டுள்ளது. இம்பாலில் தற்போது ஒரு குக்கி மக்கள் கூட கிடையாது. எல்லோரும் காடுகளுக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இம்பாலில் படித்த மாணவர்கள், ஊடகவியலாளர்கள், தலைமைச் செயலகப் பணியாளர்கள் என யாருமே சமவெளி பகுதியில் இல்லை.

எப்படி குஜராத்தை இந்துராஷ்டிரா ஆய்வுகூடமாக மாற்றினார்களோ அதேபோல் மணிப்பூரையும் மாற்றியுள்ளனர். அதில் அவர்கள் வெற்றியடைந்தும் உள்ளனர். தோல்வியடைந்தது மதச்சார்பின்மை, ஜனநாயகம், மனித உரிமை ஆகியவை தான்.

இருப்பினும், வரக்கூடிய ஒன்றிய அரசுகள் நினைத்தால் இந்நிலையை சரிசெய்ய முடியும். நல்லிணக்கத்தை உருவாக்க இரண்டு தரப்பு மக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அது ஒரு ஆக்கப்பூர்வமான அரசியல் தீர்வு காணும்.

ஆனால், மோடி அரசு அதையெல்லாம் செய்யாது. அதனால் தான் இன்றுவரை மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து பேசினாரேயொழிய மணிப்பூர் மக்களைச் சந்திக்கவில்லை. ஒருவேளை, மணிப்பூருக்குச் செல்ல மோடிக்கு அச்சமாக இருந்தால் அங்குள்ள மக்களை டெல்லிக்கு வரவழைத்துப் பேசலாம் அல்லவா? மோடி அரசு ஆட்சியில் இருந்தால் இந்த நிலை அப்படியே தொடரும். இந்தியா பல பகுதிகளாக சின்னாபின்னமாகும்.


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க