ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 9
2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஜி.எஸ்.டி., நீட், புதிய கல்வி கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற பல்வேறு திட்டங்களையும், சட்டத்திருத்தங்களையும், விதிமுறைகளையும் அமல்படுத்தி வருகிறது, பாசிச கும்பல். அவை சாராம்சத்தில் வெறும் திட்டங்களாக மட்டும் இல்லை. அவை ஒவ்வொன்றும், “இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானப் பணிகளாக” உள்ளன. செங்கலை அடுக்கி வீட்டை கட்டி முடிப்பது போல இந்த ஒவ்வொரு திட்டங்களை அமல்படுத்துவதன் மூலமும் இந்துராஷ்டிரத்தை கட்டியெழுப்பி வருகிறது, பாசிச கும்பல். உண்மையில், இந்தியாவில் நிலவும் போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பையே மறுவார்ப்பு செய்வதன் மூலமாகவே பாசிசம் அரங்கேற்றம் நடந்து வருகிறது.
ஆனால், இந்த ஐந்து மாநில தேர்தலில் போட்டியிட்ட காங்கிரசும் இந்தியா கூட்டணி கட்சிகளும் இந்த திட்டங்கள் குறித்து வாய் திறக்காமல் தேர்தலை முடித்துவைத்துள்ளன. ஆனால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாலும் இந்த திட்டங்களை அப்படியே வைத்திருந்தால் மக்களுக்காக எதையும் செய்ய இயலாது. இந்த திட்டங்களை அப்படியே நீக்காமல் வைத்திருந்தால் “பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதாகவும்” பொருள் கிடையாது.
எனவே, “பா.ஜ.க-விற்கு மாற்று நாங்கள் தான்” என சொல்லி மக்களின் பா.ஜ.க. மற்றும் பாசிச எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்துகொள்ளும் கட்சிகள் ஒவ்வொன்றும் தனிதனியாகவும் கூட்டணியாகவும் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து தங்களது நிலைப்பாடுகளை சொல்லியாக வேண்டும்.
ஜி.எஸ்.டி வரிமுறை: ஜி.எஸ்.டி. வரிமுறையைக் கொண்டுவந்து, மாநிலங்களின் வரி வசூல் உரிமையைப் பறித்ததன் மூலம், மாநிலக் கட்சிகளை பெயரளவுக்குத் கூட தனித்த அரசியல்-பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டிருக்க முடியாதபடிக்குச் செய்துள்ளது, ஒன்றிய மோடி அரசு. ஒன்றியத்திடம் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மாநில அரசுகளிடம், தனது கொள்கைகளையும் சட்ட திட்டங்களையும் ஏற்கச் சொல்லி நிர்பந்திக்கிறது.
ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படை யில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி முறையானது, மாநில அரசுகளின் வரி வசூலிக்கும் அதிகாரத்தினைப் பறித்து, அவற்றை டெல்லியின் அடிமைகளாக மாற்றியுள்ளதோடு, நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து வந்த சிறுகுறு தொழில்களையும் ஒரே மூச்சில் நசுக்கியுள்ளது.
படிக்க:ராமரும் பசுவும் எங்களுடையது! சத்தீஸ்கர், ராஜஸ்தான் காங்கிரஸ்
கடந்த 2018 ஜூலையில், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) நடத்திய ஆய்வில், வெளிக்கொண்டு வரப்பட்ட விவரங்களின்படி, 6.3 கோடி சிறுகுறு தொழில்களில் ஐந்தில் ஒரு பங்கு தொழில்கள் ஜி.எஸ்.டி வரிமுறை அமல்படுத்தப்பட்டதற்குப் பின்னர் தனது லாபத்தில் 20 சதவிகிதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளன; இதனால் அந்நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு வரிமுறைகள் இருப்பதை ரத்து செய்து, “ஒரே நாடு ஒரே வரி” என்று மாற்றியுள்ளதன் மூலம், ‘தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கிறது, பா.ஜ.க. கும்பல். ஆனால், உண்மையில் நடந்தது வேறு!
சிறுகுறு தொழில்கள் என்பவை அமைப்புசாரா தொழில்துறை மட்டுமல்ல; இவற்றில் பெரும்பாலானவை மாநில, வட்டார அளவிலான சந்தையைக் கொண்டவை. பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு தரகு முதலாளித்துவ நிறுவனங்களைப் போல, தேச அளவிலான சந்தையை மையமாகக் கொண்டு இயங்குபவை அல்ல. இவற்றையும் சிறுகுறு தொழில் நிறுவனங்களையும் ஒரே சட்டகத்தில் கொண்டுவருவதென்பது, பல்வேறு தேசிய இனங்களின் பொருளாதாரத்தைச் சிதைத்து, “ஒரே நாடு ஒரே சந்தை” என்ற பெயரில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பார்ப்பன, பனியா, மார்வாரி முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் கொண்டு சேர்க்கும் சதிகாரத் திட்டமாகும். இப்படித்தான் அனைத்து நடவடிக்கை களிலும் காவியும், கார்ப்பரேட்டும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
ஜி.எஸ்.டி வரிவசூல்முறை மட்டுமின்றி, தேசிய பணமாக்கல் திட்டம், தேசிய உள்கட்டமைப்புத் திட்டம் போன்று கார்ப்பரேட்டுகளுக்கான பொருளாதார பயங்கரவாதக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்துக் கொடுப்பதற்காகவே, ஏற்கெனவே இருந்த “திட்டக்கமிஷன்” கலைக்கப்பட்டு அதனிடத்தில் “நிதி அயோக்” என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
நீட் – கியூட் நுழைவுத்தேர்வுகள்: நீட் -கியூட் போன்ற நுழைவுத் தேர்வுகள், புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றின் மூலம் கார்ப்பரேட்மயமும் காவிமயமும் திணிக்கப்படுவதோடு இணைந்து, ஒவ்வொரு மாநிலத்தின் சமூக-பொருளாதார- அரசியல் நிலைமைகளுக்கேற்ப பாடத்திட்டங்களையும் கல்விக் கட்டமைப்பையும் உருவாக்கிக் கொள்ளும் முறை சிதைக்கப்பட்டுள்ளது; ஏழை பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலிருந்தே ஓரங் கட்டப்படுகின்றனர். இதன் வெளிப்பாடுதான் நீட் தற்கொலைகளாகும்.
கல்வி கார்ப்பரேட்மயம்: புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட இருக்கும் தேசிய உயர்கல்வி ஆணையம்; தற்போது அமைக்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ ஆணையம் ஆகிய அமைப்புகளின் மூலம் காவிக் கும்பலும், கார்ப்பரேட் கும்பல்களும் கல்வித்துறையை அரசிடமிருந்து விடுவித்து, தங்களது முற்றாளுமையில் வைத்துக் கட்டுப்படுத்தக் கூடிய நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
‘உயர்சாதி ஏழை’களுக்கான இடஒதுக்கீடு: ‘உயர்சாதி ஏழைகளுக்கு’ பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு என்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு நீர்த்துபோகச் செய்யப்பட்டு, உயர் கல்வியையும் அரசுப் பணிகளையும் மீண்டும் பார்ப்பன ஆதிக்கச் சாதியினர் முற்றுமுழுதாக கைப்பற்றிக் கொள்ளும் நிலை உண்டாகியிருக்கிறது; சமூகநீதி வேடத்தில் மனுநீதி சட்டமாகியிருக்கிறது.
கார்ப்பரேட்டுகள் பிடியில் விவசாயம்: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்ற வாக்குறுதியைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடியின் ஆட்சியில், விவசாயி களை விவசாயத்திலிருந்தே வெளியேற்றிவிட்டு, அத்துறையை கார்ப்பரேட்டு களின் கைவசம் ஒப்படைப்பதே ‘விவசாயக் கொள்கை’ என்றாகியுள்ளது. மூன்று வேளாண் சட்டங்களை மோடி அரசு ரத்து செய்தாலும், உரம் உள்ளிட்ட இடுபொருட்களுக்கான மானியங்களை வெட்டிக் குறைப்பது, குறைந்தபட்ச ஆதாரவிலையை உயர்த்த மறுப்பது போன்ற வடிவங்களில் விவசாயத் துறையை கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திற்கு திறந்துவிடும் அதன் கொள்கை களை மறைமுகமாக ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அமலாக்கி வருகிறது.
தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பு: நிரந்தர வேலை என்பதை ஒழித்துக்கட்டி நீம், எஃப்.டி.இ போன்ற காண்டிராக்ட் கொத்தடிமை முறையை நிரந்தரமாக்குவது, தொழிலாளர்களுக்கான சமூக, பாதுகாப்புத் திட்டங்களை சிதைப்பது, எட்டு மணிநேர வேலையை 12 மணிநேரமாக உயர்த்துவது என தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள், மோடி அரசின் புதிய தொழிலாளர் நலச் சட்டத்தொகுப்புகள் மூலம் சட்டவடிவம் பெற்றுள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டம்: இசுலாமியர்களின் குடியுரிமையைப் பிடுங்கும் நோக்கத்தில்தான், தேசிய குடிமக்கள் பதிவேடு (NPR) கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அவர்களில் கணிசமான மக்களை பாகிஸ்தான், பங்களா தேஷ், மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்று கூறி வெளியேற்றுவதற்குத் திட்டமிட்டு செயல்படுகிறது, மோடி அரசு.
சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் கருப்பு சட்டங்கள்: தங்களது பாசிச ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் செயல்பாட்டாளர் களையும், அறிவுத்துறையினரையும் ஒன்று குண்டர் படைகளை ஏவி கொலை செய்வது, அல்லது கருப்புச் சட்டங்களை ஏவி சிறையில் தள்ளுவது என்ற வழிமுறையை கையாண்டு வருகிறது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக்கும்பல், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே, கவுரி லங்கேஷ் ஆகியோரை “சனாதன் சன்ஸ்தா” என்ற கூலிப்படையை ஏவிக் கொன்றது. பீமாகொரேகான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட செயல்பாட்டாளர்களை, சிறையில் வைத்து வதைத்து வருகிறது.
எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பண மோசடித் தடுப்புச் சட்டத்தையும், அமலாக்கத் துறையையும் பயன்படுத்துவது போல, பாசிச எதிர்ப்பு செயல்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு ஊபா கருப்புச் சட்டத்தையும், என்.ஐ.ஏ.வையும் ஆயுதமாக வைத்துள்ளது. பா.ஜ.க. கும்பல். அப்பாவி இசுலாமிய இளைஞர்கள் பலரை கைது செய்து சிறை வைத்துள்ளது.
ஊடகங்கள் மீதான பாசிச பிடி: தகவல் தொழில்நுட்பச் சட்டத்திருத்த மசோதா, போலிச் செய்திகள் மற்றும் தேசவிரோதக் கருத்துகளைக் கொண்ட சமூக ஊடகப் பதிவுகளை ஒன்றிய தகவல் தொடர்புத்துறையே நீக்கும் புதிய அதிகாரம், ஓ.டி.டி மற்றும் சமூக ஊடகங்களுக்கான புதிய நெறிமுறைகள், இணையத் தன்னார்வலர்கள் திட்டம் என பல்வேறு பெயர்களில் அச்சு – காட்சி மற்றும் இணைய ஊடகங் களை பாசிச முறையில் ஒடுக்கி வருகிறது, மோடி அரசு.
பாசிசமயமாகும் நீதித்துறை: நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்யும் கொலிஜியம் முறையை ஒழித்து, ஒன்றிய அரசின் பிரதிநிதிகள் (ஆர்.எஸ்.எஸ் சங்கிகள்) அங்கம் வகிக்கும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைப்பதன் மூலம், அனைத்து உயர்நீதி மன்றங்களையும், உச்சநீதி மன்றத்தையும் ஆர்.எஸ்.எஸ். காலிகளின் முற்றுமுழுதான ஆளுகைக்குள் கொண்டுவரத் துடிக்கிறது, மோடி அரசு. இதன்மூலம் மக்கள் மீது பாசிச சர்வாதிகாரத்தைத் திணிக்கும் வகையில் அரசியலமைப்பின் சரத்துகளில் திருத்தங்களைக் கொண்டுவரும் சதி வேலையிலும் ஈடுபட்டு வருகிறது.
படிக்க:ஐந்து மாநிலத் தேர்தல் காங்கிரஸின் இலவச, கவர்ச்சிவாத வாக்குறுதிகள்
அண்மையில், இந்திய தண்டனைச் சட்டத் தொகுப்புகளுக்கான ஆங்கிலப் பெயர்களை “பாரதிய” என்ற முன்னொட்டுடன் சமஸ்கிருதப் பெயர்களாக மாற்றியுள்ளது, மோடி அரசு. அது வெறுமனே பெயர் மாற்றம் மட்டுமல்ல. “பாரதிய நியாய் சன்ஹிதா” என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தண்டனைச் சட்டத் தொகுப்பு, பழைய இந்திய தண்டனைச் சட்டத் தொகுப்பை (IPC) மாற்றீடு செய்கிறது. இது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தனது அரசியல் எதிரிகள், இசுலாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தான் விரும்பும் வகையிலான ஒடுக்குமுறைகளை சட்டப்பூர்வமாகவே மேற்கொள்ள உதவி புரியும். மொத்தத்தில், இது, இந்துராஷ்டிரத்திற்கான தண்டனைச் சட்டத் தொகுப்பாகும்.
தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம்: நீதித்துறைக்கு நீதிபதிகள் நியமன ஆணையம் போல, தேர்தல் ஆணையத்தை தனது முற்றாளுமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையாகத் தான், தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்தை மோடி அரசு நிறைவேற்ற மோடி அரசு முயன்றுவருகிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் ஆகிய திட்டங்கள் தற்போதுள்ள தேர்தல் முறையையே ஒழித்துக்கட்டி, அதனை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு சாதகமாக மாற்றும் கொடிய சதித் திட்டங்களாகும்.
கொடுங்கோன்மை அமைப்புகளாக ஆணையங்கள்: தேசிய நதிநீர் ஆணையம், அணைகள் பாதுகாப்பு மசோதா, வனப் பாதுகாப்பு மசோதா, சூழலியல் தாக்க மதிப்பீட்டு மசோதா, தேசிய கடல் மீன்வள மசோதா, இந்திய துறைமுகங்கள் சட்டத்திருத்த மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா, மின்சாரச் சட்டத்திருத்த மசோதா, பணமோசடித் தடுப்புச் சட்டம், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துகொள்ளும் புதிய விதிகள், புதிய தொழிலாளர் சட்டத் திருத்தம், ஆதார், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் போன்றவை அனைத்தும் காவி – கார்ப்பரேட் பாசிசத் தாக்குதல்களே.
நன்றி: தேவை பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு (வெளியீடு)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube