காசா மருத்துவமனைகளில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளைக் கொலை செய்யும் இஸ்ரேல்!

”நாளை (நவம்பர் 12) காலை வரை மின்சாரம் உள்ளது. மின்சாரம் தீர்ந்துவிட்டால், மீதமுள்ள பச்சிளம் குழந்தைகளும் இறந்துவிடுவார்கள்"

0

காசாவை சுற்றிவளைத்துள்ள இஸ்ரேல் அங்குள்ள மருத்துவமனைகள் மீது தொடர்ந்து குண்டுகளை வீசி குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் கொன்று குவித்து வருகிறது. காசாவின் மிகப்பெரிய மருத்துவ வளாகமான அல்-ஷிஃபா (al-Shifa) மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பட இயலவில்லை. இதனால், இன்குபேட்டருக்குள் வைக்கப்பட்டிருந்த புதிதாகப் பிறந்த இரண்டு குறைப்பிரசவக் குழந்தைகள் இறந்துவிட்டதாக மருத்துவமனையின் இயக்குநர் முகமது அபு சல்மியா (Mohammed Abu Salmiya) நேற்று (நவம்பர் 11 அன்று) தெரிவித்துள்ளார்.

பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மேலும் 37 குழந்தைகள் இன்குபேட்டர்களை இயக்குவதற்கு போதுமான மின்சாரம் – எரிபொருள் இல்லாததால் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

அல்-ஷிஃபா மருத்துவமனை இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்டு, கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. இன்குபேட்டர்களில் வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜனின் அளவை நிலையாகப் பராமரிக்க வேண்டும். ஆனால், மருத்துவமனையில் அதற்குத் தேவையான மின்சாரம் – எரிபொருள் கையிருப்பு இல்லை. இதன் காரணமாக குழந்தைகளை உயிருடன் வைத்திருக்க மருத்துவர்கள் பழங்கால வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

”நாளை (நவம்பர் 12) காலை வரை மின்சாரம் உள்ளது. மின்சாரம் தீர்ந்துவிட்டால், மீதமுள்ள பச்சிளம் குழந்தைகளும் இறந்துவிடுவார்கள்” என்று அபு சல்மியா எச்சரித்தார்.


படிக்க: பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இஸ்ரேல்


அல்-ஷிஃபா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் முகமது ஒபெய்ட், ”புதிதாகப் பிறந்த குழந்தைகள் மட்டுமல்லாமல் மேலும் ஒரு வயது வந்த நோயாளியும் வென்டிலேட்டருக்கு மின்சாரம் இல்லாததால் இறந்துள்ளார். எங்களிடம் சுமார் 600 உள்நோயாளிகள் இருப்பதால், நோயாளிகளை வெளியேற்ற முடியும் என்ற உத்தரவாதத்தை எங்களுக்கு யாராவது வழங்க வேண்டும்” என்று ஆதங்கத்துடன் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நவம்பர் 10 அன்று, ”அல்-ஷிஃபா மருத்துவமனை குண்டுவீச்சுக்கு உட்பட்டுள்ளது. காசா பகுதியில் உள்ள 20 மருத்துவமனைகளும் செயலிழந்து உள்ளன” என்று கூறினார். அதேபோல், அவ்வமைப்பின் இயக்குநர் ஜெனரல் ”காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள மருத்துவமனைகள், கிளினிக்குகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் நோயாளிகள் மீது 250-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் ஐந்து மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

முன்னதாக, நவம்பர் 3 அன்று, இதே அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்; 60 பேர் காயமடைந்தனர். அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து எகிப்துடனான ரஃபா எல்லைக்கு பலத்த காயமடைந்த நோயாளிகளை ஆம்புலன்ஸ்களில் கொண்டு சென்றபோது, இத்தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.


படிக்க: என் குரல் கேட்கலையா… | காசா | சிவப்பு அலை பாடல்


காசாவில் உள்ள மருத்துவமனைகள் இஸ்ரேலால் தாக்கப்படுவது குறித்து கான் யூனிஸில் உள்ள அல்-நாசர் மருத்துவமனைக்கு வெளியே நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, காசாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், “காசா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர்க் குற்றங்கள் அனைத்தையும் நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். நாங்கள் உலக மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். உங்களுடைய மனசாட்சி விழித்திருக்கிறது என்றால், தயவுசெய்து இதுகுறித்து நடவடிக்கை எடுங்கள். மருத்துவமனைகள் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய போர்க் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முன்வராத உலகின் எந்தவொரு அரசியல்வாதியும், அவர்களுடைய கைகளில் இரத்தக்கறை படிந்துள்ளதை மறந்துவிடக் கூடாது” என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

37-வது நாளாக பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்பு போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அக்டோபர் 7 முதல் நவம்பர் 10 வரை, இஸ்ரேல் 4,506 குழந்தைகள் உட்பட 11,078 பாலஸ்தீனர்களை காசாவில் மட்டும் கொன்று குவித்துள்ளது; மேற்கு கரையிலும் 44 குழந்தைகள் உட்பட 183 பாலஸ்தீனர்களை கொன்று குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க