அக்டோபர் 7: தனது சொந்த மக்களையே படுகொலை செய்த இஸ்ரேல்!

போரட், “பெயேரியில் இஸ்ரேலிய குடிமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டனர்; ஹமாஸ் போராளிகளால் அல்ல” என்று  கூறினார். இது குறித்த செய்தியை “தி எலக்ட்ரானிக் இன்டிபாடா” (The Electronic Intifada) வெளியிட்டது.

0

பாலஸ்தீன மக்களை யூத மதவெறி இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்து வருகிறது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தனது இனப்படுகொலையை நியாயப்படுத்துவதற்கான மூடுதிரையாகப் பயன்படுத்தி வருகிறது. ஹமாஸின் தாக்குதலில் 1,200 இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அரசு கூறி வருகிறது.

ஆனால் இந்த தாக்குதலின் போது கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் பலர் இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசாவைச் சுற்றியுள்ள பல குடியிருப்புகளில் இஸ்ரேலியர்களை கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஹமாஸ் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, இஸ்ரேலியப் படைகள் டாங்கிகளைப் பயன்படுத்தி வீடுகளையே மொத்தமாக அழித்தன. அதில் வீடுகளுக்குள் இருந்த ஹமாஸ் போராளிகளோடு  சேர்த்து இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் போராளிகள் காசா எல்லையைக் கடந்து கார்களிலும் நடந்தும் இஸ்ரேலிய கைதிகளை அழைத்துச் சென்றபோது, இஸ்ரேலியப் படைகள் அப்பாச்சி (Apache) ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி அவர்களை மொத்தமாகச் சுட்டுக் கொன்றன.

யெடியோத் அஹ்ரோனோத் (Yedioth Ahronoth) என்ற எபிரேய (Hebrew) பத்திரிகை அக்டோபர் 15 அன்று “ஹமாஸ் போராளிகள், பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களை வேறுபடுத்திப் பார்க்க அப்பாச்சி விமானிகளுக்கு எந்த வழியும் இல்லை. எனவே காசா எல்லையில் உள்ள அனைத்து கார்கள் மற்றும் மக்கள் மீதும் பாகுபாடின்றி துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.


படிக்க: காசாவை இன அழிப்பு செய்யும் இஸ்ரேல்!


நவம்பர் 18 அன்று இஸ்ரேலிய ஊடகமான ஹாரெட்ஸ் (Haaretz) வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றின் வாயிலாக இது மேலும் உறுதியாகிறது. இஸ்ரேலிய போலீசாரின் விசாரணையின்படி, நோவா திருவிழாவில் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேலியர்கள் மீது அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஹாரெட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இசை விழாவை குறிவைத்துத் தாக்கின என்பதை மறைப்பதற்காக ஹாரெட்ஸ் தளத்தில் இச்செய்தி தற்போது திருத்தப்பட்டுள்ளது.

பின்வரும் பகுதிகள் அச்செய்தியில் தற்போது நீக்கப்பட்டுவிட்டன:

“பயங்கரவாதிகள் கிபுட்ஸ் ரீம் (Kibbutz Reim) மற்றும் அதன் அருகாமை பகுதிகளை அடைய திட்டமிட்டனர். இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ரமத் டேவிட் தளத்திலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐ.டி.எஃப் (Israel Defence Forces) போர் ஹெலிகாப்டர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதில்‌ கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலரும் தாக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த விழாவில் 364 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.”

இருப்பினும், நவம்பர் 18 அன்று காப்பகப்படுத்தப்பட்ட (archived) கட்டுரையின் அசல்  பதிப்பு நீக்கப்பட்ட பகுதியைக் காட்டுகிறது.

இஸ்ரேலிய சட்டத்தின் படி, நாட்டின் ‘பாதுகாப்பு’ பிரச்சினைகள் குறித்து வெளியிடப்படும் எந்தவொரு கட்டுரையையும் ஊடகவியலாளர்கள் வெளியிடுவதற்கு முன்பு இராணுவ தணிக்கையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த கெடுபிடியின் காரணமாக இஸ்ரேலிய பத்திரிகையாளர்களும் செய்தி நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவு சுய தணிக்கை செய்து செய்திகளை வெளியிடுகின்றனர்.

+972 இதழ்” (+972 Magazine), தகவல் அறியும் சுதந்திரத்தின் (freedom of information) கீழ் பெற்ற தகவலின் படி, இஸ்ரேலிய இராணுவம் 2022-ஆம் ஆண்டில் பல்வேறு இஸ்ரேலிய ஊடகங்களில் மொத்தம் 159 கட்டுரைகள் வெளியிடப்படுவதைத் தடுத்துள்ளது; 990 கட்டுரைகளில் சில பகுதிகளைத் தணிக்கை செய்து நீக்கியுள்ளது.

அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் நோவா இசை நிகழ்ச்சியை குறிவைத்துத் தாக்கியதை இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது. மாறாக, அக்டோபர் 7 அதிகாலையில் ஹமாஸ் போராளிகள் திட்டமிட்டு நோவா இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தைத் தாக்கியதில் 260 இஸ்ரேலியர்கள்  கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

”ஹமாஸ் போராளிகள் ‘ஐ.எஸ்.ஐ.எஸ் பாணி’யில் பெண்களையும் அவர்களின் இறந்த சடலங்களையும் கற்பழித்தனர், குழந்தைகளின் தலையைத் துண்டித்தனர், ஒரு குழந்தையை உயிருடன் அடுப்பில் சுட்டனர்” போன்ற பொய்யான கட்டுக்கதைகளைக் கொண்டு காசா மீது நடந்தி வரும் இனப்படுகொலை இஸ்ரேல் நியாயப்படுத்தி வருகிறது.

ஆனால், உண்மையில் ஹமாஸ் அமைப்பால் எத்தனை இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டனர், இஸ்ரேலின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டால் எத்தனை இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டனர் எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.


படிக்க: காசா மருத்துவமனைகளில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளைக் கொலை செய்யும் இஸ்ரேல்!


இஸ்ரேலியப் படைகள் தங்கள் சொந்தப் படைகளையும் மக்களையும் குறிவைத்துத் தாக்கியது குறித்து, அக்டோபர் 7 அன்று காசாவுக்கு அருகிலுள்ள பெயேரி கிபுட்ஸ் (Be’eri kibbutz) மீதான ஹமாஸ் தாக்குதலில் இருந்து தப்பிய மூன்று குழந்தைகளின் தாயான 44 வயது யாஸ்மின் போரட் (Yasmin Porat) என்ற இஸ்ரேலிய பெண்தான் முதலில் கூறினார்.

கிபுட்ஸ் பகுதியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது அங்கு வசித்த 112 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால், “கான்” (Kan) என்று அழைக்கப்படும் இஸ்ரேலிய அரசு  வானொலிக்கு அக்டோபர் 15 அன்று அளித்த நேர்காணலில் போரட், “பெயேரியில் இஸ்ரேலிய குடிமக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டனர்; ஹமாஸ் போராளிகளால் அல்ல” என்று  கூறினார். இது குறித்த செய்தியை “தி எலக்ட்ரானிக் இன்டிபாடா” (The Electronic Intifada) வெளியிட்டது.

அந்த பேட்டியில், “கிபுட்ஸ் பகுதியில் வசிப்பவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஹமாஸ் போராளிகளுடன் இஸ்ரேலியப் படைகள் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டபோது பொதுமக்கள் கொல்லப்பட்டனர். போராளிகள் மற்றும் அவர்களின் இஸ்ரேலிய கைதிகள் மீது இஸ்ரேலியப் படைகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என்று போரட் மேலும் கூறினார்.

“நானும் மற்ற 11 பணயக் கைதிகளும் 40 ஹமாஸ் போராளிகளால் பல மணி நேரம் ஒரு வீட்டில் பிடித்து வைக்கப்பட்டிருந்தோம். அப்போது ஹமாஸ் போராளிகள் எங்களை மனிதாபிமானத்துடன் நடத்தினர். எங்களை காசாவுக்கு கடத்துவதே அவர்களின் நோக்கமாக இருந்தது; கொலை செய்வது அல்ல” என்று போரட் கூறினார்.

“சில மணி நேரம் கழித்து இஸ்ரேலியப் படைகள் வந்தனர். அவர்கள் வீட்டைச் சுற்றி வளைத்து ஹமாஸ் போராளிகளுடன் துப்பாக்கிச் சண்டையைத் தொடங்கினர், அதில் நான்கைந்து பணயக் கைதிகள் கொல்லப்பட்டனர். வீட்டிற்கு வெளியே புல்வெளியில் அவர்களின் உடல்கள் கிடந்ததை நான் கண்டேன். சந்தேகத்திற்கு இடமின்றி இஸ்ரேலிய படையினர் தான் அவர்களைக் கொன்றனர். பணயக்கைதிகள் உட்பட அனைவரையும் அவர்கள் அழித்தனர்” என்று போரட் கூறினார்.

அப்போது சரணடைய முயன்ற ஹமாஸ் போராளி ஒருவர் போரட்டை மனித கேடயமாக பயன்படுத்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் போராளி கைது செய்யப்பட்டு, போரத் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு மீதமுள்ள 11 பணயக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் இஸ்ரேலிய இராணுவம் டாங்கியை வைத்து இரண்டு குண்டுகளை வீசியதாகவும் போரட் மேலும் கூறினார். பணயக்கைதிகளில் இருவரைத் தவிர மற்ற அனைவரும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.

இஸ்ரேலிய அரசு  வானொலியான கான்-னுக்கு போராட் அளித்த மேற்குறிப்பிட்ட நேர்காணலும் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது.

கான் வானொலியில் ஒளிபரப்பப்பட்ட அவரது நேர்காணல், அக்டோபர் 15-ஆம் தேதிக்கான ஹபோக்கர் ஹசே (”This Morning”) வானொலி நிகழ்ச்சியின் ஆன்லைன் பதிப்பில் இடம்பெறவில்லை.


படிக்க: பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இஸ்ரேல்


இஸ்ரேலிய செய்தித்தாளான மாரிவ் (Maariv) பத்திரிகைக்கும் போரட் பேட்டியளித்தார். இருப்பினும், அக்டோபர் 9 அன்று வெளியிடப்பட்ட மாரிவ் செய்தியில் இஸ்ரேலியப் படைகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சி.என்.என் தொலைக்காட்சிக்கு போரட் அளித்த மற்றொரு பேட்டியில், தன்னைப் பிடித்து வைத்திருந்த ஹமாஸ் அமைப்பினரும் சக பணயக்கைதிகளும் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால் பணயக்கைதிகளை கொன்றது யார் என்பது பற்றி எந்த குறிப்பும் அந்த பேட்டியில் குறிப்பிடப்படவில்லை.

போரட்டின் சாட்சியத்தை இஸ்ரேல் அரசு முற்றிலுமாக தணிக்கை செய்துள்ளதை மேலே குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இது குறித்து இஸ்ரேல் போலீசுத்துறையின் உளவுப் பிரிவின் தலைவரான துணை கண்காணிப்பாளர் டிரோர் அஸ்ரப் (Dror Asraf), “இதுபோன்ற செய்திகள், சதி கோட்பாடுகளை வெளியிடுவதன் மூலம் பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்குத் தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

அக்டோபர் 7 அன்று இஸ்ரேலியப் படைகள் தங்கள் சொந்த குடிமக்களையும் படை வீரர்களையும் கொன்றன என்பதை வெளிப்படுத்தினால் சதி கோட்பாடாகப் பார்க்கப்படுகிறது. அம்பலப்படுத்துபவர்கள் ஹமாஸ் ஆதரவாளர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

நன்றி: தி கிரேடில்


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க